நினைவுகள்: அழகிக தொல்ல தாங்க முடியல! - பார்வையற்றவன்


ஒரு பார்வையற்றவர் சாலையைக் கடக்க உதவும் அழகிய பெண்ணின் புகைப்படம்
  நாம் மிகவும் பழகிய இடத்தில் செல்லும்போது, "எங்கே போகனும் சார்? எந்த பஸ்ல ஏறனும் சொல்லுங்க, நான் ஏத்தி விடுறேன்" என உதவ அனேகம் பேர் வருவார்கள். புதிய இடத்திலோ, உதவி தேவைப்படும் தருணத்திலோ, முயன்று கேட்டாலும் கூட உதவி கிடைக்காது. இதுபோன்ற சூழலை பார்வையற்றவர்களாகிய நாம் பல சமயங்களில் எதிர்கொண்டிருப்போம்!

நான் அமெரிக்கன் கல்லூரியில் சேர்ந்த புதிதில், சுந்தரராஜன்பட்டிக்கு கோரிப்பாளையத்தில் இருந்துதான் பேருந்து ஏறுவேன். வைகை ஆற்றுப் பாலத்திலிருந்து இறங்கி கோரிப்பாளையம் வழியாகத்தான் மதுரையின் பல ஊர்களுக்கும் பேருந்துகள் பிரிந்து செல்லும். எனவே, இங்கு பார்வையற்றவர்கள் பேருந்துகளில் ஏற பிறரின் உதவியை நாடித்தான் ஆகவேண்டும். அன்று கோரிப்பாளையம் நிறுத்தத்தில் நின்ற ஒவ்வொரு பேருந்தின் அருகிலும் சென்று, "இந்த பஸ் சுந்தரராஜன்பட்டி போகுமா?" என கேட்டுக் கொண்டிருந்தேன். உடனே அங்கிருந்த ஒரு நபர், "சுந்தரராஜன்பட்டி தானே? பஸ் வந்ததும் சொல்லுறேன். இங்கே நில்லு" என்றார்.

அவர் பேச்சைக் கேட்டு அங்கேயே நின்றேன். 20 நிமிடம் ஆனது; 30 நிமிடங்களும் ஆனது. "இன்னும் பஸ் வரலையா சார்?" எனக் கேட்டேன். "என்ன வேனுண்ணே?" என்ற குரலைக் கேட்டதும், ‘அவரு ஏன் இப்போ லேடிஸ் வாய்ஸ்ல பேசுறாரு?’ என்ற வினா எனக்குள் எழுந்தது. அடுத்த வினாடியே மூளை விடையைச் சொன்னது. அவர் செல்ல வேண்டிய பேருந்து வந்ததும், என்னிடம் எதுவும் சொல்லாமல் ஏறிச் சென்றுவிட்டார்; அவர் சொல்லுவார் என நம்பியபடியே நான் அரைமணி நேரம் காத்திருந்திருக்கிறேன்!

பிறகு நானே ஒவ்வொரு பேருந்தின் அருகில் சென்று  கேட்டு, எனக்கான பேருந்தில் ஏறிச் சென்றேன். அதிலிருந்து, பெரியார் பேருந்து நிலையம் சென்று, அங்கிருந்து தான் பேருந்து ஏறி வருவேன். அங்கே உரிய நடைமேடைகளில் பேருந்துகள் நிற்கும் என்பதால், எளிதில் எனக்கான பேருந்தில் ஏற முடிந்தது.  இப்போதெல்லாம் பேருந்தைப் பார்த்து சொல்கிறேன் என சொல்பவரிடம் ஏதேனும் பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறேன்; இந்த உத்தி எனக்குப் பல நேரங்களில் கைகொடுத்துள்ளது.

ஒருநாள் கவனக்குறைவில் நான் இறங்க வேண்டிய சுந்தரராஜன்பட்டி நிறுத்தத்தைத் தவறவிட்டு விட்டேன். அன்று பார்த்து நடத்துனர், "என்ன தம்பி, எப்பவும் சுந்தரராஜன்பட்டியில் தானே இறங்குவ?" என்று கேட்டார். உண்மையை ஒத்துக்கொண்டால் நம் மானம் காற்றில் பறந்து விடும் என்பதால்,  அப்பன்திருப்பதிக்கு ஃபிரண்டு வரச்சொன்னாருண்ணே” என்று சொல்லிவிட்டு, அந்த நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டேன். சாலையை கடந்து மறுபுறம் நின்று, அடுத்த பேருந்தில் ஏறி எங்கள்  விடுதிக்குச் செல்வதுதான் எனது திட்டம். அரைமணி நேரமாக எந்தப் பேருந்தும் வரவில்லை. அடுத்து வந்த பேருந்தில் ஏறினேன். அப்போதுதான் புரிந்தது, நான் வந்த பேருந்திலேயே ஏறிவிட்டேன் என்பது. என்னை இறக்கிவிட்டு சென்ற அதே பேருந்து அழகர்கோவில் சென்று மீண்டும் திரும்பி வந்திருக்கிறது. நடத்துனர் அழுகாத குறையாக, "பாச வச்சுக்கிட்டு ஒரே பஸ்ல ஏப்பா திரும்பத் திரும்ப ஏறுற? வேற பஸ்ல ஏற வேண்டியதுதான?" என சொன்னார். வேறு நடத்துனராக  இருந்திருந்தால், “உங்களுக்கெல்லாம் பாசே கொடுத்திருக்க கூடாது. வெட்டியா ஊர் சுத்திக்கிட்டு திரியிறாங்கே” என கண்டபடி திட்டி இருப்பார்.

அனேக நடத்துனர்கள் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு பயணச் சலுகை கொடுத்தது மிகப்பெரிய குற்றம் என நினைக்கின்றனர். தவறுதலாக வேறு பேருந்தில் ஏறினாலோ, வேறு நிறுத்தத்தில் இறங்கினாலோ, நம்பிக்கையோடு அவர்கள் உரிய இடத்திற்கு செல்ல இந்த பேருந்து சலுகைகள் தான் உதவுகின்றன. புதிய இடத்திற்கு செல்லும்போது ஒருவரை அழைத்துக் கொண்டு மாற்றுத்திறனாளிகள் செல்கின்றனர். அப்போது அவர்களுக்கான செலவையும் இவர்கள்தான் செய்ய வேண்டி இருக்கிறது. அவற்றை ஓரளவு குறைப்பதற்கு  இந்த பேருந்து சலுகைகள் உதவுகின்றன. இப்படி அனேக பயன்களை  மாற்றுத்திறனாளிகளுக்குப் பேருந்து சலுகைகள் தந்திருக்கின்றன. ஆனால், நடத்துனர்கள் பார்வை மாற்றுத்திறனாளிகளை நடத்தும் விதத்தை பார்க்கும்போது, அரசுகள் அதன் முக்கியத்துவத்தை உணர்த்த விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த வேண்டும் என்று தோன்றுகிறது. நடத்துனர்களால் தமிழகத்தில் பேருந்து பயணம் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு கசப்பானதாகவே மாறிவிட்டிருக்கிறது.

நான் எப்போதும் கையில் வெண்கோலுடன் தான் நடந்து செல்வேன் என்பதால்,  ஒரு பார்வையற்றவர் வருகிறார் என்பதை உணர்ந்து எல்லோரும் வழி விடுவார்கள்; இருப்பினும் சிலர் கண்டுகொள்ளாமல் நிற்பதுண்டு.  அதனால், அவர்கள் மீது தெரியாமல் மோத வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். அதிலும் பெண்கள் மீது மோதிவிட்டால், ‘அழகா இருந்திரக்கூடாதே? அப்படியே கிளம்பி இடிக்க வந்துருவாங்கெ’ என்ற வாக்கியத்தை தான் முதலில் சொல்வார்கள். அப்புறம்தான் ஸ்டிக்கை  பார்த்துவிட்டு சாரி சொல்வார்கள். அது எப்படி நான் தெரியாமல் மோதினாலும் அழகான பெண்கள் மீது சரியாக மோதுகிறேன்? இந்த வினாவிற்கு தான் விடை தெரியாமல் இன்னமும் தடுமாறிக் கொண்டு இருக்கிறேன்!

அன்று 12.30 மணியோடு வகுப்பு முடிந்ததால், 12.50-க்கு திருமங்கலத்தில் இருந்து வரும் 44 பேருந்திற்காக கோரிப்பாளையத்தில்  காத்துக்கொண்டிருந்தேன். அந்த பேருந்தின் ஹாரன் சத்தம் மிகவும் வித்தியாசமாக இருக்கும். எனவே, யாருடைய உதவியும் இல்லாமல் அந்த பேருந்தை என்னால் கண்டுபிடிக்க முடியும் என்பதால், அதை எதிர்நோக்கி காத்திருந்தேன். அந்த நேரத்தில் ஒரு பாட்டி வந்து, “இந்த பஸ்  ஊமச்சிகுளம் போகுமா?” என கேட்டார்கள். "எனக்கு கண்ணு தெரியாது; வேற யாரிடமாவது கேளுங்கள்" என்று சொன்னேன். "ஏன் காது கேட்காதுனு சொல்ல வேண்டியது தானே? நானும் அரைமணி நேரமா பார்த்துகிட்டிருக்கேன், அந்த புள்ளையவே குறுகுறுனு பாக்குற. அதுக்கு மட்டும் கண்ணு தெரியுமோ. அவளுகளும்  மினுக்கிக்கிட்டு வந்துர்றாளுக" என கொடூரமாய் திட்டத் தொடங்கியதும் நானும் சற்று ஆடிப்போனேன். அந்தப் பாட்டி திட்டியதன் குறிப்பிலிருந்து, என் முகம் திரும்பி இருக்கும் திசையில் ஒரு அழகான பெண் நிற்கிறார் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. அதனால் பாட்டியின் வசவை மறந்து, ஆகாயத்தில் பறந்தேன். நிதானத்திற்கு வந்த பின்பு, ‘எங்கு போனாலும் இந்த அழகிகள் தொல்லை தாங்க முடியவில்லையே’ என மனம் நொந்தேன்!
***

தொடர்புக்கு: parvaiyatravan@gmail.com

3 கருத்துகள்:

  1. கட்டுரையில் யதார்த்தமும் நகைச்சுவையும் நிறைந்து இருந்தாலும். கிடைத்த இடைவெளியில் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள சலுகைகளின் முக்கியத்துவத்தையும் அதன் அவசியத்தையும் மிகத் தெளிவாக வெளிப்படுத்தியது வாழ்த்துகள். பார்வையற்ற சங்கங்களை பலர் திட்டிக்கொண்டே இதுபோன்ற சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் பலருக்கு புரியும்படி எடுத்தமைக்கு நன்றிகள். பார்வையற்றவர்கள் இடையே போராட்டங்களும் அரசுக்கு எதிரான கழகங்களும் ஏன் என புரியாமல் புலம்பிக் கொண்டிருக்கும் பைத்தியக்கார சமூக துரோகிகளுக்கு இது போன்ற கட்டுரைகள் அவசியம் தேவைப்படுகின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்கான சலுகைகள் எதற்காக கொடுக்கப்பட்டிருக்கிறது, அவை என்ன நோக்கத்திற்காக போராடி பிறப்பட்டது, அதில் நம் முன்னவர்கள் அடைந்த துயர்ங்கள் என்ன என்பது குறித்து இத்தலைமுறைகள் சிந்திக்கக்கூட தயாராக இல்லை! தான் பார்வையற்றவர் என்ற அடயாளத்தை மறைக்க நினைக்கு இளையவர்களுக்கு, வாழ்ழைப்பழத்தில் ஊசி ஏற்றினால் போல எனது கருத்துக்களை சொல்ல முயல்கிறேன். உங்களது பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிண்ணே

      நீக்கு