விளையாட்டு: 21-ஆவது பார்வையற்றோருக்கான தேசிய தடகளப் போட்டிகள் - பாலகிருஷ்ணன் மருதமுத்து

பார்வையற்ற வீராங்கனைகள் ஓடிக்கொண்டிருக்கும் பின்னணியைக் கொண்ட 21-ஆவது பார்வையற்றோருக்கான தேசிய தடகளப் போட்டியின் போஸ்டர்
  விளையாட்டு - வீரர்கள் மத்தியில் வெற்றி பெறவேண்டும் என்ற வேட்கையைத் தருவதோடு, போட்டி மனப்பாங்கை ஏற்படுத்தும் களமாகவும், ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும் தலமாகவும் இருக்கிறது. மைதானத்திற்குள் போட்டியையும், வெளியே நட்புறவையும் வளர்ப்பதில் விளையாட்டிற்கு முக்கியப் பங்கு உள்ளது என்றால் அது மிகையில்லை. பார்வை மாற்றுத்திறன் வீரர்களிடையே மைதானத்திற்குள்ளேயே இம்மாதிரியான நட்புறவை உங்களால் காண முடியும்; ஆனால், நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகள்தான் குறைவு. எவ்வளவு குறைவு என்றால், வருடத்திற்கு ஒருமுறை தமிழக அரசின் சார்பாக மாவட்ட அளவிலான போட்டிகள்; அதில் தேர்வு பெறுபவர்களுக்கு மாநில அளவிலான போட்டிகள் ஒருமுறை: தடகள விளையாட்டுப் போட்டிகளின் நிலை அவ்வளவுதான்.

தனியார் அமைப்புகள் பார்வையற்றோருக்கென விளையாட்டுப் போட்டிகளை நடத்தினாலும், அவர்கள் பட்டியலில் தடகள விளையாட்டுப் போட்டிகள் பெரும்பாலும் இருப்பதில்லை. காரணம், தடகளப் போட்டிகளை நடத்த அதிகம் செலவு ஆகும். இப்போட்டிகளுக்கு அதிகமான வீரர்கள் வருவார்கள்; அவர்களுக்குத் தங்கும் வசதி, உணவு முதலியவற்றிற்கு அதிகமான பணம் தேவைப்படுவதால் யாரும் இவற்றை நடத்த முன்வருவதில்லை. மேலும், மாணவர்கள் மத்தியில் தடகளப் போட்டிகளுக்கான ஆர்வமும் குறைவு. ஆனால் கிரிக்கெட், கைப்பந்து, சதுரங்கம் போன்ற விளையாட்டுப் போட்டிகளைப் பல அமைப்புகள் நடத்துகின்றன.

இதற்கிடையே, கடந்த டிசம்பர் 10 முதல் 13-ஆம் தேதிவரை பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகளை இந்தியப் பார்வையற்றோருக்கான விளையாட்டுச்  சங்கமும் (Indian Blind Sports Association – IBSA), பார்வையற்றோர் மறுவாழ்வு மையமும் (Blind Relief Association – BRA) இணைந்து, அங்குள்ள தொண்டு நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்களின் உதவியோடு வெகு விமரிசையாக நடத்தி முடித்திருக்கின்றனர். இப்போட்டிகளை ‘உஷா’ (USHA) நிறுவனம் எடுத்து நடத்தியதால், இது ‘USHA 21st Athletic Championships for the Blind’ என்றே அழைக்கப்பட்டது.  இதில், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் 197 வீராங்கனைகள் உட்பட சுமார் 850-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இம்முறை புதிதாக, கோல் பந்து (Goal Ball) என்ற பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போட்டிகள் அனைத்தும் டில்லியில் உள்ள தியாகராஜ் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

போட்டிகள் 17 வயதிற்குக் கீழ் மற்றும் 17 வயதிற்கு மேல் உள்ள ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே நடத்தப்பட்டன. மேலும், இவை B1 (முழுப் பார்வை இல்லாதவர்), B2 (குறைப் பார்வை உடையவர்) மற்றும் B3 (40% முதல் 70% வரை பார்வை உடையவர்) என்ற பிரிவுகளின் அடிப்படையில் தனித்தனியே நடத்தப்பட்டது.  டிராக் ஈவண்ட்ஸ் (Track Events) என அழைக்கப்படும் ஓட்டப் போட்டிகள், தொடர் ஓட்டம், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல் மற்றும் சதுரங்கம் எனப் பல போட்டிகள்  இருபாலருக்கும் சேர்த்தே நடத்தப்பட்டன. ரஷ்யா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து விளையாட்டு வீரர்களும், நடுவர்களும் கலந்துகொண்டு வீரர்களுக்கு கோல் பந்து பயிற்சி வழங்கினர்.

போட்டிகள் அனைத்தும் திட்டமிட்டபடி கடந்த டிசம்பர் 10-ஆம் தேதியில் தொடங்கியது. அதற்குமுன் 9-ஆம் தேதியில் மருத்துவப் பரிசோதனைகள் முறையாக நடத்தப்பட்டன. இப்போட்டிகள் அனைத்தும் முறையாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழகத்திலிருந்து, தமிழ்நாடு பார்வையற்றோர் விளையாட்டு சங்கம் (TABSA) சார்பில் 9 பேர், சென்னை பூவிருந்தவல்லி  அரசு பார்வையற்றோர் பள்ளி சார்பில் 9 பேர் மற்றும் ‘Tamilnadu IIC’ என்ற தனியார் அமைப்பின் சார்பில் 2 பேர் என மொத்தம் 20 பேர் கலந்துகொண்டனர்.  போட்டிகளின் முடிவில், மணிப்பூர் மாநிலம் 8 தங்கம், 2 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கங்களுடன் முதல் இடத்தைப் பெற்றது; இம்மாநிலம் பெற்ற  8 தங்கப் பதக்கங்களில், 6 தங்கப் பதக்கங்களைப் பெற்றவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2 தங்கம், 6 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களுடன் உத்திரகாண்ட் மாநிலம் இரண்டாம் இடத்தைப் பெற்றது.

இப்போட்டிகளில் தமிழகம் 2 தங்கம், 3 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றது.  தமிழ்நாடு பார்வையற்றோர் விளையாட்டு சங்கம் சார்பில் கலந்துகொண்ட பிரசாந்த் என்ற வீரர் 400 மீ. ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கமும், 100 மீ. மற்றும் 200 மீ. ஓட்டப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களும் பெற்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்; இவர் மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு ஆங்கிலம் பயின்று வருகிறார். அதேபோன்று, பூவிருந்தவல்லி அரசு பார்வையற்றோர் பள்ளியைச் சேர்ந்த பிரவீண் குமார் என்ற 11-ஆம் வகுப்பு மாணவர் குண்டு எறிதல் போட்டியில் தங்கப் பதக்கமும், வட்டு எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், ஈட்டி எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கமும் பெற்று அப்பள்ளிக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தார். அதே பள்ளியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற வீரர் 400 மீ. ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். இப்போட்டிகளில் கலந்துகொண்ட மற்ற தமிழக வீரர்களும் நூலிழையிலேயே பதக்கங்களைத் தவறவிட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

IBSA-யின் விதிப்படி, ஒரு அமைப்பிலிருந்து அதிகபட்சம் 9 பேர் மட்டுமே போட்டிகளில் கலந்துகொள்ள முடியும். தமிழ்நாட்டில் பார்வையற்றவர்களுக்காக எண்ணற்ற அமைப்புகள் இருந்தும், ஏன் இவ்வளவு குறைவான பங்கேற்பு என்பது புரியாத புதிராக உள்ளது. அதற்குக் காரணங்களாக நான் பின்வருவனவற்றை கருதுகிறேன். அதாவது, தமிழகத்தில் சிறந்த விளையாட்டு வீரர்கள் இருக்கிறார்கள்; ஆனால், அவர்களுக்கான சரியான அங்கீகாரம்தான் கிடைப்பதில்லை. என்னதான் திறமை வாய்ந்தவர்களாக அவர்கள் இருந்தாலும் சிறப்புப் பள்ளிகளும், தனியார் நிறுவனங்களும் அவர்களை அங்கீகரிக்க முன்வருவதில்லை. காரணம், இம்மாதிரியான விளையாட்டுகளால் எவ்வித வருமானமும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை.

மாற்றுத்திறனாளி அல்லாதவர்கள் எப்படி என்று என்னால் கூறமுடியாது. ஆனால், பார்வை மாற்றுத்திறன் மாணவர்களைப் பொறுத்தமட்டில், பெரும்பான்மையானவர்கள் படிப்பிலும், விளையாட்டிலும் கில்லியாகதான் வலம் வருகிறார்கள். இதனை அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். பல பள்ளிகளில்  அரசுக் கட்டுப்பாடுகளைக் காரணம் காட்டி வீரர்களை அழைத்துச் செல்வதற்கு ஆசிரியர்கள் முன்வருவதில்லை. அதேபோன்று, தமிழக அரசும் விளையாட்டுத் துறையில் சாதிக்கும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குச் சரியான அங்கீகாரம் வழங்குவது இல்லை. சரியான அங்கீகாரம் கிடைக்கும் பட்சத்தில், தமிழகத்திலிருந்து சிறந்த பார்வை மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்கள் வெளிவருவார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை!
***

தொடர்புக்கு: m.bala10991@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக