சினிமா: வைரமுத்து பாடல்களில் இலக்கிய நயம் - முனைவர் க. சரவணன்

graphic கவிஞர் வைரமுத்து

           விரல்மொழியரின் 24-ஆம் இதழில் திரையுலகில் அடியெடுத்து வைத்து 40 ஆண்டுகளாய் கவிப்பே்ரரசு வைரமுத்து தமிழ்த் திரைக்கு ஆற்றிய பணிகளைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக வருகிறது இக்கட்டுரை.
      அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளவாறு கவிஞர் வைரமுத்து முதுகலைத்தமிழ் இலக்கியம் பயின்றதுடன் இலக்கிய இலக்கணங்களில் தேர்ந்து தெளிந்தவர். அதனால் தனக்கு வாய்ப்புக் கிட்டும்போதெல்லாம் தனது திரைப்பாடல்களில் இலக்கிய இலக்கணங்களைச் சாறு பிழிந்து கொடுக்க ப்பதே இல்லை.
            இலக்கியத்தில் காதல் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. பண்டைக் கால மக்கள் காதலைப் புனிதமாகப் போற்றினர். காதல் என்னும் இயக்க உணர்ச்சி கவிஞர்களின் கற்பனை ஊற்றுக் கண்ணைத் திறந்து விடும் தன்மை உடையது. 
      சங்க இலக்கியம் என்பது கற்பனையின் ஊற்றுக்கண். கண்ணதாசன் முதல் வைரமுத்து வரை அதைத் தொட்டுச் செல்லாமல் இருக்க முடிந்ததில்லை. சங்க இலக்கிய வரிகள் வைரமுத்து திரைப்படப் பாடல்களில் இடம் பெற்றுள்ளன. சங்க இலக்கியம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது இருவர் படத்தில் வரும்நறுமுகையே நறுமுகையேபாடல் தான். அதில் வரும்
                        ”அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித்தரள
                        நீர்வடிய கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா” 
அன்றொருநாள் வெண்ணிலாவின் ஒளியில் நெற்றியில் நீர்த் திவலைகள் முத்துப் போல் உருள, கொற்றவனுக்கு உரித்தான சுனையில் நீராடியவள் நீயா? (பொய்கை என்றால் இயற்கை நீர் நிலை, சுனை, குளமன்று) இந்த வரிகளைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் ஒரு சில்லிடும் உணர்வு. இந்தப் பாடலில் வரும் மிகப் பிரசித்தி பெற்ற வரிகள்அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்புறநானூற்றின் நூற்றுப் பன்னிரெண்டாம் பாட்டிலிருந்து எடுத்தாண்ட வரிகள். கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் மகள் பாடியதாக வரும் புறநானூற்றில் சோகத்தைச் சொன்ன அதே வரிகள்.
ஒரு அருமையான குறுந்தொகைப்பாடல்
                        யாயும் ஞாயும் யாராகியரோ
                        எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
                        யானும் நீயு மெவ்வழி யறிதுஞ் . . .
என்ற வரிகளை வைரமுத்து கீழ்வருமாறு மாற்றி எழுதியிருப்பார்.
                        யாயும் ஞாயும் யாராகியரோ
                        நெஞ்சு நேர்ந்ததென்ன?
                        யானும் நீயும் எவ்வழி அறிதும்
                        உறவு சேர்ந்ததென்ன?
                        ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன
                        செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் அன்புடை
            நெஞ்சம் கலந்ததென்ன                                (இருவர்)
நம் காதல் நிலைக்குமா? நிறைவேறுமோ? எனக் கவலை கொண்ட காதலியைத் தேற்ற காதலன் பாடியதாக வரும் இந்தப் பாடலின் விளக்கம் இதுதான். ‘உன் தாயும் என் தாயும் தொடர்பற்றவர்கள். என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவினர்கள் இல்லை. நீயும் நானும் கூட இதற்கு முன்பாய் அறிமுகமானவர்கள் இல்லை. செம்மண்ணில் பெய்த மழை செந்நிறத்தைப் பெற்றுப் பிரிக்க முடியாததுபோல நம்மிருவர் நெஞ்சங்கள் தமதாகக் கலந்துவிட்டன.
                        தாமரைத் தாண் தாது ஊதி, மீமிசை
                        சாந்தில் தொடுத்த தீம் தேன் போல
                        புரைய மன்ற, புரையோர் கேண்மை
என்று நற்றிணைத் தலைவி தன் காதலின் உயர்வைச் சொல்ல, தனக்கும் தலைவனுக்குமான நட்பு என்பது நிலத்தை விட உயர்ந்தது, நீரை விட ஆழமானது என்கிறாள் ஒரு குறுந்தொகைத் தலைவி என்ற  கற்பனையை கவிஞர் தனது பாடலொன்றில்
                        மெல்லினமே மெல்லினமே
                        நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்
                        என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி     
                        அதை வானம் அண்ணாந்து பார்க்கும்.   (ஷாஜஹான்)


என்று தலைவனின் மீது ஏற்றிக் கூறினார். 

       பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கும் தகப்பனுடைய மனநிலை எப்படியிருக்கும்? பஞ்சுப் பொதி போல அந்தப் பிஞ்சுக் குழந்தையைக் கையில் வாங்கிய நாளிலிருந்து வளர்த்து ஆளாக்கி ஒருவன் கையில் பிடித்துக் கொடுக்கும்போது எந்தத் தகப்பனும் கோழையாகித்தான் போகிறான்.
          அபியும் நானும் என்றொரு திரைப்படம். அந்தப் படம் ஒற்றை மகளை வளர்த்து ஆளாக்கித் திருமணம் செய்து வைக்கும் தந்தையின் மனநிலையை அழகாகக் காட்டியது..
                        மூங்கில் விட்டுச் சென்ற பின்னே
                        அந்தப் பாட்டோடு மூங்கிலுக்கு உறவு என்ன
                        பெற்ற மகள் பிரிகின்றாள்
                        அந்தப் பெண்ணோடு தந்தைக்குள்ள உரிமை என்ன-
மூங்கிலில்தான் இசை பிறக்கிறது. ஆனால் அது மூங்கிலோடு இருந்து விடுவதில்லை. அப்படிப் பிறந்து மூங்கிலைப் பிரிந்த இசைக்கும் மூங்கிலுக்கும் என்ன தொடர்பு? ஏன் மூங்கிலுக்கு இப்படியொரு நிலை? ஆண்டவனே அறிவான். கடவுள் தகப்பனாகப் பிறக்க வேண்டும். பெண்குழந்தைக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டும். 
            இன்னொரு தந்தை. இவனும் மகளுக்குத் திருமணம் செய்து வைக்கிறான். தாயில்லாத மகளைத் தாய்க்குத் தாயாய் தந்தைக்குத் தந்தையாய் வளர்த்தவன். அவளுக்குப் பூச்சூட்டிச் சீராட்டி வளர்த்ததால் அவன் சோகத்தை வேறுவிதமாகச் சொல்கிறான்.
                        காலையில் கதம்பங்கள் அணிந்திருப்பாள்
                        மாலையில் மல்லிகை முடிந்திருப்பாள்
                        திங்களில் சாமந்தி வைத்திருப்பாள்
                        வெள்ளியில் முல்லைகள் சுமந்திருப்பாள்
                        கட்டித்தங்கம் இனிமேல் அங்கே என்ன பூவை
                        அணிவாளோ
                        கட்டிக்கொண்ட கணவன் வந்து சொன்ன பூவை
                        அணிவாளோ
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பூ வாங்கித் தந்த தகப்பனுக்கு மகள் கணவன் வீடு போனால்.. கணவன் சொன்ன பூவைத்தான் சூடிக் கொள்வாள் என்பதே பெருஞ்சோகமாகத் தாக்குகிறது. மருமகன் மேல் ஒரு பொறாமை கலந்த கோபம் உண்டாவதைத்தான் இந்த வரிகள் காட்டுகின்றன. இப்படியான அருமையான வரியை சங்கர்-கணேஷ் இசையில் வைரமுத்து அவர்கள் எழுத ஏசுதாஸ் உணர்வுப்பூர்வமாகப் பாடியிருப்பார்.
            எத்தனை காலங்களாக மகளைக் கட்டிக் கொடுக்கும் பெற்றோர்கள் இப்படியிருக்கிறார்கள்? சங்ககாலத்துக்கும் முன்பிருந்தே இப்படித்தான் இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் அகநானூற்றில் ஓர் அழகான பாடல் நமக்கு விளக்கமாகக் கிடைத்திருக்காது.
      தொடிமாண் சுற்றமும் எம்மும் உள்ளாள்
      நெடு மொழித் தந்தை அருங் கடி நீவி,
      ————————————நெய் உமிழ் சுடரின் கால் பொரச் சில்கி,
      வைகுறு மீனின் தோன்றும்
      மை படு மா மலை விலங்கிய சுரனே?
                                          (கயமனார்    அகநானூறு)
பழந்தமிழ் இலக்கியங்களில் காதலன், காதலியை தலைவன், தலைவிஎன்றுதான் குறிப்பிடுகிறார்கள். தலைவியைப் பிரிந்து தலைவன் பொருள் தேடச் செல்வான். இதற்குப் பொருள்வயிற் பிரிவுஎன்று பெயர். இந்தப் பிரிவுக் காலம் மூன்று மாதங்களைத் தாண்டக் கூடாது. 
      அப்படி, தலைவன் பிரிந்து சென்றதால் வருந்தும் தலைவி, அவன் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து, கண்கள் பொலிவு இழக்கிறாள். அவன் சென்ற நாளை எண்ணி எண்ணிப் பார்த்து வருந்துகிறாள்.
      விரல் விட்டு எண்ணுவது ஒரு வகை. விரலை ஒற்றி எண்ணுவது இன்னொரு வகை. அதாவது, பெருவிரல் நுனியால் மற்ற விரல்களின் நுனியை தொட்டு, ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணுவார்கள். அப்படி தலைவன் பிரிந்து சென்ற நாட்களை விரலை ஒற்றி ஒற்றி எண்ணி எண்ணிப் பார்க்கிறாள் தலைவி. இவ்வாறு எண்ணி எண்ணியே அவளின் விரல்கள் தேய்ந்துவிட்டன என்கிறார் திருவள்ளுவர். அந்தக் குறள் இதோ...
      வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
      நாளொற்றித் தேய்ந்த விரல்.
இலங்கையின் அசோக வனத்தில் சீதையை சிறை வைத்துள்ளான் இராவணன். அங்கே, ராமனை நினைக்கும் போதெல்லாம் கண்ணீர் விடுகிறாள் சீதை. அந்தக் கண்ணீரில் அவளது சேலை நனைகிறது. துன்பத்தாலும், தன் நிலையை எண்ணி அவள் விடும் பெருமூச்சாலும் உண்டாகும் உடல் வெப்பத்தால், கண்ணீரால் நனைந்த சேலை காய்ந்துவிடுகிறது என்று கம்பன் சொல்வான்.
      ஒப்பினான்தனை நினைதொறும்
      நெடுங்கண் உகுத்த
      அப்பினால் நனைந்து அருந்துயர்
      உயிர்ப்புடை யாக்கை
      வெப்பினால்புலர்ந்த ஒரு நிலை
      உறாத மென்துகிலாள்
                              என்பான் கம்பன்.
நாளொற்றித் தேய்ந்த விரல்என்று வள்ளுவனும் வெப்பினால் புலர்ந்த ஒரு நிலை உறாத மென்துகிலாள்என்று கம்பனும் சொன்னதைத்தான் பாலைவனச்சோலை படத்தில் அப்படியே கையாண்டிருப்பார் வைரமுத்து.
அந்தப் படத்தில் வரும் ஆளானாலும் ஆளு இவ அழுத்தமான ஆளுபாடலில்
      மாலை சூடும் தேதி எண்ணி பத்துவிரல் தேயும்- இவ
      இழுத்துவிடும் பெருமூச்சில் ஈரச் சேலை காயும்’
என்கிறார் வைரமுத்து.
      காதலர்கள் நிறையப் பேசுவார்கள். ஒருவரை மற்றவர் புகழ்ந்து, வர்ணித்து என்று ஆயிரம் இருக்கும். கூடவே சண்டையும் இருக்கும். கொஞ்சம் நிஜம் கொஞ்சம் பொய் என்று சண்டையிலும் பல வகைகள் உண்டு. இருவரில் யாருடைய அன்பு உயர்வானது என்று விவாதிக்கலாம். காதலில் யாருக்கு அவஸ்தை அதிகம் என்றும் விவாதிக்கலாம்.  அழகன் படத்தில் நாயகனும் நாயகியும் விடிய விடியப் பேசுவது ஒரு பாடல் காட்சியாக வரும்.
புதுமைப்பெண் படத்தில் வைரமுத்து எழுதிய  காதல் மயக்கம் என்ற பாடல் வரிகள்  
      ஆண் : நான் தூங்கும் வேளை கனவுகள் தொல்லை
      பெண் : நான் தூங்கவில்லை கனவுகள் இல்லை
இந்தத் தூக்கம் கனவு பற்றிய வரிகள் முதல் முறை கேட்கும்போதே பிடித்த வரிகள். ஆண், பெண் இருவரும் தூக்கம் பற்றியும் கனவு பற்றியும்  அவரவர் நிலை சொல்வது போல். ஆண் சொல்வதென்ன? அவன் தூங்கும்போது நிறையக் கனவுகள் வருகிறதாம். அதனால் தொல்லையாம். இதற்குப் பெண் சொல்லும் பதில்தான் சுவாரஸ்யம்.
          நான் தூங்கவில்லை கனவுகள் இல்லை
      மெய்யாபொய்யா.. மெய்தான் ஐயா
      நான் தூங்கவில்லை கனவுகள் இல்லை 
என்று சொல்கிறாள். அடப்பாவி உன்னால் தூங்க முடிகிறது அதில் கனவு வருகிறது, வேறென்ன வேண்டும்? என்னைப்பார் எப்போதும் உன் நினைவில் இருக்கும் என்னால் தூங்கவே முடியவில்லை. அதனால் எனக்கு கனவே இல்லை என்று அவள் அனுபவிக்கும் வேதனை சொல்கிறாள். இந்த வரிகளில் கொஞ்சம் இலக்கிய வாசம் .தேடினால் கம்பனிடம் போய் நிற்கிறது.
      துயில் எனக் கண்கள் இமைத்தலும் முகிழ்த்தலும்  துறந்தாள்;
      வெயிலிடைத்தந்த விளக்கு என ஒளி இலா  மெய்யாள்;
      சீதை அசோகவனத்தில்  உறங்கவேயில்லை. தூக்கம் என்று     இமைகளை மூடுவதையும் திறப்பதையும் மறந்துவிட்டாள் என்ற கற்பனை. ஏன் இதை மறந்தாள்? வள்ளுவன் சொல்லும் விளக்கம் பாருங்கள்
      இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
      ஏதிலர் என்னும் இவ்வூர் 
என் கண்கள் இமைத்தால் உள்ளிருக்கும் என்னவர் மறைவதை அறிந்து நான் கண்களை இமைப்பதில்லை என்று சாலமன் பாப்பையா உரையில் சொல்கிறார். கம்பன் வேறு ஒரு இடத்திலும் இந்தத் தூங்காத நிலை பற்றிச் சொல்லும் வரிகள்
          துயில்இலை ஆதலின் கனவு தோன்றல
      அயல்விழி ஒரு கனவு அமைய நோக்கினேன்
திரிசடை சீதையிடம் கூறுவது  நீதான் தூங்குவதே இல்லையே அதனால்தான் உனக்கு கனவுகளே இல்லை. நான் கண்ட கனவைச் சொல்கிறேன் கேள் என்கிறாள். வைரமுத்துவின் புதுமைப்பெண் நாயகியும், தான் இதே நிலையில் இருப்பதைக் காதலனிடம் சொல்கிறாள்.
          உறவோடு விளையாட எண்ணும்
      கண்கள் உறங்காது உறங்காது கண்ணே
 என்று கண்ணதாசன் சொல்வதும் துயிலாத ஒரு பெண்தான்.  
      கடல்படத்தில்  நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன் பாடலில் ஒரு வரி:
      பட்சி ஒறங்கிருச்சு,
      பால் தயிரா தூங்கிருச்சு,
      நொச்சி மரத்து இலைகூட தூங்கிருச்சு!
அதென்ன நொச்சி மரத்து இலை? வேறு மரங்கள் ஆகாதா?
இதற்கான விடை குறுந்தொகையில் உள்ளது. கொல்லன் அழிசி எழுதிய இந்தப் பாடலில் :
            கொன்னூர் துஞ்சினும் யாந் துஞ்சலமே
                        எம் இல் அயலாது ஏழில் உம்பர்
                        மயிலடி இலைய மா குரல் நொச்சி   
ஊரே தூங்குகிறது, நான் மட்டும் தூங்கவில்லை. என் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ஏழில் மலையில், மயிலுடைய கால்களைப் போல இலைகளைக் கொண்ட நொச்சி மரத்தின் பூக்கள் உதிரும் சத்தத்தை இரவெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன் என்று தலைவனுக்காக காத்துக் கொண்டிருக்கும் தலைவி சொல்கிறாள். ஆனால் இந்தத் தலைவியைப் பொறுத்தவரைஅந்த நொச்சியும் தூங்கிடுச்சுஎன்கிறார் வைரமுத்து. என்னவோர் அழகு.
                        காச நோய்க் காரிகளும்
                        கண்ணுறங்கும் வேளையில
                        ஆச நோய் வந்து மக அரநிமிசம் தூங்கலையே….
                        ஏல இளஞ்சிறுக்கி ஏதும் சொல்ல முடியலயே
                        ரப்பர் வளவிக்கெல்லாம் சத்தமிட வாயில்லையே   (கடல்)
என்று பாடுவதன் வாயிலாக இரவெல்லாம் விழித்துக்கிடக்கும் காசநோய்ப் பெண்கள் கூட உறங்கிவிட்டார்கள். என் ஆசை நோய் காரணமாக எனக்கு உறக்கம் வரவில்லையே என்றும் அதனை எவ்வாறு வெளியில் சொல்ல முடியும் என்பதனை ரப்பர் வளையலோடு தன்னை ஒப்பிட்டுக் கொள்கிறாள். இதனையே,
                        நள்ளென்றன்றே, யாமம் சொல் அவிந்து
                        இனிது அடங்கினரே, மாக்கள் முனிவு இன்று
                        நனந்தலை உலகமும் துஞ்சும்
                        ஒர்யான் மன்ற துஞ்சாதேனே       (குறுந்தொகை - 6)
என்ற குறுந்தொகைப் பாடல் வழி அறியமுடிகிறது.
                        ஊருசனம் தூங்கிடுச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
                        பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியலையே
                                                                                    (மெல்லத் திறந்தது கதவு)
என்ற பிரிதொரு பாடலும் இங்கு ஒப்புநோக்கத்தக்கது ஆகும்.
      சிறை பிடிக்கப்பட்டிருக்கிறார் தளபதி. அழுது பாடுகிறாள் அவர் காதலி. சரித்திரக் கதை ஆதலால், சங்கத் தமிழில் நடக்கிறது பாட்டு.
                        இதயம்
                        உடலில் இருந்து விழுந்து
                        உருண்டு புரண்டு போகுதே
                        நல்ல மரத்தின் நறுங்கிளை யிழிந்து
                        வெள்ளச் சுழியில் விழுந்த மலராய். . . .
                        இதயம் கரைகள் மறந்து
                        திசைகள் தொலைந்து அலைந்து போகுதே
                        சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு
                        என் உயிரோ சிறிது காதலோ பெரிதே  (குறுந்தொகை)
என்று சங்கத் தமிழ்ச் சொற்களோடு பாடல்களையும் சேர்த்துத் தந்திருப்பது இத்திரைப்படத்தின் கதையோட்டத்திற்கு மேலும் சிறப்புச் சேர்க்கிறது.
                        ”பொத்தி வச்ச மல்லிகை மொட்டு
                        பூத்திருச்சு வெக்கத்த விட்டு”      (மண்வாசனை)
என்றும்,
                        ’’ஆத்துக்குள்ள நேத்து உன்ன நெனச்சேன்
                        வெக்க நெறம் போக மஞ்ச குளிச்சேன்”   (மண்வாசனை)
என்று தலைவி பாடுவதாக இடம் பெற்றுள்ளது. பெண்கள் இரண்டு காரணங்களுக்காகத் தம் உடலில் மஞ்சள் பூசுவர். ஒன்று மஞ்சள் கிருமி நாசினி, மற்றொன்று தம் கருப்புத் தோலில் தங்கம் பூசுவதற்காக. ஆனால், தலைவன் தன்னைக் கண்டதால் காம வேட்கை மிகுதியால் வெட்கம் அடைந்ததால் அந்த செந்நிறத்தை மறைப்பதற்காக தான் மஞ்சள் குளித்ததாக கவிஞர் குறிப்பிடுவது கற்பனையின் உச்சம்.
            அது கூடாது இது தாங்காது என்று தலைவி பாட
                        ‘சின்னக் காம்பு தானே பூவத் தாங்குது என்று தலைவன் முடிக்கிறான். இவ்வரிகள்உயிர் தவச் சிறிது காமமோ பெரிது’ இக்குறுந்தொகைப் பாடலொடு ஒப்புநோக்கத்தக்கது என்றும்,
            மன்மத அம்புகள் தைத்த இடங்களில் சந்தனமாய்
                        எனைப் பூசுகிறேன்.
என்றும் அமைந்த பாடல் வரிகள் காம நோயின் தன்மையை உணர்த்துகின்றன. 
            சங்க இலக்கியத்தில் உடன் போக்கு என்னும் நிகழ்ச்சி காணப்படுகிறது. தனக்குப் பிடித்த தலைவனைத் தேர்ந்தெடுத்து அவனோடு இணைந்து வாழ்க்கை நடத்தச் சென்று விடுவாள் தலைவி. இப்படி உடன்போக்கு மேற்கொண்ட தலைவியைத் தேடித் தாய் அலைந்து திரிகிறாள். வழியில் சந்திப்போரிடம் தன் மகள் பற்றி விசாரிக்கிறாள். இப்படி முக்கோற்பகவரைக் கேட்கும் போது அவர் தாய்க்கு ஆறுதல் கூறுகிறார்.
                        சீர்கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை
                        நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதாம் தான் செய்யும்
                        தேருங்கால் நும்மக்கள் நுமக்கும் ஆங்கு அனையாளே.
எனும் கலித்தொகைப் பாடல் இந்நிகழ்ச்சியை எடுத்துக் காட்டுகிறது. திருமணமாகி வேறொருவனுக்குச் சொந்தமாக வேண்டிய நிலை பெண்களுக்கு ஏற்படுதல் இயற்கை. எனவே இது குறித்து வருந்துதல் கூடாது என்பதை,
                        சிப்பிக்குள்ளே முத்து வந்தாலும் அது
                        சிப்பிக்கு சொந்தம் ஆகாது        (சம்சாரம் அது மின்சாரம்)
                        முத்துக்கு நேரம் வந்தால் முத்து அந்தச்
                        சிப்பிக்கு சொந்தமில்லை
                        பெண்மைக்கு நேரம் வந்தால் பெண்கள் என்றும்
                        பெற்றவள் சொந்தம் இல்லை      (அன்புள்ள அப்பா)
எனும் வைரமுத்துவின் பாடல்களில் இடம் பெற்றிருக்கும் இக்கற்பனை கலித்தொகைப் பாடலின் தாக்கத்தால் விளைந்தது எனக் கொள்ளலாம்.
            திருக்குறளின் கருத்துக்களைத் தம் பாடல்களில் கையாளும் உத்தியையும் வைரமுத்து மேற்கொண்டிருக்கிறார்.
                        விதியை உழைப்பால் வெல்வோம்-
            வந்தது எல்லாம் விதிப்படி என்றால்
                        வாழ்வது எல்லாம் வீண் தானே
                        விதியை உழைப்பால் வெல்வோம் என்று
                        வித்தகன் வள்ளுவன் சொன்னானே     (வில்லாதி வில்லன்)
எனும் பாடலின் விதி பற்றிய வீணான நம்பிக்கையைத் தவிர்த்து உழைத்து முன்னேற வேண்டும் என்ற கருத்து
                        ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
                        தாழாது உஞற்று பவர்.
எனும் திருக்குறளின் துணை கொண்டு வலியுறுத்தப்படுகிறது. 
      இவ்வுலகில் நிலையாமை ஒன்றே நிலையானது. உடல், செல்வம், இளமை இப்படி எதுவும் நிலைப்பதில்லை. நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்பது தான் இவ்வுலகத்தின் சிறப்பு என்பதனை
                        நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும்
                        பெருமை உடைத்து இவ்வுலகு
என்கிறது வள்ளுவம். இதனையே வைரமுத்து தன் அழுத்தமான வரிகளில்
                        பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி
                        இருக்கின்றது என்பது மெய்தானே
                        ஆசைகள் என்ன ஆணவம் என்ன
                        உறவுகள் என்பது பொய்தானே
                        உடம்பு என்பது உண்மையில் என்ன
                        கனவுகள் வாங்கும் பைதானே.
என்று நிலையாமைத் தத்துவத்தைக் குறிப்பிடும் கவிஞர்,
                        பேதை மனிதனே கடமையை இன்றே
                        செய்வதில் தானே ஆனந்தம்என்று
நாம் வாழும் ஒவ்வொரு நாளையும் நம் இறுதி நாளாக எண்ணி வாழவேண்டும் என்கிறார்.
            கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
                        ஒண்டோடி கண்ணே உள.
தலைவியின் அழகில் மயங்கிய தலைவன், கண்டும் கேட்டும், உண்டும், மோந்தும், உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இளவட்டத்தில் உள்ளன எனப் புகழ்கிறான். இக்குறட்பாவைத் திரைப்படப் பாடலில்,
                        கண்டு கேட்டு உண்டுயிர்த்து
                        உற்றறியும் ஐம்புலனும் பெண்ணில் இருக்கு
                        அந்தப் பெண்ணில் இருக்கு. . . .           (நேருக்கு நேர்)
என எடுத்தாள்கிறார் வைரமுத்து. 
      அனிச்ச மலரின் காம்பு களையாமல் சூடியதால் தலைவியின் இடை துன்புறுவதாக,
                        அனிச்சப்பூக் கால்களையான் பெய்தான் நுசுப்பிற்கு
                        நல்ல படாஅ பறை.
எனும் திருக்குறளில் கற்பனையைச் செய்தார் வள்ளுவர். இதே கற்பனையை வைரமுத்து,
                        முத்து ஒண்ணு இப்போது
                        சிப்பிக் குள்ளே முத்தாகும்
                        பத்து மாதம் பெண்களுக்கே
                        பரம்பரைச் சொத்தாகும்அடி
                        பத்து முழம் பூவை வைத்தால்
                        பாரம் என்னவாகும்?                             (அடுத்த வீடு)
எனும் திரைப்படப் பாடலில் எடுத்தாண்டுள்ளார் வைரமுத்து..
            கண்ணோடு கண் பேசக் காதல் மலர்கிறது. எண்ணக் கனவுகளை காதலரது விழிகள் பரிமாறிக் கொள்கின்றன. நாணமோ வாய் மொழிக்குத் தடை போடுகின்றது. மெளனமே மொழியாகின்றது. ஒருமனப்பட்டு அன்பு செய்கின்ற ஒருகாதல் உள்ளங்களின் கண்கள் ஒன்றோடு ஒன்று நோக்குகையில் வாய்ச்சொற்கள் பயனற்றுப் போகின்றன என்கிறார் வள்ளுவர்.
                        கண்ணோடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
                        என்ன பயனும் இல.  
என்பது குறட்பா. கண்ணும் கண்ணும் கலந்து காதல் மொழி பேசுகின்றன என்ற குறட்பாவின் கருத்து கவிஞர் வைரமுத்துவின் திரைப்பாடல்களில் பிரதிபலிப்பதைக் காணலாம்.
                        விழியில் விழுந்து இதயம் நுழைந்து
                        உயிரில் கலந்த உறவே       (அலைகள் ஓய்வதில்லை)
என்றும்,
                        பார்வை இரண்டும் பேசிக்கொண்டால்
                        பாஷை ஊமையாய் விடுமோ          (மே மாதம்)
என்றும் இடம்பெறும் திரைப்படப் பாடல்கள் கண்ணோடு கண் பேசும் எழிலை உணர்த்திக் காட்டுகின்றன. இரு விழிகள் பேசும் வார்த்தைகள் ஊமையாகி விடுகின்றன என்ற கருத்தை இப்பாடல்கள் மெய்ப்பித்து விட்டன. 
            பெண்கள் தங்கள் கடைக்கண் பார்வையினால் ஆண்களைக் கவர்ந்திழுக்கும் தன்மை உடையவர்கள் என்பதைத் திருக்குறளில்,
                        இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
                        நோய்நோக்கொன் றந்நோய் மருந்து
என்று அதனையே வைரமுத்து,
                        சுட்டும்விழிப் பார்வையில் சுகம் வைத்தாள்    (லவ்டுடே)
இக்கருத்தினையே பாரதிதாசன்
                        கண்ணின் கடைப்பார்வை  காதலியர் காட்டிவிட்டால்
                        மண்ணில் குமரற்கு மாமலையும் ஓர் கடுகாம்
என்றும் இடம் பெறும் பாடல்வரிகளின் மூலம் பெண்ணின் கண்கள் செய்யும் மாயச் செயலை வர்ணித்துள்ளார். காண்பவர் உயிரைப் பறிக்கக் கூடிய தன்மை கொண்டவை பெண்ணின் கண்கள் என்பதை,
                        கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகை
                        பேதைக்கு அமர்த்தன கண்.
என குறிப்பிடுகிறார் வள்ளுவர். இதனையே திரை இசைப் பாடல்களில் கையாண்டு உள்ளனர்.
                        மருந்துகள் இல்லாத தேசத்தில் கூட
                        மைவிழிப் பார்வைகள் போதும்   (வரலாறு)
என்று பெண்ணின் கண்களை மருந்திற்கு ஒப்பாக வைரமுத்து வருணித்துள்ளார். இலக்கியங்கள் பலவற்றினும் மாதரது கண்கள் ஆண்களின் இதயங்களைக் கவர்ந்து இழுக்கக் கூடிய  காந்தத்தன்மை வாய்ந்தவை எனச் சுட்டிக்காட்டுகின்றன.
                        தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
                        பெய்யெனப் பெய்யும் மழை.
எனப் பாடும் வள்ளுவர் கைப்பிடித்த நாயகனைக் கொண்டாடி மகிழும் தலைவி பெறும் சிறப்புகளைச் சித்திரித்துக் காட்டுகின்றார். இக்கருத்தினையே கவிஞர் வைரமுத்துவும் தன்னுடைய திரை இசைப் பாடல்களில்
                        ஆசைத் தலைவன் நீ நான் அடிமை மகாராணி (பாட்ஷா)
என்றும்,
                        உன்னைத் தானே தஞ்சம் என்று
                        நம்பி வந்தேன் நானே             (நல்லவனுக்கு நல்லவன்)
என்னும் பாடல் வரிகள் மூலமும் உணர்த்துகின்றார்.

      குற்றமில்லாத புகழினை உடைய வெள்ளி என்னும் விண்மீன், திசைமாறித் தெற்கே சென்றாலும் மழையை உணவாகக் கொள்ளும் வானம்பாடிப் பறவை வருந்தும்படியாக வான் பெய்தாலும் வற்றாத காவிரி என்று பட்டினப்பாலை கூறுகின்றது.
                        வசையில் புகழ் வயங்குவெண்மீன்
                        திசை திரிந்து தெற்கு ஏகினும்
                        தற்பாடிய தளி உணவின்
                        புள் தேம்பப் புயல் மாறி
இன்று காவிரி பொய்த்துப் போனது தனிக்கதை என்றாலும் நம் சங்கத் தமிழர் வானியல் நுட்பங்களை நன்கு அறிந்திருந்தனர் என்பதனை நாம் அறிகிறோம். இக்கருத்தினையே தன் முதல் பாடலில் பின் வருமாறு பதிவு செய்கிறார் வைரமுத்து.
                        வானம் எனக்கொரு போதி மரம்
                        நாளும் எனக்கு அது சேதி தரும்    (நிழல்கள்) 
      தமிழ்விடுதூது, கிள்ளைவிடு தூது, குருகு விடு தூது, மேகவிடு தூது என்று பலவகையான தூது இலக்கியங்களை நாம் அறிகிறோம். மேகத்தைத் தூது விட்டால் அது திசை மாறிச் சென்று விடும் என்பதற்காகத் தண்ணீரைத் தூது அனுப்புகிறாள் ஒரு தலைவி. சங்க காலப் பெண்கள் தம் காதலை, காதல் உணர்வுகளைத் தானாக வெளிப்படுத்தும் வழக்கம் இல்லை.
மண் கலையத்திலிருந்து கசிகின்ற நீர்த்துளியைப் போல் வெளிப்படுத்த வேண்டும் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. விரைந்து வரையாது கால நீட்டிக்கும் தலைவனை தோழி தான் வரைவு கடாதல் என்னும் துறை வாயிலாக வற்புறுத்துவாள். இத்தகைய கட்டமைப்பினை உடைத்தெறிந்த பெருமை புரட்சிக்கவி பாரதிதாசனையே சாரும். இவர்தான் காதலில் ஆணுக்கும் அச்சம் உண்டு, பெண்ணுக்குப் பேச்சு உண்டு என்று தன் பாடல்களின் வாயிலாக வலியுறுத்தினார், அதற்குப்பின் வந்த கண்ணதாசன் இலைமறை, காய்மறையாகப் பெண்ணின் காதலை வெளிப்படுத்த, கவிஞர் வைரமுத்துவே இதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்கிறார். அருவியின் ஒரு கரையிலிருந்து
                        அருவி போல அழுகிறேனே
                        அறிந்து கொண்டால் ஆகாதோ
                        முந்தானையின் ஓரம் என்னை
                        முடிந்துகொண்டால் ஆகாதோ    
என்று தலைவன் கேட்க
                        வக்கனையா தாலி வாங்கி
                        வாசலுக்கு வார தெப்போ உங்க
                        பாதம் பட்ட மண்ணெடுத்து நான்
                        பல்லு விலக்கப் போறதெப்போ     (அச்சமில்லை                                                                   அச்சமில்லை)
என்று தன் மன வேட்கையைத் தலைவி நேரடியாகக் கேட்கிறாள்.
இப்படி வைரமுத்துவின் திரைப் பாடல்களில் இலக்கிய நயம் விரவிக் கிடக்கிறது. அள்ள அள்ளக் குறையாத அமுத ஊற்றாய் நிறைந்திருக்கும் இவரது பாடல்களில் இடம்பெற்றுள்ள இலக்கிய நயங்களை இந்த ஒரு கட்டுரையில் முடித்துவிட முடியாதுதான் என்றாலும், முடித்துதானே ஆகவேண்டும்.

(கட்டுரையாளர் கரூர் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர்)
தொடர்புக்கு: dr.k.saravanan.tamil@gmail.com

  

2 கருத்துகள்:

  1. சங்கத்தமிழ் நூல் எழுத்துக்களையும், வைரமுத்து அவர்களின் திரைப்பட பாடல் வரிகளையும் ஒப்பிட்டு வழங்கியிருக்கிற கட்டுரை படிப்பதற்கு மிக ஆர்வமூட்டுகிறது.

    பதிலளிநீக்கு