அயல் மகரந்தம்: கண்ணகியின் கனல் பார்வை – பார்வையற்றவன்

      அன்று பள்ளி முடிந்து ஆசிரியைகள் பேருந்திற்காக கேட்டிற்கு அருகே நின்றிருந்தனர். பள்ளி முடிந்து பேருந்து வர அரைமணி நேரத்திற்கு அதிகமாகும். எனவேமுகநூலில் போஸ்ட் போடும் முக்கிய வேலை இருந்ததால்எங்கள் பள்ளியில் கடைக்கோடி முனையிலிருந்த பணியாளர் அறையில் தட்டச்சிக் கொண்டிருந்தேன். எல்லாம் முடித்து, முகநூலில் பதிவிட்டுவிட்டு மணியைப் பார்த்தேன். 4:55 எனக் காட்டியது. பேருந்து வந்து விடுமே என எழுந்து நடக்கத் தொடங்கினேன். அந்த நேரம் பார்த்துச் சரியாக பேருந்தும் வந்தது. உடனே சுற்றியிருந்த ஆசிரியைகள், “நாம் கேட்டுப் பக்கத்தில்தான் இருக்கிறோம். நம்ம காதுக்குகூட பேருந்தோட ஹாரன் சவுண்ட் கேட்கல. ஆனாஅங்கிருந்து சரியா ஹாரன் கேட்டு வந்துட்டாரு பாத்தீங்களா டீச்சர்”. “ஆமாப்பா அவங்களுக்கெல்லாம் காது கேட்கும் திறன் அதிகம்என்றெல்லாம் பேசத் தொடங்கிவிட்டார்கள். உன்மையில் அன்று அந்த பஸ் ஹாரனே அடிக்கல.

      இப்படி நானாக ஏதாவது செய்ய, அதற்கு இந்த சமூகம் தானாக ஏதாவது காரணத்தைக் கற்பித்துக்கொண்டுவிடுகிறது. பார்வையற்றவர்கள் நோட்டைச் சரியாகச் சொல்லி விடுவார்கள் என்று சொல்வார்கள். ஆனால் அவர்கள் எப்படி அந்த நோட்டைக் கண்டுபிடிக்கிறார்கள் என்ற காரணத்தை யாருமே கேட்டதில்லை. அதற்கு அவர்களே சொல்லிக் கொள்ளும் விளக்கம், அவர்களுக்கெல்லாம் தொடுதிறன் அதிகம் என்பதுதான்.

நான் காந்திகிராம்  பல்கலைக்கழகத்தில் படிக்கும் பொழுது சரியாக எட்டே முக்காலுக்கெல்லாம்  துறைக்குச் சென்று விடுவேன். நடந்து போகும்போதெல்லாம் என்னைப் பற்றி பேசிக் கொள்வதைக் கவனிப்பது வழக்கம். அவர்கள் எனக்கு ஏதேதோ திறமைகள் இருக்கிறது என்றும், நான் இப்படித்தான்  அடையாளம் வைத்து நடக்கிறேன் என்று புதிய கற்பனைகளையெல்லாம் அவிழ்த்துவிடுவார்கள். அதைக் கேட்கும்போது எனக்குச் சிரிப்பு சிரிப்பா வரும். ஆனால், யாரும் என்னிடம் அதைப் பற்றி கேட்க மாட்டார்கள். அவர்களே ஒரு முடிவிற்கு வந்துவிடுவார்கள். அப்படித்தான், பல்கலைக்கழகத்திற்குச் செல்வதையும் அவர்களே ஒரு முடிவு செய்து பேசிக்கொண்டார்கள். எனக்குப் படிப்பில் ஆர்வம் அதிகம் என்பதால் நான் எட்டே முக்காலுக்கே சென்றுவிடுவதாக எல்லோரும் சிலாகித்துக் கொண்டார்கள்.

       உண்மை நிலவரம் என்னவென்றால், 9 மணிக்கு மேல் பல்கலைக்கழகத்தில் வாகனங்கள் அதிகம் வரத் தொடங்கும். மாணவர்களின் நடமாட்டமும் அதிகமாக இருக்கும். எனவே பாதையில் என்னால் எளிதாகச் செல்ல இயலாது. அதனால் சாலை வெறிச்சோடி இருக்கும்போதே ஒன்பதரை வகுப்பிற்கு எட்டே முக்காலுக்கே சென்று விடுவதை வழக்கமாக வைத்திருந்தேன்.

பேருந்தைப் பிடிக்க பேருந்து நிலையங்களுக்குச் செல்வது, விழாக்கள், கூட்டங்கள் என எங்கு செல்வதாக இருந்தாலும் முன்கூட்டியே கிளம்பிவிடுவேன். ஏனெனில், இங்கே எல்லோரும் இறுதி நேரத்தில்தான் முண்டியடித்துக்கொண்டு வருவார்கள். எனவே சற்று முன்கூட்டியே சென்றுவிட்டால் நெரிசலின்றி சூழலை எளிதாக உள்வாங்க முடியும், நமக்குத் தோதான இடத்தையும் பிடித்துக்கொள்ள முடியும். எல்லோரும் பஞ்ச்வேலிட்டியைக் கடைபிடிக்கத்தொடங்கிறாதிங்க. அப்புறம் நெலம மோசமாப் போயிறும். அதனால இப்பவே எல்லோரும் திருந்திராதிங்க  

      தினமும் நான் வரும் பேருந்தில்தான் எனது மாணவர்களும் வருவார்கள். தமிழ் வாத்தியாருக்கு இருக்கும் சிக்கல் ஒன்றை அப்போதுதான் நான் உணரத் தொடங்கினேன். மாணவர்கள் எல்லோரும் ஐயா ஐயா என்று அழைப்பதால், பேருந்து நடத்துநரும் ஐயா என்று அழைக்கத் தொடங்கிவிட்டார். பேருந்தில் ஏதேனும் ஒரு வயதானவர் வந்தால் ஐயா என்று நடத்துனர் சொல்லும்போது, அவர் ஒருவேலை என்னைத்தான் அழைக்கிறாரோ என நினைத்துப் பல நேரங்களில் திரும்பி இருக்கிறேன். தமிழாசிரியராக இருப்பது எத்தனை சிரமம். “ஐயா எப்போதும் சரியாக சில்லறையைக் கொடுத்துறுவாரு. நீங்களுந்தான் இருக்கீங்களேஎனப் பலமுறை நடத்துநர் பலரிடம் என்னைச் சுட்டிக்காட்டி திட்டி இருக்கிறார்.

உண்மையில் நான் சரியாகச் சில்லறையைக் கொடுப்பதற்குக் காரணம், பேருந்தில் டிக்கேட்டுக்குச் சரியாக சில்லறை கொடுக்க வேண்டும் என்ற அக்கறை அல்ல. பேருந்து நடத்துநரின் குரலைக் கேட்டு, அவர் பேக்கில் சில்லறையை எந்தப் பக்கம் போடுகிறார், டிக்கெட் போடும் எந்திரத்தின் ஒளி எந்தப் பக்கம் கேட்கிறது, இவற்றையெல்லாம் ஒன்றுகூட்டி, அவர் எந்தத் திசையில் நிற்கிறார் என்பதைக் கணித்து, இடையில் நிற்பவர்கள் மீது கை பட்டுவிடாமல்கை நீட்டி காசைக் கொடுத்து டிக்கேட் வாங்குவேன். இந்தப் படினிலைகளைப் படிக்கும் உங்களுக்கே சற்று தலைசுற்றும். நான் ஒவ்வொரு முறையும் சில்லறை பாக்கியைக் கேட்க இத்தனை படினிலைகளைப் பின்பற்றவேண்டும் என்பதற்காகத்தான் எப்போதும் சில்லறையைச் சரியாக எடுத்துச் செல்கிறேன்.

      சிறு வயதிலிருந்து விடுதியில் வளர்ந்ததால் அங்கு சாப்பிட்டு முடித்ததும் தட்டை எடுத்துக்கொண்டு கழுவச்செல்லும் பழக்கம், வீட்டுக்கு வந்தபின்பும் வழக்கமாகவே ஒட்டிக்கொண்டுவிட்டது. "தட்ட வச்சுட்டு போக வேண்டியதுதானே" என அம்மா எத்தனை முறை சொன்னாலும், நாம் அதையெல்லாம் பொருட்படுத்தாது ஒவ்வொருமுறையும் தட்டை எடுத்துச் செல்லக் காரணம் விடுதி பழக்கந்தான்.

      அப்படித்தான் அன்றும் தட்டைக் கழுவிக்கொண்டிருந்தேன்.

அப்பொழுது, பக்கத்து வீட்டு அக்கா எங்கள் உணவகத்தில் இருந்த கலனித் தண்ணீரை மாட்டுக்கு ஊத்துவதற்காக எடுக்க வந்தார்.

நான் தட்டைக் கழுவிக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, "இந்தத் தம்பிகூட தட்ட கழுவுது. எங்க வீட்லயுந்தா இருக்குதுங்களே. ஒன்னும் தட்டக் கழுவாதுங்க. தின்னுட்டு அதே எடத்துல போட்டுட்டுப் போயிறுங்க" எனத் தன் வீட்டில் உள்ளவர்களை  ஏகவசனத்தில் அந்த அக்கா திட்டத்தொடங்கிட்டாங்க.

      மகன்களைப்  புகழ்ந்துவிட்டால் தாய்களைக் கையிலே புடிக்க முடியாதேஅப்போது பக்கத்தில் இருந்த என் அம்மா, "அவன் வீட்டுல தட்ட மட்டுமா கழுவுவான்!" என எனது பராக்கிரமங்களை ஆரம்பிக்கத் தொடங்கும்பொழுதே, "அக்கா பார்சல்" என ஹோட்டலில் சத்தம் கேட்டதும் எங்கம்மா விரைந்து சென்று விட்டார்.

      அவனே அவன் துணிகளைத்  துவைத்துக் கொள்வான், வீட்டு வேலைகளைச் செய்வான், தண்ணி எடுத்து ஊத்துவான் என்றெல்லாம் எனது பராக்கிரமங்களை என் அம்மா அடுக்குவதை அந்த அக்கா கேட்டிருந்தால், இன்னும் உச்சத்திற்குப் போய், கண்ணகியாய் மாறி கைக்குறிச்சியையே  எரித்திருப்பார்.

      நல்லவேளை யாரோ ஒரு மகாராசன் உணவு கேட்டு வந்ததால், அன்று அந்த கண்ணகியின் பார்வையிலிருந்து எங்கள் கைக்குறிச்சி தப்பியது.

 

தொடர்புக்கு: parvaiyatravan@gmail.com 

4 கருத்துகள்:

  1. இந்தப்பதிவை முகநூலில் படித்ததால் இங்கு முழுமையாகப் படிக்கவில்லை. தற்காலத்தில் எனக்கு முகநூல் ஆர்வம் குறைந்துவிட்டதால் இங்கே உங்களுக்கான பாராட்டை நான் சொல்லியாக வேண்டும். இப்படி்தான் ப்ரீஜுடீஸ் மனநிலை நம் மீது எங்கும் எப்போதும் பரவி விரவிக்கிடக்கின்்றன. அதை உங்கள் நடையில் சொல்லிப் பொதுச்சமூகத்தின் பரவலான கவனத்துக்கும் புத்திக்கும் எட்டும்படி செய்த்தற்கு நன்றி. உங்கள் விரப்மொழியர் கட்டுரைக்குக் கீழே கருத்து போடுவது மிக கஷ்டமான செயலாக இர்ப்பதால் எழுத்துப்பிழைகளை என்னால் திருத்த முடியவில்லை. எனவே பொருத்துக்கொள்ளவும்.

    பதிலளிநீக்கு
  2. உண்மையில் கனல் பார்வையாக தான் இருந்திருக்கும்

    பதிலளிநீக்கு
  3. Hotel in South Point, NY - Mapyro
    Search 창원 출장안마 for hotels 김제 출장안마 in South Point, 안산 출장샵 NY near Casino and Place of Pain on Mapyro. Explore other 전라남도 출장마사지 hotels in South Point, NY near Casino and Place of Pain 김천 출장샵 near

    பதிலளிநீக்கு