இதழைப் பற்றி


விரல்மொழியர்

பார்வையற்றவர்களால் நடத்தப்படும் முதல் தமிழ் மின்னிதழ் ‘விரல்மொழியர்’. பார்வையற்றவர்களின் படைப்புத் திறனை வெளிக்கொணர, அவர்களின் சிக்கல்களை விவாதிக்க களம் அமைத்துத் தரும் இந்த மாத இதழ், 2018 ஜனவரி 27 அன்று தோன்றியது.

​பார்வையற்றவர்கள் தங்கள் சிக்கல்கள், பெருமிதத் தருணங்கள், சவால்கள், தங்களுக்கான தொழில்நுட்பம், விளையாட்டு முதலியவை பற்றி இங்கு எழுதுவர். மேலும் அரசியல், சினிமா, விளையாட்டு, இலக்கியம் முதலியவை குறித்த பார்வையற்றவர்களின் பார்வையும் இங்கு படைப்புகளாகத் தரப்படும். பார்வையற்றோர் குறித்துப் பேசும் பார்வையுள்ளோரின் படைப்புகளும் இவ்விதழில் இடம்பெறும். இவ்விதழ் வரி வடிவில் மட்டுமின்றி, வாசகர்களின் வசதிக்காக ஒலி வடிவிலும் வெளிவருகிறது.

எந்த நிறுவனமும் சாராமல் ரா. பாலகணேசன், ப. சரவணமணிகண்டன், பொன். சக்திவேல், பொன். குமரவேல், ஜோ. யோகேஷ், ரா. சரவணன் ஆகிய 6 பார்வையற்ற பட்டதாரி இளைஞர்கள் மேற்கொண்டிருக்கும் அரிய முயற்சி இது.

பார்வையற்றவர்களின் படைப்புத் திறனை, அவர்களது சாதனைகளைப் பார்வையுள்ளோர்க்கும் எடுத்துரைக்க, பொது தளத்தில் பதிவு செய்ய மேற்கொள்ளப்பட்டிருக்கும் இம்முயற்சிக்கு உங்கள் ஆதரவை நாடுகிறோம், என்றென்றும்.

விரல்மொழியரின் ஆசிரியர்கள் அறுவரின் புகைப்படங்கள்


******

திருத்தி அமைக்கப்பட்ட ஆசிரியர் குழு

 

இதழின் ஆசிரியர் குழு ஜூலை 1 2020 அன்று திருத்தி அமைக்கப்பட்டது. அதன்படி,

 

ஆசிரியர்: ரா. பாலகணேசன் M.A., B.Ed

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வசித்துவரும் இவர், விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டி அரசு மே.நி. பள்ளியின் முதுநிலை தமிழாசிரியர். மதுரை இந்தியப் பார்வையற்றோர் சங்கம் (IABB)  என்ற அமைப்பால் வெளியிடப்பட்ட ‘விழிச்சவால்’ என்ற பிரெயில் மாத இதழில் இணை்யாசிரியராகப் பணியாற்றியவர்.

 

இணையாசிரியர்: பொன். சக்திவேல் M.A., B.Ed., M.Phil., Ph.D.

 புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சி என்ற சிற்றூரில் வசித்துவரும் இவர், புதுக்கோட்டை மாவட்டம் கரூர் அரசு மே.நி. பள்ளியில் முதுநிலை தமிழாசிரியராகப் பணியாற்றிவருகிறார்.

பார்வையற்றவன், வெளையாட்டுப் பய என்ற புனைபெயர்களில் சமூக ஊடகங்களில் தொடர்ந்து எழுதிவருகிறார். ‘நூதன பிச்சைக்காரர்கள்’, ‘என்றேனும் ஒருநாள் நான் கவிதை எழுதக்கூடும்’ ஆகிய இவரது நூல்கள் அமேசான் கிண்டிலில் வெளியிடப்பட்டுள்ளன.

 

உதவி ஆசிரியர்: ஜோ. ்யோகேஷ்

ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்ற இவர், தற்போது தென்காசி தலைமை அஞ்சலகத்தில் அஞ்சலக உதவியாளராகப் பணியாற்றிவருகிறார். தென் மாவட்டங்களில் வசிக்கும் பார்வை மாற்றுத்திறனாளிகளின் அறிவிக்கப்படாத தொழில்நுட்ப ஆலோசகராக விளங்கும் இவர், தென்காசி மாவட்டம் கீழவூர் என்ற சிற்றூரில் வசித்துவருகிறார்.

 

தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளர்: பொன். குமரவேல் B.A., Special B.Ed

ஆங்கிலப் பட்டதாரியான இவர், மதுரை இந்தியப் பார்வையற்றோர் சங்கத்தில் கணினிப் பயிற்றுநராகப் பணியாற்றிவருகிறார். பார்வையற்றோருக்கான தொழில்நுட்பம் குறித்துப் பல சமூக ஊடகக் குழுக்களில் தொடர்ந்து களமாடிவருகிறார்.

 

வடிவமைப்பு: ரா. சரவணன் B.A., B.Ed

சிவகங்கை மாவட்டம் தேத்தாம்பட்டி என்ற சிற்றூரில் பிறந்த இவர், ஆங்கில இலக்கியப் பட்டதாரி. தற்போது தமிழ்நாடு கிராம வங்கி கோயம்புத்தூர் கிலையில் அலுவலராகப் பணியாற்றிவருகிறார். இதழ் வடிவமைப்போடு, இந்த இணைய தளத்தை வடிவமைத்தவரும் இவரே.

 

தொகுப்பாசிரியர்-க. தமிழ்மணி B.A. B.Ed

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் வசித்துவரும் இவர், செங்கல்பட்டு மாவட்டம் சிட்லபாக்கம் அரசு உ.நி பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிவருகிறார். பார்வையற்றோருக்கான பல அமைப்புகளில் தன்னார்வலராக இணைந்து பணிபுரிந்திருக்கிறார். தனக்கு இருக்கும் குறைந்த அளவு பார்வையைக் கொண்டே 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் பாடப் புத்தகங்களை ஒலிப்பதிவு செய்து அனைவருக்கும் இலவசமாகப் பகிர்ந்திருக்கிறார்.