தொழில்நுட்பம்: தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் - பார்வையற்றவன்


ஒரு கத சொல்லட்டா சார்? இது பெரிய பட்ஜெட் கத.
செலவு அதிகமாகும் பரவால்லயா?

       நான் படிக்கும்போதிருந்த I.A.B.-யில் தொடக்கப்பள்ளி மாணவர்கள் தொடங்கி முனைவர் பட்ட ஆய்வாளர்கள் வரை விடுதியில் தங்கிப் பயின்றனர். அவர்களுள் அமெரிக்கன் கல்லூரியில் படித்த அண்ணன்கள் தனித்து மிளிர்ந்தனர். சிலர் பந்தா காட்டவும் செய்தனர். இந்த இருதரப்பில் ஏதேனும் ஒருதரப்பாய் மாறி விடுதியில் கெத்தாக வளம்வர வேண்டுமென்ற ஆசையை, என் பிஞ்சு மனதில் நஞ்சாய் விதைத்துவிட்டனர். அதன் காரணமாக அமெரிக்கன் கல்லூரியில் படிப்பது எனது லட்சியமானது.

       பார்வையற்றோர் உயர் கல்வி பயில்வதற்கு பெரும்பாலும் பெருநகரங்களையே தேர்ந்தெடுப்பர். அதற்கு முக்கிய காரணம், அவர்களுக்குப் புத்தகங்களை வாசித்துக் காட்டுவதற்குப் பெருநகரங்களில் தான் உதவிகள் கிடைக்கும்.  அதிலும்,  அதிகமாக சென்னையைத் தேர்ந்தெடுப்பர்.  இங்கே வாசித்துக் காட்ட வாசிப்பு மையங்களெல்லாம் உண்டு. சென்னையை ஒப்பிடும்போது தமிழகத்தில் பிற நகரங்களில் உதவி கிடைக்கும் விஷயத்தில் மலைக்கும், மடுவுக்குமான பெரும் இடைவெளியே இருக்கிறது. இருந்தபோதும், என் லட்சியம் வெல்வதற்காக, கல்லூரி பயில மதுரையையே தேர்ந்தெடுத்தேன்.

       அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும்பொழுது, பேராசிரியர் பூமி செல்வம் ஆல்பெர் காம்யூவின் அந்நியன் நாவலைப் பற்றி சிலாகித்துச் சொல்வார். அதுமட்டுமா? வகுப்பின் இடையிடையே அனேக தமிழ் நவீன இலக்கியங்கள் பற்றியும் சொல்வார். அவர் சொல்லும் நூல்களைப் பற்றிக் கேட்கும்போது எனக்கோ வாசிக்கும் ஆர்வம் மேலெழும். அப்போதெல்லாம், உன்னால் ஒருபோதும் அந்நூல்களை வாசிக்கமுடியாது என அறிவு ஆர்வத்தின்  தலையில் தட்டி உக்காரவைக்கும். ஏனெனில் களநிலவரம்  அப்படித்தான் இருந்தது.

       பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக ஒலிப் புத்தகங்களைப் பதிவு செய்யும் சில நூலகங்கள் இயங்கிக்கொண்டிருந்தன. அவை தன்னம்பிக்கை சார்ந்த புத்தகங்களையே அதிகம் பதிவுசெய்தன. பிரெயில் அச்சகங்களோ பள்ளிப் பாடநூல்களைத் தாண்டி வெளியே வருவதற்கு இயலாத நிலையிலிருந்தன. இத்தகைய சூழலில் நீ பிற புத்தகங்களைப் படிக்க ஆசைப்படுவதை விட்டுவிட்டு, தேர்வில் தேருவதற்கு வழியைப் பார் என அறிவு அறிவுரை சொன்னது. அதுவும் சரிதான். தேர்வுக்கான பாடங்களைப் படிப்பதற்கே பெரும் குட்டிக்கரணம் போடவேண்டி இருந்தது.

       முதல் பருவத் தேர்வில் தேர்ச்சி பெற நான் முழுமையாக நினைவாற்றலையே நம்பியிருந்தேன். வகுப்பில் நடத்தும் பாடங்களை முழுமையாக உள்வாங்கி நினைவில் இருத்தி, பின் விடுதிக்குச் சென்று அவற்றை மீள அசைபோட்டு, ஒலிப்பதிவுக் கருவியில் பதிவுசெய்தோ அல்லது பிரேயிலிலோ எழுதிவைத்துப் படித்தேன்.
graphic Trancend ipad

       அப்போதுதான் டிரான்சண்ட் கம்பெனி பென்டிரைவ் வடிவில் ஒரு ஒலிப்பதிவு செய்யும் கருவியை அறிமுகப்படுத்தி இருந்தது. அதில் ஒலிப்பதிவு செய்யும் வசதியை இயக்கிவிட்டு சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டால், ஆசிரியர் சொல்லும் அனைத்தும் பதிவாகிவிடும். ஆனால், ஒலிப்பதிவு செய்யும் விஷயம் ஆசிரியருக்குத் தெரியாது. ஒலிப்பதிவாகிறது என்ற விசயம் ஆசிரியருக்குத் தெரிந்தால் தயக்கம் வந்துவிடும். பிறகு அவரால் சுதந்திரமாகப் பாடம் எடுக்க இயலாது. எனவே,  நான் அப்படி ஒரு கருவியை வைத்திருந்தேன் என்று கடைசிவரை ஆசிரியர்களுக்குத் தெரியாது.

       என் வகுப்பில் மொத்தம் 14 பார்வை மாற்றுத்திறனாளி  நண்பர்கள் பயின்றனர். பதிவுசெய்த முழு வகுப்பையும் கேட்டு, பாடப்பகுதிகளை மட்டும் என் குரலில் ஒலிப்பதிவு செய்து அவர்களுக்குள் கொடுத்தேன். அப்படித்தான் அமெரிக்கன் கல்லூரியில் தேர்வாகினோம். இருந்தாலும், பூமி செல்வம் ஐயா சொன்ன நூல்களைப் படிக்க வேண்டுமென்ற ஆசை ஒருதலைக் காதலைப்போல உள்ளுக்குள் ஏக்கமாகப் படரத் தொடங்கியது.

ஒருவழியாய் காதலை இந்தக் கட்டுரைக்குள் கொண்டுவந்துவிட்டேன்!”

       2015 இல் கூகுள் தமிழில் எழுத்துணரி தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. அது எனக்குக் கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில்,  புதுக்கோட்டையில் முதுகலைப் பட்டத்தைப் பயிலத் தொடங்கினேன்.  ஆனால், எழுத்துணரி தொழில்நுட்பமோ அத்தனை துள்ளியமாக இல்லை. மின்வருடியில் (Scanner) புத்தகத்தைக் கவிழ்த்து வைத்து  ஸ்கேன்  செய்யும் போது இரு பக்கங்களுக்கிடையே நிழல் விழும். அதனால், இடப்புற பக்கத்தில் வரிகளின் இறுதி வார்த்தையும், வலப்புற பக்கத்தில் வரிகளின் முதல் வார்த்தையும் காணாமல் போய்விடும். நவீன கவிதைகளில் வரிகளுக்கு இடையே அர்த்தம் கண்டுபிடிப்பதே மிகச் சிரமம். இங்கே அர்த்தத்தோடு காணாமல் போன வார்த்தை என்ன என்பதையும் நான் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. இமேஜை கிராப் செய்தால் அந்த பிரச்சனை தீருமென்றார்கள். அதைச் செய்வது எனக்குச் சிரமமாக இருந்ததால் விட்டுவிட்டேன்.

       200 பக்க புத்தகத்தை ஒவ்வொரு பக்கமாக ஸ்கேன் செய்ய இரண்டு மணி நேரமாகும். பிறகு அதை கூகுள் ட்ரைவில் பதிவேற்றி, ஒவ்வொரு புகைப்படமாக கன்வெர்ட் செய்வதற்கு தனியே இரண்டு மணி நேரமாகும். ஆனால்,முழுமையாக எழுத்தாக மாற்றிய புத்தகத்தை ஒன்றரை மணி நேரத்தில் படித்துவிடலாம். இப்படி ஒன்றரை மணி நேரம் படிக்க வேண்டிய புத்தகத்திற்காக நான் நான்கைந்து மணி நேரத்தைச் செலவிட வேண்டி இருந்தது.

       ஆய்வியல் நிறைஞர் பட்டம் பயில காந்திகிராமத்தில் சேர்ந்தேன். கல்லூரியில் சேர்ந்த ஒரு மாதத்தில் டைபாய்டு காய்ச்சலால் பீடிக்கப்பட்டேன். காய்ச்சலிலிருந்து  மீண்டு கல்லூரிக்குப் போனேன். அன்று, முதல் அகமதிப்பீட்டுத் தேர்வு. என்ன நடத்தியிருக்கிறார்கள் என்றும் தெரியாது. ‘பெண்கள் என்றாலே பொறுப்பானவர்கள்என யாரோ சொன்ன வாக்கியம் நினைவிற்கு வர, வகுப்பில் கண்ணுங்கருத்துமாய் குறிப்பெடுத்த பிள்ளைகளை வாசித்துக்காட்டச் சொன்னேன். அப்போதுதான் கூடப்படிக்கும் பிள்ளைகளின் மகிமை தெரிந்தது. பேராசிரியை பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, அவரது கனவர் ஃபோன் செய்திருப்பார் போல. அதில் அம்மையார் வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை வாங்கிவரச்  சொல்லி பட்டியலிட்டிருப்பார் போல? அமைப்பியல் பாடக்குறிப்பில் அந்தப்பட்டியலை இந்தப் பிள்ளைகளும் எழுதி வைத்திருந்தார்கள். இப்படி பாடம் நடத்தும்போது ஆசிரியர் என்ன பேசினாலும் அதையும் எழுதி வைக்கிறார்கள் என்ற அரிய செயல் எனக்கு அன்றுதான் தெரியவந்தது.
graphic பேப்பர் வெட்டும் இயந்திரம்

வழக்கம்போல பிள்ளைகளும் என் கட்டுரைக்குள் வந்துவிட்டார்கள்.”

       ஒரு கல்லூரியை விட்டு இன்னொரு கல்லூரிக்குச் செல்லும்போது, அங்கே வைக்கப்படும் முதல் தேர்வுதான் நம்மை மதிப்பிடுவதற்கான கருவி. அந்த தேர்வைச் சிறப்பாக எழுதினால், அடுத்து வரும் தேர்வுகளைச் சிறப்பாக எழுதாவிட்டாலும் நமக்கு மதிப்பெண் கொடுத்து விடுவார்கள். எனக்கோ பாடம் எதுவும் தெரியாது. அது கோட்பாடு சார்ந்த பரிட்சை வேறு. அந்த நேரத்தில்தான் கிரிக்கேட் வீரர்களின் பெயர்கள் கைகொடுத்தன. நீல் வாக்னரின் கூற்றுப்படி, இதுபோல பல வீரர்களை  கொட்டேஷனுக்குள்  இட்டு தேர்வை முடித்தேன். அத்தேர்வில் நல்ல மதிப்பெண் வந்தது.

       இப்போது கருத்து சொல்லப்போகிறேன். பிடிக்காதவர்கள் அடுத்த பத்திக்குச் சென்றுவிடுங்கள். ஒரு வகுப்பில் ஒரு நபர் சரியாகப் படிக்காவிட்டால், அவரைமட்டுமே குற்றம் சொல்வார்கள். ஒரு பார்வையற்ற நபர் சரியாக எழுதவில்லை என்றால், “பார்வையற்றவர்களே சரியாகப் படிக்கமாட்டார்கள். அவர்களுக்கெல்லாம் ஏன் சீட் கொடுக்கிறார்கள்?” என்று பேசுவார்கள். ஆனால், பார்வை மாற்றுத்திறனாளிகள் படிக்க ஏதுவாக பாடத்திட்டங்களில் உள்ள நூல்களைக் கொடுத்திருக்கிறோமா என்றெல்லாம் சிந்திக்கமாட்டார்கள்.
graphic காகிதத்தை மேலே வைத்த நிலையிலிருக்கும் ஸ்கேனர்

       என்னோடு முனைவர் பட்டம் பயில தமிழ்ச்செல்வன் என்ற தம்பியும் வந்து சேர்ந்தார். புத்தகம் வாசிக்கும் பழக்கமுண்டு என்று சொன்னார்.  வாங்க போங்க என எல்லோரிடமும் மரியாதையாய் பேசினார். நூல்கள் வழியே அவர் பெற்ற மாண்புதான் அப்படிப் பேசத் தூண்டுகிறது என்று எண்ணினேன். அவர் கொங்கு வட்டாரத்தைச் சேர்ந்தவர் என்று பின்புதான் அறிந்துகொண்டேன். எங்களுக்கு முனைவர் பட்டத்திற்கான பாடத் திட்டத்தைக் கொடுத்தார்கள். ஒவ்வொரு தாளுக்கும் 90-க்கும் மேற்பட்ட மேற்பார்வை நூல்கள் கொடுக்கப்பட்டிருந்தன. நான் அந்நூல்களை  எப்படிப் படிப்பது? ஒலிப்பதிவு செய்து  படிக்கலாமென்றால், அவற்றை ஒலிப்பதிவு செய்து முடிக்கவே பல ஆண்டுகள் ஆகும். அப்போதுதான் கோவையில் ஒரு வங்கியில் ஆவணங்களை மின் மயமாக்கும் பணியிலிருந்த என் தம்பி, ஒரு நிமிடத்தில் 160 பக்கங்களை  ஸ்கேன் செய்யும் மின்வருடி பற்றிச் சொன்னான்.  J.R.Fதொகையில் உடனடியாக வாங்கினேன். மின்வருடி வாங்கினால் போதுமா? அதற்கு ஒத்திசையும்  i5 பிராசசர் கொண்ட மடிக்கணினியையும் வாங்கினேன். அந்த மின்வருடியில்  ஸ்கேன்செய்ய புத்தகங்களை முழுமையாகப் பிரிக்க வேண்டும். தமிழ்ச் செல்வன்தான் புத்தகங்களைப் பிரிப்பது பற்றி நல்ல  டிப்ஸ்களைத்  தந்தார். பதிப்பகப் பெயரைப் பார்த்தே அந்தப் புத்தகத்தை எவ்வாறு கையாள வேண்டுமென்று சொல்லுவார். அதுவரை புத்தகத்தைக் கிழிப்பது எளிமையான விடையமென்றுதான் நினைத்திருந்தேன்.  புத்தகங்களைப்  படிப்பதைவிட கிழிப்பதுதான் அதிக கஷ்டமென்று புரிந்துகொண்டேன். அதன் பிறகு  பேப்பர்  கட்டிங்  மிஷின்  ஒன்றையும்  வாங்கினேன்.
graphic பேப்பர் வெட்டும் இயந்திரம் புத்தகத்தை வெட்டுகிறது

எப்படி ஸ்கேன்செய்யவேண்டுமென்று பார்ப்போம்.

       புத்தகத்தில் பைண்ட் செய்யப்பட்ட ஓரத்தை வெட்டி நீக்கிவிட்டால், புத்தகம் தனித்தனித் தாளாக பிரிந்துவிடும். அந்தக் காகிதக் கட்டை மின்வருடியின் மேலுள்ள டிரேயில் வைக்கவேண்டும். மின்வருடி ஒவ்வொரு தாளாக இழுத்து ஸ்கேன்செய்து முன்னால் தள்ளும்.  அதிலும்ஒரே நேரத்தில் இரு பக்கங்களையும் ஸ்கேன் செய்து விடும். 
graphic ஸ்கேனர் ஸ்கேன்செய்து காகிதத்தை வெளியே தள்ளுகிறது

       பிரிண்டரிலிருந்து காகிதங்கள் வெளிவருவது போலவே காகிதங்கள் வெளிவரும். ஸ்கேன்செய்த கோப்புகளை இமேஜ் வடிவில் சேகரமாவது போல அமைப்புகளை மாற்றிக்கொள்ள வேண்டும். பிறகு அதை pdf-ஆக மாற்றும் மென்பொருகள் உதவியுடன் pdf-ஆக மாற்றவேண்டும்.

       பின் O.C.R. செய்து படிக்கலாம். எல்லா மின்வருடியிலும் pdf -  ஆக ஸ்கேன் செய்யும் வசதி கொடுக்கப்பட்டிருக்கும். அதை பயன்படுத்த வேண்டாம். அப்படி ஸ்கேன் செய்யப்பட்ட pdf கோப்புகளை O.C.R. செய்தால் தெளிவாக இருக்காது.

       தமிழ் O.C.R.-இல் ஏன் சிக்கல் வருகிறது? தமிழில் O.C.R. சிறப்பாக வரவேண்டுமென்றால், புகைப்படத்தின் தெளிவுத்திறன் குறைந்தபட்சம் 300 d.p.i.- யாக இருக்கவேண்டும். புகைப்படமெடுக்கும் போது சிறிதாக நிழல் விழுந்தாலோ, காற்றினால் சிறு அசைவு ஏற்பட்டாலோ அது O.C.R.-இல் பாதிப்பை ஏற்படுத்தும். பார்வையற்றோருக்காக வடிவமைக்கப் படும் ஸ்கேன் செய்யும் வன்பொருட்களும் மென்பொருட்களும் 90% அளவுதான் துள்ளியமாக ஸ்கேன் செய்கின்றன. அப்படி என்றால் O.C.R..-ன் தரம் எப்படியிருக்குமென எண்ணிப் பாருங்கள். அந்தக் கருவிகளின் அடிப்படை விலையே 20000-க்கும் மேலாக இருக்கிறது. ஆனால், அதன் செயல்பாடுகள் கொடுத்த விலைக்கு ஏற்றார்போல் இருப்பதில்லை. அடுத்தடுத்து புதுப்பிப்புகள் வருமா என்பதற்கும் உத்தரவாதமில்லை. பல நேரங்களில் இதுபோன்ற கருவிகளைக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தயாரித்துவிட்டு, அவை விற்றுத் தீர்ந்ததுமே, தயாரிப்பாளர்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்று விடுகின்றனர்.

       ஒரு பார்வை மாற்றுத்திறனாளி நினைத்த நேரத்தில் ஒரு புத்தகத்தைப் படிக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்வழக்கம்போல அதிக பாரங்களை நாம்தான் சுமக்கவேண்டும். இயலாதவர்களுக்குத்தான் நடைமுறைகள் எளிமையாக இருக்கவேண்டும். ஆனால், இங்கே புத்தகம் வாசித்தல், பரிட்சை எழுதுதல், தங்களுக்கான தேவைகளைப்  பெருவதற்கான  அரசாங்க நடைமுறை என எல்லாவற்றிற்கும் பார்வை மாற்றுத்திறனாளிகள்தான் அதிக சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.  50 ஆயிரத்திற்கு மடிக்கணினி, 70 ஆயிரத்திற்குத் தொழில்முறை மின்வருடி, 15000-க்கு  பேப்பர்  கட்டிங்  மெஷின்  போன்றவற்றை வாங்கிக் கொண்டால்தான் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி நினைத்த நேரத்தில் ஒரு புத்தகத்தைப் படிக்க முடியும். அதனால்தான் தொடக்கத்திலேயே சொன்னேன்.  இது பெரிய பட்ஜெட் கதை என்று. புத்தக வெறியராக இருந்தால் மேலே சொன்ன பெருந்தொகையைச் செலவிடுங்கள். புத்தகப் பிரியராக இருந்தால் இன்னும் கொஞ்சக் காலம் பொறுத்திருங்கள் குறைந்த விலையில் வாசிப்பதற்கான வழிகள் திறக்கும். இப்போது நான் ஆசைப்பட்ட புத்தகங்களையெல்லாம் படித்துக் கொண்டிருக்கிறேன்!

கட்டுரைக்கான தலைப்பில் தமிழ்ச்செல்வன் கட்டுரைக்குள் வந்துவிட்டார். தலைப்பின் இன்னொரு பாதியான தனியார் அஞ்சலும் இடம்பெறவேண்டுமல்லவா? புத்தகங்களை ஸ்கேன் செய்த பிறகு அவை எனக்குப் பயன்படாது. எனவே அவற்றை தமிழ்ச் செல்வனுக்குப்  பார்சல் செய்து தனியார் அஞ்சல் வழியாக கூரியரில் அனுப்பிவிடுவேன். அதை அவர் மீண்டும் பைண்ட் செய்து பயன்படுத்திக்கொள்வார்.

தொடர்புக்கு: paarvaiyatravan@gmail.com

19 கருத்துகள்:

 1. கட்டுரைக்குள் காதலை கொண்டு வந்தீர்கள் சரி. அந்த காதல் அத்தோடு போய்விட்டது ஏன்? அதேபோன்று. பேப்பர் வெட்டும் இயந்திரத்தின் புகைப்படம் ஒரு இடத்தில் பொருந்தாமல் வந்திருப்பதைப் போன்று எனக்குத் தோன்றுகின்றது. கட்டுரை அருமை. மொத்தத்தில் இங்கு ஒரு தொழில்நுட்பம் பார்சல் ஆகிறது ‌

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னோட எல்லா காதலும் பாதியிலேயே காணாமல் போயிடுது என்பதை சமூகத்திற்கு குறிப்பால் சொல்லியுள்ளேன். ஒரே இடத்தில் எல்லா புகைப்படங்களையும் கொடுத்தால் நன்றாக இருக்காதல்லவா? அதனால் பேப்பர் வெட்டும் எந்திரத்தின் படத்தை முன்னால் கொடுத்தேன். அது எதிர்பார்ப்பை உருவாக்கும் என்றும் நம்பினேன். உங்களது பின்னூட்டத்திற்கு மிக்க நன்றின்ணே.

   நீக்கு
  2. காதல் உள்ள்ளுக்குள் ஒளிந்துக் கொள்ளும் என நினைக்கிறேன் சகோ

   நீக்கு
 2. ஒரு பார்வை மாற்றுத்திறனாளி பட்டதாரி சில ஆண்டுகளுக்கு முன் புத்தகம் ஒன்றினைப் படிக்க எதிர்கொள்ள நேரிட்ட சவாலை மிக நேர்த்தியாக விளக்கி இருக்கிறீர்கள். அப்படி சிரமப்பட்டு படித்த புத்தகங்கள் உங்களுக்குள் கடத்திய எழுத்துக்கள்தான் இப்படி சிறப்பாக வெளிப்படுத்த கைகொடுக்கின்றன என்று கருதுகிறேன். பாராட்டுக்கள் திரு பார்வையற்றவன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாராட்டியமைக்கு மிக்க நன்றி சார்! நான் படித்த தரமான புத்தகங்களுக்கு ஏற்றவாறு இன்னும் நான் சிறப்பான கட்டுரைகளை எழுதவில்லையே என்ற வருத்தமும் ஒரு ஓரமாய் இருக்கிறது சார்.

   நீக்கு
 3. கட்டுரையின் கருத்தாக்கம் அருமை!
  இந்த கால கட்டத்தில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சியையும், ஓரிரு வரிகளில் குறிப்பிட்டிருந்தார், கூடுதல் சிறப்பு பெற்றிருக்கும் என்பது, என் கருத்து.
  தொடர்க தங்கள் எழுத்துப்பணி! ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்தியமைக்கு மிக்க நன்றிசார். இக்காலத்தில் ஏற்ப்பட்ட வளர்ச்சியை இக்கட்டுரையில் கொஞ்சமே கோடிட்டுக்காட்ட முடிந்தது. எதிர்வரும் கட்டுரைகளில் இதையும் கவனத்தில்கொள்கிறேன் சார்.

   நீக்கு
 4. கதை சொல்லிக்கொண்டே வந்த போக்கு திடீரென்று காணாமல் போய்விட்டதான உணர்வு. நல்ல தகவல் தங்களின் வழக்கமான பகடிநடை வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொஞ்சமாவது தகவல் சொல்லவேண்டுமென்பதற்காக கதையிலிருந்து வெளிவர வேண்டியதாகிவிட்டது சார். உங்களது பாராட்டிற்கு மிக்க நன்றிசார்.

   நீக்கு
 5. நாம் படிப்பதற்கு எதிர்கொள்கின்ற சிரமங்கள் பற்றி இந்த கட்டுரை சிறப்பாக விளக்கி இருந்தது குறிப்பாக தமிழில் படிப்பது தான் மிகவும் சிரமம் ஆங்கிலம் கூட நாம் படிப்பதற்கு நிறைய கிடைக்கின்றன தமிழ் மொழியில் மட்டும் தான் இவ்வாறான சிரமங்கள் அதிகமாக இருக்கின்றன எனவே தமிழக அரசு நமது பார்வை மாற்றுத்திறனாளிகள் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் அவர்களை அழைத்து ஒரு குழு அமைத்து எப்படிப்பட்ட வசதிகளை எல்லாம் செய்து கொடுத்தால் பார்வை மாற்று திறனாளிகளின் படிக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பது குறித்து ஆலோசனை செய்து நடைமுறைப்படுத்த முயற்சி செய்தால் நமக்கு மிகவும் பயனுடையதாக அமையும் அருமையான கட்டுரை வாழ்த்துக்கள் சக்திவேல் அவர்களே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நடைமுறை எதாற்த்தத்தையும், பிரச்சனைக்கான தீர்வையும் தாங்கள் முன்வைத்தவிதம் சிறப்புசார். உங்களது வாழ்த்திற்கு நன்றிசார்.

   நீக்கு
 6. கட்டுரை அருமை கட்டுரை அருமை மிஸ்டர் பார்வையற்றவன். நீங்கள் அந்த காலங்களில் பட்ட கஷ்டங்களை அருமையாகச் சொன்னீர்கள். இதே நிலையில்தான் நானும் இளங்கலை படிக்கும் பொழுது இருந்தேன் ஆனால் இன்றைய காலகட்டத்தில் இதற்கெல்லாம் ஓரளவு. ‌‌‌‌‌ விமோசனம் கிடைத்து இருக்கிறது.நாம் நினைத்த நேரத்தில் நம் கைக்குள் அடக்கமாகவே சில புத்தகங்களை படிக்கும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்து இருக்கிறது.உங்களுக்கு உதவிய உங்களின் நண்பர்கள் அருமை இந்த கட்டுரையின் மூலமாக நீங்கள் ஒரு புத்தகம் வெறியர் என்பதையும் தெரிந்து கொண்டோம் தொடரட்டும் உங்களின் கட்டுரை வேட்டை நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிசார். நம்மவர்கள் கஸ்டமில்லாமல் படிக்கும் நாளை எதிர்பார்த்திருக்கிறோம்.

   நீக்கு
 7. ஐந்தாண்டுகளுக்கு முன்புவரை பார்வையற்றவர்கள் புத்தகங்களை படிக்க பட்டபாடுகளை, உங்கள் பட்ஜட் கதையில் நகைச்சுவையாய் நவின்றதும், தொழில்நுட்ப வலர்ச்சியால் அவை தொலைந்துபோனதும், தொழில்நுட்ப்பத்தை கையாழ எடுத்த முயற்சிகளும் என்று பலவற்றைப்பற்றியும் கட்டுறைவழியே சிற்றுறை நிகழ்த்தியது, சிறப்புறையாகவே இருந்தது. வாழ்த்துகளும், பாறாட்டுக்களும். கட்டூறையின் தலைப்பு, ஒறு தமிழ் திறைப்படத்தின் தலைப்பை போல் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிநயத்துடன் பின்னூட்டம் வழங்கியமைக்கு நன்றி சார். திரைப்படத்தின் தலைப்பைத்தான் கட்டுரையின் தலைப்பாய் வைத்திருக்கிறேன்.

   நீக்கு
 8. அருமையான கருத்து எழுதும் மிடுக்கு கொஞ்சம் காதல் நிறைய எதிர்பார்ப்பு

  பதிலளிநீக்கு
 9. ஜெயராமன் தஞ்சாவூர்6 ஜூன், 2020 அன்று 7:38 PM

  அனுபவித்த சிரமங்களை

  அழகான வடிவத்தில்

  படித்துச் சுவைப்பதற்கு நல்ல கட்டுரையாகவும்

  இளையோர் அறிந்து கொள்ளவேண்டிய
  பாடமாகவும் அமைத்து தந்திருக்கும்

  ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 10. கட்டுரை மிகவும் சிறப்பு பார்வையற்றவரை நம்மவர்கள் கொண்ட சிரமத்தினை மிக சிறப்பாக விளக்கினார்கள் உங்களது எழுத்திற்கு நிகர் நீங்கள்தான் என்று கூற வேண்டும் இதைப்போன்று இசையிலும் புத்தகங்கள் நிறைய வெளி வருகிறது அதனையும் எடுத்துருவாக அல்லது ஒளி வடிவமாக அல்லது பிரயில் வடிவமாக மாற்ற இயலுமா என்று தெரியவில்லை என்று சொன்னால் அந்த புத்தகத்தில் நிறைய குறியீடுகளை பயன்படுத்தி இருப்பார்கள் அதற்கெல்லாம் மாற்று வழிகள் உள்ளதா என்பது எனக்கு தெரியவில்லை அதனையும் மாற்றி தருவீர்களா என்பதனை கூறுங்கள் மிகவும் சிறப்பான கட்டுரை வழங்கியமைக்கு மனம் கனிந்த நன்றிகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு