களத்திலிருந்து: மாற்றத்தை ஏற்படுத்தாத மாற்றுத்திறனாளிகள் தினம் - முனைவர் சே. திவாகர்

போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பார்வை மாற்றுத்திறனாளிகளின் புகைப்படம்
  நம் நாட்டில் எல்லாத் தரப்பினரும் அவரவர்தம் துறை சார்ந்தும், சமூகம் சார்ந்தும் விழாக்களைக் கொண்டாடுகின்றார்கள். தனிமனிதர் கொண்டாடும் பிறந்த நாள், திருமண நாள் தொடங்கி, சமூகம் கொண்டாடும் அன்னையர் தினம், காதலர் தினம் வரை எல்லாவற்றிற்கும் காரண காரியங்கள் உண்டு. அவ்வழி, உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையும், உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் ஐ.நா. சபை 1981-ஆம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக அறிவித்ததோடு, 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதியை பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாளாகவும் அறிவித்தது. அன்று முதல், ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள், பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாளாக உலக நாடுகளால் கொண்டாடப்பட்டு வருகின்றது.

பல நாடுகளில், குறிப்பாக தமிழகத்தில், அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகளின் நிலையை உயர்த்துவதற்கான செயல் திட்டங்களை தீட்டி, அவர்களின் முயற்சிகளுக்கு உறுதுணை புரிகின்றன. அத்துடன், சமுதாயத்தில் ஊனமுற்றோர் நிலை உயர சிறப்புக் கருத்தரங்கங்கள், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், பிரச்சாரங்கள், ஊடகங்கள் வழியாக விழிப்புணர்வு விளம்பரங்கள் முதலியவை நடத்தப்பட்டு, சமூகத்தில் சம உரிமைகளுடன் ஒவ்வொரு துறையிலும் ஊனமுற்றோர் சிறந்து விளங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவை யாவும் மாற்றுத்திறனாளிகளுக்கு தினையளவும் மகிழ்ச்சி அளிக்கவில்லை என்பதனை கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி நடைபெற்ற கருப்பு தின கண்டன ஆர்ப்பாட்டத்திலிருந்து நாம் புரிந்துகொள்ள முடிகிறது. மற்றவர்களுக்கு இது மாற்றுத்திறனாளிகள் தினம்; ஆனால் மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக பார்வையற்றோரின் வாழ்வில் நல்ல மாற்றங்கள் எவற்றையும் ஏற்படுத்தாத கருப்பு தினமாகத்தான் இந்நாள் விளங்குகிறது எனின் அது பொய்யன்று. படித்துப் பட்டம் பெற்ற மாற்றுத்திறனாளிகள் தங்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்கே வழியின்றி வேலைக்காக போராடும் அவல நிலையில் எப்படி மகிழ்ச்சி தோன்றும்?

பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாளான டிசம்பர் 3-ஆம் தேதியன்று, பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினரால் (CSGAB) முன்னெடுத்து நடத்தப்பட்ட கருப்பு தின கண்டன ஆர்ப்பாட்டம் அன்றைய தினத்தின் முக்கிய பேசுபொருளாக இருந்தது. பார்வையற்றோரின் நலன், வேலைவாய்ப்பு, மாணவர் நலன், பணியில் உள்ளோர் நலன் முதலானவற்றை கவனத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கடிதங்கள் வாயிலாகவும், நேரடியாகவும் சென்று உரிய அமைச்சரையும் அதிகாரிகளையும் சந்தித்து சங்கப் பிரதிநிதிகள் வலியுறுத்தி வந்தார்கள். இந்த 9 அம்ச கோரிக்கைகள் ஒன்றும் புதிதன்று; கிட்டத்தட்ட 2013-ஆம் ஆண்டு முதல் இந்த கோரிக்கைகள் யாவும் இன்னும் நிறைவேற்றப்படாததுதான் பார்வையற்றோர் வாழ்வின் உச்சக்கட்ட பிரச்சனையாக நீடிக்கிறது. கோரிக்கைகளை நிறைவேற்றுவதை விடுத்து, மாற்றுத்திறனாளிகளுக்கான விழா நடத்துவது, பயன் தராத அறிவிப்புகளை வெளியிடுவது என இயங்கிக்கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினரைக் கண்டிக்கவே இப்போராட்டம் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டது.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், சுமார் 200-க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கருப்பு அட்டை அணிந்து, தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் செய்தனர். காட்சி ஊடக மற்றும் அச்சு ஊடகத்தார் செய்திகளின் வாயிலாக இந்தப் போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை நல்கினர். முக்கிய அரசியல் கட்சிகளும், பல்வேறு இயக்க பிரமுகர்களும் இந்தப் போராட்டத்தினை ஆதரித்து செய்திகளை வெளியிட்டனர். சங்கத்தின் 40  ஆண்டுகால வரலாற்றில் இந்தப் போராட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

போராட்டத்தை அரசு கண்டுகொள்ளவில்லை; சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசவும் இல்லை. இதனால் ஆவேசமடைந்த சங்க உறுப்பினர்கள், 2 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, உறுப்பினர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, மன்னடியில் உள்ள ஆயிஷா திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.

பின்னர், காவல் துறையின் முயற்சியால் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டார்கள். பேச்சுவார்த்தையில் அமைச்சர் கவனம் செலுத்தாமல், அன்றைய மாலைநேர மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் கலந்துகொள்ளும் மனநிலையில் மட்டுமே இருந்ததாகக் கூறுகிறார்கள் சங்க நிர்வாகிகள். கோரிக்கை மனுவினை அமைச்சரின் கையில் திணிக்கும் நிலையில் அன்று சங்கம் இருந்தது என்று மிகுந்த வேதனையுடன் நம்மிடம் தெரிவித்தார் சங்கத் தலைவர் திரு. முத்துசாமி அவர்கள். மற்றொரு நாளில் அழைத்துப் பேசுவதாக அமைச்சர் கூறிய நிலையில், அன்றைய போராட்டம் தற்காலிகமாக முடிக்கப்பட்டது.

கோரிக்கைகள் தான் என்ன?
  அரசால் ஓர் அமைப்பே அலட்சியப்படுத்தப்படும் அளவிற்கு சங்கம் வைத்துள்ள கோரிக்கைகள் அவ்வளவு சவால் நிறைந்ததா என்பதைக் கொஞ்சம் கண்ணுறுவோம். நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல, 9 அம்சக் கோரிக்கைகளுள் ஒன்று மாணவர் நலன் சார்ந்ததாகவும், மற்றொன்று பணியில் இல்லாதோருக்கான கோரிக்கையாகவும், இரண்டு பணியில் உள்ளவர்களுக்கான கோரிக்கையாகவும், மீதமுள்ள ஐந்து கோரிக்கைகளும் பணிவாய்ப்புக்காகக் காத்திருப்போருக்கானதாகவும் உள்ளது.

சங்கம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த 5 கோரிக்கைகளும் நிறைவேற்றப்படுமானால், 500 பட்டதாரி ஆசிரியர்களும், 312 முதுநிலை ஆசிரியர்களும், 200 பேராசிரியர்களும் பணிவாய்ப்பு பெறுவார்கள். அத்துடன், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தொகுதி 1, தொகுதி 2 மற்றும் தொகுதி 4 ஆகிய பிரிவுகளின்கீழ் பார்வையற்றவர்கள் பணியமர்த்தப்படுவார்கள். மேலும், அரசு உதவி பெறும் தன்னாட்சி நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் ஆகியவற்றிலும்  பார்வையற்றவர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இதனை சங்கம் மட்டுமல்ல; நாமும் எதிர்பார்க்கிறோம்.

இந்தக் கோரிக்கைகளை 2012-ஆம் ஆண்டிலிருந்தே அரசிடம் சங்கம் முன்வைத்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்தக் கோரிக்கைகளை மையமாக வைத்து 2013-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போதுதான் பார்வையற்றவர்கள் கைது செய்யப்பட்டு சுடுகாட்டில் கொண்டுபோய் விடப்பட்டார்கள். அப்போதைய நிலைமையைச் சமாளிக்க போடப்பட்ட அரசாணைதான் அரசாணை எண் 260. பார்வையற்றவர்கள் வாழ்வில் இந்த எண் ஏமாற்றத்திற்குரிய எண்ணாகக் கருதப்படுகிறது. அந்த அரசாணை எவ்வித பயனையும் விளைவிக்காத சூழலில் 2015, 2017 ஆகிய ஆண்டுகளிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றன. அந்த போராட்டங்களுக்கும் எவ்விதமான தீர்வுகளும் கிடைக்காத நிலையில்தான், மாற்றுத்திறனாளிகள் தினத்தை கருப்பு நாளாக அல்லது துக்க நாளாக அறிவித்து, போராட்டத்திற்கும் சங்கம் ஏற்பாடு செய்தது.

இங்கு மற்றொன்றையும் கவனிக்க வேண்டும். இட ஒதுக்கீட்டு முறைப்படி பார்வையற்றவர்களுக்கு ஒரு சதவீத இடத்தை அரசு ஒதுக்க வேண்டும். தமிழகத்தில் 12 லட்சம் அரசு ஊழியர்கள் இருப்பதாக ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. மொத்த ஊழியர்கள் 12 லட்சம் என்றால், இட ஒதுக்கீட்டு விதிப்படி 12 ஆயிரம் பார்வையற்றவர்கள் பணியில் இருக்க வேண்டுமல்லவா? ஆனால், நாம் கேட்பது வெறும் 1000 பணியிடங்கள் தானே? இதனை வழங்குவதில் அரசுக்கு எவ்விதமான இடையூறும் இருக்க நியாயமில்லை!

உச்ச நீதிமன்றம் 2013-ஆம் ஆண்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான பின்னடைவுப் பணியிடங்கள் மற்றும் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கின் தீர்ப்பில், ‘மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை அடையாளம் காணப்பட்ட பணி இடங்களைக் கொண்டு கணக்கிடாமல், அரசால் அறிவிக்கப்படும் மொத்த பணி இடங்களை இட ஒதுக்கீட்டின்படி கணக்கிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாளம் காணப்பட்ட பணி இடத்தில் பணி அமர்த்த வேண்டும். அதாவது, தகுதி உடைய மாற்றுத்திறனாளியால் குறிப்பிட்ட துறையின் பணி இடத்தில், அவருடைய ஊனத்தின் காரணமாக பணி அமர்த்த இயலவில்லை என்றால், அந்த பணிக்கு இணையான மாற்றுத்திறனாளிகளுக்காக அடையாளம் காணப்பட்ட பணி இடத்தில் பணியமர்த்த வேண்டும்’ என்று குறிப்பிடுகிறது. இப்படி அரசின் விதிகள், சட்டம் முதலான எல்லா நிலைகளிலும் எளிமையாக தீர்க்கப்பட வேண்டிய கோரிக்கைகள் கிடப்பில் போடப்படுவதற்கான காரணம் மாற்றுத்திறனாளிகள் துறையின் அலட்சியப் போக்கே எனின் அது மிகையன்று.

‘1957-ஆம் ஆண்டு ஊனமுற்றோருக்கான முதல் வேலைவாய்ப்பு மையம் மும்பையில் ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து 22 நிலையங்கள் மத்திய அரசால் பல்வேறு நகரங்களில் அமைக்கப்பட்டுள்ளன’ என்று இணையத்தில் ஒரு குறிப்பு கிடைத்தது. ஆனால், நம் மாநில அரசால் ஒரு 1000 பேருக்கு வேலை தரமுடியாத நிலையை என்னென்பது?

மொத்தத்தில் தங்களது அன்றாட வாழ்வாதாரத்திற்காக போராடும் பார்வையற்றவர்களின் வாழ்விலுமாகட்டும், நமது அரசின் செயல்பாடுகளிலுமாகட்டும், எந்த மாற்றத்தினையும் இந்த மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டு வந்துவிடவில்லை என்பதே உண்மை!
***

(கட்டுரையாளர் சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியின் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர்).
தொடர்புக்கு: adiva24@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக