நினைவுகள்: நான் வியந்த அம்மா, ஜெ! - சோஃபியா சுரேஷ்

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் புகைப்படம்
  அரசியல் எனக்கு அவ்வளவாக அறிமுகம் இல்லை; ஆனால், எனக்கு அரசியல் பரிச்சயம் உண்டு. தேர்தல் முடிவுகள் என்றால், என் குடும்பம் மொத்தமும் தொலைக்காட்சியோடு தொலைந்தே போன  நினைவுகள் என் மனதில் இன்றும் உண்டு. அதில், ‘அஇஅதிமுக வெற்றி’ என்று அறிவிக்கும் போதெல்லாம் என் குடும்பத்தின் பல உறுப்பினர்கள் புலம்புவதை நான் கண்டிருக்கிறேன். ஆனால், ஒரு பெண் பல போராட்டங்களுக்குப் பின் வெற்றி பெறுவதை எண்ணி ஒரு ஒடுக்கப்பட்ட, ஏமாற்றப்பட்ட, மிக சாதுவான பெண்மணியான என் பெரியம்மா பெருமிதம் கொள்வதைக் கண்டு நான் அஇஅதிமுக மீது ஆர்வமும், ஜெ. மீது காதலும் கொண்டேன் போலும்!

பல கோழைகளுக்கும், ஏழைகளுக்கும் ஜெ.-வைப் பிடிக்கும். என் அரசியல் பள்ளிக்கூடம் என் இளம் பருவத்திலேயே துவங்கியது என்றாலும், அரசியல் மீதான ஆர்வம் ஏனோ எழவில்லை; ஆனால், ஜெ. மீதான காதல் மட்டும் கூடத் துவங்கியது. பின்னாளில் நான் அரசியல் கற்றது, என் கணவரிடம்; நாங்கள் எங்கள் எதிர்காலம் குறித்து பேசியதைவிட அரசியல், பள்ளி என்று பேசியதுதான் அதிகம். எல்லாப் பெண்களும் ஜெ.-வாக மாற நினைப்பது போல, நானும் நினைத்தேன். ‘சர்வாதிகாரி’ என்ற சொல்லை கேட்டபோதெல்லாம், சர்வத்தையும் ஆளும் திறம் கொண்டவராக என் மனம் பூரிப்படைந்தது. ஹிட்லர், முசோலினி குறித்த புத்தகங்களைப் படிக்க விரும்பும் எனக்கு, ஜெ.-வை எப்படிப் பிடிக்காமல் போகும்?

தந்தையை இழந்து தாயின் அரவணைப்பைத் தேடியவர் ஜெ. அன்பு கிடைக்காத மனங்களுக்குள் சற்று ஆவேசம் இருப்பது சரிதான்; தன்னை சமூகம் அதிகாரத்திற்குள் ஆட்படுத்தும் முன்னர், ஆளுமையை வளர்த்துக்கொண்டார் ஜெ. கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் சீரிய முறையில் பயன்படுத்திய ஜெ., எம்.ஜி.ஆர். என்ற சிவந்த கரங்களோடு தன் இரும்புக் கரத்தை இணைத்துக் கொண்டார்.  அன்று முதலே ஒரு இரும்பு மனுஷியாய் தன்னை  வார்த்துக்கொள்ளத் துவங்கினார். இன்பங்களும் துன்பங்களும் ஏற்றமும் இறக்கமும் அமுதும் விஷமுமாய் மாறிமாறி வழங்கப்பட்டது அவருக்கு. பாவம் என்ன செய்யத் தெரியும், என் இரும்பு தேவதைக்கு?  உள்வாங்கினார்; சம்மட்டி கொண்டு பிளந்து, தன் இதயக் கூட்டில் ஒளித்து வைத்தார்.

ஏளனங்கள் எழுந்தன; துகிலுரிப்புகள் அரங்கேறின; அசரவில்லை அவர் மனம். காயங்களைக் கசக்கிப் பிழிந்து, கசப்புகளை மென்று விழுங்கி, முட்டி மோதி உடைந்தும் ஓடியும் ஜனித்தார், ஒன்றரை கோடித் தொண்டர்களது மனதில் அம்மாவாக! தன் தாயின் அன்புக்காக ஏங்கிய ஜெ., அவருக்கு அறுவை சிகிச்சை நடக்கும்போது தானும் அவ்வறைக்குள் இருக்க நினைத்தார். பிடிவாதம் செய்து உள்நுழைந்த ஜெ., அறுவை சிகிச்சையின்போது தைரியத்தோடு அதை இமைகள் அசைக்காமல் பார்த்தபடி நின்றார். அவரது துணிச்சலும் தைரியமுமே அவரை பிற்காலத்தில் வழிநடத்தியது என்கிறார் பழம்பெரும் நடிகையான சச்சு.

அன்பு, காதல், நம்பிக்கை, உறவு, உணர்வு எல்லாம் தோற்றது. நட்பு மட்டும் நிலைத்தது; அதிலும் பொய்கள், ஏமாற்றங்கள். என்ன செய்வது, யானைக்கும் அடி சறுக்கும் தானே? அன்பிற்கு ஏங்கிய அவர், சசிகலாவின் அன்பை நம்பினார். அது ஜெ.-வின் குற்றம் அன்று; சசியின் துரோகம். ஆண்கள் மட்டுமே கோலோச்சிய அரசியலில் தனியொரு பெண்ணாக அத்துனை அவமானங்களையும் ஏற்று, அவமதித்த அத்துனை குள்ள நரிகளையும் வெற்றி கொண்டு கர்ஜித்தார், பெண் சிங்கமாக. ஜெ. சர்வத்தையும் தனக்குக் கீழ் அடக்கினார். திறமையைத் தலைக்கனம் என்றார்கள் பைத்தியக்காரர்கள். திறமை இருக்கும் இடத்தில் சற்று தலைக்கனம் இருந்தால்தான் என்ன? ஒழுக்கம், கட்டுப்பாடு, விடாமுயற்சி, வெற்றி என்ற தாரக மந்திரத்தை விதைத்தார்; கட்டுப்பாடான ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார்.

சர்வத்தையும் அடக்கிய ஜெ., வாழ்நாள் முழுவதும் தன்னையும் அதற்குள் ஒளித்து வைத்துக்கொண்டார். அதை ஜெ. செய்த பிழை என்று மற்றவர்கள் கருத்துகளை வீசினாலும், ஜெ.-வின் வலிமையே அதுதான். எதையும் செய்து முடிக்க வேண்டும் என்று நினைக்கும் ஜெ., எம்.ஜி.ஆர். என்ற மாபெரும் சக்தியையே ஒரு காலகட்டத்தில் மிஞ்சும் சக்தியாக உருவெடுத்தார்.  திமுக, அதிமுக என்ற இரு கட்சிகள் மாறிமாறி தமிழகத்தை ஆண்ட வரிசையில், எம்.ஜி.ஆருக்குப் பிறகு தமிழகத் தேர்தலில் தொடர்ந்து இருமுறை வெற்றி வாகை சூடி வலம் வந்தார் ஜெ. அந்த வெற்றி எல்லாப் பெண்களாலும் தனக்கான வெற்றியாகவே உணரப்பட்டது. அதன் விளைவே, ஜெ.-வுக்கு ஒரு பிரச்சனை என்றதும் சாதி, மத, இனம், மொழி என அனைத்தையும் கடந்த ஒரு கூட்டம், குறிப்பாக பெண்கள் கூட்டம், ஜெ.-வுக்காய் துடித்தது; புலம்பியது; போராடியது.

நேர்மையின் பிரதிபலிப்பு ஜெ! ஊழல் வழக்கில் ஜெ. சிக்கி, அவரது நலன் விரும்பிகள் ‘சட்டமன்றத்திலேயே இவ்வழக்கை தீர்த்துவிடலாம்; அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன’ என்று வழிகாட்டியபோது ஜெ. சொன்னது, “நான் சட்டத்தை நம்புகிறேன். நீதிமன்றத்தில் இதைப் பார்ப்போம்” என்பதுதான். ஏன் தெரியுமா? அவருக்கு நீதிமன்றங்கள் மீது அவ்வளவு நம்பிக்கை உண்டு. காவிரி நதிநீர் பிரச்சனையில்கூட என் வெற்றியின் தலைவி நீதிமன்றத்தையே நாடினார். அவர் நம்பிக்கைக்கும், நேர்மைக்கும் கிடைத்த வெற்றிதான், காவிரி மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டது.

என்ன செய்யவில்லை அவர்? பெண்களை ஆள அழைத்து, பஞ்சாயத்து தேர்தல்களில் 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு செய்தார்; திருமணத்திற்கு தாலிக்கு தங்கம்; மகப்பேறு விடுப்பு காலம் உயர்த்தப்பட்டது; சுய உதவி குழுக்கள் என பெண்களை ஒவ்வொரு நிலையிலும் பேணிக் காத்திடத் துடித்தது அவர் இதயம்.

திராவிடத் தலைவர்களுக்கு மத்தியில் ஒரு பார்ப்பனர் என்ற வேறுபாடு எழ விட்டதில்லை. திராவிடத்தை நேசித்தார்; சுவாசித்தார். தனக்குள் வாங்கிய உணர்வை திராவிடர்களுக்கு 69 சதவிகித இட  ஒதுக்கீடு என்ற சட்டமாக முன்மொழிந்தார். அவரது தொட்டில் குழந்தைத் திட்டம் அவரது தாய்மை உணர்வை உலகறியச் செய்தது; அதே திட்டம் தான் என்னை அவர்பால் ஈர்த்தது. மழைநீர் அறுவடைத் திட்டம் போல, மக்களையும் வாக்காளர்களையும் அறுவடை செய்யும் வல்லமை பெற்றவர் ஜெ! அவரது இலவச அரிசி திட்டம் பல ஏழைகளின் வயிற்றைக் குளிரப் பண்ணியது; பசுமை வீடு திட்டம் இயற்கை மீதான அவரது காதலை புரிய வைத்தது; அவரது அம்மா உணவகத் திட்டம் இந்த உலகையே அவர்பால் ஈர்த்தது. 

மதுக்கடை அடைப்பிற்காக மக்கள் போராட்டங்கள் நடத்தியபோது, தேர்தல் சமீபமாய் இருந்தது. ஜெ.-வின் மௌனமே அவரது அடுத்தத் தோல்விக்குக் காரணமாகும் என்றார்கள் அனைவரும். ஆனால் மௌனியாக இருந்த ஜெ., தன் பிரச்சாரத்தில் வாய் திறந்தார். தன் மீதான குற்றச்சாட்டுகளை தனக்கான வெற்றி வாக்குகளாக மாற்றினார். தன் தோல்வியைக்கூட வெற்றியாக மாற்றும் மந்திரம் ஜெ. மட்டுமே அறிந்த ரகசியம், ராஜ தந்திரம். தன்னம்பிக்கை கொண்ட ஜெ., தேடிவந்த கூட்டணிகளை நிராகரித்தார். இரட்டை இலையில் 97 சதவிகித வெற்றியை எட்டிப் பிடித்த நம்பிக்கை, எவரும் கண்டறியாத இமாலய வெற்றி. மிரண்டு போன எதிரிகள், ஜெ.-வை ஒடுக்க முடியாத மாபெரும் சக்தி என உணர்ந்து ஒடுங்கத் துவங்கினர் என்பது வரலாறு. 

‘மக்களால் நான், மக்களுக்காக நான்’ என்ற தாரக மந்திரம் நாடெங்கும் ஒலிக்கத் துவங்கியது. அதை மக்களையும் நம்ப வைத்து, ஏற்க வைத்தார் ஜெ. தனது ஒவ்வொரு நலத்திட்டங்களிலும் மக்களது உணர்வுகளை ஒரு தாயாக பிரதிபலித்தார். தவறு மனித இயல்பு; அதற்கு ஜெ. விதிவிலக்கு அன்று. ஆனால், தவறைத் திருத்தி தன்னை மக்களுக்கு நிரூபித்தார் ஜெ. மக்களது மனதைச் சாதுரியமாக ஒரு வார்த்தையில் அளந்தெடுத்தார்; ‘செய்வீர்களா?’ என்ற வார்த்தை தான் அது; அப்படிக் கேட்டு, தனக்காக எதையும் செய்யவும் வைத்தார் ஜெ!

இவ்வாறாகத் தன்னை உலகம் பேச வைத்த ஜெ., தனக்காக எதையும் செய்யும் தொண்டர்களை உருவாக்கிய ஜெ., கடைசி வரை எவரிடமும் தன்னைப் பகிர்ந்து கொள்ளாமல், எவரிடமும் பேசாமல், காலனோடு போராடித் தன் கடைசி மூச்சை  அவனிடம் ஒப்புவித்தார். அவரது மரணம் எதிர்க்கட்சிகளையும் உலுக்கிப் போட்டது.

தன்னை மாபெரும் தலைவியாக பிரதிபலித்துக்கொண்ட ஜெ.,  தன் மரணத்திற்குப் பிறகும் அந்தக் கட்சியை வழிநடத்துகிறார்! தொண்டர்களிடையே வன்முறையோ, சஞ்சலமோ இல்லாமல் அவரது இறுதி ஊர்வலம் அமைதியான முறையில் நடந்தேறியது; அதுதான் ஜெ.-வின் மாபெரும் வெற்றி. தன் மரணத்தையும் வடிவமைக்கும் சக்தி, ஒன்றரை கோடித் தொண்டர்களை அன்பால், வார்த்தைகளால் அடக்கி ஆளும் திறன் ஜெ.-வுக்கு மட்டுமே சாத்தியம். அவர் சரித்திர நாயகி மட்டும் அல்ல; சாதனைப் பெண்மணியும் கூட!

ஆகவேதான், எங்கள் அத்தனை பேரது நெஞ்சங்களிலும் ஒரு பெண்ணாக, தோழியாக, வழிகாட்டியாக, வெற்றியின் நாயகியாக, பெண் சிங்கமாக வாழ்கிறார், அம்மா!
***

(கட்டுரையாளர் தஞ்சை பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்).
தொடர்புக்கு: sophiamalathi77@gmail.com

2 கருத்துகள்:

  1. கலைஞர் ஊர்வலம் எப்படி நடந்தது? ஆடிய ஆட்டம் முடந்ததமு குற்றவாளி என்ற பெருமையோடு. வாழ்க பெணமையின் முன்னோடி. வெல்க பெண் புத்தி பின் புத்தி. அறுமை

    பதிலளிநீக்கு