உலக
ஊனமுற்றோர் தினமான டிசம்பர் மூன்றாம் நாளை பல்வேறு அமைப்புகளும் வெவ்வேறு
விதங்களில் பரவலாகக் கொண்டாடின. அவற்றுள் பல, ஊனமுற்றோர் மீது தங்களுக்கு அக்கறை
இருப்பதாகக் காட்டும் அடையாள அணிவகுப்புகளாகவும், சில சரியான புரிதலோடு நடைபெற்ற முன்னெடுப்புகளாகவும்
அமைந்திருந்தன. அந்த நாளை, பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள்
சங்கம் (CSGAB) கருப்பு தினமாக அறிவித்து, நீண்ட காலமாக ஏமாற்றப்பட்டும்
மறுக்கப்பட்டும் வரும் உரிமைகள் மற்றும் பணி வாய்ப்புகளுக்காகப் போராட்டம்
நடத்தியது. தமிழகத்தில் செயல்பட்டுவரும் பிற ஊனமுற்றோர் அமைப்புகளும் அன்று
அரசுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டன. இவ்வாறு அன்று நடைபெற்ற
விழாக்களுள் தனிச் சிறப்பானதாகவும், முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களோடு உள்ளார்ந்த கருத்தியல்
தொடர்பு கொண்டதாகவும் மிளிர்ந்தது, அன்று மாலை நடைபெற்ற விரல்மொழியரின் கலைஞர்
சிறப்பிதழ் வெளியீட்டு விழா!
தமிழகத்தில் ஊனமுற்றோரின் சமூக, பொருளாதார உரிமைகளுக்காக வரலாற்றுச்
சிறப்புமிக்க முக்கியப் பங்காற்றிய மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் மு.
கருணாநிதி அவர்களின் நினைவாக, பார்வையற்றோரால் நடத்தப்படும் ஒரே தமிழ் மின்னிதழான விரல்மொழியர் வெளியிட்ட ‘விரல்மொழியர் ஆகஸ்ட் மாத கலைஞர் சிறப்பிதழ்’ அச்சு வடிவிலும், பிரெயில் பதிப்பாகவும் வெளியிடும் விழா ஊனமுற்றோர் தினமான
டிசம்பர் மூன்றாம் நாள் மாலை சென்னையில் நடைபெற்றது. ‘திராவிடம் 2.0’ என்ற இளைய தலைமுறை திராவிடச் சிந்தனையாளர்களால்
நடத்தப்படும் அமைப்பு இந்த வெளியீட்டு விழாவையும், சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான கருத்தரங்கையும் சேர்த்து ஒரே நிகழ்வாக,
‘உலக மாற்றுத்திறனாளிகள் தின சிறப்பு திராவிடம் 2.0 நிகழ்வு’ என்ற தலைப்போடு, சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் அமைந்திருக்கும்
பெரியார் மணியம்மை அரங்கில் நடத்தியது.
மாலை சுமார் 6.30 மணிக்குத் தொடங்கிய நிகழ்வுக்கு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணிச் செயலாளருமான
திருமதி. கனிமொழி தலைமை வகித்தார். விழாவின் சிறப்பு அழைப்பாளராக, திராவிடச் சிந்தனையாளரான பேராசிரியர் சுப. வீரபாண்டியன்
பங்கேற்றிருந்தார். திருமதி. கனிமொழி அவர்கள் வெளியிட்ட விரல்மொழியர் கலைஞர்
சிறப்பிதழின் முதல் அச்சுப் பிரதியை பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள்
பெற்றுக்கொள்ள, முதல்
பிரெயில் பிரதியை ‘அந்தகக்கவிப் பேரவை’ என்ற பார்வையற்றோருக்கான இலக்கிய அமைப்பை
நடத்திவரும் திரு. பாண்டியராஜன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
வெளியீட்டு விழாவுக்கு இணைப்புரை வழங்கிய தோழர், எவ்வாறு விரல்மொழியர் கலைஞர்
சிறப்பிதழ் ஒரு தனிச்சிறப்பான முதல் முயற்சி என்பதை எடுத்துக் கூறினார்.
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காகவும் சமூக முன்னேற்றத்திற்காகவும் பல முதல்
முயற்சிகளை மேற்கொண்டவர் கலைஞர் என்பதை சுட்டிக்காட்டிய அவர், அவற்றுள்
சிலவற்றையும் பட்டியலிட்டார்.
மாற்றுத்திறனாளிகளின் நலத்திற்காக 19.09.2008 அன்று ஒரேநாளில் ஒன்பது அரசாணைகள் வெளியிட்டது,
2010 மார்ச் முதல் நாளில் ‘மாற்றுத்திறனாளிகள்’ என்ற சொல்லை அதிகாரப்பூர்வப் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தது, மார்ச் 17, 2010 அன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில்
மாற்றுத்திறனாளிகளுக்கான தனி அமைச்சகம் உருவாக்க நிதி ஒதுக்கீடு செய்தது, தொடர்வண்டிகளில் ஊனமுற்றோருக்கான பெட்டி முன்பதிவுப்
பெட்டியாக மாற்றப்பட்டபோது அதற்கு எதிராக இந்தியாவிலேயே முதல் முறையாக மத்திய
ரயில்வே அமைச்சருக்குக் கடிதம் எழுதி அந்த முடிவைத் திரும்பப்பெறச் செய்தது, தனியார் நிறுவனங்கள் அமைக்கும்போது ஊனமுற்றோருக்கு ஐந்து
விழுக்காடு பணிவாய்ப்பு வழங்குவதைக் கட்டாயமாக்குமாறு முதன்முறையாக மத்திய
அரசுக்குக் கடிதம் எழுதியது என பல்வேறு முதல்முறைகளை மாற்றுத்திறனாளிகளுக்காகச்
செய்த கலைஞருக்கு, உலகிலேயே
முதல் முறையாக ஒரு அரசியல் தலைவருக்கு பிரெயிலில் சிறப்பிதழ் வெளியிடுவதன் மூலம்
நன்றி செலுத்துகின்றனர் என்பதையும், விரல்மொழியர் கலைஞர் சிறப்பிதழில்
எழுதியிருக்கும் எல்லோரும் எவ்வாறு கலைஞரை தங்களுள் ஒருவராகக் கருதி, உணர்வோடு
ஒன்றிய நிலையில் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர் என்பதையும் கூறிய
அவர்,
முனைவர் பட்ட ஆய்வாளரும், விரல்மொழியர் இதழின் ஆசிரியர்
குழுவில் ஒருவருமான பொன். சக்திவேல் அவர்களைப் பேச அழைத்தார்.
தொடர்ந்து பேசிய இளம் தோழர் பொன். சக்திவேல் அவர்களின் பேச்சில் தெளிவும்
முதிர்ச்சியும் மிளிர்ந்தது. கலைஞர் செயல்படுத்திய நலத்திட்டங்களைத் தாண்டி, அவர் மாற்றுத்திறனாளிகளுக்கு நம்பிக்கையூட்டும்
வழிகாட்டியாகத் திகழ்ந்ததை சக்திவேல் தனது உரையில் குறிப்பிட்டார். தனது
பொதுவாழ்க்கை முழுவதும் வசைச்சொற்களைத் தாங்கி, ஆனால் அதற்காக தன்மீது எந்த கழிவிரக்கத்தையும் கோராமல், கருத்தைக் கருத்தால் வென்ற
கலைஞர் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மிகச் சிறந்த வழிகாட்டி என அவர் மிகச் சரியாகவே
சுட்டிக்காட்டினார். 1975-இல் பார்வையற்றோருக்கான உண்டு-உறைவிடப் பள்ளிகளை தமிழகமெங்கும் தொடங்கி
பார்வையற்றோர் இந்த உலகை அறியச்செய்தவர் கலைஞர் என்று குறிப்பிட்ட அவர்,
1983-இல் வெளியிடப்பட்ட அரசாணை மூன்று
விழுக்காடு பணிவாய்ப்பை உறுதிசெய்ததன் மூலம் ஊனமுற்றோரை இந்த உலகம் அறிந்துகொண்டது
என்றும் விளக்கினார். (கூடவே, 1983-இல் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட அந்த
அரசாணை செயல்படுத்தப்படாமல் கிடப்பிலேயே போடப்பட்டு, 1989-ஆம் ஆண்டு கலைஞர் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற
பின்னரே அவரால் செயல்படுத்தப்பட்டது என்பதையும் கூறியிருந்தால் இன்னும் பொருத்தமாக
இருந்திருக்கும்).
அன்றைய நாளை பார்வையற்றோர் ஏன் கருப்பு நாளாக அனுசரிக்க நேர்ந்தது என்பதை
விளக்கிய சக்திவேல், ஊனமுற்றோரைச்
சந்திக்கவும், அவர்கள்
நலன் குறித்துச் சிந்திக்கவும் மறுக்கும் இன்றைய ஆட்சியாளர்களுக்கு மத்தியில் இந்த
கலைஞர் சிறப்பிதழ் வெளியிடப்பட வேண்டியதன் தேவை குறித்தும் விளக்கினார்.
விரல்மொழியர் என்ற பெயர் உலகம் முழுவதும் வாழும் பார்வையற்றோரின் ஒரே எழுத்து
முறையான பிரெயில் பயன்பாட்டாளர்கள் என்பதைக் குறிக்கும் உருவகமாகவே இந்த
இதழுக்குச் சூட்டப்பட்டுள்ளது என்றும், விரல்மொழியர் இதழின் மூலம் பார்வையற்றோர் பொது சமூகத்தோடு
அர்த்தமுள்ள உரையாடலை நடத்த முற்பட்டிருப்பதையும் அவர் விவரித்தார். இந்த இதழ்
ஒட்டுமொத்த பார்வையற்றோர் சமுதாயத்திற்கும் சொந்தமானது என்றும் நெகிழ்ச்சியோடு
கூறினார். பாவப்பட்டவர்கள் என்ற பரிதாப நிலையிலோ அல்லது அபார திறன் படைத்தவர்கள் என்ற
அதிமனித நிலையிலோ வைத்துப் பார்க்காமல், ஊனமுற்றோரை தங்களின் ஒரு அங்கமாகக் கருதும் நிலையை பொதுச்
சமூகத்தில் உருவாக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கி, இதழை வெளியிட மேடையமைத்துக் கொடுத்த திராவிடம் 2.0 தோழர்களுக்கு நன்றி கூறி தனது உரையை முடித்தார் சக்திவேல்.
தோழர் சக்திவேல் ‘நீங்கள்/நாங்கள்’ என்ற இருமைப் பயன்பாட்டைத் தவிர்த்திருக்கலாமோ என்று
தோன்றுகிறது. ஊனமுற்றோர் ஒருவகை அல்லது ஒரு தனிச் சமுதாயம் என்றும், மற்றவர்கள்
ஒரு பெரும்பான்மைச் சமுதாயம் என்றும் பார்க்கும் போக்கு ஏற்கெனவே இங்கு ஏராளமாக
உள்ளது. இந்த நிலையைக் கடந்து ‘நாம்’
என்ற நிலைக்கு, அதாவது ‘நீங்கள்/நாங்கள்’ என்ற
இருமைப்படுத்துதல் இல்லாத நிலைக்குச் செல்லவேண்டும் என்ற எதிர்பார்ப்பு நமக்கு
இருப்பதை உணர்த்தியிருந்தால் அவரது உரை இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.
பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவையின் அமைப்புக்குழு உறுப்பினர் என்ற
முறையிலும், விரல்மொழியர்
கலைஞர் சிறப்பிதழுக்குப் பங்களிப்புச் செய்தவர் என்ற வகையிலும், சென்னை தியாகராயர் கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியர் தோழர்
மகேந்திரன் தொடர்ந்து உரையாற்றினார். அரசியல் பொருத்தப்பாடு நிறைந்ததாகவும்,
உணர்ச்சிகரமானதாகவும் ஒரு செயல்பாட்டாளரின் கவித்துவம் கலந்த உரையாக தோழர்
மகேந்திரனின் பேச்சு அமைந்திருந்தது. வேறெந்த தலைவருக்கும் இல்லாத சிறப்பாக கலைஞருக்கு
சிறப்பிதழ் வெளியிடக் காரணம், அவர் எல்லா விளிம்புநிலை மாந்தர்களோடும் தன்னை
இணைத்துக்கொண்டு, அவர்களுக்குள்
ஒருவராகத் தன்னைக் கருதியதுதான் என்பதை விளக்கி உரையைத் தொடங்கிய மகேந்திரன், கருப்பு தினம் அனுசரிக்கும் தருணத்தில், ஊனமுற்றோர் உரிமைச்சட்டம் பற்றிக்கூடத் தெரியாத மாற்றுத்திறனாளிகள்
நலத்துறை அலுவலர்களையும் அரசாங்கத்தையும் எதிர்கொள்ளும்போது கலைஞர் மிகவும்
அர்த்தமுள்ள தலைவராகப் பரிணமிப்பதை சுவைபட விளக்கினார். எந்தப் பகட்டுமில்லாத எளிய
மனிதராக போராட்டம் நடத்திய ஊனமுற்றோரைச் சந்தித்தது, பார்வையற்ற பலருக்கு பணிவாய்ப்பு வழங்கியது என கலைஞரின்
சிறப்புகளை மேலும் விவரித்தார் மகேந்திரன்.
கலைஞர் இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் இந்தச் சமூகத்தில் நிலவும்
எல்லாப் பிற்போக்குத்தனங்களையும், கடவுளின் பெயரால் நடக்கும் எல்லா மோசடிகளையும் துடைத்தெறிந்திருப்பார் என்ற
அவர்,
முற்போக்குச் சிந்தனைகளும், சமூக சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான
செயல்பாடுகளும் தழைக்கும் வரையிலும் கலைஞர் நம்மோடு வாழ்வார் என்று உணர்ச்சி
பொங்கக் கூறினார்.
தற்போது தொழில்நுட்பத்தின் உதவிகொண்டு பார்வையற்றோர் பலர் ஆழமாகவும், பரவலாகவும் வாசிப்பதையும், தாம் வாசித்தும், வாழ்ந்தும் அறிந்துகொண்டுள்ள தமது உணர்வுகளை வெளிப்படுத்தவே
விரல்மொழியர் மின்னிதழ் மூலம் முன்வந்திருப்பதையும் விவரித்தார் அவர்.
பார்வையற்றோரை ‘நாம்’ என்ற நிலையில் சமூகத்தின் சம உரிமையும், உணர்வும் கொண்ட
மனிதர்களாக மதிக்கவேண்டும் என்பதை வலியுறுத்திய மகேந்திரன், அதற்கான புரிதலை எழுத்தின் மூலமும் தமது சமூகப் பங்கேற்பின்
மூலமும் வழங்க பார்வையற்றோர் தயாராக இருப்பதையும் எடுத்துரைத்தார். இந்த
விரல்மொழியர் கலைஞர் சிறப்பிதழ், கலைஞர் என்ற கடலின் ஒரு துளி என்றும், இன்னும் எழுதுவதற்கும் செயல்படுவதற்கும் பார்வையற்றோர்
காத்திருப்பதாகவும் கூறி தனது உரையை நிறைவுசெய்தார்.
தாமும் இணைந்து செயல்பட ஆவலாக இருப்பதாகக் கூறிய திராவிடம் 2.0 தோழர்கள், தொடர்ந்து வரும் தமது நிகழ்வுகளில்
மாற்றுத்திறனாளிகள் பங்கேற்க வேண்டுமென்று அழைப்பு விடுத்ததோடு, ஒன்றாக இணைந்து செயல்படுவதன் மூலம் இயல்பான புரிதலும்
நட்பும் மலரும் சூழல் உருவாகும் என்றும் மிகச் சரியாகவே குறிப்பிட்டனர்.
தொழர் சக்திவேல் மற்றும் தோழர் மகேந்திரன் இருவரின் உரையையும் கேட்க கீழே உள்ள யூ-டியூப்
இணைப்பைச் சொடுக்கலாம் (உரையைக் கேட்க).
தொடர்ந்து நடைபெற்ற சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான கருத்தரங்கில், தோழர்
கிருபா முனுசாமி சமூகவியல் கோணத்திலும், தோழர் மனுராஜ் சட்டப் பார்வை அடிப்படையிலும் ஆழமான
சொற்பொழிவுகளை நிகழ்த்தினர். அவர்களைத் தொடர்ந்து உரையாற்றிய பேராசிரியர் சுப.
வீரபாண்டியன் தனது உரையில், மாற்றுத்திறனாளிகள் வேறு மற்றவர்கள் வேறு என்று
பார்த்து தனிமைப்படுத்தாமல் தங்களையும் ஒன்றாகக் கருதுமாறு கோரும்
மாற்றுத்திறனாளிகளின் எண்ணம் நியாயமானது என்று கூறியதோடு, இனிவரும் கூட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் வெறும்
பார்வையாளர்களாகவோ விருந்தினர்களாகவோ இல்லாமல், இயக்கத்தவரோடு சேர்ந்து நிகழ்வுகளை நடத்த விரும்புவதாகவும், அதற்கு மாற்றுத்திறனாளிகள் முன்வர வேண்டுமென்றும் அறைகூவல்
விடுத்தார்.
சாதி அமைப்பு குறித்தும், பெரியார், அம்பேத்கர் ஆற்றிய பணிகளின் சிறப்பு
குறித்தும் உரையாற்றிய அவர், தனது உரையின் மத்தியில் மீண்டும் விரல்மொழியர் இதழ்
குறித்தும், லூயி பிரெயில் பார்வையற்றோருக்கான எழுத்து முறையைக் கண்டறிந்தது
பற்றியும் கூறினார். பார்வையற்றவர்கள்தான் கலைஞர் குறித்த சரியான பார்வையைப்
பெற்றிருப்பதாகக் குறிப்பிட்ட சுப.வீ. அவர்கள், கலைஞர் ‘மாற்றுத்திறனாளிகள்’ என்ற
சொல்லை உருவாக்கிய 2010 மார்ச் முதல் நாள் குறித்த தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
சூரிய நாகப்பன் என்ற மாற்றுத்திறனாளி தனக்கு ஐக்கிய நாடுகளின் ஊனமுற்றோர்
உரிமைகள் குறித்த பிரகடனத்தை அறிமுகம் செய்ததாகவும், அவர் கூறியதன் அடிப்படையிலும், பிரகடனத்தைப் படித்த நினைவிலிருந்தும்
தான் கலைஞர் தொலைக்காட்சியின் ‘ஒன்றே சொல், நன்றே
சொல்’
நிகழ்ச்சிக்கு ஒலிப்பதிவு செய்ததாகவும் குறிப்பிட்டார்
அவர். முன்பே பதிவு செய்யபட்ட அந்த நிகழ்ச்சி 2010 மார்ச் முதல் நாள் காலை ஒளிபரப்பாக, அதனைப் பார்த்துவிட்டு உடனடியாக கலைஞர் அந்த ஐக்கிய நாடுகள்
அவையின் பிரகடனத்தைக் கேட்டதையும், தான் தேடிக் கண்டுபிடித்து அந்த ஆவணத்தை எடுத்துக்கொண்டு
கலைஞரின் கோபாலபுரம் இல்லத்திற்கு எதிரில் காத்திருந்ததையும், அப்போது தனது வாகன அணியோடு கடந்து சென்ற கலைஞர், வாகனத்தை
நிறுத்தச் சொல்லி அவரை அழைத்து ஆவணங்களைப் பெற்றுக் கொண்டதையும், அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் ‘மாற்றுத்திறனாளிகள்’ என்று அழைப்பதற்கான அறிவிப்பு வெளியானதையும் தனக்கே உரிய
சிறப்பான பேச்சால் சுவைபட எடுத்துரைத்தார் சுப.வீ. அவர்கள். மேலும், நாடாளுமன்ற
உறுப்பினர் கனிமொழி அவர்கள், உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளின் கடலில் கால்
நனைக்க வேண்டுமென்ற நீண்டநாள் ஆசையை நிறைவேற்றி வைக்க, தனியாக ஒரு சிறு பாதை
அமைத்து அவர்களை கடற்கரைக்கு அழைத்துச் சென்றதையும் நினைவுகூர்ந்து பாராட்டினார்.
பார்வையற்றவர்கள்தான் சரியான பார்வையை வெளிப்படுத்துகிறார்கள் என்று பொது
சமூகத்தில் தனிமைப்படுத்தப் பயன்படுத்தப்படும் அதே தொனியில் பேராசிரியர் சுப.வீ.-யும்
குறிப்பிட்டது, சரியான
கோணத்தில் சிந்திப்பதற்கும், பார்வை இருப்பது அல்லது இல்லாமல் இருப்பதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்ற
புரிதலை பொது சமூகத்தில் மட்டுமின்றி முற்போக்காளர்களிடமும் தொடர்ந்து வலியுறுத்த
வேண்டியுள்ளது என்பதை உணர்த்துவதாக இருந்தது. பேராசிரியர் சுப. வீரபாண்டியன்
அவர்களின் சுவையான உரையைக் கேட்க கீழே உள்ள யூ-டியூப் இணைப்பைச் சொடுக்கலாம் (உரையைக் கேட்க).
தொடர்ந்து விழாவின் சிறப்புரை நிகழ்த்திய நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.
கனிமொழி, தனது உரையில் விரல்மொழியர் இதழின் சிறப்பான முயற்சியைப் பாராட்டி,
கலைஞரின் சிறப்புகளையும் எடுத்துரைத்தார். மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக அவர்
மேற்கொண்ட திட்டங்களையும், ஓட்டு
வங்கி அரசியலைக் கடந்து சிந்தித்து திருநங்கைகள், தொழுநோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் என எல்லா ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும்
உழைத்து, திருநங்கைகள் நலவாரியம் உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களை
கலைஞர் நிறைவேற்றியதை அவர் எடுத்துரைத்தார். திருமதி. கனிமொழி அவர்களின் உரையை
கீழே உள்ள யூ-டியூப் இணைப்பில் கேட்கலாம் (உரையைக் கேட்க).
‘விரல்மொழியர்’ என்ற இதழின் பெயர் ‘விரல்மொழியார்’ என்று அழைப்பிதலில் தவறாக அச்சிடப்பட்டது குறித்து
திராவிடம் 2.0
தோழர்களிடம் கூட்டம் முடிந்த பின்னர் விளக்கப்பட்டது. இந்த முக்கியமான பிழை
தவிர்க்கப்பட்டிருக்கலாம். மேலும், பிரெயிலில் மட்டுமின்றி கணிப்பொறிகளில்
தட்டச்சு செய்வதும் பார்வையற்றவர்கள் தங்களது சொந்த விரலைப் பயன்படுத்தியே என்பதும்
பேராசிரியர் சுப.வீ. அவர்களிடம் விளக்கப்பட்டது. அவரும், ‘அப்படியென்றால் நாம் எல்லோருமே விரல்மொழியர்கள் தான்’ என்றார்! தொடர்ந்து பார்வையற்றோரோடு இணைந்து செயல்படவும்,
கற்றுக்கொள்ளவும் தாம் தயாராக இருப்பதாகக் கூறி விடைபெற்றனர் திராவிடம் 2.0 தோழர்களும், பேராசிரியர் சுப.வீ.-யும்.
பார்வையற்றோரால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சிறப்பான இதழியல் முயற்சியை
அங்கீகரித்து, அதனை வெளியிட முக்கியமானதொரு மேடையை ஏற்பாடு செய்ததற்காகவும், தொடர்ந்து இணைந்து செயல்படும் ஆர்வத்தை
வெளிப்படுத்தியதற்காகவும் திராவிடம் 2.0 இளம் தோழர்களை நிச்சயம் பாராட்டலாம்.
அச்சுப் பிரதி மிக நேர்த்தியான அட்டைப்படத்துடன் கையடக்க அளவில் அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரெயில் பதிப்பும் அழகுடனும்,
பிழைகள் எதுவுமில்லாமலும் நல்ல புத்தக வடிவிலும் வெளியிடப்பட்டுள்ளது;
இவ்விரண்டுமே அதிகமான உழைப்பைக் கோரும் கடினமான பணிகள். இவற்றை மிகச் சிறப்பாகச்
செய்து முடித்த விரல்மொழியர் ஆசிரியர் குழுவையும், அவர்களுக்கு உதவிய அனைவரையும்
பாராட்டுவதும், வாழ்த்துவதும் பார்வையற்றோர் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட அனைவரது
கடமையாகும்!
சென்னையின் மத்தியில், அதுவும்
மாலை நேரத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பார்வையற்றோர் விரல்விட்டு எண்ணக்கூடிய
அளவிலேயே பங்கேற்றது ஏமாற்றமளிப்பதாக இருந்தது. சமூக நிகழ்வுகளில் அரசியல்
ஆர்வமும், சமூக அக்கறையும் கொண்ட பார்வையற்றோர் அதிகம் பங்கேற்பது சமூக
இனைவுக்கும், நம்மை மைய நீரோட்டப்படுத்திக் கொள்ளவும் பெரிதும் அவசியம்.
மொத்தத்தில், எழுத்துலகிலும் சமூக அரசியல் தளங்களிலும் பார்வையற்றோரின்
படைப்பாற்றலும், பங்களிப்பும் அங்கீகரிக்கப்படும் காலச் சூழல் மெதுவாக என்றாலும்
உறுதியாக உருவாகி வருவதைப் பறைசாற்றும் நிகழ்வாகவே இந்த விரல்மொழியரின் கலைஞர்
சிறப்பிதழ் வெளியீட்டு விழா அமைந்தது!
***
(கட்டுரையாளர் கள்ளக்குறிச்சியில்
உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறை உதவிப்
பேராசிரியர்).
தொடர்புக்கு:
send2kmn@gmail.com
#################################################
உளமார்ந்த நன்றிகள்
‘விரல்மொழியர் கலைஞர் சிறப்பிதழ்’
முயற்சிக்கு எனக்கு உறுதுணையும் ஒத்துழைப்பும் நல்கிய சில உள்ளங்களுக்கு
நன்றி சொல்வது அவசியம்.
முதலில், இந்த முயற்சியின் தொடக்கம் முதல் இறுதிவரை என்னோடு பயணித்த என் அருமை
நண்பர் கா. செல்வம். அச்சுப் புத்தகத்தின் வடிவமைப்பு முழுப் பொறுப்பையும்
தனதாக்கிக் கொண்டவர்.
அடுத்து, புத்தகத்தை மிகச்சிறப்பாக வடிவமைத்துக் கொடுத்த திருச்சி சத்யா
ஆப்செட். மொத்தப் பிரதிகளையும் நாங்கள் அவர்களிடம் அச்சடிக்கப் போவதில்லை என்ற
திடீர் முடிவைக் கூட அவ்வளவு எளிமையாக எடுத்துக் கொண்டார்கள். அதற்குப் பிறகும்
அவர்கள் எங்களுக்கு வழங்கிய ஒத்துழைப்பு உளமார்ந்த நெகிழ்விற்கும், நன்றிக்கும்
உரியது.
இந்தப் புத்தக வெளியீட்டு மேடையை எங்களுக்கு தூரத்திலிருந்தபடி கைகாட்டி
விட்டவர், ஊடகவியலாளர் ஐயா L.R. ஜெகதீசன் அவர்கள். உரிய நேரத்தில் அவர்தான் சகோதரர் பழூரான் விக்னேஷ் ஆனந்த்
அவர்களைக் கைகாட்டினார்.
மேலும், பேரா. சுப.
வீரபாண்டியன் ஐயாவிடம் புத்தகத்திற்கான வாழ்த்துரையை எமக்குப் பெற்றுத்தந்த தோழர்
மணி அவர்கள், மிகக்குறுகிய
நேரத்திலும் எமக்குப் புத்தகத்தை அச்சிட்டு வழங்கிய கிருஷ்ணவேல். TS அவர்கள், ஆசிரியர் திருச்சி சுப்பிரமணியன், ஓய்வுபெற்ற பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர்
சந்தானகிருஷ்ணன் மற்றும் எப்போதும் எனது நோக்கங்கள் சார்ந்த செயல்களுக்கு தனது
நிபந்தனையற்ற ஆதரவைக் கேட்காமலேயே வழங்குகிற உற்ற தோழரும், சக ஆசிரியருமான திரு. S. பாஸ்கர் அவர்கள், நல்லதொரு மேடை வழங்கிய திராவிடம் 2.0 சகோதரர்கள் பழூரான் விக்னேஷ் ஆனந்த் மற்றும் Ka
Deena, எங்கள் அழைப்பை
முக்கியமாகக் கருதி நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்த பார்வை மாற்றுத்திறனாளி
நண்பர்கள் அனைவருக்கும் என் சார்பாகவும், எங்கள் விரல்மொழியர் மின்னிதழ் ஆசிரியர் குழுவின்
சார்பாகவும் உளமார்ந்த நன்றிகள்.
இவன்: சரவணமணிகண்டன். ப
#################################################
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக