விவாதம்: அரசியலில் நாம் - ரா. பாலகணேசன்


வாக்கு செலுத்தும் மாற்றுத்திறனாளியின் புகைப்படம்  தேர்தல் காலம் வந்துவிட்டது. களம் சூடாகிவிட்டது. அரசியல் கட்சிகள் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தத் தயாராகிவிட்டார்கள். ஊடகங்கள் மணிக்கொருமுறை ‘Breaking News’ குறிப்பிசையால் நம்மைத் தங்கள் கட்டுக்குள்ளேயே இருக்கச் செய்கின்றன. பேருந்து, பணியிடம், தேநீர் கடைகள் என எங்கு நோக்கினும் அரசியல் பேச்சுகள். இந்த பரபரப்பான சூழலில் நாம் கொஞ்சம் ஆர ஆமர சிந்திக்க ஒரு கேள்வி என்னிடம் இருக்கிறது! இந்தத் தேர்தலில் பார்வை மாற்றுத்திறனாளிகளாகிய நம்முடைய பங்கு என்ன? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

இந்திய வாக்காளர்கள் 6 பேரில் ஒருவர் மாற்றுத்திறனாளியாகவோ அல்லது அவரோடு தொடர்புடையவராகவோ இருக்கிறார்கள் என்கிறது ஒரு கணக்கெடுப்பு. தற்போதைய சூழலில், பார்வையற்ற வாக்காளர்கள் மொத்தம் எத்தனை பேர் என்பது குறித்த சரியான தகவல் இல்லை. இருந்தபோதிலும், உலகில் அதிகமான பார்வையற்றவர்களைக் கொண்ட நாடு இந்தியா என்ற பொது அறிவுத் தகவல், நம்மவர்களும் முக்கிய வாக்கு வங்கியாக இருக்கிறோம் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது. ஆனால், முழுமையான அரசியல் விழிப்புணர்வு பெற்றுவிட்டோமா நாம்?

நம்மோடு தொடர்ச்சியாக உரையாடும் நண்பர்களும், உறவினர்களும் நம் அரசியல் அறிவைக் கண்டு வியப்படைகின்றனர் என்பது உண்மைதான். பார்வை மாற்றுத்திறனாளிகளுள் பெரும்பாலானோர் செய்திகளை அறியும் ஆர்வமுடையவர்கள் என்றும், அவர்களிடம் அன்றாட நடப்புகள் குறித்து விவாதித்து அறிந்துகொள்ள முடியும் என்றும் நம்மோடு பழகும் பெரும்பாலானோர் நம்புகின்றனர். ஆனால் நாம்?

நம்மில் எத்தனை பேர் தேர்தல் அரசியல் கட்சிகளில், கொள்கை இயக்கங்களில் உறுப்பினர் ஆகியிருக்கிறோம்? நம்முடைய தலைவர்கள் எத்தனை பேர் அரசியல் இயக்கங்களில் அழுத்தம் தர வல்லவர்களாக இருந்திருக்கிறார்கள் அல்லது இருக்கிறார்கள்? ஏன் இல்லை? மாற்றுத்திறனாளிகளில் பார்வையற்றவர்கள்தான் அதிக கல்வியறிவு பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்றாலும், ஏன் மைய நீரோட்டத்தில் நாம் பங்கேற்கவில்லை? நம்மைப் பங்கேற்க விடாமல் தடுப்பது எது? இவற்றையெல்லாம் தான் நான் உங்களோடு சேர்ந்து விவாதிக்க விரும்புகிறேன்.

பொதுவாகவே மாற்றுத்திறனாளிகளைப் பொதுச் சமூகம் கண்டுகொள்வதில்லை; பிறகு எப்படி நம்மால் வளர முடியும்? இப்படி ஒரு கேள்வி உங்கள் மனதில் எழலாம்.

சக்கர நாற்காலிப் பயனாளர்கள் எத்தனை பேர் அரசியலில் இயங்குகிறார்கள் தெரியுமா? சாதாரண மக்களுக்காகப் பல காலம் போராடி, அதன் பலனாக  ஆண்டுக்கணக்கில் சிறையில் வாடும் பேராசிரியர் சாய்பாபாவை உங்களுக்குத் தெரியுமா? முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ஜெய்பால் ரெட்டியை அறிந்திருப்பீர்களே! இவ்வளவு எதற்கு, அன்றாடம் தொலைக்காட்சி விவாதங்களில் தி.மு.க. சார்பாகப் பேசும் மனுஷ்யபுத்திரனைத் தெரிந்திராமலா இருப்போம்? இவர்களெல்லாம் நடக்க இயலாதோர் தானே! அவர்களால் முடியும்போது ஏன் நம்மால் முடியவில்லை?

இதற்கும் நம்மால் பதில் கூற முடியும். மற்ற குறைபாடுகளைவிட பார்வைக் குறைபாடு தீவிரமானது. மனிதன் தான் பிறந்து 5 வயதிற்குள் கற்றுக்கொள்ளும் விஷயங்களில் 80% பார்வையின் மூலமே அறிந்துகொள்கிறான் என்கிறது உளவியல். நிலைமை அப்படி இருக்க, நாம் எப்படி அரசியல் வானில் ஜொலிக்க முடியும் என்ற ஆதங்கம் நியாயமானதுதான். மற்ற உடலியல் குறைபாடுகள் அந்தப் பகுதியின் செயல்பாட்டை மட்டும்தான் நிறுத்திவைக்கும்; ஆனால், பார்வை இழப்பு ஒருவரது நடை, உடை, பாவனை என அனைத்தையும் மாற்ற வல்லது.

இருந்தாலும், பார்வை மாற்றுத்திறனாளிகள் பலர் பல நாடுகளில் அரசியல் பணியாற்றியிருக்கிறார்களே! ஓரிரு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் சய்ரஸ் ஹபீப் என்ற பார்வையற்றவர் வாஷிங்டன் மாகாண லெப்டினெண்ட் கவர்னர் ஆகியிருக்கிறாரே! முப்புலன்களையும் இழந்த ஹெலன் கெல்லர் தனது அரசியல் கருத்துகளைத் தீவிரமாகத் தெரிவித்திருக்கிறாரே! பிரெயிலில் கணிதக் குறியீடுகளை வடிவமைத்த ஆபிரஹாம் நிமத்தைத் தேடி பல அரசியல் வாய்ப்புகள் வந்ததாக சென்ற இதழில் வெளிவந்த ஒரு கட்டுரை கூறியதே! அப்புறம் ஏன் நம்மால் முடியவில்லை? அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்களாகக் கூட வேண்டாம்; நம்மவர் இவர் சொன்னால் இக்கட்சியில் காது கொடுத்துக் கேட்பார்கள் என்ற நிலையில் கூட இங்கு யாரும் இல்லையே! ஏன்?

இது பற்றியெல்லாம் விரிவாகப் பேசுவோம், அடுத்த இதழில். இந்த விவாதம் குறித்த உங்கள் கருத்துகளைக் கீழே உள்ள கருத்துப் பெட்டியில் (Comment Box) தரலாம்; நம் வாட்ஸ்அப் குழுவிலும் பேசுங்கள். முக்கியமான கருத்துகள் அடுத்த பகுதியில் கவனத்தில் கொள்ளப்படும்.
***

தொடர்புக்கு: balaganesan2285@gmail.com

1 கருத்து:

  1. நல்லதோர் விவாதத்தை இக்கட்டுரையின் வாயிலாக தொடங்கியுள்ளீர்கள் ‌.
    பல ஆண்டுகளுக்கு முன்னால் புதிய தலைமுறை இதழில் கொழுஞ்சி என்பவர் குறித்த ஒரு கட்டுரை படித்த ஞாபகம்‌
    பார்வையற்றவரான அவர் விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்தவர்..
    மக்களுக்கு தேவையான பல அரசு நலத் திட்டங்களை நிறைவேற்றுவதில், அரசு அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் ஓர் இணைப்புப் பாலமாய் திகழ்ந்தவர்.

    பதிலளிநீக்கு