நினைவுகள்: பார்வையற்றோருக்கான பாடல்கள் - பார்வையற்றவன்

graphic பாடல் கேட்கும் பார்வையற்றவர்
  விடுதியில் நான், துரை சார், போன்ற பலரும் பார்வையற்றோருக்கான பாடல்கள் என பல பாடல்களை வகைப்படுத்தினோம். அப்படி நாங்கள் வகைப்படுத்திய சில பாடல்கள் பற்றி இப்பதிவில் பார்ப்போம். உங்களுக்கு புரியும்படி சொல்லவேண்டுமென்றால் பார்வையற்றோரின் வாழ்வியலோடு சில வரிகள் ஒத்துப்போகும். அப்படிப்பட்ட சில பாடல் வரிகளை இங்கே காண்போம்! இங்கு சில பாடல்கள் மட்டுமே தொட்டுக்காட்டப்படுகின்றன.

ஒரு பார்வையற்ற காதலனுக்கு வித்தியாசமான ஆசை தோன்றுகிறது. தன் காதலியைப் பார்த்து கண்ணடிக்க வேண்டுமென்று! சாதாரன நபர்களின் காதலில் இது இயல்பான விடையம். ஆனால், இந்தக் காளைக்கு அது ஒரு ஆசை! இந்தச் சூழலுக்கு ஏற்ற ஒரு பாடல் வரியுள்ளது, [என்னவளே அடி என்னவளே] என்ற பாடலில், "கோகிலமே நீ குரல்கொடுத்தால் உன்னைக் கும்பிட்டுக் கண்ணடிப்பேன்." அந்த பொண்ணு பேசுனாதான், அது இருக்கிற இடம் நம்மாளுக்குத் தெரியும். எப்படியாவது பேசுதாயி? அப்பதான் நீ இருக்குற பொசிசனத் தெரிஞ்சுக்கிட்டு சரியா கண்ணடிக்க முடியும். சாதாரனமா கேட்டாலே மதிக்க மாட்டாங்க. அதனால்தான் கும்பிட்டுக் கேட்கிறான்.

அடுத்த காட்சியில்: நம்ம  நாயகனுக்கு முத்தம் கொடுக்கனும்  என்ற ஆசைவருது. காதல் வந்தாலே  இந்த ஆசையெள்ளாம் வரனும்  என்பது ஐன்ஸ்டின் விதி. இவருக்கு வந்தது வேரமாதிரியான  ஆச. பொண்ணோட வீடு புகுந்து  அந்த பொண்ணுக்கு முத்தங்கொடுக்கனுமாம்! கெரகத்த என்ன செய்ரது. இதற்கும் ஏற்ற ஒரு பாடல்  வரி இருக்கு, பீமா' படத்தில் வரும், 'ஒரு பார்வையாலே கொன்றாய் எந்தன் விழியே விழியே' என்ற பாடலில், ”தந்தியாக மாரி உந்தன் வாசல் வரவா; தூங்கும் உன்னை தொட்டுப்பார்த்து முத்தம் தரவா”. வீடு புகுந்து முத்தங்கொடுக்கும்போது கொஞ்சம் சாக்கிரதையா இருக்கனும். நம்மாளு வேர முழு பார்வையற்றவர், அந்தப் பொண்ணுக்குச் சரியா முத்தங்கொடுக்கனும். அதனால இது நம்மாளுதானான்னு கன்ஃபார்ம் பன்ன தொட்டுப்பாக்குராப்புடி. தொட்டுப்பாக்காம முத்தங்கொடுக்க முடியாதான்னு கேட்கலாம்? அந்த பொண்ணு இழுத்துப்போத்திக்கிட்டு தூங்குது. தொட்டுப்பாக்காம முத்தங்கொடுத்தா போர்வைக்கு கொடுக்க வேண்டிவரும். அந்த போர்வ எப்ப தொவச்சதுன்னு தெரியாது. அதுக்குப்போய் முத்தங்கொடுத்துட்டு வாந்தி எடுத்து மயங்கி விழனுமா? ஒரு ஆம்புல பொண்ணுங்களோட அழகுல மட்டுந்தான் மயங்கிவிழனும். அடுத்த பிரச்சன ஒன்னு இருக்கு; தொட்டுப்பாக்காமலே முத்தங்கொடுக்குரானு வைச்சுக்குவோம். அத தவருதலா அவ தங்கச்சிக்கு கொடுத்துட்டான்னா அது வரலாறு. அதே நேரத்துல, அவ அம்மாவுக்கோ பாட்டிக்கோ கொடுத்துட்டான்னா அது பெரிய தகராரா மாரிடுமுல்ல.

இன்னொரு ஜோடியோட கதைக்குப்போவோம். காதலன வியப்பில் ஆழ்த்த  ஒரு இடத்துக்கு காதலி  கூட்டிப்போரா. அந்த இடத்தப்பத்தி  இந்த பயலுக்குத்தெரியல. அவளுக்கோ பார்வையற்ற பையன  சரியா கூட்டிப் போகத் தெரியல. இந்த எடத்துல ஒரு பாட்ட வைக்கிறோம்! கடல் திரைப்படத்துல வர்ற இந்த பாட்டுதாங்க அது, ”பள்ளங்குழி பாத தெரியல ஒன்ன நம்பிவாரேனே. இந்த காட்டுப்பய ஊரில் ஆட்டுக்குட்டி போல ஒ பின்னே சுத்துரனே. அடியே? அடியே? என்ன எங்கெ நீ கூட்டிப் போர” இப்பாட்டுல பாடகரோட குரல் பின்னாடியே கத்திக்கிட்டு போறது போல கச்சிதமா அமஞ்சுருக்கு.

சத்தங்கள வச்சு வர்ற பாடல்கள் பார்வையற்றோருக்கான பாடல்கள் என்ற வகைக்குள்ள அடங்கும். கோ’ படத்தில் உள்ள (என்னமோ ஏதோ!) என்ற பாடலில் வரும், ”சத்த சத்த நெரிசலில் உன் சொல்; செவிகள் அறியும் அவசரம் ஏனோ.” கிண்டி நிறுத்தத்துல 21G-யையும், கோரிப்பாளையத்துல 44 பேருந்தையும் சத்தத்த வச்சே பார்வையற்றவர்கள் கண்டுபிடிச்சுருவோம். பஸ்சையே சத்தத்த வச்சு கண்டுபிடிக்கிற பயலுக. தங்களோட வருங்கால மிஸ்சசோட குரல காற்றில் துல்லியமா கண்டுபிடிக்க மாட்டானா? ”ஒரு கோடி கொலுசில் உன் கொலுசின் ஓசை உயிர்வரை கேட்கிறதே”, ”காலடி ஓசையிலே உன் காதலை நானறிவேன்”, ”தெருவினில் அவள் நடக்கும்போது செருப்பின் ஓசை செவியைக்கில்ல” போன்ற வரிகளெல்லாம் நம்ம பாடல் வகைக்குள்ள வருதுப்பா.

அடுத்ததா, வாசனையை வைத்து காதலியைக் கண்டறிதல். இதில் நம்மாளுங்க கில்லாடி. பீமா படத்தில் வரும் ஒரு பாடலில், ”என் வாசலில் அடி உன் வாசனை நீ நின்ற இடம் நின்று உணர்ந்தேன்”. இது போல வாசத்தை வைத்து வரிகள் வரும் பாடல்களுக்கு பார்வையற்றோர் சொந்தம் கொண்டாடலாம். "என் கண்ணை திருடிக்கொள் பெண்ணே என்னை காதல் குருடன் ஆக்கிவிடு” என்ற பாடலும் நல்ல கற்பனை என்று சொல்லலாம்.

பார்வையற்றோர் விடுதியில்  ஒரு ஜோடி காதலிக்கிறது. அந்த பய, பொண்ணு சாப்பாடு வாங்கப்போனாலும், தன்னி பிடிக்கப் போனாலும், பாடிகாடா பின்னாடியே போறான். நான் அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும்போது, 8.30-க்கு மேல்தான் வகுப்பு நிறையும். ஏனெனில், நம்ம பயலுகளுக்கு முக்கியக் கடமை ஒன்னு இருந்துச்சு. மீனாட்சி கல்லூரி பொண்ணுங்கள பத்தரமா கல்லூரி வாசலில் விட்டுவிட்டு அப்புரந்தான் வகுப்புக்குத் திரும்புவார்கள். செரி, நானும் ஒரு பொண்ணுக்கு பாடிகாடா கல்லூரி வாசலில் கொண்டு விடலாமென முயன்றேன். பேருந்திலிருந்து இரங்கி அந்தப் பொண்ணு பின்னாடியே போனேன். ரோட்டை கடக்குமிடத்தில் நான் தடுமாற, 'அண்ணா எங்கே போகனும்?' என அப்பெண் கேட்டது. 'ரோட்ட கிராஸ் பண்ணனும்' என்றேன். நான் கொண்டுவிட நினைத்த புள்ள என்னைக் கூட்டிப் போய் விட்டுவிட்டு சென்றது. பின் மீண்டும் சாலையை சிரமப்பட்டுக் கடந்து வகுப்புக்குச் சென்றேன். சரி மீண்டும் பாடலுக்கு வருவோம். பாதையில் நிறையபேர் நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீது தன்னுடய ஆள் மோதிவிடக் கூடாதென்று நினைக்கிறான். அங்கே, விடுதி வாசலை அடைத்துக்கொண்டு ஒருவன் நிற்கிறான். இதற்கு ஏற்ற பாட்டு, "வழிவிடு வழிவிடு வழிவிடு என் தேவி வருகிறால். எவனவன் வாசலை அடைப்பது? எவனவன் திரையினை விரிப்பது?"

காசி படத்தில் வரும், "மனமுள்ளோர் என்னைப்பார்ப்பார்; மனதினால் அவரைப் பார்ப்பேன்", குக்கூ படத்தில், "கோடி பேரில் ஒன்ன மட்டும் அறிவேனெ தொடுகிற மொழியில" போன்ற வரிகளெல்லாம், பார்வையற்றோருக்காக திரையில் எழுதப்பட்ட வரிகள்.

என் மனதுக்கு நெருக்கமான ஒரு பாடலைப் பற்றியும் சொல்லியாகனும். சில பேர் விழிச்சவாளர்களுடன் வரும்போது, தாங்கள் காணும் காட்சியையும் சொல்லிக்கொண்டே வருவார்கள். அப்படிப்பட்டவர்களோடு பயணிக்கும்போது, உலகை அவர்களும் ரசித்த அனுபவத்தை பெருகின்றனர். கேப்டனோட 'நெறஞ்ச மனசு' படத்தில் வரும், "பாத்துப்போ மாமா பாத்துப்போ" என்ற பாடலில், போகும் வழியில் கேட்கும் ஓசைகள் என்ன என்பதை விவரிப்பது போல பாடல் எழுதப்பட்டிருக்கும். ஸ்ரேயா கோஷலின் குரலில் அதை கேட்கும்போது மிகவும் அருமையாய் இருக்கும். இப்பாடலில் வருவதுபோல, என் இரு கண்களுக்கும் சேர்த்து தன்னிரு விழிகளால் கண்டு சொல்ல மாமன் மகள் இருக்கிறாள் என மகிழ்ந்திருந்தது ஒரு காலம். இன்றோ, அவையெல்லாம் பழங்கதையாய் வெருங்கனவாய் போயிருச்சு. கடைசி வரிகளை படிக்கும்போது வடிவேலின், "டே சோனமுத்தா போச்சா!" என்ற வசனத்தை மனதுக்குள் ஓடவிடவும்.
***

தொடர்புக்கு: parvaiyatravan@gmail.com

11 கருத்துகள்:

  1. அருமையான பதிவு,
    விடுதிக்கால நினைவுகளை எனக்கும் மீட்டுத்தந்தது.
    இன்னும் நிறைய இதுபோன்ற பதிவுகளை எதிர் பார்க்கிறேன்.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் குருவே, கட்டாயம் துறைசார் விடுதி கால நினைவுகள் பல கைவசம் இருக்கிறது அவை கட்டுரைகளாகவும் கவிதைகளாகவும் வெளிவரும்

      நீக்கு
  2. நம்முடைய வாழ்வோடு இணைந்து இருந்த டேப் ரிக்கார்டரும் ஒளிநாடாவை நினைவுபடுத்தியது. வளர்ந்து ஓடும் கால ஓட்டத்தில் மறைந்து போன அந்த பொருட்கள் தான் நம் வாழ்வின் சொர்க்கம் ஆக அமைந்து இருந்தது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. கருவிகள் நவீனம் அடைந்திருந்தாலும் காதுகள் ரசித்ததை மறக்க இயலாது. நகரம் வேறாக இருந்தாலும் அனுபவமும் ஒன்றுதான் தொடரட்டும் உங்கள் பதிவு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு