மீண்டும் அந்தப் பிரச்சனை தலைதூக்கத் தொடங்கியிருக்கிறது.
ஏற்கெனவே வளர்ந்த இந்தப் பிரச்சனை தமிழக அரசால் மட்டுப்படுத்தப்பட்டு நிலைமை கட்டுக்குள்
வந்தது. தற்போது மீண்டும் அது தலைதூக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழ்த் திரைப்படங்களுக்குத்
தமிழில் தலைப்புகளை வைக்காமல், ஆங்கிலப் பெயர்களை நாடிச் செல்லும் பிரச்சனை தான் அது.
1990-களில்
இந்தியாவில் உலகமயமாதல் நடைமுறைக்கு வந்த காலத்தில், தமிழ்த் திரைப்படங்கள் பல வகைகளில்
மாற்றம் பெற்றன. கதைகள் மாறின; களங்கள் மாறின; இசை மாறியது. அது போலவே, பல திரைப்படங்களுக்கு
அதுவரை இல்லாத அளவிற்கு ஆங்கிலப் பெயர்கள் வைக்கப்பட்டன. ‘லவ் பேர்ட்ஸ்’, ‘குட்லக்’,
‘ஃபிரண்ட்ஷிப் டே’, ‘பாய்ஸ்’, ‘எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’, ‘லவ் டுடே’ என்றெல்லாம்
திரைப்படப் பெயர்கள் அமைந்தன. மக்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் பெயர் வைக்கப்பட்டதாகவும்,
படத்தின் உலகளாவிய வணிகத்திற்கு இது உதவும் என்றும் அப்போது கூறப்பட்டது.
2006-2011
கலைஞரின் ஆட்சியில் இதற்கு முடிவு கட்டப்பட்டது. ‘தமிழ்ப் பெயர்களைத் தாங்கி வரும்
தமிழ்ப் படங்களுக்கு வரி விலக்கு தரப்படும்’ என்று அரசு அறிவித்தது. கட்டாயப்படுத்தக்கூட
இல்லை; எல்லாப் படங்களும் தமிழ்த் தலைப்புகளைத் தாங்கத் தொடங்கிவிட்டன. வரி விலக்குக்கு
முன் அவர்கள் சொன்ன காரணங்கள் காணாமல் போயின. சிந்தித்துச் சிந்தித்து பல நல்ல பெயர்களைத்
தமிழ்த் திரைப்படங்களுக்குத் தந்தனர். 2011 முதல் முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் இந்த
வழக்கத்தைத் தொடர்ந்தார். இந்த இரு பெரும்
தலைவர்களும் இறந்த பிறகு மீண்டும் இப்பிரச்சனை தலைதூக்கியிருக்கிறது. தமிழக அரசின்
கண்டுகொள்ளாமையாலும், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் அலட்சியத்தாலும் பல தமிழ்த்
திரைப்படங்கள் ஆங்கிலத் தலைப்புகளில் வெளியாகும் அவலம் ஏற்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே
‘டூலெட்’, ‘எல்கேஜி’ ஆகிய படங்கள் வெளியாகியிருக்கின்றன. இவை தவிர, விஜய் சேதுபதி நடிக்கும்
‘சூப்பர் டீலக்ஸ்’, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மிஸ்டர் லோக்கல்’, சூர்யா நடிப்பில்
‘என்ஜிகே’, ஜீ.வி. பிரகாஷ்குமார் நடிப்பில் ‘வாட்ச்மேன்’, உதயநிதி நடிப்பில் ‘சைக்கோ’,
‘கேங்க் ஆஃப் மெட்ராஸ்’ என்று பல படங்கள் தயாராகி வருகின்றன.
வரி
விலக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல நல்ல தலைப்புகள் உள்ள தமிழ்ப் படங்கள் வெளியாகின.
‘அங்காடித் தெரு’, ‘பேராண்மை’, ‘மூடர் கூடம்’ முதலிய தலைப்புகளை எல்லாம் வரி விலக்கு இல்லாவிட்டால்
நாம் பெற்றிருப்போமா என்று தெரியவில்லை. ‘ஐ’ என்ற ஒற்றை எழுத்தைத் தலைப்பாக்கினார்
இயக்குனர் சங்கர். அதன் பொருள் தலைவன், அழகு முதலானவை என்பதைப் பலரும் தேடி அறிந்துகொண்டனர். மாலுமி என்ற பொருள்படும்
‘மீகாமல்’ என்ற சொல்லைத் தலைப்பாக்கினார் இயக்குனர் மகிழ்திருமேனி. ரயில் தொடர்பான
தனது திரைப்படத்திற்கு ‘தொடரி’ என்று பெயர் சூட்டினார் இயக்குனர் பிரபு சாலமன். இத்தகைய
எண்ணம் இயல்பாக எல்லா இயக்குனர்களிடமும் பரவிய காலகட்டத்தில், மீண்டும் அவர்களிடையே
இந்நோய் பீடித்திருக்கிறது.
‘பவர்
பாண்டி’ ‘ப. பாண்டி’ ஆனதும், ‘ஓகே கண்மணி’ ‘ஓ காதல் கண்மணி’ ஆனதும் ஓரிரு ஆண்டுகளுக்கு
முன்பு தானே! தற்போதைய நிலைமை மாற்றத்திற்குக் காரணம் என்ன? உறுதியற்ற அரசியல் சூழலோ,
உலகளாவிய வணிகம் என்ற பழைய பல்லவியோ காரணமாக இருக்கலாம். 3 மணி நேர உள்ளடக்கத்தைத்
தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப சிந்திக்கத் தெரிந்த அவர்களுக்கு, ஒரு வரியில் அல்லது ஓரிரு
சொற்களில் வரும் தலைப்புகளைத் தமிழில் சிந்தித்துத் தர இயலவில்லையா என்ன?
தமிழில்
பெயர் வைக்கப்படும் படங்களுக்கு வரி விலக்கு என்ற அரசாணை வெளிவந்த காலகட்டத்தில் ‘இம்சை
அரசன் 23-ஆம் புலிகேசி’ திரைப்படம் வெளியானது. அப்படத்தில், ஆங்கிலேயர்கள் கொண்டுவரும்
உற்சாக பானங்களுக்குத் தமிழில் பெயர் வைப்பார் புலிகேசி மன்னர். ‘Sister Mala’, ‘Bad
Smell Sea’ என்ற தொடர்களுக்கு ‘அக்கா மாலா’, ‘கப்சி’ என்று பெயர் வைப்பார் அரசர். அப்போது
அவர் அருகில் இருக்கும் அறிவாளி அமைச்சர் இப்படிச் சொல்வார், “உள்ளே உங்களது ஆங்கில
பூர்வீகமே இருக்கலாம், ஆனால் தலைப்பு தமிழில்தான் இருக்கவேண்டும்”. அது நான் மேலே கூறிய
அரசு அறிவிப்பைக் கிண்டல் செய்யும் வகையில் இருந்தது. அந்த அரசியல் அங்கதத்தை ரசித்து
ரசித்து சிரித்திருக்கிறேன். அது எத்தகைய முட்டாள்தனமானது என்பதை 10 ஆண்டுகளுக்குப்
பிறகு புரியவைத்துவிட்டார்கள் தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள்.
மீண்டும் நிலைமை மாறுமா? தமிழக அரசின் தமிழ்
வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையும், படம் எடுத்துச் சம்பாதிக்கும் இயக்குனர்களும்,
தயாரி்ப்பாளர்களும் சிந்திக்க வேண்டும்.
***
தொடர்புக்கு:
balaganesan2285@gmail.com
வணக்கம் நான் முத்துகுமார் நெல்லை
பதிலளிநீக்குசெல்வம் sir கட்டுரை இல்லாத இதலை உங்களின் கட்டுரை நிறைத்துவிட்டது கட்டுரை அருமை. நீங்கள் கூரிய எடுத்துக்காட்டும் சிறப்பு. இனி வரும் இதள்களில் யார் எழுதினாளும் திரைப்படம் சார்ந்த கட்டுரைகளை கட்டாயமாக கொடுங்கள். ஏனனிள் திரைப்படம் எனக்கு பிடித்தமான ஒன்று. ஒரு வாசகனாக இதை பதிவிடுகீறேன். நன்றி.