தலையங்கம்: வரவேற்கப்பட வேண்டிய நல்முயற்சி


உணர்ந்ததைச் சொல்கிறோம் உலகிற்கு என்ற வாசகத்தை உள்ளடக்கிய விரல்மொழியரின் சின்னம்
  எதிர்வரும் மார்ச் 10-ஆம் தேதி நடைபெறவிருக்கிற பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் ஆண்டுவிழாவை முன்னிட்டு, பார்வையற்றோர் வளர்ச்சி மற்றும் எதிர்கால சவால்கள் தொடர்பாக ஒரு கருத்தரங்கம் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்தக் கருத்தரங்கில் பார்வையற்றோருக்கான கல்வி, வேலைவாய்ப்பு, சமூகப் பொருத்தப்பாடு என அனைத்துத் தளங்களிலும் கட்டுரைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, அதனைப் புத்தகமாகவும் கொண்டுவரவிருக்கிறார்கள்.

சங்கத்தினரின் இந்த முயற்சி போற்றுதலுக்குரியது. கோரிக்கை வலியுறுத்தல்கள், போராட்டக் களங்கள் என எப்போதும் தனக்கென ஒரு நேர்கோட்டுப் பாதையைத் தெரிந்துகொண்டிருக்கிற இந்தச் சங்கம், தனது பயணச் சுவடுகளை மட்டுமின்றி, அமைப்பு பலமின்றி தனித்துப் போராடும் பல பார்வையற்றவர்களின் கோரிக்கைகளை, மன்றாடல்களை, குமுறல்களை அச்சிலேற்ற முன்வந்திருப்பதும், அதற்கான ஒரு விவாத மேடையை தங்கள் பொறுப்பிலேயே ஏற்படுத்தித் தருவதும் பார்வையற்றோர் வரலாற்றுப் பயணத்தில் ஒரு புதிய திறப்பு.

கருத்து வேற்றுமைகளாலும், மனமாச்சரியங்களாலும் தனக்கான வலுவான அமைப்பு பலத்தை இழந்து நிற்கிற பார்வையற்றோர் சமூகம், பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு குடைநிழலில் ஒருங்கிணைந்து உரையாடும் நல்வாய்ப்பைப் பெற்றிருப்பது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த உரையாடல்கள் பல புதிய முயற்சிகளின் தோற்றுவாயாக அமையலாம். இதன்மூலம், பார்வையற்றோர் தங்களுக்குள்ளாகவே ஒரு வலுவான உரிமைசார் பிரகடனத்தை ஏற்படுத்தி, அதற்கான களவழிச் செயல்பாடுகளைத் திட்டமிடுகிற முதல் அமர்வாகக்கூட இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

காலம் படைக்கிற எத்தனையோ வரலாறுகள் அந்தக் காலத்தையே வென்று நிற்க வேண்டுமானால் அதனைப் பதிவுசெய்தல் அவசியம். அத்தகைய முயற்சிகளின் முன்னோடியாய் விளங்குகிற ‘விரல்மொழியர்’, இதற்காக உழைத்துக் கொண்டிருக்கிற இளையோர் கூட்டத்தை மனதாரப் பாராட்டுவதோடு, இந்த முயற்சி பெருவெற்றிபெற தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. நன்றிகளும், வாழ்த்துகளும்!

“உணர்ந்ததைச் சொல்கிறோம் உலகிற்கு”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக