பார்வை மாற்றுத்திறனாளிகள் அரசியலில் ஏன் பங்கேற்க
முடிவதில்லை என்ற எனது சென்ற இதழ் கேள்விக்கு வாட்ஸ்அப் வழியாகவும், மின்னஞ்சல் வழியாகவும்,
எனது தொலைபேசி எண்ணிலும் பதிலளித்த அனைத்து வாசகர்களுக்கும் நன்றி. உங்கள் கருத்துக்களின்
வழியே விவாதத்தைத் தொடரலாம் என்று நினைக்கிறேன்.
“வாழ்வில்
தன்னம்பிக்கையோடு முன்னேறும் பார்வை மாற்றுத்திறனாளிகள் அரசியலில் பிறரை எதிர்கொள்ளும்
துணிச்சலற்றவர்களாக இருக்கிறார்கள்” என்கிறார் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில்
பள்ளி ஆசிரியராகப் பணிபுரியும் மணிவண்ணன். இதை இப்படி எடுத்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன்;
பார்வையற்றவர்கள் தங்கள் வாழ்க்கையை நிலைப்படுத்திக் கொள்ளவே பெரும் போராட்டங்களைச்
சந்திக்க வேண்டியிருக்கும் நிலையில், அரசியலில் பங்கேற்பதற்கான வாய்ப்பு அவர்களுக்கு
எப்படிக் கிடைக்கும்?
பெரும்பாலான
பார்வை மாற்றுத்திறனாளிகள் பொருளாதார வளம் அற்றவர்களாகவே இருக்கின்றனர் என்பதும், அவர்கள்
முயன்று தான் தங்கள் பொருளாதாரத்தைப் பெருக்கவேண்டியிருக்கிறது என்பதும் உண்மை. அதே
நேரம், பொருளாதார வசதி மிகுந்த பார்வையற்றவர்களும் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள்;
அவர்களாலும் அரசியலுக்குள் நுழைய முடியவில்லை!
மேலும்
மணிவண்ணன் கூறும்போது, “பொய் கூறுதல், தவறாகப் பேசுதல், மாற்றிப் பேசுதல் முதலிய அரசியல்வாதிகளுக்கான
குணங்களைப் பார்வையற்றவர்களால் பெற்றுக்கொள்ள முடியுமா?” என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
பார்வையற்றவர்களும் சராசரி மனிதர்களே என்ற அளவில், இதில் எந்தச் சிக்கலும் இல்லை என்றே
நினைக்கிறேன். அதே நேரம், இந்தப் பழக்கங்களைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வது பார்வை
மாற்றுத்திறனாளிகளுக்குச் சிரமம்தான்.
பார்வை
மாற்றுத்திறனாளிகள் அரசியலுக்கு வர வேண்டியது அவசியம் என்று தான் கருதுவதாகக் கூறும்
சென்னையைச் சேர்ந்த சுரேஷ், நாம் பொதுநலம் குறித்து இன்னும் கூடுதல் அக்கறையோடு செயல்பட
வேண்டும் என்கிறார். உரிமைத் தளத்தில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கும் நாம், பொது அரசியலிலும்
கலந்துகொள்ள வேண்டும் என்கிறார். ஆதிதிராவிடர் நலத் துறை, மீன்வளத் துறை முதலிய துறைகள்
அந்தந்த இனம் சார்ந்த மக்களுக்கு வழங்கப்படுவது போல, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை
அமைச்சராக ஒரு மாற்றுத்திறனாளி அமரும் நாளைத் தான் கனவு காண்பதாகத் தெரிவிக்கிறார்.
பார்வை
மாற்றுத்திறனாளிகள் உரிமைத் தளத்தில் ஓரளவு முன்னேறியிருக்கிறார்கள் என்பதை ஒத்துக்கொள்ளும்
ஆய்வு மாணவர் பொன். சக்திவேல், அந்த வெற்றியே அவர்களது போர்க்குணத்தை மழுங்கச் செய்திருக்கிறது
என்று தான் அஞ்சுவதாகக் கூறுகிறார். பார்வையற்றவர்கள் பொது மேடைகளில் ஏறும்போது மக்களின்
கவனத்தை அவர்கள்பால் திருப்ப முடியும் என்று உறுதியாகக் கூறும் இவர், பொது இடங்களுக்கு
வருவதில் பார்வையற்றோருக்கு இருக்கும் தயக்கத்தையும், எதார்த்த சிக்கல்களையும் விட்டு
விடுதலையாகி வெளியே வரவேண்டும் என்கிறார். மேலும், நமக்குள் இருக்கும் உள்முரண்களிலேயே
நாம் அதிகம் கவனம் செலுத்துகிறோம் என்றும், அதை விடுத்து பொதுவாழ்வில் பங்கேற்க பார்வை
மாற்றுத்திறனாளிகள் முன்வரவேண்டும் என்றும் இவர் குறிப்பிடுகிறார். சிறுபான்மையினராக
இருப்பவர்கள் எல்லோருமே ஒன்றிணைந்தால் மட்டுமே அரசியல் வெற்றி காண முடியும் என கூறும்
சக்திவேல், நம்மவர்களை ஒருங்கிணைப்பது சிரமமான காரியம் என்றும் கூறுகிறார். மேலும்,
நம்மவர்களின் வாக்கு வங்கியை ஒருங்கிணைத்து, நமக்கான தலைவர்களை உருவாக்கி, அவர்கள்
பெரிய கட்சிகளோடு பேசி அழுத்தம் தர வல்லவராக இருக்கும்போதுதான் நமக்கான அரசியல் சாத்தியமாகும்
என்கிறார்.
“பார்வையற்றவர்களாகிய
நாம் முதலில் நம்முடைய அரசியலைச் சரியாகச் செய்கிறோமா?” என்று கேள்வி எழுப்புகிறார்
சிறப்புப் பள்ளி ஆசிரியர் ப. சரவணமணிகண்டன். பார்வையற்றவர்கள் என்றாலே உரிமைகளைப் போராடிப்
பெறுபவர்கள் என்றிருந்த பிம்பம் தற்போது மாறிவிட்டதாக ஆதங்கப்படுகிறார் இவர். பொது
இடங்களில் சமயோஜித உணர்வற்றவர்களாக நம்மவர்கள் பலர் இருப்பதாக வருந்துகிறார். நமக்கென்று
பல அமைப்புகள் இருந்தாலும், அவை ஒன்றிணைந்து கூட்டமைப்பாகச் செயல்படாதது வருந்தத்தக்கது
என்கிறார் இவர்.
பொதுவாக
சமூக அக்கறையுடன் களமாடும் பார்வையற்றவர்கள் திருமணத்திற்குப் பின் ஒதுங்கிவிடுவதாகவும்,
குறிப்பாக பார்வையுள்ளவர்களை மணம் முடிக்கும் பார்வையற்றவர்கள் தம் சமூகப் பணியிலிருந்து
கொஞ்சம் கொஞ்சமாக விலகிவிடுவதாக வருத்தம் தெரிவிக்கிறார் சரவணமணிகண்டன். நமக்கான அரசியல்
ஒருங்கிணைப்பு சாத்தியமானால்தான் நாம் பொது அரசியலில் பங்கேற்க முடியும் என இவரும்
வலியுறுத்துகிறார்.
“எவ்வளவு
விழிப்புணர்வு கொடுத்தாலும், பார்வையுள்ளோர் அத்தனை சீக்கிரமாக பார்வையற்றவர்களைச்
சேர்த்துக்கொள்ள வாய்ப்பில்லை” என்கிறார் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆசிரியராகப் பணிபுரியும்
நசுருதீன். “மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும்; மாநிலங்களவையில்,
மாநில சட்ட மேலவைகளில் மாற்றுத்திறனாளி ஒருவர் நியமன உறுப்பினராக நியமிக்கப்பட வேண்டும்.
இவை சாத்தியமானால்தான் மாற்றுத்திறனாளிகள் அரசியலில் தீவிரம் காட்டுவர். அதில் பார்வையற்றவர்களும்
பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்” என்கிறார் இவர்.
உண்மைதான்.
பட்டியல் வகுப்பினருக்கான (SC) தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதால்தான் அவர்கள் அரசியல்
கட்சிகளால் தொடர்ந்து கண்டுகொள்ளப்படுகிறார்கள். தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்றத்
தேர்தலில் இரு பெரும் திராவிடக் கட்சிகள் ஆளுக்கு 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
போட்டியிடுபவர்களில் இஸ்லாமியர் ஒருவர் கூட இல்லை. தி.மு.க. கூட்டணியில் ‘முஸ்லீம்
லீக்’ இடம்பெற்றிருப்பதால், 39 தொகுதிகளில் ஒரு இஸ்லாமியர் போட்டியிடுகிறார். அ.தி.மு.க.
கூட்டணியில் அதற்கும் வாய்ப்பில்லை. வட இந்தியாவில் இஸ்லாமியர் வாக்குகள் பெரும்பான்மையாக
உள்ள பல தொகுதிகளிலும் அவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவதில்லை. இந்தச் செய்தியை
ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நமக்கான இட ஒதுக்கீடு அவசியம் என்றே படுகிறது.
பார்வையற்றவர்களால்
ஏன் முன்பைப் போல் பொது தளங்களுக்கு வர முடிவதில்லை? இக்கேள்விக்கு இன்னொரு கோணத்தில் பதிலளிக்கிறார் அஞ்சலக ஊழியர்
J. யோகேஷ், “முந்தைய தலைமுறை பார்வையற்றவர்கள் பெரும்பாலும் விடுதிகளில்தான் வசித்தார்கள்.
அவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து பெருமளவில் விலகியே இருந்தார்கள்; அதனால், பொதுப் பிரச்சனைகளில்
ஒன்றுகூடுவதில் அவர்களுக்குச் சிக்கல் எதுவும் இல்லை. இந்த தலைமுறை பார்வையற்றவர்கள்
வீட்டிற்குள்தான் வளர்க்கப்படுகிறார்கள். கண்டிப்போடு வளர்க்கப்படும் அவர்கள், வேலை
என்ற பொருளாதார பலத்தினைப் பெற்றுவிட்டால், குடும்ப பாரம் முழுவதையும் சுமக்க வேண்டியுள்ளது.
பல வேளைகளில் தற்சார்போடு அவர்களால் செயல்படக் கூட முடிவதில்லை. அதனால், அவர்களால்
பொது விவகாரங்களில் பங்குபெற இயலவில்லை” என்கிறார்.
விடுதி
வாழ்க்கையிலிருந்து விடுபட்டது பார்வையற்றவர்களின் ஒருங்கிணைப்பிற்கு பெரிய தடைக் கல்
என்றுதான் கூறவேண்டும். முன்பெல்லாம் பார்வையற்றவர்களிடையே ஒரு பெரிய வலைப்பின்னல்
இருக்கும். ஒவ்வொரு ஊரிலும் அவர்களுக்குத் தேவையான வேலைகளைச் செய்து தரும் நட்பு சக்திகளைப்
பெற்றிருப்பர். இனி வரும் காலங்களில் இந்த வலைப்பின்னலை ஏற்படுத்துவது மிகவும் கடினம்.
வீட்டிலேயே
வளர்க்கப்படும் பார்வையற்ற குழந்தைகள், வீட்டிற்கு அருகில் உள்ள பொதுப் பள்ளிகளிலேயே
படிக்கவைக்கப் படுகின்றனர். உயர்கல்வி, வேலைவாய்ப்பு முதலியவையும் விழிப்புணர்வுடைய
பெற்றோரின் பார்வையற்ற குழந்தைகளுக்கு மட்டுமே கிடைக்கும் காலம் வந்துகொண்டிருக்கிறது.
பிறகு திருமணம், குடும்பம் என்று தங்கள் ஊரிலேயே வாழ்வார்கள்.
பார்வை
உள்ளவர்களைப் பொறுத்தவரை, இது சொர்க்கம் போன்ற வாழ்க்கை; ஆனால், பார்வையற்றவர்களுக்கு
அப்படியில்லை. தன்னைப் போ்ன்ற பார்வையற்றவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதையும்,
அவர்களிடம் பல்வேறு திறமைகள் கொட்டிக்கிடக்கின்றன என்பதையும், அவர்களிடம் இருக்கும்
தலைமைப் பண்பையும் அறியாமலேயே அவர்கள் வாழ்ந்து முடித்துவிடுவார்கள். நெல்லையைச் சேர்ந்த
மாரிக்கனி என்ற ஆசிரியரும் இதைத் தான் கூறுகிறார். நமக்கு இன்னும் அரசியல் விழிப்புணர்வு
அவசியம் என்கிறார்.
கருத்து
தெரிவித்த அத்தனை பேருக்கும் நன்றி. அடுத்த இதழில், அனுபவம் மிகுந்த பார்வையற்ற பெரியவர்களிடம்
பேசுவோம். பார்வையற்றவர்கள் ஏன் அரசியலில் அதிகம் பங்கேற்பதில்லை? பங்கேற்றால் அவர்களால்
என்னென்ன பணிகளைச் செய்ய முடியும்? நீங்களும் சிந்தியுங்கள்.
***
தொடர்புக்கு:
balaganesan2285@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக