தேர்தல் அறிவிப்பு வந்த கடந்த மார்ச் 10-ஆம்
தேதியிலிருந்து ஒவ்வொரு விதமான மழை பொழியத் தொடங்கியிருக்கிறது. முதலில்
பொழியத் தொடங்கியது வாக்குறுதி மழை. இருந்தவரை எதுவும் செய்யாதவர்களும்,
இருக்கும்போதும் எதுவும் செய்யத் துணியாதவர்களும் துணியும் ஒரு விஷயம், ‘நாங்கள் அதைச்
செய்வோம், இதைச் செய்வோம்’
என்கிற வாக்குறுதிகள் தருவது.
”நான் மட்டும் தேர்தலில் வெற்றிபெற்றால், மதுரைக்குக்
கடலையே கொண்டுவந்து விடுவேன்” என
ஒரு வேட்பாளர் வாக்குறுதி தருவதாக என் சிறுவயதில் ஒரு நகைச்சுவையைப் பெரியவர்கள்
சொல்லக் கேட்டிருக்கிறேன். ஒரு தரப்பு, ‘அது, இது’ என ஏதேதோ அள்ளிவிடுவதும், ‘இருந்தவரை
என்ன செய்தீர்கள்?’ என
இன்னொரு தரப்பு கேட்பதும் என இந்த விளையாட்டு போரடித்துவிட்டது. இப்போது
வாக்குறுதி மழை என்றால், தேர்தல் பரப்புரையின் இறுதிக் கட்டங்களில் பணமழையும்,
பானமழையும் பெய்யோ பெய்யெனக் கொட்டும்; உண்மையில், மக்களுக்கு இது
திருவிழாக்காலம்தான். எல்லா ஆண்களும் தங்கள் வாழ்நாளில் ஒரே ஒருமுறைதான் அதிகம்
மதிக்கப்படுவதும், கவனிக்கப்படுவதும் உண்டு; அது அவர்களின் திருமணத்தின்போது.
அப்படித்தான், மக்களை அரசியல்வாதிகள் அதிக வாஞ்சையோடு கண்டுகொள்வதும்,
கவனித்துக்கொள்வதும் இந்தத் தேர்தல் காலத்தில்தான்.
இதோ!
தேர்தல் பரப்புரைகளும்,
பவனிகளும் தொடங்கிவிட்டன. இடையில் நாமும் நம் ராகரதத்தை ஓட்டிப் பார்க்கலாம் என்று
முடிவு செய்தேன். எல்லா
சூழ்நிலைகளுக்கும் பாடல் தந்திருக்கிற தமிழ்த் திரையிசை உலகம், இந்த சூழலுக்குத்
தந்திருக்கிற ஒரு பாடல்தான் தேர்தல் களேபரங்கள் அடங்கும்வரை என் சிந்தனையை ஆக்கிரமித்துக்
கொண்டிருக்கப் போகிறது. அது, ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்ற திரைப்படத்தில், SPB
குழுவினரோடு
பாடியிருக்கிற, ‘கையில
காசு, வாயில தோசை’ என்ற
பாடல். பாடலுக்கான இசை நரசிம்மன்; இவர் இசைஞானியின் குழுவில் பணியாற்றிய வயலின்
இசைக்கலைஞர் என்பதும், ஓரிரு படங்களுக்கே இசையமைத்திருக்கிறார் என்பதும் தேர்தல்
காலத்து ராகரதப் பயணத்தில் என்னுடைய எக்ஸ்ட்ரா தகவல் பட்டுவாடா.
வாக்காளர்களுக்குப்
பணம் கொடுப்பது ஏதோ திருமங்கலம் தேர்தலுக்குப் பிறகு வந்த கலாச்சாரம் என்றுதான்
நானும் நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால், 1962-லேயே அண்ணாவைத் தோற்கடிக்க அன்றைய
காங்கிரஸ்காரர்கள் தலைக்கு ஐந்து ரூபாய் தந்திருக்கிறார்கள்; அன்றைய காலத்தில்
ஐந்து ரூபாய் என்பது இன்றைய ஐநூறு ரூபாய்க்குச்
சமமானது! அறுபதுகள் மட்டும் இல்லை; எண்பதுகள் அதைவிட மோசம் என்று சாட்சி
சொல்கிறது 1984-இல் வெளிவந்த இந்தப் பாடல். வெறும் காசு மட்டும் இல்லை;
குடிமகன்களுக்கும் நல்ல கவனிப்பு நடந்திருப்பதைப் பாடலுக்கு இடையே வரும், ‘ஆமா! ஆமா! இது குடிமகன் பேச்சு’ என்ற குரல் அம்பலப்படுத்துகிறது.
‘கையில
காசு, வாயில தோசை
குத்துனேன் முத்திர, கொடுத்தாங்க சில்லற’.
அடுத்தவரிதான் மக்கள்
மீதான அரசியல்வாதிகளின் அலட்சிய மனோநிலை காலங்காலமாய் தொடர்வதை
உணர்த்துகிறது. அது,
‘சனங்க
என்ன ஆனா என்ன அண்ணாச்சி - நம்ம
சனநாயகம் வாழ்ந்தாப்போதும் அண்ணாச்சி.
வாழ்க ஜனநாயகம்!
வாழ்க பணநாயகம்!’
‘அஞ்சு
வருஷ தீபாவளி திருநாள்,
அசந்தா சூரியன் மேலேயும் போஸ்டர ஒட்டு.
கொடிமரங்க ஊரெல்லாம் மொளைச்சு - அட
நிக்குதடா பொணமாக வெறைச்சு.
கட்சி நூறுண்டு தாவு ராசாவே,
தேர்தல் சர்க்கஸ்தான் ஆஹா கரகோஷம்’.
இந்த வரிகள்
போஸ்டர், சுவர்வரைச் சின்னங்கள், விடிய விடியப் பிரச்சாரம் என அன்றையகாலத் தேர்தல்
நடைமுறைகளை நினைவில் கொண்டுவருகின்றன.
‘செத்தவனும்
ஓட்டுப் போட வருவான் - அசந்தா
செத்தவன்கூட ஒன்னுசேந்து கட்சியமைப்பான்’
என பாடல் கள்ள
ஓட்டுக் கலாச்சாரத்தை ஒரு இடி இடிப்பதோடு,
‘அலங்காரம்
சேரி எல்லாம் பெருசா,
அவுங்களுக்கும் காட்ல மழ ஒருநாள்’
என எளிய மக்கள் வாக்குக்கு மட்டும் கண்டுகொள்ளப்படும் ஆண்டாண்டு நடைமுறையை
அடித்து விலாசியிருக்கிறது
பாடல். (பாடலைக்கேட்க).
அன்றைவிட நிலைமைகள் இப்போது இன்னும் மோசமாகிக் கொண்டிருக்கிறது.
வாக்குக்குப் பணம் என்பதை எதிர்பார்த்து மல்லுக்கு நிற்பவர்கள் ஆண்ட பரம்பரைகள்,
அரசு ஊழியர்கள் என்று மாறிவிட்ட கொடுமைக்கூத்தை என்னவென்று சொல்வது? திருட்டில்
சிறிய பங்கையேனும் பெற்றுவிடத் துடிக்கிற கொள்ளையர் கூட்டமாய் மாறியிருக்கிறார்கள்
மக்கள். அவர்கள் நனையத் துணிந்திருப்பது ஆபத்தான அடைமழையில்; எல்லாம்
வடிந்த பிறகே
அதன் வெம்மை மக்களை வாட்டும். ஆனாலும், குளிர்விக்க அடுத்த தேர்தல் இருக்கிறது
என்று பழகிவிட்டார்கள்
மக்கள்.
எனவே, அரசியல்வாதிகளை மட்டும் குறைசொல்லி ஆகப்போவது ஒன்றுமில்லை.
ஜனநாயக நாடு பணநாயகக்
காடாக மாறிக்கொண்டிருக்கும் வேளையில் பொழிந்துகொண்டிருக்கிறது, ‘நரியின் கனவில் எலும்பு மழை’.
…ரதம் பயணிக்கும்
***
தொடர்புக்கு: vaazhgavalluvam@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக