தலையங்கம்: வேண்டும் மறுமலர்ச்சி


உணர்ந்ததைச் சொல்கிறோம் உலகிற்கு என்ற வாசகத்தை உள்ளடக்கிய விரல்மொழியரின் சின்னம்  கடந்த டிசம்பர் மாதத்தில், மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன் அவர்கள், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைப் பள்ளிகளையும் ஒரு துறையின் கட்டுப்பாட்டில் ஒருங்கிணைக்கும் முயற்சிகள் நடந்து வருவதாகத் தெரிவித்திருந்தார். அமைச்சரின் அறிவிப்பு, மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை உள்ளடக்கியதா என்பதில் தெளிவில்லை.

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் கட்டுப்பாட்டில் 22 அரசு சிறப்புப் பள்ளிகளையும், நூற்றுக்கணக்கான அரசு உதவிபெறும் சிறப்புப் பள்ளிகளையும் நடத்தி வருகிறது. இவை அனைத்தும் விடுதியுடன் கூடிய உண்டு உறைவிடப் பள்ளிகளாகும். மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் இப்பள்ளிகளைக் கண்காணித்து நிர்வாகிக்க சிறப்புப் பள்ளிகள் உதவி இயக்குர் பணியிடம் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், அந்தப் பணியிடம் கடந்த 19 ஆண்டுகளாக நிரப்பப்படாமல், பொறுப்பு என்கிற பெயரில் தொடர்ந்து சிறப்புக் கல்விக்கு முற்றிலும் தொடர்பில்லாதவர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அமைச்சரின் இந்த அறிவிப்பால் சிறப்புப் பள்ளி ஆசிரியர்களிடையே இருவேறு கோணங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. பள்ளிக்கல்வித் துறையோடு சிறப்புப் பள்ளிகள் இணைக்கப்படும் பட்சத்தில், ஏற்கெனவே மாற்றுத்திறனாளிகளின் கல்வியில் ஆதிக்கம் செலுத்திவரும் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் ஒருங்கிணைந்த கல்வி மேலும் விரிவுபடுத்தப்பட்டு, சிறப்புக்கல்வி முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடும் என ஒரு தரப்பும், மாறிவரும் கல்விச்சூழலில் போதிய கண்காணிப்புகளும் நிர்வகிப்பும் இன்றி தடுமாறும் சிறப்புப் பள்ளிகள் புத்தெழுச்சி பெற இந்த ஒருங்கிணைப்பு அவசியம் என மற்றொரு தரப்பும் வாதிடுகின்றனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் இருவேறு கல்வி முறைகளையும் முறையாகப் பரிசீலித்து, இரண்டையும் சூழலுக்கேற்ப அமல்படுத்துவதே சிறப்பானதாக இருக்கும். எனவே, மாற்றுத்திறனாளிகள் நலத் துறையும் பள்ளிக்கல்வித் துறையும் இணைந்து செயல்பட்டு, மேற்கண்ட விவாதங்களைக் கவனத்துடன் பரிசீலித்து, மாறிவரும் சூழலுக்கேற்ப மாற்றுத்திறனாளிகளின் கல்வியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திட வேண்டும்.

“உணர்ந்ததைச் சொல்கிறோம் உலகிற்கு”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக