சந்திப்பு: ‘குறுந்தொகையில் பெண்பாற் புலவர்கள்’ நூலாசிரியர் வத்சலா - X. செலின்மேரி

திருமதி. வத்சலா அவர்களின் புகைப்படம்
திருமதி. வத்சலா

  நாம் பார்த்துப் பார்த்துச் சேர்க்கும் செல்வங்கள், நமது வாழ்க்கை முடிந்தவுடன் வாழ்ந்து கொண்டிருப்போருக்கு வாழ்த்துப்பா இசைக்கச் சென்றுவிடும். ஆனால், நாம் ரசித்து எழுதும் புத்தகங்கள் மட்டுமே காலத்தைத் தாண்டி நம்மை நிலைபெறச் செய்யும். தமிழ்ப் பெண்ணுக்கே உரித்தான பாவாடை தாவணி, கை நிறைய கண்ணாடி வளையல்கள் மற்றும் வரிசையாக இடைவெளியின்றிக் கட்டப்பட்ட மல்லிகைப் பூ போன்றவற்றை விரும்புவதோடு, அன்பை மட்டுமே தம்மிடம் பழகுவோரிடமிருந்து எதிர்பார்க்கும் இளகிய மனம் படைத்த இளம் பெண்ணாக சென்னையில் நான் சந்தித்த வத்சலா, இன்று தம் தமிழ்ப் புலமை,  இலக்கிய ஆர்வம்,  சிறப்பான எழுத்து நடை, ஆழமாக சிந்தித்துப் பகுத்தாயும் திறன் உள்ளிட்ட பல்வகை சிறப்புத் தன்மைகள் வெளிப்படும் விதமாக, பெண்மையைப் போற்றும் நூல் ஒன்றைப் படைத்தளித்து பலரது பாராட்டையும் பெறும் அளவுக்கு உயர்ந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததோடு, விரல்மொழியர் இதழ் மூலம் தமிழகத்தில் உள்ள தமிழார்வம் மிகுந்த பலரது கவனத்துக்கு எடுத்துச் செல்லலாம் என்ற புதுமையான எண்ணமும் தோன்ற வழிவகுத்தது. வழக்கமான பேட்டி போல இல்லாமல், சாதாரண அக்கா-தங்கை உரையாடலாகவே இந்த சந்திப்பு தொடர்ந்தது.

கேள்வி: விரல்மொழியர் வாசகர்களுக்கு உங்களது அறிமுகம்?
பதில்: நான் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சத்திய கண்ட நல்லூர் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவள். நான் 8 மாதக் குழந்தையாக இருந்தபோது என்னை தாத்தா பாட்டியிடம் அழைத்துச் சென்று விட்டுவிட்டதால், அவர்களுடைய அரவணைப்பில் வளர்ந்தேன். என்னுடைய பார்வைக் குறைபாடு பிறவியிலேயே உறுதி செய்யப்பட்டுவிட்டது.

கே: உங்களது கல்வி பற்றிச் சொல்லலாமே?
ப: நான் என்னுடைய தொடக்கக் கல்வியை கடலூர் அரசு பார்வையற்றோர் பள்ளியில் முடித்தேன். 6 முதல் 12-ஆம் வகுப்புகளை திருச்சி பார்வையற்றோருக்கான அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடர்ந்தேன். என்னுடைய கல்லூரி வாழ்க்கை சென்னையில் தொடங்கியது. தமிழ் மீதிருந்த தீராத தாகத்தால், சென்னை ராணிமேரி கல்லூரியில் தமிழ் இலக்கியத்தை தேர்ந்தெடுத்து இளங்கலை (B.A.) பட்டம் பெற்றேன். பின்னர், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை (M.A.) மற்றும் இளநிலை ஆய்வாளர் (M.Phil.) பட்டங்களைப் பெற்றேன். தற்போது, மீண்டும் ராணிமேரி கல்லூரியில் முனைவர் (Ph.D.) பட்டம் படித்து வருகிறேன்.

கே: மகிழ்ச்சி. உங்களுக்கு எழுதும் ஆர்வம் எப்போது ஏற்பட்டது?
ப: சிறு வயதிலிருந்தே சிறுசிறு கவிதைகளை எழுதும் ஆர்வம் இருந்தது; எழுதிப் படித்துவிட்டுக் கிழித்துவிடும் பழக்கமும் எனக்கு இருந்திருக்கிறது. பள்ளியில் கவிதை, கட்டுரைப் போட்டிகளில் கலந்துகொண்டதில்லை. எனினும், நான் 12-ஆம் வகுப்பு படித்தபோது ‘பெண்ணே! எழுந்துவா’ என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையை எழுதும் வாய்ப்பைப் பெற்றேன். கோமதி என்ற எனது ஆசிரியையின் உதவியால் போட்டி நடைபெற்ற இடத்திற்கு அக்கட்டுரையை அனுப்பி, வெற்றி பெற்று முதல் பரிசாக ரூ. 3000/- பெற்றேன்!

கே: சிறப்பு. உங்களது எழுத்துப் பயணம் பெண்மையை வரவேற்பதில் தொடங்கியிருக்கிறது. ஆய்வுக் கட்டுரைகளை எழுதும் ஆர்வம் எப்படி வந்தது? இதுவரை எத்தனை கட்டுரைகளை எழுதியிருக்கிறீர்கள்?
ப: நான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படித்துக்கொண்டிருந்தபோது என்னுடைய வகுப்பாசிரியராக இருந்த திருமதி. வாணி அறிவாளன், எனக்குள் இருந்த எழுத்துத் திறமையை உணர்ந்தவராய், ஆய்வுக் கட்டுரைகள் எழுத வேண்டியதன் அவசியத்தை அடிக்கடி எடுத்துரைத்துக்கொண்டே இருப்பார். அவரது அறிவுறுத்தலின் பேரில் முதுகலைப் பட்டம் முடிப்பதற்குள் 4 கட்டுரைகளை எழுதிவிட்டேன்; இதுவரை 40 ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கிறேன்!

கே: ஆய்வுக் கட்டுரைகளை எவ்வாறு எழுதுகிறீர்கள்?
ப: ஆய்வுக் கட்டுரைகளுக்குத் தேவையான புத்தகங்களை எடுத்துக்கொண்டு வாசிப்பகங்களுக்கோ அல்லது வாசிப்பாளர் இல்லங்களுக்கோ சென்று விடுவேன். அவர்கள் படித்துக் காட்டும்போது குறிப்பெடுத்துக் கொள்வேன். பிறகு, அதை வேறொரு வாசிப்பாளர் மூலம் தாளில் எழுதச் சொல்வேன். பின், மைதிலி மேடம் உதவியுடன் தட்டச்சு செய்து சமர்ப்பித்து விடுவேன்.

கே: எப்போதெல்லாம் இத்தகைய கட்டுரைகளை எழுதுகிறீர்கள்?
ப: கல்லூரிகளில் கருத்தரங்குகள் நடைபெறுவதாக முறையான தகவல் கிடைக்கும் பட்சத்தில், கட்டுரைகளை எழுதி சமர்ப்பிப்பேன்.

கே: உங்கள் கல்லூரியில் உங்களுக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம் பற்றி சொல்லலாமே?
ப: பெரிதாகச் சொல்வதற்கில்லை. என்னுடைய நெறியாளர் எண்னைப் பாராட்டுவார், அவ்வளவுதான்!

கே: ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்த தருணங்களில் மறக்க முடியாத அனுபவம் ஏதேனும் இருக்கிறதா?
ப: நிச்சயமாக. நான் ஒருமுறை திருவையாறு கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில், ‘உரைநடையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற தலைப்பிலான ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பிக்கச் சென்றேன்; அங்கு என் திறமையைப் பாராட்டி, ‘உரைத் தமிழ் ஒலி’ என்ற விருது வழங்கப்பட்டது. ஏறத்தாழ 5000 பேர் அமர்ந்திருந்த அரங்கத்தில் இவ்விருதைப் பெற்றது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்ததோடு, மறக்க முடியாத நிகழ்வாகவும் அமைந்துவிட்டது. மேலும், 2014-இல் தினமணி நாளிதழ் எனக்கு ‘இளம் சாதனையாளர்’ விருதை வழங்கி பெருமைப்படுத்தியதும் எனக்கு மறக்க முடியாத கௌரவமாக இருக்கிறது.

கே: ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதில் சிரமப்பட்ட அல்லது தாமதப்படுத்திய தருணம் என்று ஏதேனும் இருக்கிறதா?
ப: இல்லை! வாசிப்பாளர்களின் உதவியால் எல்லாக் கட்டுரைகளையும் உரிய நேரத்தில் முடித்துவிடுவேன்.

கே: நூல் வெளியிடும் ஆர்வம் எப்படி வந்தது? அதை சாத்தியப்படுத்தியவர்கள் யார்?
ப: ‘குறுந்தொகையில் பெண்பாற் புலவர்கள்’ என்ற தலைப்பிலான ஆய்வுக் கட்டுரை நான் இளநிலை ஆய்வாளர் பட்டம் (M.Phil.) படிக்கும்போது எழுதியது. எழுதும்போதே நூலாக வெளியிட வேண்டும் என்ற விருப்பம் எனக்குள் இருந்தது. புவனேஸ்வரி மேடம், ஜெயஸ்ரீ மேடம், சுபத்ரா மேடம் மற்றும் மைதிலி மேடம் உள்ளிட்ட வாசிப்பாளர்களால்தான் என் கனவு நனவாகியது.

கே: இந்தத் தலைப்பை நீங்கள் தேர்ந்தெடுத்ததற்கென்று ஏதேனும் சிறப்புக் காரணம் இருக்கிறதா?
ப: இருக்கிறது. நான் இளநிலை ஆய்வாளர் (M.Phil.) பட்டம் படித்தது இருபாலரும் பயிலும் கல்லூரி. மற்றவர்களைப் போல கவிதை, சிறுகதை, நாவல் என்றில்லாமல் மாறுபட்ட ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்து சிறப்பானதொரு படைப்பை உருவாக்க விரும்பினேன். குறுந்தொகை நூல் மொத்தம் 400 பாடல்களைக் கொண்டது; அவை 205 புலவர்களால் புனையப்பட்டது; அவர்களில் பெண்பாற் புலவர்கள் 23 பேர். இருபால் மாணவர்கள் பயிலும் நிறுவனத்தில் இது போன்ற ஆராய்ச்சிகளை மேற்கொள்வது சரியானதொரு தேர்வாக இருக்கும் எனக் கருதியதால், இந்த நூலை ஆய்வுக்காக எடுத்துக்கொண்டேன். அனைத்துப் பாடல்களையும் முழுமையாகப் படித்தேன். பெண்பாற் புலவர்களின் வரலாறு, உவமை, பொருள் கொள்ளும் திறன், நேர்த்தி, சொற்களைக் கையாளும் திறன் போன்றவற்றின் அடிப்படையில் அவர்களின் புலமையை ஆராய்ந்து கட்டுரையாகச் சமர்ப்பிக்க விரும்பினேன்.

கே: உங்கள் வாழ்வில் வாசிப்பாளர்களின் பங்கு இன்றியமையாததாக இருப்பதை உணர முடிகிறது. அது குறித்து உங்கள் கருத்து?
ப: உண்மைதான். வாசிப்பாளர்கள் இல்லாமல் புத்தகங்களைப் படிப்பது, குறிப்பெடுப்பது, ஆய்வுக் கட்டுரைகளை எழுதுவது எதுவுமே என்னைப் பொறுத்தவரை சாத்தியம் இல்லைதான். அவர்கள் வாசிப்பாளர்களாகத் தம் கடமையைச் சிறப்பாகச் செய்வதோடு, அளவற்ற அன்பைப் பொழியும் அன்னையர்களாகவும், ஆபத்தில் உதவும் உற்ற நண்பர்களாகவும் இருந்திருக்கிறார்கள். மொத்தத்தில், எனக்காக எதையும் செய்யத் துடிக்கும் கண்கண்ட தெய்வங்களாக அவர்கள் இருக்கிறார்கள்.

கே: உங்கள் திருமணம் எப்போது நடைபெற்றது?
ப: உண்மையைச் சொல்வதென்றால் திருமணத்தில் எனக்குத் துளியும் விருப்பமில்லை. என்னுடைய வாசிப்பாளர் புவனேஸ்வரி மேடம் அறிவுறுத்தியதன்பேரில், என் வகுப்புத் தோழர் லஷ்மி நாராயணன் என்பவரை 2015-இல் திருமணம் செய்துகொண்டேன்.

கே: திருமணத்தில் உங்கள் பெற்றோரின் பங்கு என்னவாக இருந்தது?
ப: என் தங்கைகள் இருவருக்கும் நல்ல மணமகனைத் தேர்ந்தெடுத்து, பல லட்சங்களைக் கொட்டி, சிறப்பான முறையில் திருமணம் செய்துவைத்த என் பெற்றோர், என்னுடைய திருமணத்தில் சிறிதும் அக்கறை காட்டவில்லை. அவர்களது தேவை நான் அரசுப் பணிக்குச் சென்று, சம்பாதித்து, அவர்கள் கையில் கொடுக்க வேண்டும் என்பதாகவே இருந்தது. எங்கள் திருமணத்திற்கு என் கணவர் 30000 ரூபாய் செலவழித்து, சிறப்பு வேன் ஏற்பாடு செய்து, எங்கள் குடும்பத்தார் மற்றும் உறவினர்களை வரவழைக்கும் அவல நிலை ஏற்பட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

கே: உங்கள் கணவரின் ஆதரவும், ஒத்துழைப்பும் எப்படி இருக்கிறது?
ப: என் கணவர் எனக்கு எல்லாமுமாய் இருந்து, என் கனவுகள் நிறைவேற என்னோடு சேர்ந்து பாடுபடுகிறார். அவர் முனைவர் பட்டம் Ph.D.) படித்துக் கொண்டிருக்கிறார். எங்கள் கல்விக்காக தாம்பத்ய உறவைத் தள்ளிப்போட ஒப்புக்கொண்டு, இன்று வரை நல்ல நண்பராக இருந்து வருகிறார்!

கே: மிகவும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. உங்கள் குடும்பம் செயல்படுவதற்கான வருமானம்?
ப: எங்கள் உதவித் தொகைகளைக் கொண்டு எங்கள் வாழ்க்கையை எளிமையாக நடத்திக் கொண்டிருக்கிறோம். அவசரத் தேவைக்கு எங்கள் நண்பர்கள் மற்றும் வாசிப்பாளர்களிடம் கடன் பெற்றுக்கொள்வோம்.

கே: இன்றைய காலகட்டத்தில் போட்டித் தேர்வுகளைச் சந்திக்காதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. நீங்கள எழுதிய போட்டித் தேர்வுகள் பற்றிச் சொல்ல விரும்புகிறீர்களா?
ப: நான், தேசிய அடைவுத் தேர்வு (NET) மற்றும் மாநில தகுதித் தேர்வில் (SLET) நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறேன். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய ‘Group 4’ தேர்வில் வெற்றி பெற்றுக் கிடைத்த பணி வாய்ப்பை உயர்கல்வி பயிலத் தடையாகிவிடும் எனக் கருதி தவிர்த்துவிட்டேன்.

கே: அதற்காக எப்பொழுதாவது வருந்தியிருக்கிறீர்களா?
ப: திருமணத்திற்குப் பின் அதை நினைத்து சிலமுறை வருந்தியிருக்கிறேன்.

கே: விரல்மொழியர் வாசகர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?
ப: திறமைகள் இனம் காணப்படும் பட்சத்தில் அதை வெளிக்கொணரும் முயற்சியில் நாம் இறங்க வேண்டும். வாய்ப்புகளைத் தேடிச் செல்ல வேண்டும்; கிடைக்கும் பட்சத்தில் சாதனையை நிகழ்த்திவிட வேண்டும்.

கே: விரல்மொழியர் குறித்து உங்கள் கருத்து?
ப: பார்வையுள்ளோருக்கு நிகராக நமது நண்பர்கள் மேற்கொள்ளும் முயற்சி புதுமையானதும், பாராட்டப்பட வேண்டியதும் ஆகும். இன்னும் பலரைச் சென்றடைய வேண்டும். நானும் என் வாசிப்பாளர்கள் மற்றும் நண்பர்களிடம் இவ்விதழைப் படிக்கச் சொல்கிறேன்.

செலின்மேரி: நீங்கள் தொழில்நுட்பங்களைக் கையாள்வதில் கவனம் செலுத்தி, போதிய நிபுணத்துவம் பெறவேண்டும். அடுத்தடுத்த ஆய்வுக் கட்டுரைகளை நீங்களே எழுத முயற்சிக்க வேண்டும். விரல்மொழியர் தளத்தில் உங்கள் படைப்புகள் இடம்பெற வேண்டும். இவற்றையெல்லாம் விரல்மொழியரின் கோரிக்கைகளாக உங்கள் முன் வைக்கிறேன். பெண்மையின் முழுமை தாய்மை என்பதால், தாய்மையைத் தள்ளிப்போட வேண்டாம் என்பதை என் தனிப்பட்ட அறிவுரையாகச் சொல்லிக்கொள்ள விழைகிறேன்.
வத்சலா: உங்கள் கோரிக்கைகள் மற்றும் அறிவுரைகளை ஏற்றுக்கொள்கிறேன். அடுத்த இதழுக்கு என் படைப்புகளை அனுப்புகிறேன்.

செலின்மேரி: விரல்மொழியருக்காக உங்கள் நேரத்தை ஒதுக்கி, கருத்துக்களை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி!
வத்சலா: என் திறமையை மதித்து, விரல்மொழியர் வாசகர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தியமைக்கு உங்களுக்கும் நன்றி!

திருமதி. வத்சலா அவர்களைத் தொடர்பு கொள்ள: ammulakshmi72@gmail.com
***

(கட்டுரையாளர் புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாள விடுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் ஆங்கில ஆசிரியர்).
தொடர்புக்கு: celinmaryx@gmail.com

8 கருத்துகள்:

 1. அருமையான பதிவு. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. சாதிக்கப் பிறந்தவள்...... நீங்கள்..... தொடரட்டும்....உம் தமிழ் பணி....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழண்ணைக்கு புதுப்புது அணிகலன்களைச் சூட்ட வேண்டியது நமது கடமையல்லவா? By Celin x

   நீக்கு