பொள்ளாச்சியைப் பிறப்பிடமாகக் கொண்ட
இவர் தொடக்கக் கல்வியைச் சேலம் அரசுப் பார்வையற்றோர் பள்ளியிலும், அடுத்து பூவிருந்தவல்லி அரசுப் பார்வையற்றோர் பள்ளியிலும் படித்தவர்.
சென்னை விவேகானந்தர் கல்லூரியில் இளங்கலை வரலாறு, சென்னை கிறித்தவக் கல்லூரியில் முதுகலை வரலாறு எனப் படித்த இவர்,
திருவாரூர், திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில்
பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார்.
இளம் வயதிலேயே தன் தாயாரை இழந்த இவர்,
உணவகம் நடத்தும் தன் தந்தையால்
வளர்க்கப்பட்டார். இவரது அண்ணன்களும், அக்காக்களும்
திராவிட இயக்க ஆதரவாளர்களாக இருந்திருக்கின்றனர்.
1960-களில் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகம் முழுக்க ஏற்படுத்திய அலையில் இவர்
குடும்பமும் ஐக்கியமாகியிருக்கிறது. இத்தனைக்கும் இவர் தந்தை தீவிர காங்கிரஸ்
காரர். இருந்தபோதிலும், இவர் அண்ணன் ஒருவர் தி.மு.க.
பிரச்சாரத்திற்காகப் பாடல்கள் எழுதிப் பாடியவர். ஒரு அக்காவின் திருமணம் தி.மு.க.
அலுவலகத்தில் சுயமரியாதைத் திருமணமாக நடந்திருக்கிறது. அக்கா ஒருவர் நாடகங்களில்
நடிப்பதில் தீவிர ஈடுபாடு கொண்டவர். இப்படி கலைகளின் வழியே இவர்கள் இல்லத்திற்குள்
தி.மு.க. நுழைந்தது. அக்கா ஏற்ற இறக்கங்களோடு உச்சரித்துப் பார்க்கும் திரைப்பட
வசனங்களின் மூலம் இவருக்குள் அண்ணாவும் கலைஞரும் அறிமுகமாயினர்.
1960-களில் பள்ளிப் படிப்பை மேற்கொண்ட இவர், தி.மு.க. ஆதரவாளராகவே இருந்தார். 1967-இல் அண்ணா முதலமைச்சராகப் பதவியேற்றது இவருக்குப் பெருமகிழ்வைத்
தந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இதைவிட ஒரு மகிழ்வான அனுபவத்தை அவர் இப்படிப்
பகிர்ந்துகொள்கிறார்.
“ அண்ணா முதல்வரான பிறகு, அந்த ஆண்டின்
ஊனமுற்றோர் தின விழா அரசு சார்பில் வழக்கம் போலக் கொண்டாடப்பட்டது. விழாவில் பேசிய
தி.மு.க. மூத்த தலைவரும், அப்போதைய அமைச்சருமான திரு. சே. மாதவன்,
எங்களைப் பார்த்து இப்படிக் கூறினார். ‘
‘உங்கள் பிரச்சனைகளை நாங்கள் அறிந்திருக்க
வாய்ப்பில்லை. அதனால் உங்களுக்கான தேவைகளை நீங்கள்தான் கேட்டுப் பெறவேண்டும்.
உங்களுக்காக நீங்கள்தான் போராட வேண்டும்’ என்றார். இது
தி.மு.க. மீதான நம்பிக்கையை இன்னும் அதிகப்படுத்தியது. ஆனால் நிலைமை அப்படியே தொடரவில்லை” என்கிறார்.
1970-களில் இவர் தி.மு.க. மீது வைத்திருந்த நம்பிக்கை மெல்ல மெல்லத் தளர
ஆரம்பித்தது. கோவை சிம்சன் பிரச்சனை தன்னை வெகுவாக பாதித்ததாகக் கூறுகிறார் பேரா.
சுகுமாரன்.
சிம்சன் தொழிற்சங்கத் தேர்தலில்,
காட்டூர் கோபால் என்ற தி.மு.க காரரைத்
தலைவராக்குவதற்காக, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ‘உழைப்பாளர் மாமன்றம்’ குசேலன் கடுமையாகத் தாக்கப்பட்டார்.
இந்நிகழ்வு இவரை வெகுவாக பாதித்தது. மேலும், இவர் படித்த விவேகானந்தர் கல்லூரியிலும் தி.மு.க குறித்த எதிர்மறை
பிரச்சாரங்கள் அதிகமாகவே இருந்திருக்கின்றன. அவற்றை முற்றிலும் தன்னால்
புறக்கணிக்க முடியவில்லை என்கிறார். இவற்றோடு, சிறுவயதிலிருந்தே சோசலிசம் குறித்தும் புத்தகங்கள் வாயிலாகக் கொஞ்சம்
அறிந்துவைத்திருந்தார். இந்தக் காரணங்களால் இவர் தன்னை ஒரு கம்யூனிஸ்ட்டாக மெல்ல
மெல்ல உணரத் தொடங்கினார்.
தி.மு.கவிலிருந்து இவர் எந்த அளவிற்கு
விலக விரும்பினார் என்பதை நம்மிடம் விவரிக்கிறார்.
“நான் விவேகானந்தர் கல்லூரியில்
படிக்கும்போது, விடுதியில் கவிதைப்போட்டி ஒன்று நடத்தப்பட்டது. நண்பர் ஒருவரின்
வற்புறுத்தலைத் தொடர்ந்து நான் அறுசீர் விருத்தம் ஒன்று எழுதினேன். முதல் முறையாக
அப்போதுதான் கவிதைக்காக முதல் பரிசு பெற்றேன்.
போட்டியின் நடுவர் என் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர். ‘வரம் எனக்கு வேண்டும் ஐயா’ என்று தரப்பட்ட
தலைப்பில் பல சமூகக் கருத்துகளை எழுதியிருந்தேன். இக்கவிதை என் விடுதி நண்பர்
ரத்தின சாமி என்பவருக்குப் பிடித்துப்போனது. அவரை விடுதியில் அனைவரும் ‘கலைஞரே!’ என்றுதான் அழைப்பர். அந்த அளவிற்கு தி.மு.க மீது தீராப் பற்று
கொண்டவர் அவர். அவர் இக்கவிதையை முரசொலியில் வெளியிட ஏற்பாடு செய்வதாகக் கூறினார்;
நான் மறுத்துவிட்டேன். காரணம், கோவை சிம்சன் பிரச்சனை. தொடர்ந்து இயக்கம் சார்ந்த நிகழ்வுகளில்
கவிதை எழுதி வாசிக்கும்படியும் கேட்டுக்கொண்டார். தொடர்ச்சியாகப் பல முறை நான்
மறுத்தேன். தி.மு.க ஈர்ப்பிலிருந்து நான் வெகு தூரத்திற்குச் சென்றுவிட்டதாக
உணர்ந்தேன்” என்கிறார்பேரா. சுகுமாரன்.
தொடர்ந்து பொதுவுடைமை சார்ந்த
புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினார். சில வேளைகளில், சோப்பு, சீப்பு வாங்குவதற்கென வைத்திருந்த
பணத்தையும் புத்தகங்களுக்காகச் செலவிட்டிருக்கிறார். இருந்தாலும், சில புத்தகங்களையே தன்னால் அப்போது படிக்க முடிந்ததாகக் கூறுகிறார்.
காரணம், இவரது பார்வையின்மை.
விடுமுறைக் காலங்களில் கம்யூனிஸ்ட்
இயக்கத் தோழர்களுடன் அளவளாவியிருக்கிறார். அவர்களின் வழிகாட்டுதலில் 1975-இல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகச் சேர்ந்தார் பேரா.
வே. சுகுமாரன்.
கட்சியின் தேர்தல் பணிகளில்
ஈடுபட்டிருக்கிறார். நேரடியாக மக்களைச் சந்தித்து வாக்குகள் கேட்டிருக்கிறார்.
கட்சியின் கிளை குழுவின் அறிக்கை தயாரிப்புக் குழுவில் இடம்பெற்று, வெளிநாடு நிகழ்வுகள் தொடர்பான பல அறிக்கைகளைத் தயாரித்து
தந்திருக்கிறார்.
கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன்
அவர்களிடம், கட்சி ஏடான ‘ஜனசக்தி’யின் நடை எளிமைப்படுத்தப்பட வேண்டும்
எனத் தான் கோரிக்கை வைத்ததை நினைவுகூர்கிறார் பேரா. சுகுமாரன். கட்சியின் மூத்த
தலைவர் நல்ல கண்ணு அவர்களுடன் ‘உலக சமாதானநாள்’ விழா மேடையைப் பகிர்ந்துகொண்டு தானும் பேசியதை நினைவுகூர்கிறார்.
(ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1-ஆம் நாள் உலக சமாதான நாள்
அனுசரிக்கப்படுகிறது. CPI இந்நாளை அக்காலகட்டத்தில் சிறப்பாகக்
கொண்டாடியது.)
அரசுப் பணி ஏற்ற பிறகு பணியாளர்
யூனியனில் பல பிரச்சனைகளுக்காகப் போராடியிருக்கிறார். சில முக்கியமான
பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முயன்றிருக்கிறார்.
பணி ஓய்வுக்குப் பிறகு கட்சிப் பணியில்
ஈடுபட மனம் விரும்பினாலும், செல்ல இயலவில்லை என்கிறார்.
பார்வையின்மையும், முதுமையும் இயங்குதலை அதிக அளவில்
கட்டுப்படுத்தும் எதார்த்தத்தை எடுத்துரைக்கிறார். கட்சியின் கலை இலக்கியப்
பிரிவான ‘கலை இலக்கியப் பெருமன்ற’த்தில் பொறுப்பு தர கட்சி முன்வந்தபோதும், இவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
தற்போதைய அரசியல் சூழல் குறித்தும்,
பார்வையற்றவர்களின் அரசியல் பங்களிப்பில்
இருக்கும் சிக்கல்கள் குறித்தும் அடுத்த இதழில் நம்முடன் பேச இருக்கிறார் பேரா.
சுகுமாரன்..
இவரைத் தொடர்புகொள்ள: 9443112831
வாசகர்களே!
உங்களுக்குத் தெரிந்த பார்வை
மாற்றுத்திறனாளி அரசியலாளர்களை எங்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். அவர்கள் தேர்தல்
அரசியலிலோ, கொள்கை அரசியலிலோ ஈடுபாடு கொண்டவராக
இருக்கவேண்டும். களப்பணி ஆற்றியவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட பார்வை
மாற்றுத்திறனாளிகள் உங்களுக்குத் தெரியும் என்றால், 9894335053 என்ற எனது தொலைப்பேசி எண்ணுக்குத் தொடர்புகொள்ளுங்கள்.
ஆவணப்படுத்துவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக