தலையங்கம்: வாழ்த்துகள் திருமூர்த்தி! நன்றி D. இமான்!


graphic உணர்ந்ததைச் சொல்கிறோம் உலகிற்கு என்ற வாசகம் அடங்கிய விரல்மொழியரின் சின்னம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி சிறுவனுக்குத் தன் திரைப்படத்தில் பாட வாய்ப்பளித்திருக்கிறார் இசையமைப்பாளர் D. இமான். பல ஊடகங்களில் சுற்றிச் சுழலும் செய்தி இது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசித்துவருகிறார் திருமூர்த்தி என்ற பார்வையற்ற சிறுவன். இவருக்கு வயது 17. இவருக்குப் பிறவியிலேயே பார்வையில்லை. தற்போது பெற்றோரும் இல்லை. சமூக நலத் திட்டங்களுக்குப் பெயர்போன தமிழகத்தில் இவருக்குக் கல்வியும் கிட்டவில்லை.

விஸ்வாசம்படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணேபாடலை இவர் பாட, பாலாஜி என்ற இளை்ஞர் அதை காணொளியாக்கி ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார். இதைப் பார்த்த இசையமைப்பாளர் D. இமான் அவருக்குத் தன் படம் ஒன்றில் பாட வாய்ப்பளிப்பதாக உறுதியளித்திருக்கிறார்.

இமானுக்கு இது ஒன்றும் புதிதல்ல. ஏற்கெனவே வைக்கம் விஜயலட்சுமி என்ற பார்வை மாற்றுத்திறனாளியைத் திரையிசைப் பாடகியாக்கி அழகுபார்த்தவர் இமான். என்னவோ ஏதோபடத்தில்  இவர் இசையில் அறிமுகமான விஜயலட்சுமி பல விதவிதமான பாடல்களைப் பாடி அசத்தியிருக்கிறார்.
இருந்தபோதிலும், வைக்கம் விஜயலட்சுமியின் அறிமுகத்தையும், திருமூர்த்திக்குக் கிடைக்கவிருக்கும் அறிமுகத்தையும் ஒன்றுபடுத்திவிடமுடியாது.

வைக்கம் விஜயலட்சுமி கர்நாடக இசையில் வல்லவர். பலரும் தொடத் தயங்கும் விசித்திர வீணையை இசைப்பதில் திறமையானவர். திருமூர்த்தி அப்படியல்ல. கிராமத்துக்காரர்; பெற்றோர் என்ற வழிகாட்டிகள் இலாதவர்; முறையான இசைப் பயிற்சியும் இலாதவர்.
ஏற்கெனவே வடிவமைக்கப்பட்ட பாடல் ஒன்றைப் பாடுவது அவருக்கு எளிதாக இருக்கலாம். புதிதாக ஒரு பாடலை உருவாக்குவது கடினம்.

இத்தகைய ஒருவரை திரை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதாக உறுதியளித்த இசையமைப்பாளர் D. இமானுக்கு ஆழ்மனதிலிருந்து தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது விரல்மொழியர்’. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி, தடைகளைத் தகர்த்தெறிந்து, பொருளாதார பலம் பெற்று, புது சரித்திரம் படைக்க திருமூர்த்திக்கு இதழின் வாழ்த்துகள்.

உணர்ந்ததைச் சொல்கிறோம் உலகிற்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக