சந்திப்பு: திருக்குறள் பொன்னுசாமி - ரா. பாலகணேசன்

வான்புகழ் கொண்ட வள்ளுவனை படித்ததால்; தான் புகழ் கண்டேன் என்கிறார் கோவையைச் சேர்ந்த திருக்குறள் சிந்தனையாளர் பொன்னுசாமி. திருவள்ளுவர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் அவரை பேட்டி காண்கிறது விரல்மொழியர் மின்னிதழ். வினாக்களைக் கேட்டு நேர்காணலை நெறிப்படுத்துகிறார் பாலகணேசன்.
பா: வணக்கம் சார்.

பொ: விரல் மொழியர் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.
பா: உங்களைப் பற்றி நம் இதழ் வாசகர்களுக்குச் சொல்லுங்கள்.

பொ: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகில் உள்ள ராமாபுரம் ன்னும் சிற்றூர் தான் எனது சொந்த ஊர். எனது ஏழாம் வயதில் மஞ்சள் காமாலையால் பார்வையிழந்தேன். கல்வியைப் பொறுத்தவரை, எட்டாம் வகுப்புவரை பாளையங்கோட்டை பார்வையற்றோர் பள்ளியிலும், அதனைத் தொடர்ந்து 11-ஆம் வகுப்பு வரை தூய யோவான் உயர்நிலைப் பள்ளியிலும் படித்தேன்.
பா: நீங்கள் ஏன் பாளையங்கோட்டையைத் தேர்ந்தெடுத்தீர்கள்? கோவையில் பார்வையற்றோர் பள்ளிகள் எதுவும் அப்போது இல்லையா?
பொ: அக்காலத்தில் கோவையில் போத்தனூரில் ஒரு பார்வையற்றோர் பள்ளி இருந்தது. எனது பெற்றோர் படித்தவர்கள் அல்ல. விவசாயம் பார்ப்பவர்கள். அவர்களுக்கு பார்வையற்றோர் பள்ளி பற்றி எதுவும் தெரியாது. மஞ்சள் காமாலையால் எனக்குப் பார்வை குறையத் தொடங்கிய போது, நாட்டு வைத்தியம் என்ற பெயரில் என் கண்ணில் பல மருந்துகளை ஊற்றினார்கள். இறுதியாக கோத்தகிரியில் உள்ள ஒரு கண் மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றனர்.  என்னை பரிசோதித்த அன்னம்மாள் சுவாமிகள்: பார்வை வருவதற்கு வாய்ப்பில்லை. எனவே பையனை படிக்க வைத்து விடுங்கள் எனக் கூறி பாளையங்கோட்டை பார்வையற்றோர் பள்ளிக்கான முகவரியை கொடுத்தார். அப்படித்தான் பாளையங்கோட்டையில் சேர்ந்தேன். பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, அங்கேயே ஹோமில் தங்கி தறி நெய்து கொண்டிருந்தேன்.

பா: கல்லூரியில் சேர நீங்கள் முயற்சிக்கவில்லையா?

பொ: பதினொன்றாம் வகுப்பில் 600க்கு 408 மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் முறையாக வழிகாட்ட யாரும் இல்லாததால் நான் கல்லூரி படிக்கவில்லை. எங்கள் ஹோமின் நிர்வாகத் தலைவர்: பார்வையற்றோருக்கு கல்வியைவிட கைத்தொழிலே உதவும் என்றார். கொஞ்ச காலத்திலேயே, ஹோமில் தங்கி தறி நெய்வது வாழ்க்கைக்கு உதவாது என்று தெரிந்துகொண்டேன். அதனால், 1978-ஆம் ஆண்டு அதில் இருந்து வெளியேறி, கிண்டியில் பார்வையற்றோருக்காக நடத்தப்பட்ட இலகு பொறியியல் பயிற்சியில் ஆறு மாதங்கள் சேர்ந்து பயிற்சி பெற்றேன்.

பா: நீங்கள் ஏன் அந்த முடிவிற்கு வந்தீர்கள்? தறி தெரிந்தவர்கள் யாரும் அக்காலத்தில் தனியாகத் தொழில் செய்யவில்லையா?

பொ: பெரிய அளவில் அப்படி வெற்றி பெற்றவர்கள் யாரும் இல்லை
பா: நீங்கள் பணிவாய்ப்பைப் பெற்றது பற்றி சொல்லுங்கள்?
பொ: பயிற்சியை முடித்துவிட்டு ஹிந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ்,h.p.f., i.c.f.போன்ற கம்பெனிகளில் பணி வாய்ப்பிற்காக முயற்சித்தேன். இந்தச் சூழலில்தான் 1981-ஆம் ஆண்டு தேசியப் பஞ்சாலைக் கழகத்தில் இருந்து ஒரு கடிதம் என் வீட்டிற்கு வந்தது. அதை படித்துக் காட்டிய, ஆசிரியர் காளியண்ணன் அவர்கள் “இது அரசு தொடர்புடைய வேலை. கண்டிப்பாகச் செல்லுங்கள், உங்கள் வாழ்வு நன்றாக இருக்கும்” என கூறினார். என்ன வேலை என்று அறியாமல் வந்தேன். இறுதியில் பார்த்தால் அது மில் வேலையாக இருந்தது. தொடக்கத்தில் நான்கு ரூபாய் சம்பளத்தில் கிருஷ்ணவேணி மில்லில் பணிக்குச் சேர்ந்தேன். 1989-ஆம் ஆண்டு சிக்கனச் சீரமைப்பு என்ற பெயரில் என்னை முருகன் ஆலைக்கு மாற்றினார்கள். அங்குதான் நான் பணிநிரந்தரம் பெற்று 2015-இல் பணி ஓய்வு பெற்றேன்.
பா: பஞ்சாலையில் என்னமாதிரியான பணிகளை உங்களுக்கு அளித்தனர்?
பொ: கோன்களுக்கு ண்களால் அடையாளம் கொடுக்கப்படும். அதில் எண்கள் அடங்கிய லேபில் ஒட்டும் பணியை கிருஷ்ணவேணி பஞ்சாலையில் செய்தேன். கோன் என்றால் சுருட்டப்பட்ட அட்டையில் நூல் பந்துபோல் சுற்றி இருக்கும். முருகன் ஆலையில் கோன்களில் உள்ள நூலை பயன்படுத்திய பின்னர், அவ்வட்டைகளில் சேதமடையாதவற்றைப் பிரித்துப் பயன்பாட்டுக்கு அனுப்பிவைக்கும் பணியைச் செய்தேன்.

பா: உங்கள் குடும்பம் பற்றி கூறுங்கள்.

பொ: 1986-ஆம் ஆண்டு என் மாமன் மகளை தான் நான் திருமணம் செய்துகொண்டேன். எங்களுக்கு இரு குழந்தைகள். மகள் அமெரிக்காவில் பணிபுரிகிறார். மகன் பஞ்சாபில் பணிபுரிகிறார்.
பா: உங்களுக்குத் திருக்குறள் மீதான ஆர்வம் எப்போது வந்தது?

பொ: 1978இல் கிண்டியில் பயிற்சியை முடித்துவிட்டு பல்லாவரத்தில் உள்ள c.f.b.i. பிரேயில் அச்சகத்திற்குச் சென்றேன். அங்கு அநேக கிறிஸ்தவ சமய போதனை புத்தகங்கள் இருந்தன. நான் கிறிஸ்தவப் பள்ளியில் படித்ததால் அவற்றை விடுத்து பொதுவான நூலான திருக்குறளைப் பணம் கட்டி வாங்கினேன்.
பா: அங்கே  வேறு பொதுவான புத்தகங்கள் இருந்ததா?
பொ: அப்போது திருக்குறளைத் தவிர வேறு புத்தகங்கள் எதுவுமில்லை
பா: அப்போது நீங்கள் எத்தனை ரூபாய் கட்டினீர்கள்
பொ: அப்போது திருக்குறள் அறத்துப்பால் பொருட்பால் மட்டுமே வாங்கினேன். அவை இரண்டிற்கும் சேர்த்து எட்டு ரூபாய் கட்டினேன்.
வேலை தேடி அ
லைந்த காலத்தில், ஓய்வு நேரங்களில் திருக்குறளை படித்துக்கொண்டிருந்தேன். ஒருநாள்,  பார்வையற்றவரான கோவில்பட்டி தசாவதானி இராமையா பிள்ளை திருக்குறளை மையமாக கொண்டு ஆற்றிய உரையை வானொலியில் கேட்டேன். அது எனக்கு புதிய பாதையைக் காட்டியது. அதிலிருந்து திருக்குறளை ஆழ்ந்து படிக்கத்தொடங்கினேன்.பா: உங்களை திருக்குறள் சிந்தனையாளர் என்று அடயாளப்படுத்திக்கொள்ளும் எண்ணம் எப்படி வந்தது?

பொ: சூலூர் வள்ளலார் மன்றத்தின்  நிறுவனர் வீரப்பத்தேவர், பார்வையற்றோர் தேசிய சம்மேளனத்தோடு(NFB) தொடர்பில் இருந்தார். அவர் 2000-இல் மறைந்தார். அங்கே ஒருநாள் சனிக்கிழமை மாலை துக்கம் விசாரிக்கச் சென்றிருந்தேன். அருகே குழந்தைகள் படிக்கும் சத்தம் கேட்டது. அது என்னவென விசாரித்தேன். திருக்குறள் வகுப்பு நடக்கிறது என்றனர். எனக்கும் திருக்குறளில் மிகுந்த ஆர்வம் என்றேன். சில குறள்களையும் சொன்னேன். வகுப்பு நடத்திய பேராசிரியை மீனாட்சி, அந்த வகுப்பில் 10 நிமிடம் பேசச்சொன்னார். அன்று அந்த வகுப்பில் 86-ஆம் அதிகாரமான இகல் நடத்தப்பட்டது. அதில் 10-ஆவது குறளான,
இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு
என்ற குறளைக் கூறி, செருக்கு்’ என முடியும் பிற  குறள்களையும் சுட்டிக்காட்டி பேசி முடித்தேன். அதைக் கேட்ட மீனாட்சி மேடம்: நீங்கள் வாரவாரம் வர இயலா விட்டாலும் பரவாயில்லை மாதம் ஒருமுறையாவது இங்கு வந்து பேசவேண்டும் என்றார்.
எனக்கு மேடையில் பேச வேண்டும் என்ற ஆர்வம் நீண்ட நாளாக இருந்தது. அதற்கு முக்கியக் காரணம், நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது கவிதைப் போட்டியில் கலந்துகொண்டேன். மேடை பயத்தின் காரணமாக என்னால் அப்போட்டியில் முழுமையாகக் கவிதையைஒப்பிக்க இயலவில்லை. அப் போட்டிக்கு எங்கள் நிர்வாகத் தலைவர் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். நிறைவுரை கூறும்போது,எண்ணை குறிப்பிட்டு, பொன்னுசாமி போன்ற பயிற்சி இல்லாதவர்களுக்கு; இது போன்ற போட்டிகளில் வாய்ப்பு தர வேண்டாம் என கூறினார்.அன்று  பலர் முன்னாலும் அவமானப்பட்டுப் போனேன். அன்று முடிவெடுத்தேன். என்றாவது ஒரு நாள் கூட்டத்தில் சரளமாக பேசும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும் என. அந்த நோக்கம் திருக்குறள் வகுப்பில் பேசியதன்மூலம் நிறை்வேறியது. அதனால்,வாரந்தோரும் வந்து பேசினேன். அந்தப் பேராசிரியை மகப்பேறு விடுப்பில் சென்றதால், எனக்கு வகுப்பெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.
பா: நீங்கள் வகுப்பெடுத்த அனுபவம் பற்றிக் கூறுங்கள்?
பொ: பத்து குறளை 45 நிமிடங்கள் எடுக்கவேண்டும்.அதற்கு மேற்கோள்கள் பல காட்ட வேண்டும். என்னிடமிருந்தது திருக்குறள் புத்தகம் மட்டுமே. எனவே நான் திருக்குறளின் மட்டுமே மேற்கோள் காட்டினேன்.
பா:  அப்போ திருக்குறள் புத்தகத்தைத் தேயத் தேயப் படிச்சுருக்கீங்க.
பொ: நீங்க சொல்றது உண்மைதான். அதனால், இரண்டாயிரத்தில் c.f.b.i. வெளியிட்ட திருக்குறள் புத்தகத்தை 100 ரூபாய் கட்டி வாங்கினேன். அதற்கு வாழ்த்துரை கலைஞர் எழுதியிருப்பார். அது மட்டுமல்லாது i.a.b. வெளியிட்ட  தமிழ் ஆங்கிலம் திருக்குறள் புத்தகத்தையும் வாங்கி வைத்திருக்கிறேன்.
பா: விழிச்சவாலில் திருக்குறள் பற்றி தொடர் எழுதும்போது, உதடு ஒட்டாத குறள்கள் எத்தனை இருக்கிறது என்றெல்லாம் எழுதியிருந்தீர்கள். அவற்றை நீங்களே கண்டுபிடித்தீர்களா?
பொ: துறவு அதிகாரத்தில் முதல் குறளான
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
என்ற குறளயே, எல்லோரும் உதடு  ஒட்டாததற்கு மேற்கோளாகக் காட்டுவர். திருக்குறளில் இப்படி பல குறள்கள் இருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. அந்த உந்துதலால், நானே குறள்களைத் தேடத் தொடங்கினேன். ப, ம ஆகிய இரு எழுத்துக்களே உதடு ஒட்டும் எழுத்துக்கள். அவ்வெழுத்துக்கள் வராத குறள்களாகத் தேடிக் கண்டுபிடித்தேன்.
பா: உங்களது கணக்குப்படி எத்தனை உதடு ஒட்டாத குறல்கள் இருக்கின்றன?
பொ: அறத்துப்பாலில்5, பொருட்பாலில் 13, காமத்துப்பாலில்10 என 28 குறள்கள் உள்ளன.
பா: குடும்பம், பணிச்சூழல்களுக்கு மத்தியிலும் இவற்றையெல்லாம் எப்போது படித்து கண்டுபிடிப்பீர்கள்?
பொ:  என் பணியைப் பொறுத்தவரை காலை 7 மணிக்கே தொடங்கிவிடும். நாங்கள் 7 மணிக்குள் மில்லுக்குள் இருக்க வேண்டும். ஒரு நிமிடம் தாமதித்தால் கூட அன்று எங்களுக்கு பணி கிடையாது. அதனால் 4 மணிக்கே எழுந்துவிடுவேன். 4 முதல் 5 மணிவரை தினமும் படிப்பேன்.
பா: திருக்குறளில் ஐயம் ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்?
பொ: திருக்குறளில் புலமைபெற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வேன். உதடு ஒட்டாத குறள்களை கண்டுபிடிக்கும்போது,
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்
என்ற குறளில் எனக்கு ஐயம் ஏற்பட்டது. முதலில் வாங்கிய பிரேயில் புத்தகத்தில்
தூக்கங் கடிந்து செயல்என்றும், இரண்டாவதாக வாங்கிய புத்தகத்தில் தூக்கம் கடிந்து செயல்என்றும் இருந்தது. இதில் எது சரியென புலவர் வெள்ளியங்கிரியிடம் கேட்டேன்.அவர் தூக்கங் கடிந்து செயல் என்பதே சரி என்றார்.
பா: 1978-இல் c.f.b.i. பிரேயில் அச்சகத்தில் காமத்துப்பால் இல்லயா?
பொ: இருந்தது. 5 ரூபாய் கொடுங்கள் அனுப்பி வைக்கிறோம் என்றனர். அப்போது என்னிடம் காசில்லை. பணியில் சேர்ந்த பிறகே காமத்துப்பாலை வாங்கினேன்.
பா: இன்பத்துப்பாலில் உதடு ஒட்டாத குறள் ஒன்று எங்களுக்காகச் சொல்லுங்கள்?
பொ:அதிகாரம்: தகையணங்குறுத்தல், குறள் எண்: 1082
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.
பா: இன்பத்துப்பாலில் உங்களுக்குப் பிடித்த குறள் அல்லது நீங்கள் வியந்த குறள் எது?
பொ: நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.
தும்மல் வருவதுபோல வந்து வராமல் போய்விடுகிறதே. என்னை நினைத்துக்கொண்டிருந்த தலைவர் மறந்து விட்டாரோ என தலைவி தவிக்கிறாள். இப்படி, மனிதர்களுக்கு இயல்பாக வரும் தும்மலை, வள்ளுவர் கையாளும் விதத்தைப் பார்க்கும்போது வியப்பு மேலிடுகிறது. இன்னொரு இடத்தில்,
மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.
நான் காமத்தை மறைக்க நினைக்கிறேன். ஆனால் அதுவோ தும்மல்போல் வெளிப்பட்டுவிடுகிறது என்கிறார். இவற்றிற்கெல்லாம் உச்சமாக புலவி நுணுக்கம் என்ற அதிகாரத்தில், தும்மலை வைத்து ஒரு நாடகத்தையே நமக்கு நடத்திக்காட்டுகிறார்.
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.
தலைவி தலைவனோடு ஊடல் கொண்டு பேசாமல் இருக்கிறாள். அப்போது தும்மினால், அவள் நீடு வாழ்கஎனச் சொல்லுவாள், என நினைத்து தும்மினான்.
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.
அவன் தும்மியபோது ‘நூறாண்டு’ என்று கூறி வாழ்த்தினாள்; அடுத்து, அதை விட்டு, ‘எவர் நினைத்ததனாலே நீ தும்மினாய்’ என்று கேட்டுக் கேட்டு அழுதால்.
தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.
அவள் வருந்துவாளென தும்மலை அடக்குகிறான். இப்போது அவள் நினைப்பது எனக்குத் தெரியக்கூடாது என்பதற்காக மறைக்கிறாயோ என அழுகிறாள். சிந்தனைவாதியான வள்ளுவர் காமத்துப்பாலில் இலக்கியவாதியாக மிளிர்கிறார்.
காமத்துப்பாலில்தான் வள்ளுவர் அறிவு பூர்வமான பல செய்திகளைக் கூறுகிறார்.அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.
தெளிவுரை: ஒரு பொருளை அறிய அறிய கற்பவன் அறியாமை புலப்படுவது போல சிறந்த அணிகலன் உடையவளைக் கூடுந்தோறும் காமஇன்பக்குறை தோன்றுகிறது..:
என புணர்ச்சி மகிழ்தல் அதிகாரத்தில் அறிவுக்கு இலக்கணத்தைக் கூறுகிறார். இவ்வாறு வாழ்வியல் நிகழ்வுகளோடு இணைத்தே வள்ளுவர் தன் கருத்துக்களைக் கூறுகிறார்.
இன்னும் பல கேள்விகளுக்கு அடுத்த இதழில் விடையளிக்கிறார் திருக்குறள் பொன்னுசாமி.


திருக்குறள் பொன்னுசாமி அவர்களைத் தொடர்புகொள்ள: 9655440080

தொகுப்பு: பொன். சக்திவேல்

1 கருத்து:

  1. அதிகம் கேள்வியுற்று இதுவரை அறிந்திராத நமது ஆளுமை, அறிமுகம் செய்ததற்கு நன்றி!

    பதிலளிநீக்கு