வாசகர் கட்டுரை: பார்வையுள்ளோர் என்னை எப்படிப் பார்க்கிறார்கள்? - க. மணிவண்ணன்

           எனது பார்வையில், பார்வைத் திறனுடையவர்கள்  பார்வைத் திறன் இல்லாதவர்களைச் சமமாக நடத்துவது அல்லது கண்ணியத்துடன் நடத்துவது என்பது மிக மிகக் குறைவான இடங்களில் மட்டுமே சாத்தியமாகியுள்ளது. பார்வைத் திறனற்றோரால் ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், அவர்களுக்குப் புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லை என்று முடிவு கட்டிவிடுகின்றனர்.

மேலும் பார்வையற்றோரின் பேச்சு பார்வை உள்ளவர்களுக்குப் புரியாதது போல் சில நேரங்களில் நடந்து கொள்கின்றனர். அவர்களுக்குக் கண்களைப் பார்த்துப் பேசினால் தான் புரியும் போல.பார்வை உடையோர், நாம் அழைக்கும் போது காது கேட்காதது போல் சென்று விடுவார்கள். “வோ அவருக்குக் காது கேட்கவில்லை போல” என நான் சத்தமாகச் சொல்லியதுண்டு. இதுபோன்ற பல சம்பவங்களை நான் எதிர்கொண்டு இருக்கிறேன்.

பார்வையுள்ள ஆசிரியர்கள்  பல வேலைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றனர். நமக்கு சில சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதை நினைத்து வருந்தாத ஆசிரியர்களே இல்லை என்று சொல்லலாம். ஒவ்வொருவரும் “மணிவண்ணன் சாருக்கு என்ன கவலை ஆனந்தமாக இருக்கிறார்” என்று பேசுகிறார்களே தவிர நான் எதிர்கொள்ளும் துன்பங்களைப் பற்றி நினைப்பதே கிடையாது.

பார்வைத் திறன் இல்லாத சகோதரர்கள் எப்போது பார்வை உடையவர் செய்யும் ஒரு வேலையை தன்னாலும் செய்யமுடியும் என்று நிரூபித்துக் காட்டிவிட்டார்களோ அப்போதே அவர்கள் சமமாக மதிக்கப்பட வேண்டியவர்கள். இதை சமூகம் எப்போது புரிந்து கொள்ளப் போகிறது?

இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளில் வேலைவாய்ப்பு பிரச்சனை அதிகமாக உள்ளது. இந்த சூழலில் நம்மைப் போன்ற பார்வைத்திறனற்றவர்கள்  பணி வாய்ப்பைப் பெறும் போது, பார்வையுடைய நண்பர்கள் படித்து விட்டு வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர். இதனால் இவர்களை விட நாங்கள் நன்றாக பணிசெய்வோமே. ஏன் எங்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கக்கூடாது? இவர்களுக்கு ஏன் இந்த வாய்ப்பை அரசாங்கம் வழங்குகிறது. மக்கள் வரிப் பணத்தை வீணடிக்கிறது என்று பேசுகின்ற மூடர்களைக் கூட நான் பார்த்திருக்கிறேன். எனக்கு என்ன வருத்தமென்றால், அரசாங்கம் நமக்குப் பணி வாய்ப்பை வழங்கியதோடு தன் வேலை முடிந்துவிட்டது என்று நினைக்காமல். அரசானது நம்மைக் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அவ்வப்போது நடத்த வேண்டும் என்பதே எனது ஆதங்கம்.. .

(கட்டுரையாளர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அரசுப் பள்ளி ஆசிரியர்)

தொடர்புக்கு: kannanmanivannan@gmail.com


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக