தலையங்கம்: படித்திடுவோம்; படைத்திடுவோம்

graphic உணர்ந்ததைச் சொல்கிறோம் உலகிற்கு என்ற வாசகம் அடங்கிய விரல்மொழியரின் சின்னம்
 உலகமெங்கும் ஒலிக்கும் ஒற்றைச் சொல்கொரோனா’. மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் கூறியதைப் போல இரண்டாம் உலகப் போருக்கு அடுத்தபடியாக அதிக உயிர்ச் சேதங்களையும், பொருளாதார இழப்பையும் தரும் மிகச்சிறிய உயிரி இந்த கொரோனா வைரஸ்.

அவர் கூறியதிலிருந்து நாம் சிந்திக்கத் தொடங்கினால் ஒவ்வொரு போரும் பல புதுப் புது கண்டுபிடிப்புகளை நமக்குத் தந்துள்ளன. பல புதுப் புது தேவைகளை பெரும்பான்மை உலகிற்கு அடையாளம் காட்டியுள்ளன.
அந்த வகையில் இந்த 21 நாள் ஊரடங்கில் நாம் எத்தகைய படிப்பினைகளைப் பெறப்போகிறோம்? இந்தச் சமூகத்திற்கு என்ன செயப்போகிறோம்?

பார்வை மாற்றுத்திறனாளிகளாகிய நம்மில் பலருக்கு வீட்டில் முடங்கியிருத்தல் என்பது பழக்கப்பட்டதுதான். ஆனாலும் இந்த 21 நாட்களைப் பல சிரமங்களோடுதான் நாம் கழித்தாகவேண்டும்.
ஓய்வு என்பது சும்மாயிருத்தல் அல்ல. அடுத்த வேலைக்கென உடலையும், மனதையும் தயார்படுத்துதல் அல்லது வேறு வேலையில் ஈடுபடுதல்என்பார் பேரறிஞர்  அண்ணா. இந்நாட்களில் நம்மால் முடிந்த அளவு, நமக்கு ஏற்றாற்போல் வடிவமைக்கப்பட்டுள்ள விதவிதமான நூல்களைப் படித்து நம் அறிவைப் பெருக்கிக்கொள்ளலாமே!

இந்த ஊரடங்கு அனுபவங்களை, ஏற்கெனவே மனதில் நிரம்பி வழியும் கடந்தகால நினைவுகளை, கற்பனைகளை எழுத்தோவியமாகத் தீட்டி வைக்கலாமே!
இந்த 21 நாள் ஊரடங்கு நம்மைப் படிப்பாளிகளாகவும், படைப்பாளிகளாகவும் ஆக்கட்டும்.

இந்த ஊரடங்கில் உங்கள் அனுபவங்களை, சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ள விரல்மொழியர் மின்னிதழ் பாலமாகச் செயல்படுகிறது. எமது வாசகர்கள் அடங்கிய புலனக் குழுவில் உங்கள் பிரச்சனைகளை, அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். பிரச்சனைகளுக்கு ஆறுதலோ, தீர்வோ கிடைக்கலாம். நம்மிடமிருந்துதான்.
நம்முடைய சிக்கல்களை நமக்கு நாமே பேசிக்கொள்வோம். வாட்ஸப் குழுவில் உங்களை இணைத்துக்கொள்ள இதழாசிரியர்களைத் தொடர்புகொள்ளவும்.

ஊரடங்கின்போது மாற்றுத்திறனாளிகள்  எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு உ்தவ தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை 24 மணி நேர இ்லவசத் தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது. அந்த எண்ணைப் பயன்படுத்திப் பயன் பெறுவீர்.
தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவசத் தொலைபேசி எண்: 18004250111

‘உணர்ந்ததைச் சொல்கிறோம் உலகிற்கு’

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக