உரிமை: ஊனமுற்றோருக்கான பேரிடர் மேலாண்மை வழிகாட்டு நெறிமுறைகள்-ஒரு பார்வை - மு.முத்துச்செல்வி

       உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்தக் கொரோனா வைரஸிற்கு எதிராக பல்வேறு உலக நாடுகளும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன்படி, நமது மத்திய, மாநில அரசாங்கங்கள் பல்வேறு வழிகாட்டுதல்களை அவ்வப்போது வழங்கி வருகின்றன. அனைத்து வழிகாட்டுதல்களும் அனைவருக்கும் சமம் என்ற அடிப்படையில் ஊனமுற்றோருக்கும் பொருந்தும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.  பிரபல உலக பொருளாதார நிபுனர் அமர்த்தியாசென் அவர்களின் கூற்றுப்படி, வளரும் நாடுகளில் ஊனமுற்றவர்கள் உரிமைகள் மறுக்கப்பட்டவர்கள் மட்டும் அல்ல, பெரிதளவில் புறக்கணிக்கப்பட்டவர்களும் கூட.
       ஆம். இந்தக் கொடிய கொரோனா வைரஸின் விளைவுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் ஊனமுற்றவர்கள். அதிலும் இந்தக் கோரத்தாண்டவத்தினால் பெரிதளவில் வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் பார்வையற்றவர்கள் என்பது நாம் அறிந்ததே. அவர்கள் படும் அன்றாட இன்னல்களை இதர கட்டுரைகள் விவரிக்கும் என்ற அடிப்படையில், இந்தக் கட்டுரையானது மத்திய அரசாங்கத்தால் ஊனமுற்றோருக்காக சமீபத்தில் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து எடுத்துரைக்கிறது.
       முன்னதாக, இவ்வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டதன் சட்டப் பின்னணி குறித்து சுருக்கமாக ஆராய்வது பொருத்தமாக இருக்கும்.
       முதன்முதலாக ஐ.நாவின் ஊனமுற்றோர் உரிமைக்கான உடன்படிக்கை (UNCRPD) சரத்து 11,  இயற்கை பேரிடர்களில் ஊனமுற்றோர் பாதுகாப்பை அனைத்து உறுப்பு நாடுகளும் உறுதி செய்வதைக் கட்டாயமாக்கியுள்ளது. இந்தியா இந்த உடன்படிக்கையில் கையொப்பம் இட்டதன் அடிப்படையில், தற்போது நடைமுறையில் இருக்கும் ஊனமுற்றோர் உரிமைச் சட்டம் (RPD act) 2016- இயற்றியது என்பது நாம் அறிந்ததே.
       ஊனமுற்றோர் உரிமைச் சட்டம் 2016 பிரிவு 8, ஊனமுற்றோர் இயற்கைப் பேரிடர் காலங்களில் சமமாக நடத்தப்பட வேண்டும் என்றும், தேசிய, மாநில, மாவட்ட பேரிடர் மேளாண்மை அமைப்புகள் ஊனமுற்றவர்களை உள்ளடக்கி அவர்களைச் செயல்பாட்டில் ஈடுபடுத்துவதையும் வலியுறுத்துகிறது. அதோடு மட்டுமல்லாமல் இயற்கைப் பேரிடர் குறித்த தகவல்கள் ஊனமுற்றோருக்கு உடனுக்குடன் வழங்கப்படுவதையும் உறுதி செய்கிறது. மேலும், பேரிடர் மேலாண்மை அமைப்புகளோடு ஊனமுற்றோர் ஆணையர் இயற்கைப் பேரிடர் காலங்களில் இணைந்து பணிபுரிவதைக் கட்டாயமாக்குகிறது. மிக முக்கியமாக, பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005, பிரிவு 2, உட்கூறு 5இன்படி வரையறுக்கப்பட்டுள்ள அனைத்துச் செயல்பாடுகளிலும் ஊனமுற்றோரின் உள்ளடக்கத்தை இந்த ஊனமுற்றோர் உரிமைச் சட்டம் 2016 உறுதி செய்கிறது. மேலும், தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டம் பிரிவு 25இன்படி அமைக்கப்பட்ட மாவட்ட பேரிடர் மேலாண்மை நிர்வாகமானது ஊனமுற்றோர் குறித்த தகவல்கள் அடங்கிய பதிவேட்டினைப் பராமரிப்பதையும், அதன் மூலம் ஊனமுற்றோரைப் பேரிடர் காலங்களில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதையும் உறுதி செய்கிறது. இது தவிர, பேரிடர் காலத்திற்குப் பின் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின்போது அந்தந்த மாநில ஊனமுற்றோருக்கான ஆணையரையும் கலந்தாலோசிக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறது.
graphic (Disaster Management Act, 2005)

       தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பும், உள்துறை அமைச்சகமும் பேரிடர் காலத்தில் ஊனமுற்றோருக்கு ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்கான தேசிய பேரிடர் மேலாண்மை வழிகாட்டுதல்களைக் கடந்த செப்டம்பர் மாதம் 2019ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.  இதை ஒட்டியே ஊனமுற்றோருக்கு திகாரம் வழங்கல் துறை Department for the empowerment of persons with disabilities) இந்தக் கொரோனா தொற்று சூழ்நிலையில் ஊனமுற்றோரின் பாதுகாப்புக் கருதி அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஊனமுற்றோர் உள்ளடக்க நிலை குறித்த விரிவான வழிகாட்டுதல்களை 27 மார்ச் 2020 அன்று வெளியிட்டுள்ளது. இதன் சாராம்சம் பின்வருமாறு:

               *கோவிட்-19 (covid-19) குறித்த தகவல்கள், சேவைகள், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ுதலியவை ஊனமுற்றோர்       எளிதில் அனுகும் (accessible) வகையிலும், எளிமையான உள்ளூர் மொழியிலும்     இருத்தல் வேண்டும். உதாரணமாக, பார்வையற்றவர்களுக்குப் பிரெயிலி    மற்றும் ஒலி வடிவிலும், காதுகேளாதோருக்கு விளக்க வரிகளுடன் கூடிய     மற்றும் சைகை மொழியிலான ஒளி வடிவில் இருத்தல் வேண்டும்.
               *அவசர நிலையில் பணியாற்றும் பொறுப்பு அதிகாரிகளுக்கு ஊனமுற்றோர்        குறித்த பயிற்சி வழங்கப்படுதலையும், அதிகப்படியான             ஊனமுற்றவர்களுக்குக (severely disabled)  கூடுதலான ஆபத்துகள் உள்ளனவா?             என்பதையும் அறிந்திருத்தல் வேண்டும்.
               *அனைத்து விழிப்புணர்வு முகாம்களிலும் ஊனமுற்றோருக்குத் தேவையான            மற்றும் பொருத்தமான உதவி குறித்த தகவல்கள் இருத்தல் வேண்டும்.
               *ஊனமுற்றோர் தனிமைப்படுத்தப்பட நேர்ந்தால், அத்தியாவசிய சேவைகள்,   தனிப்பட்ட உதவி முதலியவை அவர்களுக்கு  எளிதில் அனுகும் வகையில்           வழங்கப்பட வேண்டும்.
               *ஊனமுற்றோரைக் கவணித்துக் கொள்பவர்களுக்கு ஊரடங்கில் இருந்து          தளர்வு வழங்கப்பட வேண்டும். மேலும், அவர்களுக்குச் சிறப்பு அனுமதிச்   சீட்டு   வழங்கப்படுவதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
               *ஊனமுற்றவர்களைக் கவனித்துக் கொள்பவர்களுக்குப் பாதுகாப்பு உடை குறித்த தகவல்கள் வழங்கப்பட வேண்டும்.
               *ஊனமுற்றோரின் இருப்பிடத்திற்கு வரும் வேலையாட்கள்,             கவனித்துக் கொள்பவர்கள் மற்றும் இதர சேவை வழங்குபவர்கள்            வந்துசெல்வதற்கு ஏதுவாக, குடியிருப்போர் நலச சங்கங்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட      வேண்டும்.
               *ஊனமுற்றோருக்குத தேவையான தண்ணீர், உணவு, மருந்துகள்             உள்ளிட்டவற்றைக் கூடுமானவரை அவர்கள் இருப்பிடத்திலேயே             கிடைக்குமாறு வழிவகை செய்ய வேண்டும்.
               *மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஊனமுற்றோர் கடைகளில்             பொருட்களை வாங்குவதற்கு தனி நேரம் ஒதுக்க வேண்டும்.
               *ஊனமுற்றோருக்குக் கூடுதலான பாதுகாப்பு வழங்கும் பொருட்டு             அவர்களுக்கு அவசர காலங்களில் பயண அனுமதிச் சீட்டு வழங்கப்பட வேண்டும்.
               *ஊனமுற்றோருக்குக் குறிப்பாக, ஊனமுற்ற பெண்கள் மற்றும்             குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சையில் முன்னுரிமை வழங்கப்பட             வேண்டும்.
               *அரசு மற்றும் தனியார் துறை அத்தியாவசிய பணியில் இருக்கும்             பார்வையற்றோர் மற்றும் இதர ஊனமுற்றோருக்குப் பணிக்கு வருவதில்     இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும்.
               *தனிமைப் படுத்துதலின் போது ஊனமுற்றோருக்கு ஏற்படும் மன             அழுத்தத்தினைப் போக்கும் விதமாக ஆன்லைன் ஆலோசனைகள்        வழங்கப்பட வேண்டும்.
               *24 மணி நேரமும் ஊனமுற்றோர் தொடர்பு கொள்ளும் வகையில், சைகை          மொழி மற்றும் வீடியோ வசதியுடன் கூடிய பிரத்தியேக உதவி மையம்          அனைத்து மாநிலங்களிலும் இயக்கப்பட வேண்டும்.     
       *ேலே குறிப்பிட்டபடி, மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் கோவிட்-19 குறித்த தகவல்களை ஊனமுற்றோருக்கான பிரெயில் உள்ளிட்ட அனுகுதல்      முறையில் உருவாக்கும்போது ஊனமுற்றோர் சங்கங்களை இணைத்து செயல்பட வேண்டும்.
       *மாநில ஊனமுற்றோருக்கான ஆணையர்கள், அந்தந்த மாநிலத்தின்        ஊனமுற்றோருக்கான நோடல் அதிகாரியாக அறிவிக்கப்பட வேண்டும்.   மேலும், நெருக்கடி காலங்களில் ஊனமுற்றோருக்கு ஏற்படும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் பொறுப்பு அந்தந்த மாநில ஆணையரையே   சாரும்.
       *மாநில ஊனமுற்றோருக்கான ஆணையர் மாநில பேரிடர் மேலாண்மை      அமைப்பு, சுகாதாரம், காவல் துறை மற்றும் மாவட்ட ஊனமுற்றோர்     அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.   அதுமட்டுமல்லாமல், கோவிட்-19 தொடர்பான தகவல்கள், பொதுக்கட்டுப்பாடு       திட்டங்கள் மற்றும் இதர சேவைகள் குறித்த தகவல்கள் எளிதில்       ஊனமுற்றோர் அனுகுதல் முறையில் வழங்கப்படுதலை உறுதி செய்ய       வேண்டும்.
       *மாவட்ட ஊனமுற்றோருக்கான அலுவலர்கள் அந்தந்த மாவட்டத்தின்      ஊனமுற்றோருக்கான நோடல் அதிகாரியாக செயல்பட வேண்டும். மாவட்ட       அளவிலான ஊனமுற்றோர் பட்டியல் மற்றும் ூடுதல் ஆதரவு தேவைப்படும் கடுமையான ஊனமுற்றோர் பட்டியல் கியவற்றை வைத்திருக்க    வேண்டும். மேலும், அவர்களுடைய தேவைகளைப் போதிய கால    இடைவெளியில் தொடர்ச்சியாக கண்காணித்து, அவர்களுக்கு வேண்டிய      அத்தியாவசிய தேவைகளை, இருக்கும் வசதியைக் கொண்டு பூர்த்தி       செய்யவேண்டும்.  தேவைப்பட்டால் தொண்டு நிறுவனங்கள், குடியிருப்பு     நலச்        சங்கங்களின் உதவியுடன் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

       மேலே குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்களும், வழிகாட்டு நெறிமுறைகளும் செயல்வடிவம் பெற நம் சங்கங்கள் ஒன்றிணைந்து உரிமைக் குரல் ஏழுப்ப வேண்டும். இது குறித்த விழிப்புணர்வினை முதலில் ஊனமுற்றோருக்கான துறை அதிகாரிகளுக்கும், அதனைத் தொடர்ந்து பேரிடர் மேலாண்மை பணியில் ஈடுபட்டிருக்கும் அணைத்து அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும்  வழங்கப்பட வேண்டும். மிக முக்கியமாக அன்றாடம் வாழ்வில் பல்வேறு சவால்களோடு பயணித்துககொண்டிருக்கும் நம் ஒவ்வொருவரிடமும் இவ்வழிகாட்டுதல்கள் குறித்த விழிப்புணர்வு இருத்தல் அவசியம். முறையான விழிப்புணர்வு இல்லாதவரைச், சட்டங்களும் வழிகாட்டு நெறிமுறைகளும் வெறும் காகிதங்களே!

கட்டுரையாளர்: இந்தியன் வங்கியில் மேலாளராகப பணிபுரிந்து வருகிறார். இவர் அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பின் (All India confederation of the blind-AICB) துணைத்தலைவர்).
தொடர்புக்கு: muthump2007@gmail.com

5 கருத்துகள்:

  1. சட்டம் தொடர்பான நல்ல புரிதலை ஏற்படுத்தும் கட்டுரையை வழங்கி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் உங்களுக்கு.

    பதிலளிநீக்கு
  2. இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பெயரளவுக்கு மட்டுமே சுற்றுக்கு விடப்பட்டுள்ளன என்பது எவ்வளவு காலம் தாழ்த்தி, சிறிதும் அவசரமோ பதற்றமோ இல்லாமல் அவை வெளியிடப்பட்டுள்ளன என்பதிலிருந்தே புரிகிறது. மேலும் ஊனமுற்றோருக்கு அளிக்கப்படவேண்டிய சிறப்பு நிவாரண உதவிகள் (Relief Package) குறித்து எதுவும் அதில் இல்லை. பெரும் நகரங்களையும் மாபெரும் கட்டுமானங்களையும் நிர்மாணித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களையே நிர்க்கதியாய் விட்ட இந்த தேசத்திடம் வேறு என்னதான் நாம் எதிர்பார்க்க முடியும்? பொருத்தமான காலத்தில் எழுதப்பட்ட நல்ல கட்டுரை!

    பதிலளிநீக்கு
  3. முறையான விழிப்புணர்வு இல்லாதவரைச், சட்டங்களும் வழிகாட்டு நெறிமுறைகளும் வெறும் காகிதங்களே! அந்தக் காகிதங்களை ஆயுதமாக்கிக்கொள்ள உங்கள் கட்டுரை கட்டியம் கூறிச்சென்றது.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. காலமறிந்து செய்யப்பட்ட விழிப்புனர்வு படைப்பு.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. சட்டங்கள் காகிதங்களில் மட்டுமே இருக்கின்றது என்பதை. உங்கள் கட்டுறை உணர்த்தி உள்ளது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு