பார்வையாளர் மாடம்: விளையாட்டு விலகினாலும் விண்ணைத்தொட்ட வித்தகர்கள்! - சேதுபாண்டி.


      விளையாட்டு என்றதும்  நம் மனதில் பார்வையற்றோர் விளையாடும் அத்தனை விளையாட்டுகளும், நாம் இளம் வயதில் துள்ளிக் குதித்து, ஓடியாடி, ஆடிப்பாடி, விழுந்து எழுந்து, அழுது மகிழ்ந்த அத்தனை அனுபவங்களும் நம் உள்ளத்தில் மேலோங்கி மலர்ந்திருக்கும். இவ்வாறு என் மனதில் மலர்ந்த நினைவலைகளுக்கிடையே, பார்வையற்றவனாகப் பிறந்துவிட்டால் பிறப்பு முதல் இறப்பு வரை போராடித்தான் ஆக வேண்டும். இந்நிலையில் விளையாட்டு மட்டும் விரைந்து கைகூடி இருக்குமா என்ன, என்ற எண்ணமும் அவ்வப்போது வந்து சென்றது.

          விளையாட்டுப் பார்வையற்றோருக்கு எப்படிக் கைகூடியது என்ற வரலாற்றைப் பார்ப்பதைவிட, ஏறக்குறைய நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பார்வையற்றோருக்கான விளையாட்டு எப்படி இருந்திருக்கும் என்பதை அறிய ஆர்வம் ஏற்பட்டது. உடனே நம்முடைய சமுதாயத்தில் மூத்தவர்களைத் தொடர்புகொண்டு அவர்களின் விளையாட்டு அனுபவங்களைக் கேட்டறிந்தால் என்ன என்ற எண்ணம் வந்தது. அதே நேரத்தில் மூத்தவர்கள் என்றால் யாரைக் கேட்பது, யாரிடமிருந்து தொடங்குவது என்ற குழப்பமும் ஏற்பட்டது. இந்தச்சூழலில் தான் கல்வி கற்க, வேலைவாய்ப்பு பெற, பதவி உயர்வு அடைய என எல்லாவற்றிலும் போராடிப் போராடித் தங்கள் வாழ்வில் சிகரம் தொட்டுக் கல்லூரி முதல்வர்களாக சாதனைப்படைத்த முதல் நால்வரிடம் கேட்டறிவதே சாலச்சிறந்தது என்றுணர்ந்து அவர்களைத் தொடர்புகொண்டேன்.

graphic குடும்பத்துடன்முனைவர் K.M. பிரபு

          முதலாவதாக, தமிழகத்தின் முதல் பார்வையற்ற கல்லூரி முதல்வராகப் பொறுப்பேற்றுச் சிறப்பாக செயலாற்றி, சென்னை நந்தனம் அரசு ஆடவர் கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்ற ஆங்கில பேராசிரியர் முனைவர் K.M. பிரபு ஐயா அவர்களைத் தொடர்பு கொண்டு ஐயா தங்களது சிறு வயது விளையாட்டு அனுபவம் குறித்து விரல்மொழியர் மின்னிதழுக்காக கூற இயலுமா என்று கேட்டேன். அவரும் ஆர்வமுடன் இதழைக்குறித்து கேட்டறிந்து, நல்ல முயற்சிப்பா, ஆனா நான் இதற்கு பெருசா பதில் சொல்ல முடியாதுப்பா. ஏனா எனக்கு பதினேழு வயசுல பார்வ போச்சு. அதுக்கப்புறம் படிக்க, வேலைபெற எனப் பல்வேறு முயற்சியில ஈடுபட வேண்டியதா போச்சு. இடையில பார்வ போனவங்களுக்குக் கொடுக்கப்படுற அட்ஜஸ்மண்ட் பயிற்சிக்குப் போனப்ப பார்வ தெரியாதவங்களுக்கான விளையாட்டப்பத்தித் தெரிஞ்சிக்கிட்டேன். பார்வ தெரியாதவங்க விளையாட்டு எப்படி இருக்கும், பார்வ தெரியாதவங்க கிரிக்கெட் எப்படி விளையாடனும்னு தெரிஞ்சிக்கும்போதே என்னோட விளையாட்டு பருவம் முடிஞ்போச்சுப்பா என்று அவர் கூறியதும் தான் இடையில் பார்வை இழந்தவர்கள், தங்களுக்குப் பார்வை போய்விட்டது என்பதை உணர்ந்து, அதை மனதளவில் முழுமையாக ஏற்றுக்கொண்டு, வாழ்வில் முன்னேற எத்தனை அதிகமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க முடிந்தது.

graphic முனைவர் அர. ஜெயச்சந்திரன்

          அடுத்ததாக, தற்பொழுது சென்னை அரசு ஆடவர் கல்லூரியில் முதல்வராக பொறுப்பேற்று நிர்வகித்து வரும் தமிழ் பேராசிரியர் முனைவர் அர. ஜெயச்சந்திரன் ஐயா அவர்களிடம் தொடர்புகொண்டு கேட்டேன். சின்ன வயசுல எல்லாப் பிள்ளைகளும் விளையாடுவது போல ஓடியாடி விளையாடி இருக்கேன். உயர்கல்வி வந்ததும் திறன் சார்ந்த மேம்பாட்டில் ஈடுபட விளையாட்டில் நாட்டம் குறைந்து போய்விட்டது. பேச்சு போட்டியில் கலந்துகொள்வது, கட்டுரை எழுதுவது என என்னுடைய நேரத்தைச் செலவழிக்கத் தொடங்கி அதையே தொடரவும் ஆரம்பிச்சுட்டேன். விளையாட்டு தொடர்பா ஒரு சம்பவத்த சொல்லுறேன். ஒரு நாள் நானும் என்னோட நண்பர்களும் சீட்டு விளையாடிக்கிட்டு இருந்தோம். நல்லாதான் போய்க்கிட்டிருந்துது. நா ஒரு சீட்ட தப்பா போட்டுட்டேனு நண்பன் ஒருத்தன் என்ன திட்டிட்டான். எனக்கு விளையாட்டு மேல இருந்த விருப்பமே போச்சு. ஏன்டா விளையாட்டுங்குறது மகிழ்ச்சியா இருக்கத்தான. எதுக்கு இப்ப திட்டினன்னு கேட்டேன். நீ தப்பா சீட்ட போட்டா அவனுங்கதான ஜெயிப்பாங்க சரியா பாத்து போடமாட்டியான்னு கேட்டான். இங்க பாருடா. நாம எத விளையாடினாலும் மகிழ்ச்சியா விளையாடனும், மகிழ்ச்சிய கெடுக்குற எதுவும் விளையாட்டே இல்ல என்று சொல்லிவிட்டு அதோடு பெருசா விளையாடுவதையே விட்டுட்டேன்என்றார்.
வாசகர்களுக்கு இதைப் படிக்கும் போது பார்வையற்றவர்கள் சீட்டு விளையாட முடியுமா என்ற ஐயம் ஏற்பட்டிருக்கும். பொதுவாக பார்வையுள்ளவர்கள் விளையாடுகிற சீட்டுக்கட்டும், பார்வையற்றவர்கள் விளையாடுகிற சீட்டுக்கட்டும் ஒன்றுதான். பார்வையற்றவர்கள் விளையாட பயன்படுத்துகிற சீட்டில் பிரெயில் குறியீடுகள் கொடுக்கப்பட்டிருக்கும். எனவே, பார்வையுள்ளவர் பார்வையற்றவர் என வேறுபாடின்றி அனைவரும் இணைந்து சீட்டு விளையாட முடியும்.

graphic க. வேலு ஐயா

          அடுத்ததாக, விருதாச்சலம் அரசு கல்லூரியில் சிறப்பான முறையில் முதல்வராக கடமையாற்றி ஓய்வுபெற்ற தமிழ் பேராசிரியர் முனைவர் க. வேலு ஐயா அவர்களைத் தொடர்புகொண்டு இதே கேள்வியைக் கேட்டேன். அருமையான முயற்சி தம்பி. முதலில் விரல்மொழியர் மின்னிதழுக்கும், உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவிச்சுக்கிறேன். தொடக்க பள்ளி படிச்க்கிட்டிருக்கும்போது ஓட்டப்பந்தயம், பாணை உடைத்தல் போன்ற விளையாட்டுகளை விளையாடி இருக்கேன். இது போன்ற விளையாட்டுகள் போட்டியாகவும் நடத்தப்படும். போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வாங்கியிருக்கேன். அடுத்த கட்ட பள்ளிப் படிப்பைச் சென்னையில் உள்ள பூவிருந்தவல்லி அரசு பார்வையற்றோர் பள்ளியில் தொடர்ந்தேன். படிப்பு விளையாட்டு என எல்லாம் இருந்தது. அதே நேரத்தில் மறுக்கப்பட்ட உரிமைக்காகவும், நிகழ்த்தப்பட்ட அநீதிக்காகவும் போராட வேண்டியிருந்தது. இந்த சூழலில் இளமைக்கால விளையாட்டு வாழ்விலிருந்து விடுபட்டு போராட்ட உணர்வு மேலோங்கிடுச்சு. இப்படியே போயிக்கிட்டிருந்தாலும் கவிதை எழுதுதல், பேச்சுப் போட்டி போன்றவற்றில் பெரும்பாலும் கலந்துக்குவேன். எனக்கு சதுரங்கம் மீது ஆர்வம் கொஞ்சம் அதிகமா இருந்துச்சு. சரியா ஆண்டு நினைவுல இல்ல. ஏறக்குறைய தொன்னூறுகளுல தென்னிந்தியா அளவில் கோவையில் நடைபெற்ற சதுரங்க போட்டியில கலந்துக்கிட்டேன். இப்படி நான் கலந்துக்கிட்ட சதுரங்க போட்டிகளில் பரிசு வாங்கியதில்ல. ஆனா எனக்கு எதிரில விளையாடுரவங்க அவ்வளவு எளிதா என்ன வென்றிட முடியாது. பயங்கரமான டஃப் கொடுப்பேனாம். இதனை என்னோடு விளையாடிய அண்டை மாநிலத்து நண்பர்கள் பல முறை சொல்லியிருக்காங்க. பேராசிரியர் பணிக்கு வந்த பிறகும் அவ்வப்போது கணினியில் சதுரங்கம் விளையாடுவேன். சில நேரங்களில் இந்த விளையாட்டில் என்னோட மணைவியும் கம்பெனி கொடுப்பாங்க. சேர்ந்து விளையாடுவோம். இப்ப எனக்கு நீண்ட நாள் ஆசையாக இருந்த ஜோதிடம் கத்துக்கிட்டிருக்கேன்.
இதனை வாசிக்கும் வாசகர்களுக்கு பார்வையற்றவர் சதுரங்கம் விளையாட முடியுமா என்ற ஐயம் ஏற்படலாம். பார்வையற்றவர்கள் சதுரங்கத்தைப் பார்வையுள்ளவர்களுக்கு இணையாக விளையாடமுடியும். வெற்றி பெறவும் முடியும்.

          பார்வையற்றோருக்கான சதுரங்க காயின்கள் தொட்டு விளையாடும்போது பலகையில் இருந்து விழாமல் இருக்க அதன் அடிப் பகுதியில் பலகையில் செருகுவதற்கு ஏற்ப குச்சி போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும். காயின்கள் வெள்ளையா கருப்பா என்பதை அறிய வெள்ளை காயினின் மேள்பகுதியில் சிறு புள்ளியும், கருப்பு காயினின் மேல்பகுதி சமமாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கும். பலகையின் வெண்மையான கட்டங்கள் பள்ளமாகவும், கருப்பான கட்டங்கள் மேடாகவும் இருக்கும். கட்டங்களுக்கு நடுவே காயின்களைச் செருகும் வகையில் சிறு துளை இருக்கும்.
graphic முனைவர் ப. ரங்கநாதன்

          அடுத்ததாக, சேலம் அரசு கல்லூரியில் முதல்வராக பொறுப்பேற்று சிறப்பாக செயலாற்றி ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியர் முனைவர் ப. ரங்கநாதன் ஐயா அவர்களிடம் கேட்டேன். குழந்தைப் பருவத்தில் தவளையோட்டம், சாக்குப்பை ஓட்டப்பந்தயம் எனப் பல போட்டிகளில் பங்கேற்று விளையாடி இருக்கேன். பொதுவாக அப்பொழுதெல்லாம் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்திற்காக போட்டிகள் நடத்தப்படும். ஏறக்குறைய ஆண்டிற்கு ஓரிரு முறை மட்டுமே போட்டிகள் நடத்தப்பட்டுப் பரிசுகள் வழங்கப்படும். விளையாட்டு என்பது விழாக்காலங்களில் மட்டும் தான்னு சொல்லலாம். அந்தக் குறிப்பிட்ட காலத்திலும் நல்லா விளையாடுற மாணவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டது. ஆண்டுதோறும் டிசம்பர் மூன்றாம் தேதி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ கல்லூரிக்கு அழைச்சிக்கிட்டு போவாங்க. ஏற்கனவே போட்டிகளில் கலந்துகொள்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் அந்தந்த போட்டியில கலந்துக்குவாங்க. விளையாட்டால் கைவிடப்பட்ட மாணவர்கள் போட்டிகளை வேடிக்கைப் பார்த்துக்கிட்டிருப்போம். விளையாட்டு விலகிப்போனாலும், கல்வி எனக்கு கைகூடுச்சு.
விளையாட்டு என்பது பள்ளிகளில் மட்டுமல்ல, உலக அளவிலும் திறமைசாலிகள் அனைவருக்கும் கைகூடுவதில்லை. பல்வேறு பாகுபாடுகளும், சூதாட்டங்களும் இன்றளவும் நடந்துகொண்டுதான் இருக்கின்ற.

          நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக பார்வையற்றோர் கல்வி உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காக போராடிக் கொண்டிருந்த காலத்தில், தங்கள் அயராத உழைப்பால் உயர்வை அடைந்த நம் முன்னோர்களின் வாழ்க்கை நமக்கு பாடமாக அமைகிறது. அன்று விளையாட்டில் பெரிதாக ஈடுபட இயலாதவர்கள், இன்று உலக அளவில் நடத்தப்படும் விளையாட்டு போட்டிகளுக்கு தலைமையேற்று, தொடங்கிவைத்து, வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கி, தோல்வியடைந்தவர்களுக்கு தோள்கொடுத்து, ஊக்கப்படுத்தி உயர்வுக்கு வழிகாட்டி வரும் நிலைக்கு உயர்ந்திருப்பது புலனாகிறது.

          தங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி என்னோடு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட மாண்புமிகு முதல்வர்களுக்கு எனது பணிவான வணக்கத்தையும், நெஞ்சார்ந்த நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

(கட்டுரையாளர் இந்தியன் வங்கியில் பணியாற்றி வருகிறார். இவரது வலைப்பக்கம்: www.sethupandi.blogspot.in
தொடர்புக்கு: pandiyaraj18@gmail.com

1 கருத்து:

  1. நால்வர்களின் கருத்துக்களை கோர்வையாக நெறிப்படுத்தி, படைத்திருக்கிற கட்டுரை அருமை.

    பதிலளிநீக்கு