புகழஞ்சலி: சமூக ஆர்வலர் அமரர் முத்தரசு - சில நினைவுகள் - முனைவர் S. பாலாஜி

  
graphic முத்தரசு
முத்தரசு
தோற்றம்: 03.03.1973
மறைவு: 17.07.2020
       வேலூர் மாவட்டம், பெரியபுதூரில் பிறந்தவர் முத்தரசு. திருவண்ணாமலை  அமலராக்கினி பள்ளியில் மேல்நிலைக்கல்வி வரை பயின்ற இவர்,  சென்னை லயோலா கல்லூரியில் வரலாற்றில் இளங்கலை, முதுகலை முடித்தார். பிறகு ஆசிரியர் பயிற்சி முடித்து கடந்த 2004-ஆம் ஆண்டு ஆசிரியர் பணி நியமனம் பெற்று மறைவு தினம் வரை சிறப்புர பணியாற்றினார்.
       பிறவியிலேயே பார்வையிழந்த இவர், ஏழ்மைச் சூழலிலேயே வளர்ந்தார். பள்ளிக் காலம் முதல் போராட்டக் குணமுடையவராகத் திகழ்ந்த இவர், கல்லூரி வாழ்வில் அப்பண்பை ஒருமுகப்படுத்தினார்.
        நான் சென்னையில் கல்லூரிப் படிப்பை மேற்கொண்ட காலத்திலிருந்து இவரை அறிவேன். பொது வாழ்க்கையில் அன்றும், இன்றும் இயங்கும் பார்வை மாற்றுத்திறனாளிகள் உதாரணமாகக் கொள்ளவேண்டிய மிக முக்கியமானவர் முத்தரசு. 
       பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தில் (college students & graduates association for the blind-CSGAB)  செயற்குழு உறுப்பினராகவும், இணைச்செயலாளராகவும், பொதுச்செயலாளராகவும் கடந்த 1996 முதல் 2002 வரை கடமையாற்றினார்.
       அவர் உருவாக்கிய நிர்வாக ஒழுங்கைக் கண்டு வியந்திருக்கிறேன்.  அலுவலகக் கட்டமைப்பு எப்படி இருக்கவேண்டும் என்பதில் தெளிவான பார்வையுடையவராக இருந்தார்.  சங்கத்தின் வெவ்வேறு நிலைப்பாடுகளை உடைய உறுப்பினர்களை அரவணைத்து ஒருங்கிணைத்தார். பார்வையற்றவர்களுக்குச் சங்கத்திற்கு வந்து உதவும் தன்னார்வலர்களின் எண்ணிக்கையை அதிகப்படு்த்தினார்.  
        போராட்டக் களங்களில் முதல் ஆளாக நின்று வழிநடத்தினார். இவர் தலைமையிலேயே பல உண்ணாவிரதப் போராட்டங்கள் நடைபெற்றதை நான் அறிவேன். சங்க உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், நன்கொடையாளர்கள், உயர் அலுவலர்கள் என்று எல்லாத் தரப்பினரோடும் தொடர்ந்து தொடர்பில் இருந்தவர். எல்லோரையும் சம அளவில் மதித்துப் போற்றியவர். 
       சங்கத்தின் சார்பில் பல பிரெயில் புத்தகங்கள் வெளியாகக் காரணமாக இருந்தார். அவை அனைத்தும் 2015-இல் சென்னையைத் தாக்கிய பெருவெள்ளத்தில் காணாமல் போய்விட்டன.
       சென்னையை நோக்கிப் படையெடுத்த இளம் மாணவர்களுக்கு விடுதிகள் கிடைப்பதில் இருக்கும் சிக்கல்களைப் போக்குவதில் முனைப்புடன் செயல்பட்டார். சங்கப் பொறுப்பில் இல்லாத காலகட்டத்திலும் இவர் ஆற்றிய சங்கப் பணி அப்போது இருந்த அனைவருக்கும் தெரியும். 
       தானும், தன் குடும்பமும் வறுமையான சூழ்நிலையில் இருந்த போதும் எளிமை, நேர்மை, உண்மை ஆகிய நற்பண்புகளைக் கொண்டவராக திகழ்ந்தார்.  ஆசிரியர் பணியேற்ற பிறகு மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நல்ல வழிகாட்டியாகத் திகழ்ந்தார். ஏற்கெனவே தான் பெற்றிருந்த  அனுபவங்களைக் கொண்டு  பள்ளி அலுவலகச் செயல்பாடுகளிலும் பங்கெடுத்துக்கொண்டார்.
       சில மாதங்களாகவே சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் காரணமாக கைவிரலில் சிறிய அறுவை சிகிச்சை செய்து வீட்டில் ஓய்வில் இருந்தார் முத்தரசு. கடந்த ஜூலை 17 அன்று அதிக காய்ச்சல் காரணமாக ஆரம்ப சுகாதார நிலையம் சென்ற இவர்,  பின்னர், தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தாலுகா மருத்துவமனையில் மருத்துவர்கள் சோதித்தபோது ஏற்கனவே இறந்துவிட்டார் என்றும், கொரோனா பரிசோதனை செய்த பின்னரே உடல் ஒப்படைக்கப்படும் என்றும் கூறிவிட்டனர். 
               18.07.2020 அன்று இவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
       போர்க்குணம் நிரம்பிய முத்தரசு மரணத்திற்குப் பின்பும் போராடவேண்டியிருந்தது. அரசு விதிமுறைகளின்படி, மருத்துவமனை நிர்வாகமே அடக்கம் செய்யும் எனவும்,  அதற்குரிய இடத்தை தேர்ந்தெடுக்கும்படியும் கூறினார்கள்.  
       ஆனால் அவர் பிறந்த ஊரிலோ, மருத்துவமனை இருக்கும் ஊரிலோ எதிர்ப்பு காரணமாகவும், சூழ்நிலை காரணமாகவும் அடக்கம் செய்ய இயலவில்லை. பின்னர் அரசு அதிகாரிகளுடனும், காவல்துறை அதிகாரிகளுடனும், பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கமும், மருத்துவமனை நிர்வாகமும் பேசி அவர் பணியாற்றிய நெம்மேலி கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டார். அவருடைய மனைவி, ஆறாம் வகுப்பு படிக்கும் மகன், மைத்துனர் மூன்று பேரையும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு தனிமைப்படுத்திக்கொள்ள வலியுறுத்தினர் மருத்துவர்கள்.
       சமூக ஆர்வலரான திரு.சு.முத்தரசு மறைந்தது கொடுமையான நிகழ்வுதான். அவ்வாசிரியரின் குடும்பத்திற்கு பணி மற்றும் பண பலன்கள் கிடைக்க உதவுவதே அவ்வாசிரியருக்கு நாம் செலுத்தும் அஞ்சலி ஆகும். அதோடு, இன்றைய பொதுவாழ்வில் இருப்பவர்கள் அவர் வாழ்விலிருந்து கற்றவற்றைச் செயல்படுத்தி பார்வை மாற்றுத்திறனாளிகள் சமூகத்தை முன்னேற்ற முயல்வது அவருக்கு நாம் செய்யும் சரியான நன்றிக்கடன். 
(கட்டுரையாளர் மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அரசு ஆண்கள் மே.நி. பள்ளியின் முதுகலை ஆங்கில ஆசிரியர்)
தொடர்புக்கு: sbalajiteacher@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக