கவிதை: நான் யார்? - அனல்ராஜா

graphic பார்வையற்ற ஒருவர் ஊன்றுகோலோடு நடந்து செல்லும் நிழலுருவப் படம்

 

சங்கம் வளர்த்த மதுரையில் பிறந்து,

சங்கமமாகாத வைகையில் திரிந்து,

அங்கம் புழுதிபட, அரைவயிறு சோற்றுக்காக,

அல்லும் பகலும் அலைந்து திரிந்த

அதிசயம் நான்!

 

பேனா பிடிக்கும் பேராசை இருந்தும்

எழுத முடியாத எழுத்தாளன் நான்!

 

பேசும் பேராற்றல் நிறையவே இருந்தும்

மேடை ஏறாத பேச்சாளன் நான்!

 

கனவில் வரும் காட்சியைக்

கற்பனை கலந்து கவி நயத்தோடு கூறியும்

கவிதை தொகுக்காத கவிஞன் நான்!

 

உள்ளத்தில் கள்ளம் வைத்து

நெஞ்சத்தில் வஞ்சம் வைத்து

எளியவரை ஏமாற்றி வாழும்

இந்த இருண்ட உலகில்

 

நல்லுள்ளம் ஒளியெனக் கொண்டு

நாளும் உழைத்து உயர்ந்திடத் துடிக்கும்

சிறுவன் நான்!

 

சுற்றிவரும் சொந்தமின்றி

பெற்ற புகழ் இன்பம் இன்றி

கட்டிச் சுகம் கொட்டித் தரும்

பெட்டிப் பணம் எதுவுமின்றி

பட்டுத்துணி, பகட்டுநகை,

ஆளும் பேரும்,  ஆனை சேனை

இத்தகைய எதுவுமின்றி

 

கற்ற தமிழ் கையிலேந்தி

உற்ற துணை எனவே கொண்டு

சுற்றி வரும் இளைஞன் நான்!

 

ஒட்டிய வயிரும் கொண்டு

ஒருவேளை சோறு உண்டு

வற்றிய உடலும் கொண்டு

வற்றாத துணிவும் கொண்டு

 

சுற்றி வந்த சொந்தமெல்லாம்

சுமை என்று விட்டபோதும்

பற்றிய கோளின் துணையைக் கொண்டு

எட்டிய உலகமெல்லாம்

எனதென நடக்கும்

எளிய இளைஞன் நான்!

 

விடிந்த பொழுதெல்லாம் வீணாகப் போனதென்று

எதிர்காலம் என்னவென்று தெரியாமல் காத்திருக்கும்

என் இனிய சொந்தங்களே!

 

எறும்புக்கும் காலமுண்டு இறைவனது படைப்பிலே!

ஓடுமீன் ஓட உறுமீன் வரும்வரை

வாடி இருக்கும் கொக்கு போல

போன வாய்ப்பெல்லாம் போனதென்று இருக்கட்டும்.

இனி வரும் வாய்ப்பிற்காக எதிர்பார்த்து காத்திருப்போம்!

எதிர்வரும் வாய்ப்புதனை இழக்காமல் காத்து நிற்போம்!

 

இன்பமும் துன்பமும் ஒன்றுதான் எனக் கொள்பவனுக்கு

என்றுமே துயரம் இல்லை

அந்த எமனுக்கும் பயமுமில்லை

 

(கவிஞர் மதுரை மாவட்டம் சோளங்குருணி என்ற சிற்றூரில் வசித்துவருகிறார். 10-ஆம் வகுப்பு வரை படித்த இவர், தற்போது பழைய இரும்புப் பொருட்களைப் பெற்று, விற்றுவருகிறார்).

தொடர்புக்கு: 8668000606

6 கருத்துகள்:

 1. தேர்ந்த வார்த்தைகள்.
  சிறந்த கவிதை.

  பதிலளிநீக்கு
 2. அற்புதமான வார்த்தைகள் கவிதையின் நடையில் அற்புதமாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் என்னுடைய பெயர் முனிய பிள்ளை நான் கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலத்தில் வசித்து வருகிறேன் தற்பொழுது நான் இளங்கலை மூன்றாம் ஆண்டு மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் படித்து வருகிறேன் உங்களுடைய இந்த எளிய நடை ஆனது இந்தக் கவிதையின் எளிய நடை ஆனது மிகவும் அருமையாக இருக்கிறது உங்களுடைய முயற்சியும் தொடரட்டும் உங்களுடைய புகழ் ஓங்கட்டும் வாழ்க வளர்க புகழ் நன்றி

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் மீண்டும் என்னுடைய பெயர் முனிய பிள்ளை உங்களுடைய இந்த கவிதையின் எழுத்து எளிய நடை யானது மிகவும் அருமை ஒரு கவிஞனைப் போல இன்னும் ஒரு கவிஞனை நாம் உருவாக்கிக் கொள்ளலாம் என்ற வகையில் நான் உங்களை ஒரு கவிஞன் என்று தான் அழைப்பேன் நன்றி

  பதிலளிநீக்கு
 5. தங்களது கவிதை மிகச் சிறப்பு

  பதிலளிநீக்கு
 6. சிறப்பு வாழ்த்துக்கள். மற்றவர்களை போன்று நமது பார்வையற்ற பாமர படைப்பாளிகளுக்கும் வாய்ப்பு கொடுக்கும் விரல்மொழியர் வாழ்க. இந்த கவிஞரை தொடற்சியாக எழுத ஊக்குவிங்கள். நமது ஆதரவு என்றும் தொடரும். வாழ்த்துகள் கவிஞரே!

  பதிலளிநீக்கு