விளையாட்டு: `தோனி என்னும் ஆளுமை’ - கா. லாரன்ஸ் ஜோசப் ஜெபரத்தினம்

graphic MS Dhoni

       இந்திய கிரிக்கெட் வரலாற்றைப் பார்க்கும்போது (டெஸ்ட் – 1932 முதல்; ஒரு நாள் கிரிக்கெட் 1974 முதல்; டி-20 கிரிக்கெட் 2006 முதல்..)  அதன் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் பல வீரர்கள் பல நிலைகளில் தூண்டுகோலாக இருந்திருக்கின்றனர். அந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச அரங்கில் உயர்ந்து நிற்க, அணியை வழிநடத்திய தலைவர்கள் காரணமாக இருந்துள்ளனர்.       அவர்களில்  முக்கியமானவர் மகேந்திர சிங் தோனி. டிசம்பர் 23 2004-இல் அதாவது, சுனாமி ஆசியாவில் பல பகுதிகளைத் தனது கோரத் தாண்டவத்தால் சின்னாபின்னம் செய்வதற்கு மூன்று நாள்களுக்கு முன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை சர்வதேச அளவில் தொடங்கிய தோனி, ஆகஸ்ட் 15, 2020 அன்று சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வுபெறுவதாக அறிவித்தார். அதனை முன்னிட்டு இக்கட்டுரையை எழுதுகிறேன். தோனி இந்திய கிரிக்கெட்டுக்குச் செய்துள்ள அளப்பரிய பங்களிப்புகள், தனி வீரராக, இந்திய அணித் தலைவராக அவர் செய்துள்ள சாதனைகள் மற்றும் பல நிலைகளில் தோனி மீது வைக்கப்படக்கூடிய குற்றச்சாட்டுகள் என்ற வகையில் இக்கட்டுரையை வடிவமைத்துள்ளேன்.

      2004 ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் கிரீம் சுமித் தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்திய அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடச் சுற்றுப்பயணம் செய்தது. டெஸ்ட் போட்டிகள் தொடங்கும் முன் இந்தியா அணியுடன் ஒரு பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி ஆடியது. அந்த அணியின் விக்கெட் கீப்பராக இருந்த தோனி, தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்தபோது அந்த அணியின் தலைவர் கிரீம் சுமித்தை 86 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அசத்தலாக ஸ்டம்பிங் செய்து அவுட் ஆக்கினார். இந்தச் செய்தி அன்றைய தினத்தந்தி நாளிதழில்  படத்துடன் வெளியாகியிருந்தது. இந்தச் செய்தி வழியாகத்தான் தோனி என்னும் ஒரு வீரர் இருக்கிறார் என நான் முதன்முதலில் தெரிந்துகொண்டேன்.       அக்காலம், இந்திய அணிக்கு ஒரு நல்ல தரமான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மன் கிடைப்பாரா எனத் தேடிக்கொண்டிருந்த காலம். அந்த நிலையில்தான் தோனி, வங்கதேச அணிக்கெதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார். இப்படி இந்திய அணியில் இடம்பிடித்த தோனி, ஒரு அதிரடி பேட்ஸ்மனாக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி, உலக கிரிக்கெட் அரங்கின் ஆகச்சிறந்த அணித் தலைவராகவும் எண்ணற்ற சாதனைகளைச் செய்த வீரராகவும் உருப்பெற்றார். 

பேட்டிங் சாதனைகள்

      350 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ள தோனி 10773 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 73 அரைசதங்களும் 10 சதங்களும் அடங்கும்.  உலகக் கிரிக்கெட் அரங்கில் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மன் ஒரு நாள் போட்டிகளில் அடித்துள்ள இரண்டாவது அதிகப்பட்ச ரன் எண்ணிக்கை இதுவாகும். ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனால்  அடிக்கப்பட்ட ரன்கள் எண்ணிக்கையில் முதல் இடத்தில் இலங்கை அணியின் குமார சங்ககரா 404 ஒரு நாள் போட்டிகளில் 14234 ரன்கள் எடுத்துள்ளார்.

      இந்திய அளவில் தோனி அடித்துள்ள ரன்களே  ஒரு நாள் போட்டிகளில் ஒரு இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மன் அடித்த அதிகப்பட்ச ரன் எண்ணிக்கை. இதற்கு முன், நயன் மோங்கியா 140 ஒரு நாள் போட்டிகளில் 1272 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய வீரர்கள் டெண்டுல்கர், கங்குலி, டிராவிட் ஆகிய வீரர்களையடுத்து ஒரு நாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்கள் அடித்தவர் தோனிதான்.

      டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை 90 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள தோனி 4876 ரன்களை எடுத்துள்ளார். இதில் 33 அரைசதங்களும் 6 சதங்களும் அடங்கும். இதன்மூலம் அதிக ரன்கள் அடித்த இந்திய டெஸ்ட் விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் தோனி. இதற்கு முன் சையத் கிர்மானி 88 டெஸ்ட் போட்டிகளில் அடித்திருந்த 2759 ரன்களே சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஒரு இந்திய விக்கெட் கீப்பர் அடித்த அதிகபட்ச ரன் எண்ணிக்கையாக இருந்தது.

      அதுமட்டுமல்லாது, 2013-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கெதிராக சென்னை சேப்பாக்கம் எம்..சிதம்பரம் மைதானத்தில் தோனி விளாசிய 240 ரன்கள்தான் ஒரு இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மன் அடித்த முதல் டெஸ்ட் இரட்டை சதம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், 98 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 1617 ரன்கள் எடுத்துள்ளார்.

நாட் அவுட் நாயகன்

      ஒரு நாள் போட்டிகளில் 297 இன்னிங்ஸ்களில் பேட் செய்துள்ள தோனி 84 முறை நாட் அவுட் ஆக இருந்துள்ளார். இதற்கு முன் தென் ஆப்பிரிக்க வீரர் ஷான் போலக், இலங்கை அணி வீரர் சமிந்தா வாஸ் ஆகியோர் தலா 72 முறையும் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் பெவன் 68 முறையும் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் நாட் அவுட்-ஆக இருந்துள்ளனர். அதனோடு, டெஸ்ட் போட்டிகளில் 114 இன்னிங்ஸ்களில் 16 முறையும் டி20 போட்டிகளில் 85 இன்னிங்ஸ்களில் 42 முறை நாட் அவுட் வீரராக தோனி இருந்துள்ளார்.

விக்கெட் கீப்பிங் கிங்

graphic MS Dhoni wicket keeping photo

      பேட்டிங்கில் மட்டுமல்லாது விக்கெட் கீப்பிங்கிலும் தோனி செய்துள்ள சாதனைகள் அதிகம். 90 டெஸ்ட் போட்டிகளில் 166 இன்னிங்ஸ்களில் 256 கேட்ச் 38 ஸ்டம்பிங் எடுத்துள்ளார் தோனி. தோனிக்கு முன் சையத் கிர்மானி 80 டெஸ்ட் போட்டிகளில் 151 இன்னிங்ஸ்களில் கீப்பிங் செய்து எடுத்திருந்த 160 கேட்ச் 38 ஸ்டம்பிங் என்பதே ஒரு இந்திய விக்கெட் கீப்பர் செய்த சாதனையாக இருந்து வந்தது. கேட்ச் பிடிப்பதில் கிர்மானியை விட முன்னிலை பெற்றுவிட்ட தோனியால் ஸ்டம்பிங் எண்ணிக்கையில் கிர்மானியைச் சமன் செய்யவே முடிந்துள்ளது.

      சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்ச் எடுத்த விக்கெட் கீப்பர்கள் வரிசையில் மார்க் பவுச்சர் (தென் ஆப்பிரிக்கா: 1997 – 2012: 532 கேட்சுகள்) ஆடம் கில்கிறிஸ்ட்: (ஆஸ்திரேலியா: 1999 – 2008: 379 கேட்சுகள்) இயன் ஹீலி (ஆஸ்திரேலியா: 1988 – 1999: 366 கேட்சுகள்) ரொட் மார்ஷ் (1970 – 1984: 343 கேட்சுகள்) ஆகியோரைடுத்து ஐந்தாவது இடத்தில் உள்ளார் தோனி. மேலும், அதிக ஸ்டம்பிங் செய்தவர்களின் பட்டியலில் பெர்ட் அவுட்ஃபீல்டு (ஆஸ்திரேலியா: 1920 – 1937: 52 ஸ்டம்பிங்); காட்ஃப்ரே இவான்ஸ் (இங்கிலாந்து: 1946 – 1959: 46 ஸ்டம்பிங்) ஆகியோரைடுத்து தோனி மூன்றாவது இடத்தில் உள்ளார்.

      சர்வதேச ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை 321 கேட்சுகள் 123 ஸ்டம்பிங் எடுத்துள்ளார் தோனி.  ஒரு நாள் போட்டிகளில் 100 ஸ்டம்பிங் செய்த முதல் கீப்பர் தோனியே ஆவார். அடுத்த நிலையில் குமார சங்ககரா 99 ஸ்டம்பிங் செய்து இரண்டாவது இடத்தில் உள்ளார். கேட்சுகளைப் பொறுத்தவரை கில்கிறிஸ்ட் (ஆஸ்திரேலியா: 1999 – 2008: 417 கேட்சுகள்) மார்க் பவுச்சர் (தென் ஆப்பிரிக்கா: 1997 – 2012: 402 கேட்சுகள்) சங்ககரா (இலங்கை: 2000 – 2015: 383 கேட்சுகள்) ஆகியோரையடுத்து தோனி நான்காவது இடத்தில் உள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு வீக்கெட் கீப்பராக 57 கேட்சுகள் 34 ஸ்டம்பிங் எடுத்துள்ள தோனி இரண்டிலுமே முதல் இடத்திலுள்ளார். 

ஆகச்சிறந்த அணித் தலைமை

      2007-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற நிலையில் அதே ஆண்டு ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணிக்கும் 2008-இல் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணிக்கும் தலைவரானார் தோனி. டி20 போட்டிகளைப் பொறுத்தவரை அதிகப் போட்டிகளுக்குத் தலைவராக இருந்தவர்களின் பட்டியலில் 72 போட்டிகளுடன் முதல் இடத்திலுள்ளார் தோனி. இவற்றுள் 41 வெற்றிகள், 28 தோல்விகள், 1 டை, 2 நோ ரிச்ல்ட் என ரெக்கார்டு வைத்துள்ளார்.

      200 ஒரு நாள் போட்டிகளில் அணித் தலைவராக இருந்து 100 வெற்றிகள், 74 தோல்விகள், 11 நோ ரிசல்ட் பெற்றுள்ளார். சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா: 2002- 2012: 230 போட்டிகள்) ஸ்டீஃபன் ஃப்ளமிங் (னியூசிலாந்து: 1997 – 2007: 218 போட்டிகள்) ஆகியோரையடுத்து அதிகப் போட்டிகளுக்குத் தலைவராக இருந்தோர் பட்டியலில் தோனி மூன்றாவது இடத்தில் உள்ளார். எனினும் சர்வதேச ஒரு நாள் ஆட்ட வரலாற்றில் இவரது தலைமையில் தான் அதிகப்படியாக 5 ஆட்டங்கள் டையில் முடிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

      டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் கிரீம் சுமித் (தென் ஆப்பிரிக்கா: 2003 – 2014: 109 டெஸ்ட்) ஆலன் பார்டர் (ஆஸ்திரேலியா: 1984 – 1994: 93 டெஸ்ட்) ஸ்டீஃபன் ஃப்ளமிங் (நியூசிலாந்து: 1997 – 2006: 80 டெஸ்ட்) ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா: 2004 – 2010: 77 டெஸ்ட்) கிளைவ் லாய்டு (மேற்கிந்திய தீவுகள்: 1974 – 1985: 74 டெஸ்ட்) ஆகியோரையடுத்து தோனி 6ஆவது இடத்தில் 60 டெஸ்ட் போட்டிகளுக்கு அணித் தலைவராக இருந்துள்ளார். இவற்றில் 27 வெற்றிகள், 18 தோல்விகள், ஒரு டை, 14 டிரா ஆகியவை அடங்கும்.

      தோனி இந்திய அணித் தலைவராக இருந்த காலக் கட்டத்தில் 2007 டி20 உலகக் கோப்பை, 2010-இல் ஒரு நாள் போட்டிகளுக்கான ஆசியக் கோப்பை, 2011-இல் ஒரு நாள் போட்டிகளுக்கான உலகக் கோப்பை, 2013-இல் சாம்பியன்ஸ் கோப்பை ஆகிய கோப்பைகளை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2009-இல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி முதலிடம் பிடித்தது. இந்திய டெஸ்ட் அணியின் 77 ஆண்டு டெஸ்ட் வரலாற்றில் (1932 – 2009) டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்தது அதுவே முதன்முறையாகும்.

      இவை தவிர, தனது அணியிலுள்ள வீரர்கள் ஒவ்வொருவருக்கும் என்ன என்ன கூடுதல் திறமை இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதனை வெளிக்கொண்டு வர வாய்ப்புகள் தரும் பண்பு தோனிக்கே உரிய தனி இயல்பு என்கிறார் Dr. U. மகேந்திரன் (உதவிப் பேராசிரியர், தியாகராஜர் கல்லூரி சென்னை). இக்கருத்தை நோக்கும்போது என் நினைவுக்கு வரும் வீரர்கள் கேதார் ஜதவ் மற்றும் அம்பத்தி ராயுடு. இருவரும் .பி.எல் போட்டிகளின் வழி  விக்கெட் கீப்பர்களாக அறிமுகமானவர்கள். இருவரும் பந்து வீசும் திறமை உள்ள வீரர்கள் என்பதைக் கண்டறிந்து ஆஃப் ஸ்பின்னர்களாகச் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் பயன்படுத்தியவர் தோனி தான். அதனுடன் 2007 டி-20 உலகக் கோப்பைப் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பவுள் அவுட் நடக்கும்போது இந்திய அணி சார்பாக பந்து வீசிய மூன்று வீரர்களில் ஒருவரான அதிரடி பேட்ஸ்மன் ராபின் உத்தப்பாவின் திறமையும் இதே வகையில் தோனியால் கண்டுபிடிக்கப்பட்டதேயாகும்.

      அதேபோல, எதிர் அணித் தலைவர்களும் வீரர்களும் சற்றும் எதிர்பாராத விஷயங்கள் சிலவற்றையும் தோனி செய்யக்கூடியவர். இது குறித்து எனது பள்ளிக் காலம் தொட்டு நண்பனாக இருந்துவரும் லோ. சதிஷ் (ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர், ஜெய்கோபால் கரோடியா மேல் நிலைப் பள்ளி திருவொற்றியூர் சென்னை) கூறுகையில், தோனி பவுளர்கள் பந்து வீசும்போது வர்களை வழி நடத்தும் விதம் வியக்க வைப்பதாக இருக்கிறது. ஸ்பின் பவுளர்களான குல்டீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், கேதார் ஜாதவ், சில சமயங்களில் அஷ்வின் முதலிய வீரர்கள் பந்து வீசும்போது அவர்களின் கைதான் பந்து வீசுமே தவிர, இன்ன இடத்தில் இன்ன விதமான பந்து வீச வேண்டும் என அவர்களை வழி நடத்துபவர் தோனியாகவே இருந்துள்ளார். அப்படி எப்போதெல்லாம் தோனியின் ஆலோசனையின்படி அவர்கள் பந்து வீசுகிறார்களோ அவர்களுக்கு விக்கெட் கிடைத்திருக்கிறதுஎன்று தோனியின் வழிநடத்தும் பண்பைப் பாராட்டுகிறார். மேலும், ஃபில்டு செட் செய்வது, பவுலர்களை மாற்றம் செய்வது, குறிப்பிட்ட பேட்ஸ்மன்களுக்குக் குறிப்பிட்ட பவுலர்களைப் பயன்படுத்துவது, பவுலர்களைப் பிட்சின் குறிப்பிட்ட இடத்தில்  பந்து வீச அழைப்பது, கோண மாற்றங்கள் முதலிய பல விஷயங்களில் தோனி  கைதேர்ந்தவர் எனச் சொல்லி,  வருங்காலத்தில் இத்தகையதொரு தனித் திறமையினால் தோனியை இந்திய அணி மிஸ் பண்ணும்என்கிறார் சதீஷ்.

      மேற்சொன்ன தோனிக்கே உரிய திறன்களை நினைக்கும்போது எனக்கு நினைவில் வருபவை 2007 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கடைசி ஓவரில் பாகிஸ்தான் வெற்றிபெற 12 ரன்களும் இந்திய வெற்றிபெற 1 விக்கெட்டும் தேவை என்ற நிலையில் அனுபவம் வாய்ந்த ஸ்பின்னரான ஹர்பஜன் சிங்கிடம் பந்தைத் தராமல் இளம் மீடியம் பேஸ் ஆல்ரவுண்டர் ஜொகிந்தர் ஷர்மாவிடம் பந்தைக் கொடுத்து பவுல் செய்ய வைத்து இந்தியாவை வெற்றிபெறச் செய்தது; 2013 சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் கடைசி ஓவரை ஸ்பின்னர் அஷ்வினிடம் கொடுத்து இங்கிலாந்தை வீழ்த்தியது; 2014இல் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியின் 320 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பேட் செய்த இங்கிலாந்து அணி 146-க்கு 4 விக்கெட் என்ற நிலையிலிருந்து 203-க்கு ஆல் அவுட் செய்ய இஷாந்த் ஷர்மாவை ரவுண்ட் தி விக்கெட் கோணத்திலிருந்து பேட்ஸ்மன்களின் உடம்பை நோக்கி ஷார்ட் பிட்ச் பவுளிங் செய்யச் சொல்லி அதற்கேற்ற ஃபீல்டு வைத்து இஷாந்த் அந்த இன்னிங்சில் 7 விக்கெட்டுகளைச் சாய்க்க  இங்கிலாந்து அணியை வீழ்த்தியது முதலிய இனிய தருணங்கள்.

      தோனி என்னும் அணித் தலைவர் குறித்து எனது நண்பர் பெரியான் (ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர் அரசினர் உயர் நிலைப் பள்ளி உளுந்தூர்பேட்டை) கூறுகையில், “சர்வதேச அளவில் அணித் தலைவர்களாக விளங்கிய பல வீரர்கள் தங்கள் அணி வெற்றி பெறவேண்டும் என்பதற்காகச் சில குறுக்கு வழிகளைக் கையாளக்கூட தயாராக இருந்த கட்டத்தில், தன் தலைமையிலான அணி வெற்றிபெற்றாலும் தோல்வியடைந்தாலும் ஒரே இயல்பைக் கடைப்பிடித்து விளையாட்டின் இறையாண்மை கெடாத வகையில் விளையாடியவர் தோனி. இந்த வகையில் பல அணி வீரர்களுக்கும் ஏன் அணித் தலைவர்களுக்குமே கூட முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்என்று கூறி மகிழ்கிறார். நண்பர் பெரியான் கடந்த 2009-அம் ஆண்டுமுதல் வீரராகவும் 2016 முதல் அணித் தலைவராகவும் புதுச்சேரி பார்வையற்றோர் கிரிக்கெட் அணியில் விளையாடி வருகிறார் என்கிறவகையில் ஒரு கிரிக்கெட் வீரராகத் தனது பதிவைத் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

      தோனி எதிரணி வீரர்களையும் மதிக்கக் கூடியவர், அவர்களிடம் சிறந்த விளையாட்டுத் திறம் காட்டக்கூடியவர் என்பதை 2011 இயான் பெல் ரன் அவுட் சம்பவத்தை டிரண்ட் பிரிட்ஜில் நடந்த 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 2 இன்னிங்ஸ் பேட்டிங் செய்தபோது தேநீர் இடைவேளைக்கு முந்திய கடைசிப் பந்தில் 157 ரன்கள் எடுத்திருந்த இயான் பெல் ரன் அவுட்  ஆக, அதன்பின் தோனி இயான் பெல்லைத் திரும்பவும் அழைத்து பேட் செய்யவைத்த நிகழ்வினை முன்னிறுத்தி எடுத்துரைக்கிறார் நண்பர் கோகுல் கார்த்தி (வங்கி ஊழியர், கனரா வங்கி, பொள்ளாச்சி கிளை).

ராப்பிட் ரன்னர் (ரன் ஓடி எடுக்கும் தனித் திறம்)

graphic தோனி ஆடுகளத்தில் ரன் ஓடி எடுக்கும் படம்

      கிரிக்கெட் விளையாட்டில் ரன் ஓடி எடுப்பது என்பதே தனி கலை. அதில் கைதேர்ந்த வீரராக தோனி விளங்கினார் என்றால் அது சற்றும் மிகையாகாது. இது குறித்து நண்பன் லோ. சதீஷ் கூறுகையில்,  பொதுவாக ரன் ஓடும்போது முழுமையாக ரன்னை ஓடி முடிக்க முடியாமல் ரன் அவுட் ஆகும் வீரர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.  முதலாவது, மெதுவாக ஒடி ரன் அவுட் ஆகும் வீரர்கள்; இரண்டாவது, துடுக்குத்தனமாக ஓடி ரன் அவுட் ஆகும் வீரர்கள். தோனி இவ்விரண்டு வகையிலும் சேராதவராகவே விளங்கினார். அதிகமான ரிஸ்க் எடுத்து ரன் ஓடுவதைப் பெரிதும் விரும்பாதவர் தோனி. அப்படியும் ரிஸ்க் எடுக்கிறார் என்று சொன்னால் இறுதி ஓவர்களில் பேட் செய்யும்போதோ அல்லது மிக நெருக்கடியான சூழலிலோ மட்டுமே ரிஸ்க் எடுத்து ரன் ஓட முற்படுவார். அதனுடன், இறுதி ஓவர் சமயங்களில் ஒரு ரன்னை இரண்டு ரன்னாகவும் இரண்டு ரன்னை மூன்று ரன்னாகவும் மாற்றும் அளவுக்கு மிகவும் வேகமாக ஒடக்கூடிய வீரர் தோனி. இவர் வருவதற்கு முன் யுவராஜ் சிங், முகம்மது கைஃப்  ஆகியோர் வேகமாக ரன் ஓடக்கூடிய வீரர்களாக அறியப்பட்டிருந்தனர். எனினும் தோனி வந்த பிறகே இறுதி ஓவர்களில் வேக வேகமாக ரன் ஓடி எடுக்கும் பழக்கம் இந்திய அணியினுள் பரவலாக வந்ததுஎனக் கூறுகிறார். இத்தகைய சிறப்புகள் தோனியின் ரன் ஓடும் தன்மைக்கு இருப்பினும், தோனிதான் சர்வதேசப் போட்டிகளில் எதிர்கொண்ட முதல் மற்றும் கடைசி பந்துகளில் ரன் அவுட் ஆன வீரர் என்பதையும் நினைவுபடுத்துகிறார் சதீஷ்.

 

அபரிவிதமான மூளைக்காரர்

graphic Indigo paints signs MS Dhoni as ambassador images

      தோனி தனது அபரிவிதமான மூளையைப் பயன்படுத்தி கிரிக்கெட்டின் வழி எந்த எந்த வழிகளிலெல்லாம் பணம் ஈட்ட முடியுமோ அவற்றையெல்லாம் மிகத் திறம்படவே செய்தவர் என்னும் பதிவினை எனக்குப் பள்ளி பின் அணியில் (2007 – 2014) படித்த தம்பி சிவமணி (இளம் முனைவர் பட்ட ஆய்வாளர் ஆங்கிலத் துறை அண்ணா பல்கலைக்கழகம் சென்னை) கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், கிரிக்கெட் விளையாடுதல் தவிர, தனக்குக் கிடைத்த விளம்பர காண்டிராக்டுகள், சக வீரர்களுக்கு அவர் பிடித்துக் கொடுத்த விளம்பர காண்டிராக்டுகள் தொடங்கி, தனது தன் வரலாற்று நூல் உருவாக்கம் மற்றும் விற்பனை வரை எல்லாச் செயல்பாடுகள் வழியாகவும் பணம் ஈட்டும் முறையினை தோனி நன்றாகவே அறிந்திருந்தார். அவற்றின் மூலம் எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியுமோ அவ்வளவையும் சம்பாதித்தார்எனச் சொல்லி தோனியின் அபரிவிதமான மூளைச் செயல்பாட்டினைக் கண்டு வியந்ததாகவும் கூறுகிறார்.

கவர்ந்திழுக்கும் ஹீரோ

      தனது செயல்பாடுகளால் ஒரு ஹீரோவாக தோனி காட்சி தருகிறார் எனக் கூறி மகிழ்கிறார் Dr. U. மகேந்திரன். அதற்குச் சான்றாக 2011- உலகக் கோப்பை போட்டிகள் முழுவதும் மோசமாக பேட் செய்து வந்த நிலையிலும் இறுதிப் போட்டியில் சிறப்பாக ஆடியாகவேண்டும் என்ற இக்கட்டான சூழலில் களமிறங்கி ஆட்டத்தின் போக்கை மாற்றி திறம்பட முடித்து வைத்து உலகக் கோப்பையை இந்தியாவின் வசமாக்கிய தருணங்களை நினைத்து மகிழ்கிறார் மகேந்திரன். ரசிகர்களை மட்டுமல்லாது சக வீரர்களையும் கவர்ந்தார்.

மேலும் சில

      பொதுவாக ஒரு வீரர் ஒரு விளையாட்டை விளையாடுவதால் அவருக்குப் பெருமை கிடைப்பதுண்டு. ஆனால் ஒரு வீரரால் அந்த விளையாட்டுக்கே பெருமை என்பது அந்த வீரருக்குக் கிடைக்கக்கூடிய புகழின் உச்சம் எனலாம்.  சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த நிலையில்,  ஏன் அவருக்குச் சமமாக நினைக்கத்தக்கவர் தோனிஎன்னும் தனது பதிவைக் கொடுத்துள்ளார் நண்பர் பெரியான். அதற்கு இன்னும் வலுசேர்க்கும் வகையில், “உலக கிரிக்கெட் வீரர்களை நான் இரண்டாகப் பிரிக்கிறேன். ஒன்று சச்சின் டெண்டுல்கர். இரண்டாவது மற்ற அனைத்து வீரர்கள்எனச் சச்சின் குறித்து ஆண்டி ஃபிளவர் குறிப்பிட்ட கருத்தை மேற்கோள் காட்டி, இத்தகைய புகழுக்குத் தோனி கண்டிப்பாக முழு தகுதியுடையவர் என எடுத்துக் காட்டுகிறார் பெரியான். 

தோனி மீது வைக்கப்படக்கூடிய விமர்சனங்கள்

      விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவராக எவரும் இருக்க முடியாது என்ற வகையில் மேற்சொன்ன இத்துணை புகழுக்கும், பெருமைகளுக்கும் சொந்தக்காரராகிய தோனியும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதே உண்மை. அவ்வகையில் தோனி மீது வைக்கப்படக்கூடிய விமர்சனங்களை இங்கு எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

வீரர்கள் மீது பாரபட்சம்

      இந்திய அணியின் தலைவராகத் தோனி இருந்தபோது தனக்கு உகந்த வீரர்கர்ளுக்கு மட்டுமே அணியில் விளையாட வாய்ப்பளித்தார். அதிலும் .பி.எல் போட்டிகளில் தான் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸில் சில வீரர்களை மட்டும் வளர்த்து விடுவதில் குறியாக இருந்தார் என்பது அவர் மீதான முதன்மை குற்றச்சாட்டு. தோனி தலைமை காலத்து அணியும் சி.எஸ்.கே வீரர்கள் நிரம்பிய அணியாகத்தான் இருந்தது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. சுரேஷ் ரெய்னா, ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, முரளி விஜய் முதலிய வீரர்கள் அணியில் நிரந்தர வீரர்களாக இருந்தனர். மேலும் மன்பிரீத் கோனி, மோஹிட் ஷர்மா முதலிய சி.எஸ்.கே வீரர்கள் இந்திய அணியில் ஆடும் வாய்ப்பைப் பெற்றார்கள். சி.எஸ்.கே அணி அல்லாத வீரர்கள் என்றால் ரோஹிட் ஷர்மா, இஷாந்த் ஷர்மா முதலிய வீரர்கள் தோனியின் நம்பிக்கைக்குரிய வீரர்களாக விளங்கினர். அவர்கள் சிறப்பாக விளையாடினாலும், விளையாடாவிட்டாலும் தொடர்ந்து அணியில் இருந்தார்கள் என்பது உண்மை.

      மேற்சொன்ன வீரர்கள் அணியில் இருக்க வேண்டும் என்பதற்காக அமித் மிஷ்ரா, பிரக்யான் ஓஜா, அஜின்கியா ரஹானே, மனோஜ் திவாரி, மனிஷ் பாண்டே, யூசுஃப் பதான், சவ்ரவ் திவாரி, அம்பத்தி ராயுடு, ஸ்டுவர்டு பின்னி, எஸ். பத்ரிநாத், ராபின் உத்தப்பா முதலிய வீரர்கள் புறந்தள்ளப்பட்டார்கள். இவர்களில்  அஜின்கியா ரஹானெ மட்டும் தனக்குக் கிடைத்த டெஸ்ட் வாய்ப்புகள் வழியாக வெளி நாட்டு ஆடுகளங்களில் மிகச் சிறப்பாக விளையாடி தனது இடத்தை நிலைப்படுத்திக் கொண்டார்.

      புறம் தள்ளப்பட்ட வீரர்களில் கவுதம் கம்பீர், இர்ஃபான் பதான் முதலிய மூத்த வீரர்களும் அடக்கம்.  தனக்கென நம்பிக்கையான வீரர்களை அணியில் கொண்டுவருவதற்காகவே கங்குலி, டிராவிட் முதலிய அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்களை ஒரு நாள் போட்டிகளுக்கான அணியிலிருந்து நீக்கினார் என்றும் கூறலாம்.

        தோனியின் இந்த நிலை சி.எஸ்.கே அணியிலும் வெளிப்பட்டிருக்கிறது. அபினாவ் முகுந்த், பாபா அபராஜித் போன்ற வீரர்களை வளர்த்தெடுக்க வாய்ப்புகள் அளிக்கவில்லை. இன்றைய அளவில் தமிழகத் தலைநகரான சென்னையை மையமாக கொண்டு விளையாடும் சி.எஸ்.கே அணியில் தவிர்க்க முடியாத அளவில் முக்கிய வீரராகத் தமிழக வீரர் ஒருவர் கூட இல்லை என்பது மிகவும்  வருந்தத்தக்கது என்பதுடன், தோனியின் பாரபட்ச மனோபாவத்துக்கு வலுவான சான்றாகும். 

விக்கெட் கீப்பர்களைப் புறம் தள்ளியது

      தோனி அணித் தலைவராக இருக்கும்வரை இந்திய அணியில் ஒரு பேட்ஸ்மனாக விளையாடும் வாய்ப்பு கூட அவரது சமகால அல்லது  இளைய விக்கெட் கீப்பர்களுக்கு அவரால் வழங்கப்படவில்லை என்பதும் தோனி மீதான விமர்சனங்களில் ஒன்று. அத்தகைய மனோபாவம் தோனி ஓய்வுபெற்ற பிறகு அவருக்கு மாற்றாக ஒரு நல்ல விக்கெட் கீப்பரைத் தேடிக் கண்டறியவேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு இந்திய  அணியைத் தள்ளியுள்ளது. தினேஷ் கார்த்திக்குக்கு வெறும் 15 சர்வதேச ஒரு நாள் போட்டிகள், 10 டி20 போட்டிகளில் ஆடும் வய்ப்பு கிடைத்தது. மற்ற வீரகளான பார்த்திவ் பட்டேல் 5 ஒரு நாள் போட்டிகள், ஒரு டி20 போட்டி;  ரித்திமன் சஹாவுக்கு ஒரு டெஸ்ட் என மிகச் சொற்பமான வாய்ப்புகளே வழங்கப்பட்டன.

      மேலும் .பி.எல். போட்டிகளில் விக்கெட் கீப்பர்களாக விளையாடிய கேதார் ஜாதவ், அம்பத்தி ராயுடு முதலிய வீரர்களைப் பந்து வீசும் ஆல்ரவுண்டர்களாக வளர்க்க தோனி முற்பட்டார். இதன்மூலம் தனக்குப் போட்டியாக ஒரு விக்கெட் கீப்பர் வளர்வதைத் தோனி விரும்பவில்லை என்பது தெளிவாகிறது.

சக வீரர்கள் மீதான நம்பிக்கையின்மை

      தனது அணியிலுள்ள சக வீரர்கள் மீது நம்பிக்கையில்லாமல் எல்லா பளுவையும் தன்மீது போட்டுக்கொண்டு அணிக்குத் தோல்வியைத் தேடித் தந்தவர் தோனி என்னும் கருத்தினை தோனி மீதான விமர்சனமாகப் பதிவிடுகிறார் நண்பர் லொ.சதீஷ். இங்கிலாந்து அணிக்கெதிராக 2014-இல் நடந்த டி20 போட்டி ஒன்றில் கடைசி ஓவரில் 2 பந்துகள் மீதம் இருக்க, 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சூழலில்கூட சக வீரரும் தரமான பேட்ஸ்மனுமான அம்பத்தி ராயுடுவை நம்பாமல், ஒரு ரன் எடுக்கும் சூழல்கள் வந்தபோது எடுக்காமல் கடைசி பந்தில் அவரும் தேவையான 3 ரன்களை அடிக்காமல், எளிதாக வெற்றி பெற்றிருக்கக்கூடிய ஆட்டத்தில் அணியைத் தோல்வியடையச் செய்த சம்பவத்தை எடுத்துக் காட்டுகிறார் சதீஷ். 

தனது இயல்பான திறனை நம்பாமை

      தோனி இயல்பாக அடித்து ஆடும் இயல்புள்ள வீரர். ஆனாலும் தன்னை ஒரு நிதான ஆட்டக்காரராகப் பரிணமித்துக்கொண்டார் எனக் கூறும் நண்பர் இரா.அரவிந்த் (வங்கி ஊழியர், பாங்க் ஆஃப் பரோடா, சென்னை பாண்டிபஜார் கிளை) பல வேளைகளில் அடித்து ஆடும் இயல்பை நம்பாமல் அணியைச் சரிவில் தள்ளியுள்ளார் என்றும் தம் கருத்தைப் பதிவிடுகிறார்.  இது குறித்துக் கூறும் சதீஷ், நிதானமாக ஆடும் திறனை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தித் தேவையான வேளைகளில் அதிரடி ஆட்டம் ஆடும் இயல்பு தோனிக்கு அறவே மங்கிவிட்டது. எனினும் அதனை அவரே ஒத்துக்கொள்ளாமல் தன்னை ஒரு ஃபினிஷராகவே பாவித்து வந்துள்ளார். இவ்வாறாக நிதான ஆட்டத்தை அளவுக்கு அதிகமாக ஆடி,  அடித்து ஆடும் தனது இயல்பான ஆட்டத்தை நம்பாமல்,  அதனை மழுங்க வைத்துவிட்டார்என்கிறார்.

பேட்டிங் சராசரி குறித்த தன்னல எண்ணம்

      எதிர்கொள்வதற்குச் சுலபமான ஆடுகளச் சூழல்கள் மற்றும் வலு குறைந்த பந்துவீச்சாளர்கள் உள்ள அணிகளுக்கு எதிராக சற்று முன்பாகவே களமிறங்கி மட்டை வீசுவதும், கடினமான சூழல்கள் மற்றும் வலுவான அணிகளுக்கு எதிராகப் பின்வரிசையில் களமிறங்குவதற்காகப் பிற வீரர்களை முன்பு இறக்கி விடுவதும் தோனி செய்த தந்திரங்கள் எனலாம். தனது சராசரி பெருமளவு குறையாமல் பார்த்துக் கொள்வதற்கு இப்படி ஒரு விஷயத்தைச் செய்தார் என்றும் சொல்ல முடியும். அதற்குக் காரணம் அதிக அளவில் நாட் அவுட் இன்னிங்ஸ்கள் கிடைக்கும். அதனோடு சராசரியும் உயரும் என்பதைத் தோனி மிகத் தெளிவாகவே அறிந்திருந்தார்.

      தோனி தொடக்கக் காலத்தில் அடித்த இரண்டு சதங்களை  நம்பர் 3 வீரராக களமிறங்கியே அடித்தார். அப்படியிருந்த சூழலில் அவர் அணித் தலைவரானதும் தொடர்ந்து நம்பர் 3 பேட்ஸ்மனாகவே விளையாடியிருக்கலாம். ஒரு அடித்து ஆடும் வீரர் என்னும் நிலையிலிருந்து ஒரு நிலைத்து நின்று விளையாடும் வீரராக தன்னைப் பரிணமித்துகொண்ட தோனி ஏன் நம்பர் 3 வீரராகத் தனது பேட்டிங்கைத் தொடர்ந்திருக்கக் கூடாது? என நண்பர் சதீஷ் எழுப்பும் கேள்வியும் இங்கு நினைவுகூறத்தக்கது. அதற்கும் பேட்டிங் சராசரி மீதான தன்னல எண்ணமே காரணம்.

      2011-இல் நடந்த 50 ஓவர் உலகக்கோப்பைப் போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான லேக் போட்டியில் 43-ஆவத ஓவரில் அணியின் ஸ்கோர் 4 விக்கெட் இழப்பிற்கு 270-ஆக இருந்தபோது களமிறங்கிய தோனி,  ஒரு முனையின் 21 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக நிற்க, மறுமுனையில் மளமளவென விக்கெடுகள் சரிவதைத் தடுக்கவோ ரன்களை அடித்துக் குவிக்கவோ எவ்வித முயற்சியும் செய்யாதிருந்தார். அதன் விளைவு 49.1 ஓவர்களில் 296 ரன்களுக்குச் சுருண்டது இந்திய அணி.  அந்தச் சூழலிலும் கூட  தான் மட்டும் நாட் அவுட்டாக நிற்பதில் கவனமாக இருந்தார். இதனையும் அவரின் பேட்டிங் சராசரி மீதான தன்னல எண்ணத்தின் வெளிப்பாடாகக் கொள்ளலாம். 

சர்ச்சைக்குரிய கருத்து வெளிப்பாடும் முடிவுகளும்

graphic MS Dhoni Press meet image

     அணியில் பிளவுகள் தோன்றும் வகையில் பேட்டிகள் அளித்து தேவையில்லாத சர்ச்சைகளைத் தோனி உருவாக்கினார் என்கிறார் நண்பர் சதீஷ். அதற்குச் சான்றாக  2012-இல் ஆஸ்த்ரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் பாங்க் முத்தரப்புத் தொடரின்போது தோனி அளித்த ஒரு பேட்டியில் தனது அணியில் உள்ள மூத்த வீரர்களை மெதுவான ஃபீல்டர்கள் எனச் சொல்லி அணிக்குள் தேவையில்லாத சலசலப்புகளை உருவாக்கிய நிகழ்வை எடுத்துக் காட்டுகிறார்.

      அதே போல, “2014-இல் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இன்னும் ஒரு டெஸ்ட் மீதமிருக்க, திடீரென்று எவரும் எதிர்பாராத வகையில் தோனி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்து வெளியேறியது இவற்றில் இன்னும் உச்சமான சர்ச்சைக்குரிய முடிவு. தோனி போன்ற ஒரு அணித் தலைவர் அப்படிச் செய்திருக்கக் கூடாதுஎன்று தன் கருத்தைக் கூறுகிறார்  நண்பர் சதீஷ். மேலும், நடப்பு .பி.எல் தொடர் ஐக்கிய அரபு எமரேட்டுகளில் நடக்கவுள்ள சூழலில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வீரர்கள் கொரோனா தொற்று அதிகமாகவுள்ள சென்னையில் 5 நாள்கள் பயிற்சி செய்ததன் விளைவாகக் கொரோனா தொற்றுக்கு உள்ளாகவும் தோனி காரணமாக இருந்துள்ளார் என்கிறார் சதீஷ்.

      அதேபோல, “எளிதாக வெற்றி பெறும் சூழலிலும் கூட இறுதிவரை ஆட்டத்தைக் கொண்டுசென்று சில வேளைகளில்  அணியின் தோல்விக்குக் காரணமாக இருந்துள்ளார் தோனிஎன்கிறார் நண்பர் இரா.அரவிந்த். 

வெளிநாட்டு ஆடுகளங்களில் தொடர் தடுமாற்றங்கள்

      தோனி தான் அடித்துள்ள 16 சர்வதேச சதங்களில் (10 ஒரு நாள் சதங்கள், 6 டெஸ்ட் சதங்கள்) ஒரு சதம் கூட வெளி நாட்டு ஆடுகளங்களில் அடித்ததில்லை. வெளி நாட்டு ஆடுகளங்களில் அவருடைய பேட்டிங்  போலவே டெஸ்ட் போட்டிகளில் அவருடைய அணித் தலைமைப் பண்பும் தடுமாற்றம் கண்டுள்ளது. குறிப்பாக 2011 உலகக் கோப்பைப் போட்டிகள் முடிந்தபின் பயிற்சியாளர் கேரி கர்ஸ்டன் விடைபெற்ற பிறகு இந்தத் தடுமாற்றம் அதிகம் என்றே சொல்லிவிடலாம்.

      அவ்வகையான தடுமாற்றங்கள் வெளி நாட்டுச் சூழல்களில் தொடர்ச்சியான டெஸ்ட் தோல்விகளாக எதிரொலித்திருக்கின்றன. 2011-12 சீசனில் இங்கிலாந்து ஆஸ்திரேலிய அணிகளிடம் 4 டெஸ்ட் தொடர்களை 4 – 0 என்ற கணக்கிலும், 2011இல் மீண்டும் இங்கிலாந்திடம் 4 டெஸ்ட் தொடரை 2 – 1- என்ற கணக்கிலும், அதே ஆண்டில் தென் ஆப்பிரிக்கா, நீயூசிலாந்து ஆகிய அணிகளிடம் 2 டெஸ்ட் தொடர்களில் 1 – 0 என்ற கணக்கிலும் தொடர்ச்சியான தோல்விகள் இன்றளவும் தோனியின் அணித் தலைமையில் பெரும் கரும்புள்ளிளாக நிலைக்கும் அளவுக்கு அமைந்துவிட்டன என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

முடிவாக

graphic உலக கோப்பையை வென்று அந்தக் கோப்பையைக் கையில் ஏந்தி நிற்கும் தோனியின் தலைமையிலான அணியின் படம்

     தோனி என்னும் ஆளுமையின் மீது மேற்சுட்டிய இத்தனை விமர்சனங்கள் இருப்பினும் பல நிலைகளில் சாதனைகள் செய்த வீரர் மற்றும் அணித் தலைவர் என்பதில். மாற்றுக் கருத்தில்லை. எப்படி சச்சினுக்கு பேட்டிங் அவருடைய இரத்தத்தில் ஊறியது போன்ற ஒரு விஷயமோ, அது போல தோனிக்கு கீப்பிங் என்பது இரத்தத்தில் ஊறிய விஷயம்  என்னும் நண்பர் பெரியான் கருத்து இங்கு நினைக்கத்தக்கது. ஒரு உயர்தரமான விக்கெட் கீப்பராக, ஒரு நல்ல பேட்ஸ்மனாக, ஒரு ஆகச்சிறந்த அணித் தலைவராகப் பலவகைகளில் உலகக் கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென ஒப்பற்ற ஓர் இடத்தினைப் பெற்றிருக்கிறார் மகேந்திர சிங் தோனி என்பது தெள்ளத் தெளிவாகிறது.

 

(கட்டுரையாளர்: சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்மொழித் துறையில் முனைவர் பட்ட ஆய்வு செய்துவருகிறார்.)

 தொடர்புக்கு: lawrencejjc@gmail.com  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக