புகழஞ்சலி: பிரெயில் பதிப்பிலும் பங்களித்தவர் க்ரியா ராமகிருஷ்ணன் - ரா. பாலகணேசன்

            

             graphic க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களின் படம்
க்ரியா ராமகிருஷ்ணன்

       மிக முக்கியத் தமிழ் பதிப்பாளரான க்ரியா எஸ். ராமகிருஷ்ணன் நவம்பர் 17, 2020 அன்று காலமானார். தமிழ் மொழி மீதும், பண்பாட்டின் மீதும் தீராக் காதல் கொண்டவர் இவர்.

      தான் உருவா        க்கிய                 க்ரியா பதிப்பகத்தின் மூலம் பல புதுமைகளை நிகழ்த்திக்காட்டிய                வர். புத்தகத்தின் உள்ளடக்கத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், வடிவமைப்பிலும் தீவிர அக்கறையைச் செலுத்தி, மிகத் தரமான நூல்களை வெளியிட்டவர் இவர். பதிப்புலகிற்குள் வருவதற்கு முன் விளம்பரத் துறை                    யில் பணியாற்றியதாலோ என்னவோ, விளம்பரத்திற்குத் தேவையான நேர்த்தி, குறிப்பிட்ட அளவிற்குள் தரமாக வடிவமைத்தல், தொடர்ந்து புதுமைகளைச் செய்தல் ஆகிய பண்புகள் இவரை ஆட்கொண்டன. இதனால், தமிழ் மொழி புது பலமும், வளமும் பெற்றது.

      1974-இல் தொடங்கப்பட்டது க்ரியா பதிப்பகம். சுந்தரராமசாமி, அம்பை, பூமணி, இமயம் முதலிய ஆகச் சிறந்த படைப்பாளர்களின் புத்தகங்கள் க்ரியாவால் வெளியிடப்பட்டன. இலக்கியத்தைத் தாண்டி, வரலாறு, தொழில்நுட்பம், பொருளாதாரம் என்று பல துறை சார்ந்த நூல்களும் இப்பதிப்பகத்தால் வெளியிடப்பட்டன. வெவ்வேறு மொழிகளிலிருந்து தமிழுக்கு வந்த நூல்கள் அதுவரை ஆங்கிலம் வழியாகவே பெரும்பாலும் மொழிபெயர்க்கப்பட்டன. அந்த நிலையை மாற்றி, ஜெர்மன், பிரெஞ்சு முதலிய மொழிகளிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல்களைத் தந்தது க்ரியா பதிப்பகம்.

      க்ரியா  பதிப்பகத்தைத் தாண்டி, தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்கள் சிலவற்றை வடிவமைப்பதிலும் இவர் பெரும்பங்காற்றியிருக்கிறார். தவிர்க்கவே முடியாத தமிழ் அடையாளங்களாகிப் போன ரோஜா முத்தையா ஆய்வு நூலகம், கூத்துப் பட்டறை ஆகிய அமைப்புகளை உருவாக்கியதில் முக்கியப் பங்காற்றியவர் இவர்.

      தமிழ் மொழிக்குக் கிடைத்த மிகச் சிறந்த செம்மைப்படுத்துபவர் (editor) இவர் என்று தமிழறிந்தோர் இவரைப் புகழ்கின்றனர்.

க்ரியாவின் தற்காலத் தமிழகராதி

      ராமகிருஷ்ணன் என்ற தனிநபரின் கடும் உழைப்பின் சாட்சியாய் நிற்கிறது இந்தப் புதுமையான தமிழ் அகராதி. 1985-இல் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு, 1992-இல் முதல் பதிப்பு வெளியானது. 2009-இல் இரண்டாம் பதிப்பும், இந்த நவம்பரில் மூன்றாம் பதிப்பும் கண்டிருக்கிறது இந்த அகராதி. மூன்றாம் பதிப்பில் திருநர்கள் (transgenders) பயன்படுத்தும் பல சொற்கள் இணைக்கப்பட்டிருப்பதாக அகராதி தயாரிப்புக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

graphic க்ரியாவின் தற்காலத் தமிழகராதி புத்தகத்தின் அட்டைப் படம்
 

       ஓர் அரசாங்கமோ, கல்விப் புலமோ செய்யவேண்டிய வேலையை, ஒரு தனிநபர் அல்லது ஒரு பதிப்பகம் மேற்கொண்டிருப்பது வியப்பிற்குரியது. இந்திய மொழிகளில் ஒரு அகராதி 3 பதிப்புகளைக் காணும்வரை செம்மைப்படுத்திய ஒருவர் என்ற பெருமை பெற்றவராக க்ரியா ராமகிருஷ்ணனைத் தவிர வேறொருவர் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று பெருமிதம் பொங்கச் சொல்கிறார்கள் தமிழ் எழுத்தாளர்கள். “தெற்காசிய மொழிகளிலேயே இத்தகைய சிறந்த அகராதியைக் காண இயலாதுஎன்று உறுதியாகச் சொல்கிறார் இஸ்ரேலியத் தமிழறிஞர் டேவிட் ஷூல்மன்.

      இவையெல்லாமே தமிழறிந்த சான்றோர் ஏற்கெனவே பல இதழ்களில் படித்த செய்திகளாக இருக்கும். க்ரியா ராமகிருஷ்ணன் அவர்கள் பார்வை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் பிரெயில் முறையில் புத்தகம் வெளியிடுவதில் எவ்வளவு ஆர்வமாக இருந்தார் என்ற பெருமைக்குரிய செய்தியை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?      இதுவரை இவர் குறித்து நான் படித்த எந்தக் கட்டுரையிலும் இது இடம்பெற்றதில்லை. நமக்கென அவர் ஆற்றிய பங்கை நாம் தானே வெளிப்படுத்தவேண்டும்?

பிரெயில் பதிப்பிற்கு உதவிய க்ரியா

      க்ரியா தற்காலத் தமிழகராதியின் இரண்டாம் பதிப்பு 2011 பிப்ரவரி 25-ஆம் நாள் பிரெயிலில் வெளியிடப்பட்டது. மதுரை மாவட்டம் சுந்தரராஜன் பட்டியில் உள்ள IAB பிரெயில் அச்சகத்தில் பிரெயில் வடிவம் பெற்றது இந்த அகராதி.

      இந்த அகராதிக்குப் பிரெயில் வடிவம் கொடுக்கும் பெருமைக்குரிய பணியில் நானும் இணைந்திருந்தேன். தமிழ் பிரெயிலில் அதுவரை தமிழ் அகராதிகள் வெளியிடப்பட்டதில்லை. இந்தப் புத்தகத்தை எப்படி வடிவமைப்பது என்பது குறித்தே பல அமர்வுகள் நாங்கள் விவாதித்து முடிவெடுத்தோம். அப்போது தொடங்கி புத்தகம் வெளியிடப்பட்ட நிமிடம் வரை பல திறப்புகளை எனக்கும், என்னோடு பணியாற்றிய நண்பர்களுக்கும் அள்ளிக் கொடுத்த புத்தகம் இது.

      52 தொகுதிகள், 5000-க்கும் மேற்பட்ட பிரெயில் பக்கங்கள் என்று தமிழ் பிரெயிலில் இதுவரை வெளியான அளவில் பெரிய நூலும் இதுதான். இதற்கான மென்பதிப்பை (soft copy) க்ரியா வழங்கியது.

          “மென்பதிப்பை வழங்கியது மட்டுமில்லை; புத்தகம் தயாரிப்புச் செலவுக்கான நிதி நல்குபவர்களையும் க்ரியா ராமகிருஷ்ணன்தான் ஏற்பாடு செய்து தந்தார்என்கிறார் இந்த அகராதிப் பணியின் பொறுப்பாளராக இருந்த திரு. நா. ரமணி.

ரமணி ஐயா அவர்களின் புகைப்படம்

      ஆம். Cognizant technology solutions அமைப்பின் நிதி நல்கையுடன் தயாரிக்கப்பட்ட இந்த அகராதி தமிழகத்தின் பல பகுதிகளில் இருக்கும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்புகளுக்கும் இலவசமாக அனுப்பிவைக்கப்பட்டது. தமிழகம் தாண்டி, இலங்கை, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

புத்தகக் கண்காட்சியில் பிரெயில் புத்தகங்கள்

      புத்தகக் கண்காட்சியில் க்ரியா அரங்கில்க்ரியா தற்காலத் தமிழ் அகராதிபிரெயில் புத்தகம்  இடம்பெற்றது. அதுதான் பிரெயில் புத்தகங்கள் புத்தகக் கண்காட்சியில் இடம்பெறுவதற்கான தொடக்கமானது. தொடர்ந்து, IAB பிரெயில் அச்சகம் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிகளில் தனக்கென ஒரு அரங்கை அமைக்க இது உதவியது.

இன்னும் சில நூல்கள்

graphic க்ரியா பதிப்பக வலைதளத்தின் முகப்புப் பக்கம்
க்ரியா பதிப்பக வலைதளத்தின் முகப்புப் பக்கம்

       தற்காலத் தமிழ் அகராதி தவிர, இன்னும் க்ரியா பதிப்பக வெளியீடுகளான சில நூல்களும் பிரெயில் வடிவம் பெற்றிருக்கின்றன. நன்னூல் கூழங்கைத் தம்பிரான் உரை, பேராசிரியர் நுஃமான் எழுதியஅடிப்படைத் தமிழ் இலக்கணம்’, பிரெஞ்சு மொழிபெயர்ப்பு நூலானகுட்டி இளவரசன்’, இமயம் எழுதியகோவேறு கழுதைகள்’, அவரது புகழ்பெற்ற சிறுகதையானபெத்தவன்உள்ளிட்ட நூல்கள் இன்னும் IAB பிரெயில் அச்சகத்தில் கிடைக்கின்றன.

மனிதநேயம் மிக்கவர்

graphic க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களின் படம்
க்ரியா ராமகிருஷ்ணன்

      பதிப்புப் பணியில் கறாரான அணுகுமுறையைப் பின்பற்றுபவராகக் கருதப்படும் க்ரியா ராமகிருஷ்ணன் மேற்கண்ட புத்தகங்களின் மென்பதிப்பை IAB பிரெயில் அச்சகத்திற்கு இலவசமாகவே வழங்கினார். மேலும், “பல புதுமையான படைப்புகளைத் தரமாக  வெளியிட்ட க்ரியா பதிப்பகத்தால் பெரிய லாபம் பெற முடிந்தது என்றும் கூறிவிடமுடியாதுஎன்கிறார் நா. ரமணி. IAB பிரெயில் அச்சகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்த நா. ரமணி, க்ரியா பதிப்பகத்தின் பல வெளியீடுகளில் பிழை திருத்துநராக (proof reader) பணியாற்றியவர்.

      நா. ரமணி அவர்கள் கூறிய இன்னொரு செய்தி க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களுக்கு என் மனதில் சிம்மாசனம் அளித்து அமரவைத்துவிட்டது. “தனது பதிப்பிலிருந்து வெளியான பிரெயில் நூல்கள் மட்டுமின்றி, பல நூல்களை இலங்கையில் வாழும் தமிழ் பேசும் பார்வைக் குறையுடையோர் பயன் பெறும் வகையில் இலவசமாக அனுப்பிவைத்தவர் ராமகிருஷ்ணன்”.

        மொழி மீது அவர் கொண்டிருந்த காதலும், பார்வை மாற்றுத்திறனாளிகள் மீதும், அவர்களது அறிவு வேட்கையின் மீதும் அவர் கொண்டிருந்த கரிசனனமும்தான் இவற்றைச் சாத்தியமாக்கியிருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் எல்லாப் பதிப்பகங்களும், மொழி சார்ந்த அமைப்புகளும், தமிழ் மொழி வளர்ச்சி மீது அக்கறை கொண்ட அனைவரும் தமிழ் மொழியின் வளர்ச்சியில் தமிழ் பிரெயில்  வளர்ச்சியையும்  உள்ளடக்கிச் செயல்பட்டால் பார்வை மாற்றுத்திறனாளிகளும் அறிவு வளம் பெறுவர்; அவர்கள் பதிப்புகளும் புதுப் பொலிவு பெறும்.

 

தொடர்புக்கு: balaganesan2285@gmail.com

3 கருத்துகள்:

  1. ஆமாம் இந்திய பார்வையற்றோர் சங்கத்தால் வெளியிடப்பட்ட இந்த தற்கால தமிழ் பேரகராதி வெளியீட்டு விழாவில் சென்னை பல்கலைக் கழகம் சார்பாக நான் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிட்டியது. கட்டுரையாளர் மேலே கட்டுரையில் பார்வையற்றோருக்கான அமைப்புக்கு மட்டும் கொடுத்ததாக கூறியிருக்கின்றார். இல்லை புகழ் பெற்ற பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் பிற கல்வி நிறுவனங்களுக்கும் இந்த புத்தகம் இலவசமாகவே வழங்கப் பட்டன. அதில் அவர் பேசியது இன்னும் என் செவிப்பறையில் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றது. இதில் எனக்கு எந்த லாபமும் இல்லை. ஆனால் ஒரு சமூகமே இதனால் மிகப்பெரிய மொழி லாபத்தை அடைய போகின்றது என்பதை நினைக்கும் போது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியவர்.. இந்த க்ரியாவின் தற்கால தமிழ் ஆங்கிலப் பேரகராதி பிரெயில் பதிப்பு இலவசமாகவே வழங்கப்படும் என்று கூறி முடித்தார். பிறகு அந்த நிறுவனம் அதனை எப்படி கடைபிடித்தார்கள் என்று தெரியாது. ஆனால் ராமகிருஷ்ணனை பொருத்தவரை அவருடைய முயற்சியால் உருவான மிகப்பெரிய படைப்பு அனைத்து எல்லைகளையும் சென்றடைய வேண்டும் என்பதே.

    பதிலளிநீக்கு
  2. ஜெயராமன் தஞ்சாவூர்4 டிசம்பர், 2020 அன்று PM 8:24

    அருள் உள்ளத்தோடு நம் சமுதாயத்திற்கு நற்பணி ஆற்றிய அந்த ஆத்மா இறைவன்
    திருவடியில் இளைப்பாறட்டும்.

    பதிலளிநீக்கு