இலக்கியம்: மணிமேகலையில் ஒருங்கிணைந்த பண்பாட்டுத் தலைநகரங்கள் - முனைவர் - மு. ரமேசு

    

       ஒருங்கிணைந்த பண்பாட்டுத் தலைநகரம் என்பது Metropolitan city என்கிற தொடரின் தமிழாக்கமாகும்.

      ஒரு நாடும், சமுதாயமும் சிறப்பாக இயங்கவும், வளர்ச்சியடையவும் இரவு பகல் பாராமல் உழைக்கும் தொழிலாளர்களைத் தாங்கும் நகரம் இத்தகைய தகுதியைப் பெறுகிறது. உற்பத்தி, வணிகம், அரசியல், கல்வி, மருத்துவம், சமயம் போன்ற துறைகளைச் சார்ந்த மக்கள் சாதி, மதம், பாலினம், வயதுவரம்பு, மொழி போன்ற எல்லைகளைக் கடந்து கொண்டும், கொடுத்தும் கலந்து இனிதாக மக்கள் வாழும் நகரம் ஒருங்கிணைந்த பண்பாட்டுத் தலைநகரமாகும். இத்தகைய நகரங்கள் ‘மாநகரங்கள்’  என்று இக்காலத்தில் சுட்டப்படுகின்றன. இவ்வகையில் தற்போது தமிழகத்தில் 15 மாநகரங்கள் உள்ளன.

        2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்டைய தமிழகத்தில் இந்தக் கருத்தோட்டத்தில் தலை நகரங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. சங்க இலக்கியத்திலும், இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலையிலும் பூம்புகார், மதுரை, வஞ்சி, காஞ்சி ஆகிய தலை நகரங்கள் மாநகர் எனவும் மூதூர் எனவும் விளக்கப்படுகின்றன. மணிமேகலை காப்பியத்தில் விவரிக்கப்படும் இந்த நகர அமைப்புகள் குறித்து இப்போது பேசலாம்.

நகரங்கள்:

      தெற்காசியா முழுதும் உள்ள பெரிய நிலப்பரப்பை மணிமேகலை காப்பியம் தனது கதைக் களமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில் பல தரப்பட்ட நாடுகளின் தலை நகரங்கள், பண்பாட்டு நகரங்கள், துணை நகரங்கள் விவரிக்கப்படுகின்றன.

        மணிமேகலை காப்பியத்தில் அசோதர நகரம், இடவயம், உஞ்சை, கச்சையம், கபிலை, காண்ச்சனபுரம், காஞ்சி, பூம்புகார், கொற்கை, கோசாம்பி, சம்பைநகரம், சிங்கை நகரம், சித்திபுரம், சேடி, மதுரை, நாகபுரம், வஞ்சி, வயணங்கோடு, வாரனாசி, ஆகிய நகரங்கள் விவரிக்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் அரசியல், பண்பாட்டு, தத்துவ நகரங்களாகவும், தலை நகரங்களாகவும் வரலாற்றுப் போக்கில் தகவமைத்துக் கொண்டவை.

      இவற்றோடு சில தீவுகளும் விவரிக்கப்படுகின்றன. இரத்தின தீவம், இலங்கா தீவம், சம்புத் தீவம், சிறுதீவு இரண்டாயிரம், பெருந்தீவு நான்காயிரம், மணிப்பல்லவம் ஆகியவையும் விளக்கப் பெறுகின்றன.

      பண்டைத் தமிழகத்தில் பூம்புகார், மதுரை, வஞ்சி, காஞ்சி ஆகிய நகரங்கள் ஒருங்கிணைந்த பண்பாட்டுத் தலைநகரங்களாக இருந்தவை. வஞ்சி மாநகரத்தைத் தவிர்த்து மற்ற மூன்று தலை நகரங்களைச் சங்க இலக்கியமும், சிலப்பதிகாரமும் சற்று விரிவாக விவரிக்கின்றன. 

graphic சேர, சோழ, பாண்டியர் ஆண்ட பண்டைய தமிழக பகுதிகள் வரைபட வடிவில்
 

       குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால் பட்டிணப்பாலையும், பொருனராற்றுப்படையும் பூம்புகார் நகர அமைப்பையும், மதுரைக்காஞ்சி மதுரை மாநகர அமைப்பையும், பெரும்பாணாற்றுப்படை காஞ்சி மாநகர அமைப்பையும் சிறப்பாக விளக்குகின்றன. சேர அரசர்களின் காப்பியமான சிலப்பதிகாரம் கூட வஞ்சி மாநகரத்தின் அமைப்பை எடுத்துரைக்கவில்லை சேர அரசர்களின் வெற்றிச் சிறப்புகளை வியந்து பேசும் சிலப்பதிகாரத்தின் வஞ்சிக்காண்டத்தில் கூட வஞ்சி மாநகர அமைப்பு விவரிக்கப்படவில்லை. உண்மையில் வஞ்சி மாநகரமும் ஒருங்கிணைந்தப் பண்பாட்டுத் தலை நகரமாக இருந்தது என்பதை மணிமேகலை காப்பியம் எடுத்து விளக்குகிறது.

கழிவு நீர்வடிகால் வசதி:

      வஞ்சி மாநகரத்தைச் சுற்றி மதில்கள் இருந்தன. மதில்களைச் சுற்றி அகழி இருந்தது. அகழியைச் சுற்றி வண்டுகள் பறந்தன. பல வண்ணங்களில் பல வகையான பூக்கள் அகழியில் பூத்திருந்தன. இதனால் வானவில்லில் தைத்த ஆடைபோல அகழி காட்சியளித்தது.

      நாற்றமெடுக்கும் மீன்களும், முதலைகளும் பெருகியிருந்த போதிலும் வாசனை கமழ்ந்தது. இதற்கான காரணம், வாசனைப் பொருள்களைப் பயன்படுத்தும் மக்களால் வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் நீர் சுருங்கை என்னும் வடிகால் வழியாக அகழியோடு இணைக்கப்பட்டிருந்தது.

      இப்போது சுருங்கை என்னும் கழிவுநீர் வடிகால் குறித்து விளக்குவது பயன் தரும்.

சுருங்கைஎன்னும் கழிவு நீர் வடிகால்:

      வஞ்சி மாநகரத்தில் பெய்யும் மழை நீரும், மக்கள் தங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றும் கழிவு நீரும் வெளியில் செல்வதற்கு நிலத்தடியில் வடிகுழாய்கள் அமைக்கப்பட்டிருந்தன. இக்குழாய்கள் கல்லாலும், சுண்ணாம்பாலும் கலந்து உருவாக்கப்பட்டிருந்தன. இதனைச் ‘சுருங்கை’ என மணிமேகலைக் காப்பியம் சுட்டுகிறது. நகரத்தின் அனைத்து வீடுகள் மற்றும் வீதிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர்  அகழிக்குச் செல்லத்தக்க வகையில், அகழியோடு சுருங்கை இணைக்கப்பட்டிருந்தது.

     கழிவுநீர் வடிகால் திட்டம் அல்லது பாதாளச் சாக்கடை திட்டம் எனக் கருதப்படுகிற சுருங்கை அமைப்பு மதுரை மாநகரத்திலும் இருந்தது குறித்து மதுரைக் காஞ்சி விளக்குகிறது.

     வஞ்சி மாநகரத்து மக்கள் தங்களுடைய உடல் அழகுக்காகவும், வாசனைக்காகவும் புத்துணர்ச்சிக்காகவும் பல விதமான வாசனைப் பொருள்களைப் பயன்படுத்தினர். இந்நிலையில் ஆறு வகையில் நறுமணம் மிக்க கழிவு நீர் வெளியேறியது. இப்போது இது குறித்து விளக்கவேண்டும்.

ஆறு வகையான கழிவு நீர் :

1. நீண்ட கறிய கூந்தலை உடைய மகளீர் தங்களுடைய கூந்தலைக் கசக்கிக் கழுவிவிட்ட நறுமணம் மிக்க நீரும், 

2. வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள ‘எந்திரவாவி’ என்கிற நீச்சல் குலத்தில் இளைய ஆண்களும் பெண்களும் வாசனைப் பொருள்களை பூசி விளையாடுகின்ற நீரும்,

3. குடிகளின் காவலனான அரசன் பிறந்த நாளில் மக்கள் கொம்புகளால் செய்யப்பட்ட குப்பிகளில் வாசனையும் வண்ணமும் கலந்த நீரை நிரப்பி ஒருவர் மேல் ஒருவர் தெளித்து (Showering)  செய்து விளையாடும் நீரும் (சிவிறியும் கொம்பும் ஆகிய நீர் வீசும் கருவிகளால் சிதறிய நறுமணக் கலவை நீரும்என பெருமழைப் புலவர் இதனை விளக்குவது குறிப்பிடத்தக்கது.), 

4. நல்ல தவங்களை மேற்கொண்டொழுகும் துறவிகளின் பாதங்களை வஞ்சி மாநகரத்தின் இல்லறமக்கள் கழுவி விடுகின்ற நீரும்,

5. பொதுப் பணிகளைச் செய்யும் மக்களுக்காக மாநகரத்தில் அமைக்கப்பட்டிருந்தத் தண்ணீர்ப் பந்தல்களில் அகில் புகையைக் காட்டி வாசனையோடு அதிலிருந்து கசியும் தண்ணீரும் (இன்றும் கூட புதிதாக கேரளாவிற்கு விருந்தினராகச் செல்வோருக்கு ஒரு விதமான வாசனையுடன் கூடிய மூலிகை வெண்ணீர் வழங்கப்படுவது வழக்கத்தில் இருக்கிறது),  

6. பச்சிலைகள் பலவற்றோடு வாசனைப் பொருள்களைக் கலந்து சாந்து அரைக்கும் செழிப்பான வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும்  தண்ணீர் என வரும் ஆறு வகையான கழிவுநீர் வஞ்சி மாநகரத்திலிருந்து நிலத்தடிக் குழாய்கள் வழியாக அகழிக்குச் சென்றது.

      இதன் காரணமாக மேலே சொல்லப்பட்டது போல அகழி பல வண்ணப் பூக்களோடு நாற்றமில்லாமல் மணம் கமழ்ந்திருந்தது. இதிலிருந்து கழிவு மேலாண்மை மற்றும் நீர் மேலாண்மையில் பழந்தமிழர் அடைந்திருந்த நாகரீக முன்னேற்றத்தை காண முடிகிறது. இந்த வஞ்சி மாநகரம் மதில் அரண்களையும் மாட வாயில்களையும் பெற்றிருந்தது. இனி இவை குறித்து விளக்குவது கடமையாகிறது.

மதிலரணும் மாடவாயிலும் :

      ‘மிளை’ எனச் சொல்லப்படுகிற அடர்ந்த காவல் காடுகளையும், சிற்பங்கள் செதுக்கப்பட்ட வெள்ளி மலைகளையும் அரணாக கொண்டிருந்தது வஞ்சி மாநகரம். காவல் காட்டுக்கும் மதிலுக்கும் இடையில் அகழியிருந்தது. பகைவரைத் தானாகச் சென்று தாக்கும் எந்திரங்கள் மதில்களில் அமைக்கப்பட்டிருந்தன. விண்ணை முட்டும் அளவில் வெண்மையான சுன்னச் சாந்தினால் பூசப்பட்ட நெடுநிலையைப் பெற்று மாடவாயில் சிறந்து விளங்கியது. இந்நெடுநிலை மேல் கொடி பறக்க விடப்பட்டிருந்தது. இந்த மாடவாயில் வழியாகத்தான் வஞ்சி மாநகரத்திற்குள் செல்லமுடியும். மாடவாயில் வழியாக நகருக்குள் நுழைந்தால் பல்கிப் பெருகியுள்ள தொழிலாளர்கள் குடியிருக்கும் வீடுகள் அமைந்த தெருக்களைக் காணமுடியும்.

தொழிலாளர்களின் குடியிருப்புகள்:

      வாயில் காவலர்கள் காக்கும் அகன்ற தெருக்கள் இருந்தன. பல்வேறு மீன்களை விற்கின்ற பரதவரும், உப்புவிற்கும் உமணரும் உமட்டியரும், கள் விற்கும் வலைஞரும் வலைச்சியரும், பிட்டு வாணிகரும், அப்ப வாணிகரும், பஞ்சவாசம் விற்போரும், சிறு வாணிகரும், மண்பாத்திரங்கள் செய்யும் இருங்கோவேளீரும், பசும்பொன் செய்வோர், செம்பொன் செய்வோர், பெரிய மண் பாத்திரங்களைச் செய்வோர், செம்புக் கொட்டிகளும், வெங்களக் கண்ணாரும், செம்பொன் உருக்குத்தட்டாரும், தெய்வங்களை வரைகின்ற ஓவியரும், சித்திரக்காரிகளும், மாலைக் காரர்களும், தோல் தைக்கும் செருமான்களும், ஆடை தையல் காரரும்,  காலத்தைக் கனித்துச் சொல்லுகின்ற காலக்கனிதரும், நல்ல பண் இசைக்கின்ற பாணரும், என அனைத்துத் தொழிலாளர்களும் குடியிருக்கின்ற வீடுகள் அமைந்த அகலமான தெருக்களைக் கொண்டதாக வஞ்சி மாநகரம் இருந்தது. இவற்றோடு முத்துக்கள் கோக்கின்ற தொழிலாளர்கள் தங்கும் தெருவும், வேத்தியல், பொதுவியல் என இரு கூத்துகளையும் ஆடுகின்ற மகளிர் தங்கும் தெருவும், எட்டுவகையான உணவு தானியங்களை விற்கின்ற கூல வாணிகர் வாழும் தெருவும், மாகதர், சூதர், வேதாளிகர் குடியிருக்கின்ற தெருவும், ஆண்களுக்குக் காம இன்பம் அளிக்கின்ற பொதுமகளீர் குடியிருக்கின்ற தெருவும், பிறர் கண்ணுக்குத் தெரியாத நூலைக் கொண்டு வண்ண வண்ண ஆடைகளை உருவாக்கும் கைவினைஞர் வாழுகின்ற தெருவும் இம் மாநகரில் இருந்தன.

      பொன்னை உரைத்து அதன் தரம் காண்போர் வாழுகின்ற தெருவும், பல்வேறு மாணிக்க மணிகளை விற்கும் வாணிகர் தெருவும், வேதங்களை ஓதுகின்ற வேதியர்கள் வாழுகின்ற தெருவும், அரசியல் வாதிகள் வாழுகின்ற தெருவும், அமைச்சர்கள் வாழுகின்ற தெருவும், பெரிய தொழில் அதிபர்கள் வாழுகின்ற தெருவும், படைத்  தளபதிகள் வாழுகின்ற தெருவும், உள்ளிட்ட பல தொழிலாளர்கள் வாழுகின்ற தெருக்கள் வஞ்சி மாநகரில் இருந்தன.  

இவற்றோடு மக்கள் ஒன்று கூடுகின்ற பொது இடங்களும் மாநகரத்தில் அமைக்கப்பட்டிருந்தன.

பொது இடங்கள் :

      பொதுமக்கள் ஒன்றுகூடி உரையாடுவதற்கும், விளையாடுவதற்கும், வழிப்போக்கர் தங்கி இளைப்பாறுவதற்கும் வஞ்சி மாநகரத்தில் பொது மன்றங்கள், சந்தி, சதுக்கங்கள், பூங்காக்கள் அமைக்கப்பட்டிருந்தன. மலைக் காடுகளிலிருந்து புதிதாகப் பிடித்துவரப்பெற்ற யானைகளுக்குப் போர் பயிற்சியளிப்பதற்காக செயற்கையான மலைகள் அமைக்கப்பட்டிருந்தன. புதிதாகக் கொண்டுவரப்பெற்ற குதிரைகளுக்கும் போர் பயிற்சி அளிப்பதற்கான அம்பலம் அமைக்கப்பட்டிருந்தது. யானைப் பாகர், குதிரைப் பாகர் ஆகியோருடைய குடியிருப்புகள் இவ்விடங்களை ஒட்டியிருந்தன. பொதுமக்களின் வழக்குகளை விசாரிப்பதற்காக அறங்கூறும் அவையம் இருந்தது.  

      கடல் கொள்ளும் காலத்தில் பூம்புகாரிலிருந்து வந்த சான்றோர் தங்குவதற்காக பூம்புகாரில் இருந்தது போலவே ஏழு அரங்குகளை உடைய இந்திர விகாரையும்,  புத்தப் பள்ளிகளும் அமைக்கப்பட்டிருந்தன. அங்கே சென்று மணிமேகலை தனது தந்தை கோவலனின் தந்தையான மாசாத்துவன் பாட்டனைச் சந்தித்தாள்.

      இவ்வாறாக நீர்வடிகாலோடு இணைக்கப்பட்ட வீடுகளும், தொழிலாளர் குடியிருப்புகளும், பொழுதுபோக்கு இடங்களும், பொதுமக்கள் தங்கும் இடங்களும், கோவில்களும் வஞ்சிமாநகரில் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தன. மதிலும், அதனை அடுத்து அகழியும் நகரைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.

 

(கட்டுரையாளர் சென்னை நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். மணிமேகலை காப்பியம் குறித்துத் தொடர்ந்து பேசியும், எழுதியும் வருபவர்).

தொடர்புக்கு: arampozhila@gmail.com

 

1 கருத்து:

  1. நல்ல கட்டுறை. நகர வடிவமைப்பில் தலைச்சிரந்தவர்கள் தமிழர்களே. ஆணாள் இன்று அத்தனை திரமைகளையும் கொண்டுபோய் அயல்நாடுகளிடம் அடகு வைக்கிரார்கள் நமது ஆளும் அடிமைகள்.

    பதிலளிநீக்கு