அகிலன் |
தனது டிமிக்கி டப்பா என்ற யூடியூப் சேனலின் வழியாக மக்களை மகிழ்வித்துக்கொண்டிருப்பவர் அகிலன். இவர் 50000 சந்தாதாரர்களைப் (subscribers) பெற்றிருக்கிறார் என்ற செய்தி இவருக்கு மட்டுமல்ல;, ஒட்டுமொத்த பார்வை மாற்றுத்திறனாளிகளையுமே மகிழ்ச்சியடைய வைத்துள்ளது; பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. 50000 சந்தாதாரர்களைப் பெற்றிருக்கும் பார்வையற்றவரால் நடத்தப்படும் முதல் தமிழ் யூடியூப் சேனல் என்ற பெருமையைப் பெறுகிறது ‘டிமிக்கி டப்பா’.
தன் திறமையைக் காட்டி, இந்த இலக்கை எட்டி, பார்வை மாற்றுத்திறனாளிகள் முன்னேறுவதற்கு புது மாற்றுப் பாதையை உருவாக்கியிருக்கும் அகிலன் அவர்களைப் பேட்டி காண்கிறது விரல்மொழியர் ஆசிரியர் குழு.
கேள்வி: உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தை வாசகர்களுக்குத் தரலாமே?
பதில்: எனது பெயர் அகிலன். சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி எனது சொந்த ஊர். அப்பா முன்னாள் இராணுவ வீரர்; அம்மா இல்லத்தரசி; அண்ணன் சேலம் L.N.T. கம்பெனியில் பணிபுரிகிறார். அவரும் பார்வை மாற்றுத்திறனாளி.
எனது படிப்பைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், தொடக்கக் கல்வியை மதுரை தூய மேரி பள்ளியிலும், பத்தாம் வகுப்பு வரை தியாகராசர் மாதிரிப் பள்ளியிலும்,11 மற்றும் 12 வகுப்புகளை அமெரிக்கன் கல்லூரி மே.நி பள்ளியிலும் முடித்தேன். கல்லூரி படிக்க சென்னை சென்ற நான், இளங்கலை ஆங்கிலப் பட்டத்தை லயோலா கல்லூரியிலும், முதுகலை பட்டத்தை புதுக் கல்லூரியிலும் முடித்தேன்.
கே: உங்களது யூடியூப் பயணம் எப்போது தொடங்கியது?
ப: இளங்கலை இரண்டாம் ஆண்டு படிக்கும் பொழுதுதான் விளையாட்டாக யூட்யூப் சேனல் ஆரம்பித்தேன். தொடக்கத்தில் கடலைமிட்டாய் ரிவ்யூ, கமர்கட்டு ரிவ்யூ போன்றவற்றைச் செய்துகொண்டிருந்தேன். அது அதிக பார்வைகளைப் பெற்றுத்தரவில்லை. அப்போதுதான் புல்லாங்குழல் கற்றுக்கொண்டிருந்தேன்.
“நீ கற்றுக்கொள்வதை யூட்யூபில் போட்டால், நாங்களும் கற்றுக்கொள்வோம்” என நண்பர்கள் சொன்னார்கள். அதனடிப்படையில் யூடியூபிலேயே புல்லாங்குழல் வகுப்புகளை எடுக்கத் தொடங்கினேன். அது நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனால் யூடியூப் பார்வைகள் அதிகரிக்கத் தொடங்கின. அப்போதுதான் நல்ல உள்ளடக்கங்களுக்கு மதிப்பிருக்கிறது என்ற விஷயம் புரியத் தொடங்கியது
டிமிக்கி டப்பா சேனலின் படம் |
கே: உங்கள் சேனலின் பெயர் டிமிக்கி டப்பா. அந்தப் பெயருக்கு என்ன அர்த்தம்?
ப: மதுரை பக்கம் டிமிக்கி கொடுத்தல் என்றால் ஏமாற்றுதல் என்று பொருள். எங்கள் சேனலுக்கு வருபவர்கள் துயரத்திற்கு டிமிக்கி கொடுத்துவிட்டு எப்போதும் உற்சாகமாக இருக்கலாம். அதற்காகத்தான் சேனலுக்கு டிமிக்கி டப்பா என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
கே: 50000 சப்ஸ்கிரைபர்ஸை எட்டியதற்காக உங்கள் சேனலில் கவிஞர் சினேகன் அவர்களை அழைத்திருந்தீர்கள். அவர் எப்படி உங்களுக்குப் பழக்கம்?
ப: எனது சேனலில் 20000 சப்ஸ்கிரைபர்ஸ் வரும் பொழுது நான் சினிமா துறையில் நுழைந்துவிட்டேன். நான் தற்போது பல்வகை இசைக் கருவிகளை வாசிக்கும் இசைக் கலைஞராக திரைத்துறையில் வாய்ப்புகளைப் பெற்றுவருகிறேன். அந்தத் தொடர்புகளின் அடிப்படையில் தான் கவிஞர் சினேகன் எனக்குப் பழக்கம்.
கே: நீங்கள் வாசித்த திரைப்படங்கள் மற்றும் இசைத் தொகுப்புகள் குறித்து எங்களோடு பகிர்ந்துகொள்ளலாமே?
ப: கோகுல் அவர்களின் இசையில் வெளிவரும் கன்னட படத்திற்கு இசைக் கருவிகளை வாசித்திருக்கிறேன். அந்தோணிதாசனின் இசைத் தொகுப்பிற்கு நாதஸ்வரம் வாசித்திருக்கிறேன். கானா சுதாகர், கானா பிரபாகர் போன்றோரது இசைத்தொகுப்புகளுக்கும் இசைக்கருவிகளை வாசித்திருக்கிறேன்.
யூட்யூபில் டெர்மினேட்டர் சாங் எனத் தேடினால் ஒரு பாடல் வரும். அப்பாடலில் வரும் நாதஸ்வரம், விசில் மற்றும் பின்னணிக் குரல் அனைத்தையும் நான்தான் கொடுத்திருக்கிறேன். இதற்கான கிரெடிட் பாடலில் எழுத்து வடிவில் கொடுக்கப்பட்டிருக்கும்
அந்தப் பாடலைக் கேட்க இந்த இணைப்பைச் சொடுக்குங்கள்.
கே: சினிமா துறையில் எப்படி நுழைந்தீர்கள்?
ப: முகமது பிலால் அண்ணனின் பரிந்துரையில் ஜெயலலிதா அம்மாவின் நினைவு நாளுக்காக முதன்முதலாக ஸ்டூடியோவில் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. லிட் த லைட் பரத் அண்ணன்தான் சினிமாவுக்கான தொடர்புகளைப் பெற்றுத்தந்தார்.அதுமட்டுமல்லாமல் நான் யூடியூப் சேனலில் வாசிப்பதைப் பார்த்துவிட்டு, பிற யூட்யூப் சேனல் நண்பர்களும் பாடல்களுக்கு வாசிக்க அழைத்தனர். இப்படி பலவகையிலும் புதிய தொடர்புகள் கிடைத்தன. அவற்றை பற்றிக்கொண்டு சினிமா துறைக்குள் நுழைந்தேன்.
சினிமா துறையைப் பொறுத்தவரை நாம் எளிமையாக நுழைய முடியாது. நமக்கு ரெகமெண்டேஷன் இருக்கனும் அல்லது நாம் ரெக்கக்கனைஸ்ஃபுள்ளா இருக்கனும்.
அகிலன் |
கே: நீங்கள் எத்தனை இசைக்கருவிகளை வாசிப்பீர்கள்?
ப: நான் ஐம்பதிற்கும் மேற்பட்ட கருவிகளை வாசிப்பேன். காற்றுக் கருவிகளில்: புல்லாங்குழல், நாதஸ்வரம், கிளாரிநெட், சாக்ஸபோன், மவுத்ஆர்கன், கசு. தோல் கருவிகளில்: தபேலா, மிருதங்கம், கஞ்சிரா, உடுக்கை, பேங்கோஸ், பம்பை. தந்தியும் தோலும் இணைந்த கருவிகளில் பக்குடு, கோபிசந்த், ஷெனாய். தந்தி கருவிகளில்: கிட்டார், வயலின். மின்னணுக்கருவியான கீபோர்ட்.
புல்லாங்குழல்களில் 15 நாடுகளைச் சேர்ந்த பல வகையான புல்லாங்குழல்களை வாசிப்பேன். அத்தனை இசைக்கருவிகளையும் வீட்டிலேயே சொந்தமாக வாங்கி வைத்திருக்கிறேன்.
கே: தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு எதற்கேனும் அழைக்கப்பட்டிருக்கிறீர்களா?
ப: மூன்று மாதங்களுக்கு முன்பு பொதிகை தொலைக்காட்சியில் ‘சென்னை பசங்க’ என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டது. அதில் சென்னையைச் சேர்ந்த கானாபாடகர்கள் பலரும் கலந்துகொண்டு கானா பாடல்களைப் பாடினர். அந்நிகழ்வில் அவர்களுக்கு நாதஸ்வரம் போன்ற பின்னணி கருவிகளை நான்தான் வாசித்தேன்.
கே: இசையின் மீது ஆர்வம் உங்களுக்கு எப்படி வந்தது? உங்கள் குடும்பம் இசைப்பின்னணி கொண்டதா?
ப: அப்படி எதுவுமில்லை. எங்கள் ஊரில் இசையை ரசிப்பார்களே தவிர இசைக்கருவிகளை வாசிக்க மாட்டார்கள். இசைப்பது என்பது வேறொரு ஜாதிக்கான ஒன்றாகவே பார்ப்பார்கள். அம்மாதான் இது தெய்வக் கலை எனக்கூறி, இசைக் கருவிகளை வாசிக்க வேண்டுமென்ற என் ஆர்வத்திற்கு உறுதுணையாக இருந்தார். இன்று நான் சாதித்ததால் ஊரில் உள்ள அனைவருமே என்னை ஏற்றுக்கொள்கின்றனர்.
சிறுவயதில் வீட்டிலுள்ள பாத்திரங்களை வைத்துத் தாளம் போடுவதைப் பார்த்துவிட்டு,என்னை மூன்று வயதில் ட்ரம்ஸ் வகுப்பில் சேர்த்தனர். ஒரு மாதம் வகுப்பிற்குச் சென்றேன். வகுப்பிற்குரிய கட்டணத்தைச் செலுத்த இயலாத காரணத்தால், ட்ரம்ஸ் வகுப்பு நின்றுபோனது.
இன்று பலருக்கும் என்னைப் புல்லாங்குழல் இசைக்கலைஞராகத்தான் தெரியும். நான் அடிப்படையில் ஒரு டிரம்ஸ் இசைக் கலைஞர். புல்லாங்குழல் மீதான ஆர்வம் சற்று தாமதமாகத்தான் எனக்கு ஏற்பட்டது. பெரும்பாலும், திருவிழாக்களில் புல்லாங்குழல் வியாபாரம் செய்பவர்கள்தான் புல்லாங்குழல் வாசிப்பவர்களுக்கு முதல் இன்ஸ்பிரேஷனாக இருப்பார்கள். அப்படித்தான் நானும் திருவிழாக்களில் விற்கப்படும் புல்லாங்குழல்களை முதலில் வாங்கி வாசித்துப் பழகினேன்.
கே: இசைக் கருவிகளை வாசிக்கத் தெரிந்தவர்கள் சினிமா பாடல்களை வாசித்து தங்கள் சேனலில் பதிவேற்றுவார்கள். அதுபோலத்தான் உங்களது சேனலின் உள்ளடக்கம் இருக்கிறதா?
ப: அப்படிச் செய்யாமல், என் உள்ளடக்கம் மாறுபட்டிருப்பதால்தான் எனக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்திருக்கின்றனர். பாரம்பரிய இசைக்கருவிகள் எங்கெங்கு கிடைக்கும், ஒவ்வொரு இசைக்கருவியிலும் என்ன சத்தம் வரும், அந்தக் கருவிகளை எப்படி வாசிப்பது போன்றவையே என் சேனலின் உள்ளடக்கம்
கே: உங்கள் சேனலின் தனித்துவமாக கம்பேரிசன் வீடியோக்களைப் பார்க்கிறோம். அந்தச் சிந்தனை எப்படி உருவானது?
ப: அது அந்த நேரத்தில் தோன்றியது அவ்வளவுதான். வாட்டர்கேனையும் தவிலையும் ஒப்பிட்டுச் செய்த வீடியோ மிகவும் வைரலானது. இந்த வீடியோவை எடுக்கும் பொழுது, வீடியோ எடுக்கும் தம்பியே சொன்னான் “இதெல்லாம் யாரும் பார்க்கமாட்டாங்க”ன்னு. ஆனால், இன்று அதுதான் 7 லட்சம் பார்வைகள்,60 ஆயிரம் லைக்ஸ்களையும் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது. உள்ளடக்கங்கள் தனித்துவமாக இருந்தால் பார்வையாளர்களும் ரசிக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதையே இது மீண்டும் எனக்கு உணர்த்தியது.
கே: இந்தக் காணொளிக்கு முக்கியமான இசைக் கலைஞர்களிடமிருந்து பாராட்டு ஏதும் வந்ததா?
ப: கன்னட இசைத் துறையைச் சேர்ந்த ஃபுளூட் சிவா என்பவர் என்னை வாழ்த்தி சேனலில் பின்னூட்டமிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல், பல தவில் வித்வான்கள் பாராட்டிப் பின்னூட்டமிட்டிருந்தனர்.
கே: எதிர்மறை பின்னூட்டங்கள் வருமா¡?
ப:கட்டாயம் வரும். எப்படி என்றால் ஆடியோ வீடியோ இரண்டும் சில சமயங்களில் சிங்க் ஆகாது. ஏனெனில் வீடியோவை ஒரு தனி இடத்தில் படம் பிடிப்போம். ஆடியோவைத் தனியாக ஸ்டூடியோவில் அமர்ந்து எடிட் செய்வோம். அதை ஒன்றாகச் சேர்க்கும்போது இந்தத் தவறு நேர்ந்துவிடும். வேறு ஒருவரை வாசிக்க வைத்து ஏமாற்றுகிறான் என்பது போல பின்னூட்டங்கள் வரும். நாம் அதற்காக 60க்கும் மேற்பட்ட டேக்குகள் போயிருக்கிறோம் என்ற கஷ்டம் அவர்களுக்குத் தெரியாதல்லவா.
கே வீடியோவை எடிட் செய்யும் அளவிற்கு உங்களுக்குப் பார்வை தெரியுமா?
ப: உருவங்களைப் பார்க்கும் அளவிற்கு பார்வை தெரியும். ஆனால் வீடியோ எடிட் செய்யுமளவிற்குப் பார்வை தெரியாது. வீடியோ எடிட்டிங் செய்வதற்கு பார்வை உள்ள நண்பர்கள் உதவுகின்றனர்.
காணொளிகள் தரமாக இருக்கவேண்டும் என்பதற்காகவே ஹெலிகேம் கேமராவெல்லாம் வைத்திருக்கிறேன். யூடியூப்புக்காகவே எட்டு லட்சத்திற்கும் மேலாக நான் முதலீடு செய்திருக்கிறேன். ஆடியோ முழுமையும் நான்தான் எடிட் செய்வேன்.
கே: உங்கள் குழுவைப் பற்றி சொல்லலாமே?
ப: தொடக்கக் காலத்தில் திறன்பேசியில் காணொளி பதிவுசெய்வது தொடங்கி, தற்போது கேமராவில் கோணங்கள் வைத்து படம் எடுப்பது வரை ஆதித்யா என்ற தம்பிதான் உதவி இருக்கிறார். அவர்தான் சேனலில் 400க்கும் மேற்பட்ட வீடியோக்களைப் படம்பிடித்திருக்கிறார். இப்போது அவர் 12ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
மதுரையில் உள்ள தம்பிகள் ட்ரோன் கேமராமூலம் படம் பிடிப்பதற்கு உதவிகள் செய்வார்கள். யூடியுப்பிற்கான தம்ப்நெய்லை சந்தோஷ் உருவாக்கித் தருகிறார்.
கே: அவர்களுக்கு ஊதியம் ஏதும் தருகிறீர்களா?
ப: எல்லோருமே தம்பிகள் தான். எனவே அவர்களுக்கு ஊதியம் எதுவும் கொடுத்ததில்லை. தன்னார்வமாகத்தான் உதவுகிறார்கள்.
கே: ட்ரோன் வைத்துக்கொள்ள உரிமம் வாங்க வேண்டும் என்றெல்லாம் சொல்கிறார்கள். ரிமோட்டின் எல்லையைத் தாண்டிவிட்டால் அது கீழே விழுந்துவிடும். இவற்றையெல்லாம் எவ்வாறு கையாள்கிறீர்கள்?
ப: இந்தியாவைப் பொருத்தவரை 250 கிராமிற்கு கீழுள்ள ட்ரோன்களுக்கு லைசன்ஸ் வாங்க வேண்டிய அவசியமில்லை. நானும் அது போன்ற ஒரு ட்ரோன் கேமராவைத்தான் பயன்படுத்துகிறேன். மேலும் இதன் ரிமோட் எல்லையானது ஒரு கிலோமீட்டர் தூரம். நாம் கண்ணுக்கெட்டும் தூரம்தான் பறக்கவிடுகிறோம் என்பதால் எவ்விதச் சிக்கலும் இல்லை.
கே: யூட்யூப் வருமானத்தை வைத்துதான் இசைக்கருவிகளையும் கேமராக்களையும் வாங்குகிரீர்களா? அல்லது பெற்றோரிடம் பண உதவி பெற்று வாங்குகிறீர்களா?
ப: பெற்றோர் எனக்கு ஆதரவு தர முக்கியக் காரணம், நான் அவர்களிடமிருந்து இதற்கென ஒரு ரூபாய் கூட வாங்கியதில்லை. யூட்யூபிலிருந்தும் அவ்வளவு வருமானம் வருவதில்லை. ஆனால் யூட்யூபைப் பார்த்துவிட்டு வரும் திரைப்படங்களுக்கு இசை அமைக்கும் வாய்ப்புகள், இசை வகுப்புகள் எடுத்தல், புல்லாங்குழல் வியாபாரம் போன்றவற்றின் மூலம் வரும் வருவாயிலிருந்தே வாங்குகிறேன்.
கே: இசைக்கருவிகளை எவ்வாறு வாங்குகிறீர்கள்?
ப: ஒவ்வொரு இசைக் கருவியும் பாரம்பரிய முறைப்படி எங்கு தயாரிக்கப்படுகிறதோ அங்கு நேரடியாகச் சென்று வாங்குவேன். இசைக்கருவிகளை வைப்பதற்காகவே வீட்டில் தனியாக ஒரு அறை இருக்கிறது. உனக்கு மட்டும் இரண்டு ரூம் தேவைப்படுகிறது என வீட்டில் திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறேன்.
கே: திரைப்படப் பாடல்கள் ரெக்கார்டிங் செல்லும்பொழுது இசையமைப்பாளர்கள் நோட்ஸ் தருவார்களா?
ப: இரண்டு விதமான ரெக்கார்டிங் இருக்கிறது. நீங்கள் சொல்வது பழைய இசையமைப்பாளர்கள் பின்பற்றிய முறை. இப்போதெல்லாம் ஒரு இசையை மாதிரியாக வாசித்துக் காட்டுவார்கள். அதை அடிப்படையாகக் கொண்டு நாம் கருவிகளை வாசித்துப் பதிவுசெய்துவிட்டு வரவேண்டும்.
வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால் இப்போது இருக்கும் அநேக இசையமைப்பாளர்களுக்கு நோட்ஸ் எழுதத் தெரியாது. அப்படி எழுதி வாசிப்பதும் நேர விரயத்தை ஏற்படுத்தக்கூடிய செயல். அதனால் யாரும் அதைப் பெரும்பாலும் பின்பற்றுவதில்லை.
கே: உங்கள் மாணவர்களுக்கு நீங்கள் வகுப்பு எடுக்கும் போது நோட்ஸ் கொடுக்கிறீர்களா?
ப: நான் நோட்ஸ் கொடுப்பது கிடையாது. நோட்ஸ் கொடுத்தால் கண் பார்க்கவேண்டும், வாய் வாசிக்கவேண்டும். அது இரண்டு வேலை. அதனால் மூளையில் பதிவு செய்து விட்டால் நோட்ஸ் தேவை இருக்காது. எனவே அந்த வழியில்தான் எனது கற்பித்தல் முறை இருக்கும். இப்படித்தான் என் மாஸ்டர் எனக்குக் கற்றுக் கொடுத்தார்.
கே: எத்தனை இசைக்கருவிகளை மாஸ்டர்களிடம் கற்றுக் கொண்டீர்கள்?
ப: புல்லாங்குழலை சீனிவாசன் மாஸ்டரிடம் ஒரு மாதமும், நாதஸ்வரத்தை தில்லானா மோகனாம்பாள் புகழ் k.p.n. சகோதரர்களின் சகலபாடி வெள்ளைச்சாமி அவர்களிடமும் கற்றுக்கொண்டேன். எனக்குத் தெரிந்த நண்பர்கள் யாரேனும் இசைக்கருவிகள் வாசித்தால் அவர்களிடம் அவற்றின் அடிப்படைகளைக் கற்றுக் கொள்வேன். அதிலிருந்து அப்படியே நான் என்னை மெருகேற்றிக் கொள்வேன்.
கே: கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி இசை, மேற்கத்திய இசை போன்றவற்றை முறையாக கற்றுக் கொள்ளும் எண்ணம் ஏதேனும் இருக்கிறதா?
ப: அப்படி எந்த எண்ணமும் இல்லை. கர்நாடக சங்கீதம் படித்தவரிடமோ, ஹிந்துஸ்தானி தெரிந்தவரிடமோ பணியாற்றும் பொழுது இசை நுனுக்கங்களை உள்வாங்கிக் கொண்டு என்னால் வாசிக்க முடிகிறது. அதுதான் உண்மை.
கே: நீங்கள் ஏதேனும் தனியாகப் பாடல் இசையமைத்திருக்கிறீர்களா?
ப: தேனி 360 யூடியூப் சேனளுக்காக தேனி பற்றி ஒரு பாடல் இசையமைத்திருக்கிறேன். அது விரைவில் கவிஞர் வைரமுத்து அவர்களின் கைகளால் வெளியிடப்படும்.
கே: திரையிசைப் பாடல்களுக்கு வாசிக்கச் செல்லும்போதோ அல்லது இசை வகுப்புகள் எடுக்கும் போதோ பார்வை மாற்றுத்திறனாளியாக ஏதேனும் சிக்கலை எதிர்கொண்டிருக்கிறீர்களா?
ப: இசை வகுப்புகளைப் பெரும்பாலும் காணொளி வாயிலாகத்தான் எடுக்கிறேன். அப்போது இசைக் கருவியைச் சரியாகப் பிடித்திருக்கிறேனா என்றெல்லாம் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அப்பொழுது இசைக் கருவியை வாசித்துக் காட்டச் சொல்வேன். அதன் சத்தத்தைக் கேட்டாலே, அவர் எப்படிப் பிடித்திருக்கிறார் என்பதைச் சொல்லிவிட முடியும். அதன்மூலம் சரியாகப் பிடிக்க வழிகாட்டுவேன்.
கே: இசைத்துறையில் பெரும்பாலும் உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள் தான் இருப்பார்கள். அவர்களோடு வாசிக்கச் செல்லும் போது ஏதேனும் சிக்கலை எதிர்கொண்டிருக்கிறீர்களா?
ப: அப்படி எதையும் நான் எதிர்கொண்டதில்லை. ஏனெனில் அந்த இடங்களில் திறமை முன்னால் நின்று பேசி விடும். அது தவிர நிறைய நபர்கள் என்னிடமே வியப்பாக எப்படி இப்படிச் சிறப்பாக வாசிக்கிறீர்கள் என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள்.
கே: அகிலனுக்கும் சேனலுக்கும் எதிர்காலத் திட்டம் என்ன?
ப: பேராசிரியராக வேண்டும் என்பதுதான் எனது எதிர்கால லட்சியம். அதற்கேற்றாற்போல் தற்போதுதான் net-இல் தேர்ச்சிபெற்றிருக்கிறேன். பேராசிரியர் பணியில் வேலை நேரங்கள் போக, யூடூப் சேனலைத் தொடர கூடுதல் நேரம் கிடைக்கும். யூட்யூபில் மாதத்திற்கு 2 லட்சம் வருவாய் வந்தால், யூடியூபை முழுநேரமாகத் தொடரவும் ஒரு திட்டம் இருக்கிறது.
சேனலைப் பொறுத்தவரை t-log vlog என்ற ஒரு சேனலை
புதிதாக தொடங்கும் திட்டம் இருக்கிறது. அதில் பயணம் தொடர்பான காணொளிகளை பார்க்கலாம். டிமிக்கி டப்பா சேனலில் ஒவ்வொரு ஊருக்கும் சென்று அங்குள்ள தனித்துவமான இசைக் கருவிகள் பற்றியும், இசைக் கலைஞர்கள் பற்றியும் காணொளி தயாரிக்கும் திட்டமிருக்கிறது.
லயோலா கல்லூரியில் படித்தபோது ஓராண்டு வானொலி அறிவிப்பாளருக்கான பட்டயப் படிப்பையும் முடித்திருக்கிறேன். அந்தத்துறையில் எப்படி நுழைவது என்பது பற்றி அப்போது தெரியவில்லை. அந்தப் பயிற்சி யூடியூப் சேனலுக்கு கைகொடுக்கிறது.
கே: அகிலன் சிங்கிளா? மிங்கிலா?
ப: தற்போது சிங்கிள் தான். விரைவில் மிங்கிலாவோம்.
கே: படிக்கிறத விட்டுட்டு ஏன் இந்த வேலை எல்லாம் பார்க்கிறாய் என்று கேட்டிருக்கிறார்களா?
ப: அதெல்லாம் இல்லாமலா. இசை உனக்கு கை கொடுக்கப் போவதில்லை, படிப்புதான் கைகொடுக்கும் என்றெல்லாம் வீட்டிலேயே சொல்லியிருக்கிறார்கள். நானும் இரண்டிலுமே குறை வைத்ததில்லை.
கே: பார்வை மாற்றுத்திறனாளிகளில் 50000 சப்ஸ்கிரைபஸ் தொட்ட முதல் நபர் அகிலன் என்று சொல்லலாமா?
ப: தமிழைப் பொறுத்தவரை கட்டாயம் முதல் நபர் என்று சொல்லலாம். இந்தியா மற்றும் உலக அளவிலும் நான் பல பார்வையற்றவர்களின் சேனல்களைப் பின்தொடர்ந்து வருகிறேன். அங்கும் எனக்குத் தெரிந்தவரை 50,000 சப்ஸ்கிரைபஸ் கொண்ட பார்வை மாற்றுத்திறனாளிகள் யாரும் இல்லை. இன்னும் நன்றாக ஆராய்ந்து பார்த்தால் இதற்கு விடை கிடைக்கலாம்.
தமிழில் 7000, 10000 சப்ஸ்கிரைபஸ் கொண்ட நம்மவர்களின் சேனல்களைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நம்மவர்களின் உயர்விற்கு நானும் கைகொடுக்கத் தயாராகவே இருக்கிறேன்.
கே: உங்கள் சேனலில் காப்புரிமை தொடர்பான பிரச்சனைகள் ஏதேனும் வந்திருக்கிறதா?
ப: கட்டாயம் வந்திருக்கிறது. அதன் காரணமாக சில வீடியோக்கள் அகற்றப்பட்டிருக்கின்றன. இந்த தீபாவளிக்கு நேயர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக இரவில் வெடி வெடித்து, அதனை காணொளியாக தயாரித்து யூடியூபில் பதிவேற்றி இருந்தேன். 13 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்கள் தனியாக வெடி வெடிக்கக் கூடாது. எனவே இந்த வீடியோ எங்களது கொள்கைகளுக்கு எதிராக இருக்கிறது எனக் கூறி எங்கள் வீடியோவை கூகுளே நீக்கிவிட்டது.
கே: பாடலைக் கவர்வெர்சன் செய்து பதிவேற்றுகிறீர்கள். சினிமா பாடல்கள் தொடர்பான காப்புரிமைச் சிக்கல் எதுவும் ஏற்பட்டிருக்கிறதா?
ப: முன்பு அதுபோல சிக்கல் இருந்தது. கவர்வெர்சன் செய்ய யூடியூபே அனுமதிக்கிறது. மூலப்பாடலின் உரிமையாளருக்கும், கவர்வெர்சன் செய்பவருக்கும் வருவாய் பகிர்ந்து அளிக்கப்படும். மூலப்பாடலின் உரிமையாளர்தான் உன்மையான உரிமையாளர். அதனால் அவரால் கவர்வெர்சன் வீடியோவை அகற்ற முடியும்.
கே: நீங்கள் விரும்பினால் சொல்லலாம். யூடியூப் மூலமாக எவ்வளவு வருமானம் வந்திருக்கிறது?
ப: பத்து மாதங்களுக்கு முன்பு 7000 ரூபாயும், தற்போது 25000 ரூபாயும் என இரு முறை மட்டுமே வந்திருக்கிறது.
கே: மாதம்தோறும் வருவாய் வருவதில்லையா?
ப: சேனலை சப்ஸ்கிரைப் செய்தவர்கள் அனைவருமே ஒரு காணொளியைப் பார்ப்பது கிடையாது. குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே காணொளிகளைத் தொடர்ச்சியாகப் பார்ப்பார்கள். அவர்களை ஆர்டினரி ஆடியன்ஸ் என்பார்கள். அந்த எண்ணிக்கை உயரும்போதுதான் மாதந்தோறும் வருவாய் வரும். எனக்கு 20000 சப்ஸ்கிரைபர் இருந்தபோது ரெகுலர் ஆடியன்ஸ் 300. நான் 50000 சப்ஸ்கிரைபசை தாண்டிய பிறகு எனது ஆர்டினரி ஆடியன்ஸ் 2000 பேர்.இது இன்னும் அதிகரித்தால் மாதந்தோறும் வருவாய் வரும்.
கே: யூட்யூபில் ஆயிரம் சப்ஸ்கிரைபசை கடந்த பிறகு வருவாய் பெறுவதற்கு ஏதேனும் பதிவு செய்ய வேண்டுமா?
ப: 12 மாதத்திற்குள் 1000 சப்ஸ்கிரைபர் மற்றும் நான்காயிரம் மணி நேரம் பார்வை கொண்ட யூடியூப் சேனல் கூகுள் விளம்பரத்தின் மூலம் வருவாய் பெறத் தகுதி பெறும். கூகுள் விளம்பரத்தின் மூலம் குறைவான வருவாயே ஈட்ட முடியும். 5000 விளம்பரங்கள் ஓடினால்தான் நமக்கு 100 ரூ கிடைக்கும். நம் சேனலில் பார்வையாளர்கள் அதிகமாக இருந்தால், அதைப் பார்த்துவிட்டு பெருநிறுவனங்கள் விளம்பரங்கள் கொடுப்பார்கள். அதில் ஒரு விளம்பரத்திற்கே 5000 ரூ. வருமானம் கிடைக்கும். எனது சேனலுக்கு ஒரு வீடியோ எடிட்டிங் ஆப் நிறுவனம் விளம்பரம் ஒன்றை கொடுத்திருக்கிறார்கள். அதை இனிவரும் வீடியோக்களில் பார்க்கலாம்.
கே: விளம்பரங்களை அனுமதிப்பதில் உங்களுக்கு ஏதேனும் கொள்கை இருக்கிறதா?
ப: யூடியூப் சேனல் வழியாக மக்களுக்கு நல்ல விடயங்களைக் கற்றுக் கொடுக்கிறோம். எனவே நமக்கும் சில சமூகப் பொறுப்புகள் இருக்கின்றன. அதன் அடிப்படையில் ரம்மி போன்ற செயலிகள் தொடர்பான விளம்பரங்களை என் சேனலில் நான் அனுமதிப்பதில்லை.
கே: உங்களைப் பிரபலங்கள் யாரேனும் வாழ்த்தி இருக்கிறார்களா?
ப: நடிகர் R.K. சுரேஷ், மைம் கோபி, ஆந்தகுடி இளையராஜா, அந்தோனிதாசன், ஆரஞ்சு மிட்டாய் யூடியூப் சேனல் எனப் பலரும் வாழ்த்தி இருக்கின்றனர்.
கே: அகிலன் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி என அனைவருக்கும் தெரியுமா?
ப: சேனலில் நான் சொல்லியதில்லை. நான் ப்ளீஸ் என்ற வார்த்தையையே பயன்படுத்துவது கிடையாது. இதை கர்வமாகவே சொல்கிறேன். எனது திறமை பிடித்திருந்தால் சேனலை சப்ஸ்கிரைப் செய்யட்டும். அனுதாவத்தின் அடிப்படையில் வரும் சப்ஸ்கிரைபஸ் எனக்கு வேண்டாம்.
கே: இசை மற்றும் யூடியூப் துறைகளில் சாதிக்க விரும்புபவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?
ப: எந்தத் துறையில் சாதிக்க விரும்புபவராக இருந்தாலும், never ever give up என்ற வார்த்தைகளை மனதில் நிறுத்த வேண்டும். உங்களுக்குப் பிடித்த செயலை மனம் தளராமல் தொடர வேண்டும். நீங்கள் ஒரு விடயத்தைச் செய்தால் பத்து பேரில் 5 பேருக்குப் பிடிக்கும்; 5 பேருக்குப் பிடிக்காது. ஆனால் பிடிக்கும் 5 பேருக்காக நீங்கள் தொடர்ச்சியாக செயலாற்றினால், இன்னும் நிறைய பேர் உங்களோடு வந்துசேர்வார்கள். உடனடி பலனை எதிர்பார்க்காமல் செயலாற்றினீர்கள் என்றால், நிச்சயமாக வெற்றி உங்களைத் தேடிவரும்.
கெ: எங்கள் வினாக்களுக்கு பொருமையாகவும் தெளிவாகவும் விடையளித்திருந்தீர்கள். வாசகர்கள் மற்றும் விரல்மொழியர் ஆசிரியர் குழு சார்பாகவும் உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
ப: மிக்க நன்றி.
அகிலனது யூடியூப் சேனல்:
https://www.youtube.com/channel/UCn9wbFr2veeX9aB1E2dDUwA
அகிலனைத் தொடர்புகொள்ள: 7092228644
தொகுப்பு: பொன். சக்திவேல்
திறமையானவர்களை கண்டறிந்து அறிமுகப்படுத்தும் விரல் மொழியர்
பதிலளிநீக்குமின்னிதழுக்கும்
தரமான கேள்விகளின் மூலம் மக்கள்
அறிந்துகொள்ள வேண்டிய செய்திகளை வெளிக்கொணர்ந்து இருக்கும் திரு சக்திவேல் அவர்களுக்கும்
அனுதாபத்தை விரும்பாமல்
உயர்ந்து வரும் திரு அகிலன் அவர்களுக்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
இளங்கலை இரண்டாம் ஆண்டிலேயே வளையொலி சேனல் தொடங்கி, ஏராளமான subscribers கொண்டுள்ளமைக்கு பாராட்டுக்கள். பேட்டிகந்து தொகுத்தளித்தவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு