தலையங்கம்: இணைந்தே பயணிப்போம்

                graphic உணர்ந்ததைச் சொல்கிறோம் உலகிற்கு என்ற வாசகம் அடங்கிய விரல்மொழியரின் சின்னம்

      விரல்மொழியர் தனது 31-ஆவது மின்னிதழைப் பெருமிதத்தோடு வெளியிடுகிறது. 2018 ஜனவரி 27-இல்தான் எளிமையாகத் தொடங்கப்பட்டது விரல்மொழியர். தமிழ் பேசும் பார்வை மாற்றுத்திறனாளிகளின் நாடித் துடிப்பாய், பார்வை மாற்றுத்திறனாளிகளாகிய நாம் நமக்காகச் சிந்திக்கும் எழுத்துக் களமாய், பார்வையற்றவர்களின் வாழ்வியலைப் புரிந்துகொள்ள விழைவோருக்கான தகவல் களஞ்சியமாய், தான் கொண்ட நோக்கத்தில் வழுவாமல் உங்களை வந்தடைந்து வருகிறது விரல்மொழியர்.

      எங்களைத் தொடர்ந்து உற்சாகமூட்டிவரும் படைப்பாளிகளுக்கும், வாசகர்களுக்கும், மற்ற நலன் விரும்பிகள் அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

      ஒவ்வொரு ஆண்டும் விரல்மொழியர் ஒரு புதிய தடத்தைப் பதித்துவருகிறது. அதிலும், சென்ற 2020-ஆம் ஆண்டு விரல்மொழியருக்கு அதிக வாசகர்களையும், பல மாறுபட்ட படைப்புகளையும் கொடுத்த ஆண்டு. சில சோதனைக் கட்டங்களையும் வழங்கிய ஆண்டு.

      இவை எல்லாவற்றையும் நாங்கள் எளிதாக எதிர்கொள்ளக் காரணமாக இருக்கும் உங்கள் அனைவருக்கும் எங்கள் நன்றிகள்.

      தொடர்ந்து உங்கள் அன்பையும், ஆதரவையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். பார்வை மாற்றுத்திறனாளிகள் குறித்த முழுமையான அக்கறையோடும், பொறுப்புணர்வோடும் இதழ் என்றென்றும் திகழும் என்பது உறுதி.

      எப்போதும் போலவே உங்கள் கரம் பற்றியே நாங்கள் நடைபோட விரும்புகிறோம். தொடர்ந்து இணைந்தே பயணிப்போம்.

      இதழ் மூன்றாண்டுகளை நிறைவு செய்வதை ஒட்டி, ஒரு புதிய பொருண்மையோடு உங்களைச் சந்திக்கிறோம். தமிழகம் தாண்டி, அயலகத்தில் வசிக்கும் பார்வை மாற்றுத்திறனாளிகளின் படைப்புகளைத் தமிழில் வழங்கியிருக்கிறோம். பிற மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் தெள்ளுதமிழில் உங்கள் செவிகளை வந்தடைய இருக்கின்றன.

      ஆம். விரல்மொழியரின் 31-ஆவது இதழ் மொழிபெயர்ப்புச் சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது. பிற மொழிப் படைப்புகளைத் தேர்ந்தெடுத்து, மொழிபெயர்ப்புப் பணியை ஒருங்கிணைத்துத் தந்திருக்கிறார்கள் பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவையினர். அவர்களுக்கும் இதழின் நன்றிகள்.

      எங்களின் இந்தப் புதிய முயற்சிக்கும் உங்கள் ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என நம்புகிறோம்.                       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக