‘ அழகுன்னா என்ன..? நீங்க என்ன பதில் சொல்லுவீங்க? நல்லா இருக்கறதுன்னா..? சுந்தரமா இருக்கறதுன்னா..? இல்ல பூவப் போலண்னா..? இல்ல..? பெண்ணைப்போலன்னா..? நான் என்ன சொன்னேங்கறீங்களா..? அழகுன்னா..? பனித்துளி விழற காலநேரத்தில் பச்சப்புல்லு படர்ந்துகிடக்கற மைதானத்தில.. அரளிச்செடியோட இலையில கெட்டியா பிடிச்சுகிட்டு இருக்கற நீர்த்துளிகள்தான் அழகு..’. நான் சொன்ன பதில் அவனுக்குத் திருப்தியா இல்ல.. பதில் சரியில்லை என்று தலையை ஆட்டினான். நான் மறுபடியும் சொன்னேன்.. ‘ தங்கநிறத்தில ஜரிகை போட்ட புடவையில சிகப்பு கலர்ல ப்லவுசும் போட்டுக்கிட்டு, கண்ணுக்கு ரம்மியமா ஒரு இளம்பொண்ணு.. முன்ன பின்ன தெரியாதவ.. அவ கோயில்ல சாமியப் பாத்துட்டு நெத்தியில சுருள்ற முடியையும் ஒதுக்கிவிட்டுகிட்டு குங்குமப்பொட்டையும் வச்சுகிட்டு, கோயிலுக்கு பக்கத்துல இருக்கற அரசமரத்து கிட்ட மெல்ல நடந்து வந்துகிட்டு இருக்கறா.. அவளோட இடது கையில பிரசாதம் இருக்குது.. வேகமா அடிக்கற தென்றல் காற்றில பறக்கற புடவைய அவ தன்னோட வலது கையால ஒதுக்கறதுக்கு முயற்சி செய்யறா.. பவழம் மாதிரி இருக்கற அவளோட உதடுகள்ல அஸதமிக்கற மாலைநேரத்து சூரியனோட வெய்யில் பட்டு அரும்பற வியர்வைத்துளிகள்.. இத பாக்கறப்ப உங்களுக்கு என்ன தோணும்..? இதும் அழகுதான்..’. அவனுக்கு இதுவும் பிடிக்கவில்லை. மறுபடியும் தலையை ஆட்டினான். எனக்குக் கோபம் வந்தது.
_ அப்புறம் எத நீங்க அழகுன்னு சொல்றீங்க..?
அவன் கேட்டான்.
_ நான் சொல்றேன்..
அவன் சொல்ல ஆரம்பித்தான்..
**
‘ நான் ஒரு ஆட்டோ ஒட்டறவன்னு உங்களுக்கு தெரியும் இல்லையா..? இன்னிக்கு காலையில நான் ஒரு டிரிப்புக்கு போனேன்.. இடத்த சொல்லணுமா..? இடத்தில என்ன விஷயம் இருக்கு..? ஆட்டோவில வந்தவங்க ‘ இதோ வந்துட்டேன்..’ ன்னு சொல்லிட்டு, ஒரு வீட்டுக்குள்ள போனாங்க.. நான் பக்கத்தில இருந்த ஸ்கூல் கிரவுண்ட்ல ஆட்டோவ நிறுத்திட்டு காத்துகிட்டு இருந்தேன்..
பக்கத்தில இருந்த அந்த ஸ்கூல்ல இருந்து பசங்களோட சத்தம்.. இன்டர்வெல் போல இருக்குது சின்ன பசங்க.. ஓடிப்பிடிச்சுகிட்டும், தள்ளிவிட்டுகிட்டும், சிரித்து பேசிகிட்டும், விளையாடிகிட்டும் இருந்தாங்க.. இதுக்கு இடையில தூரத்துல இருந்து ரெண்டு சின்னப் பசங்க இன்னொருத்தனோட ரெண்டு கையையும் பிடிச்சுகிட்டு கூட்டிகிட்டு வந்தாங்க.. அவனோட ஒரு கண்ணு முழுசாவும், இன்னொரு கண்ணு பாதி மூடியும் இருந்தது. அந்த ரெண்டு கண்ணுலயும் பார்வ இல்லன்னு பார்க்கறப்பவே தெரிஞ்சுகிடலாம்.. அந்த கண்ணுல கருவிழியே இல்லாம இருந்துச்சு.. பாதி மூடியிருந்த கண்ணு ரெண்டும் வெள்ளையா இருந்துச்சு..
அந்த பசங்கள்ல ஒருத்தன் ஆட்டோவோட முன்பக்கம் இருந்த க்லாச கையால வேகமா அடிச்சு சத்தம் உண்டாக்கினான்.. அப்புறம் அவன்கிட்ட சொன்னான்.
_ ஆட்டோ.. ஆட்டோ
அவன் வலதுகைய ஆசயா நீட்டி, மெல்ல ஆட்டோவ தடவி பாத்தான்.. அப்புறம் மெதுவா சொன்னான்..
_ ஆட்டோ.. ஆட்டோ..
அவுங்க நடந்து ஆட்டோவோட பின்பக்கமா வந்தாங்க.. அப்பவும் ஒருத்தன் ஆட்டோவை அடிச்சு சத்தத்த உண்டாக்கி கிட்டே சொன்னான்..
_ ஆட்டோ.. ஆட்டோ..
அவன் மறுபடியும் ஆட்டோவோட பின்னாடிப்பக்கத்த கையால மெதுவா தடவிகிட்டே சொன்னான்..
_ _ ஆட்டோ.. ஆட்டோ..
நான் ஆட்டோவில இருந்து வெளிய இறங்கினேன்.. என்ன பாத்தவுடனே அவன அப்படியே விட்டுவிட்டு அந்த ரெண்டு பசங்களும் க்லாசை பாத்து ஓடிப்போனாங்க.. பயந்துகிட்டுதான்.. நான் அவன் கிட்ட அதட்டலா கேட்டேன்..
_ பேரு என்ன..?
சத்தம் வந்த திசய நோக்கி ஷேக் ஹாண்ட்ஸ கொடுக்கறதுக்காக அவன் ரெண்டு கையயும் நீட்டினான்.. நான் அவனோட கைய பிடிச்சுகிட்டு மறுபடியும் கேட்டேன்..
_ உன் பேரு என்ன..?
_ ராகுல்..
_ எத்தனாங் கிலாஸ்?
_ ரெண்டாங் க்லாஸ் ..
நான் அவனோட வலதுகைய மறுபடியும் ஆட்டோ மேல் வச்சிட்டு சொன்னேன்..
_ ஆட்டோ..
அவன் மெல்ல தடவிகிட்டே சொன்னான்.
_ ஆட்டோ.. ஆ..ட்.டோ..
அவனோட கை ஆட்டோவோட ரிப்•லெக்டர்ல பட்டு அவன் அதை மெதுவா சுத்திகிட்டே கேட்டான்..
_ இதென்ன..?
_ ரிப்•லெக்டர்..
_ ரிப்•க்லெக்டர்ன்னா என்ன..?
_ ரிப்•லெக்டர்ன்னா ராத்திரிநேரத்தில எதிர்ல வர்ற வண்டிக்கெல்லாம் நம்ம வண்டிய தெரிஞ்சுக்கறதுக்காக வச்சிருக்கற ஒரு ஏற்பாடு.. எதிர்ல வர்ற வெளிச்சத்த வாங்கி இது ரிப்•லெக்ட் செய்யும்.. அப்ப அவுங்களுக்கு நம்ம வண்டி வர்றது தெரியும்..
இப்படில்லாம் சொன்னா அவனுக்கு இதெல்லாம் புரியுமா..? நான் யோசிச்சிட்டு ஈசியா அவன் புரிஞ்சுக்கற விதத்துல சொன்னேன்..
_ அழகுக்காக வச்சுக்கறது..
_ அழகுன்னா என்ன..?
அவன் களங்கம் இல்லாமல் மெல்ல சிரிச்சுகிட்டே கேட்டான்.. நான் யோசிச்சேன்.. அழகுன்னா..?
அழகுன்னா..? என்னோட கண்ணுல கண்ணீரு வந்துடுச்சு.. ஏன்னு எனக்கு தெரியல.. அவன்கிட்ட தோத்ததினாலயா..? இல்ல.. அவனுக்குப் புரியவக்க முடியாததானாலயா..? எனக்கு தெரியல.. நான் அவன என்னோட சேர்த்துவச்சு கட்டிகிட்டேன்.. அவனோட தலயில் மெல்ல வருடிவிட்டுகிட்டே யோசிச்சேன்.. அழகுன்னா..? அவனுக்கு என்ன பதில் சொல்றது..? எனக்கு இதுவர பதில் தெரியல.. நேத்து முழுக்கவும் யோசிச்சேன்.. இன்னமும் யோசிச்சுகிட்டுதான் இருக்கேன்..’.
அவன் சொல்லி முடித்தான்.
அழகுன்னா என்ன..? உங்களுக்கு தெரியுமா..?
** ** **
இக்கதை சிதம்பரம் இரவிச்சந்திரன் அவரது நூர்ஜஹானுடைய ஓவியம்” என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
மொழிபெயர்ப்பாளர் சிதம்பரம் இரவிச்சந்திரன் |
மொழிபெயர்ப்பாளரைத் தொடர்புகொள்ள: nrvikram19@gmail.com
சிறுகதையா குட்டிக்கவிதையா? எனினும் அழகு. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநாம் எவற்றை எல்லாம் நல்ல விதமாக உணறுகிறோமோ அவை எல்லாம் அழகுதான் என்பது இதற்க்கு என்னுடய பதில். சிறு சிறு விஷயம் கூட நமக்கு தெரிவதில்லை. தெரிந்துகொள்ள முயற்சி செய்தால் நமக்கு உதவுபவர்கள் கூட முதலில் விளக்கம் கொடுத்துவிட்டு பிறகு நம்மை பற்றி பிறரிடம் இது கூட இவருக்கு தெரியவில்லை ஆனாலும் இவர் ஒரு ஆசிரியர் என்று சொல்லிவிட்டு போய்விடுகிறார்கள். நம்மை புரிந்தவர்கள் இல்லை என்றால் கஷ்டம்தான். உங்களுக்கு கற்று தருகிறேன் என்று சொல்பவர்களைவிட
பதிலளிநீக்குஉங்களால் முடியாது உங்களுக்கு தெரியாது என்று சொல்பவர்களே அதிகம்.