சேகரம்: தேர்தல் அறிக்கைகளில் மாற்றுத்திறனாளிகள் நலன். தொகுப்பு: ம. தமிழ்மணி.

graphic அனைத்துக் கட்சிகளின் சின்னங்களும் இடம்பெற்ற படத்தின் மீது தேர்தல் அறிக்கை 2021 என்று எழுதப்பட்டுள்ளது

     எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளை  வெளியிட்டுள்ளன. வெவ்வேறு தரப்பினரைத் திருப்திப்படுத்தும் வண்ணம் பல்வேறு வாக்குறுதிகளை அவை வழங்கியுள்ளன. அவற்றில் மாற்றுத்திறனாளிகள் நலன் குறித்து முக்கிய அரசியல் கட்சிகள் எத்தகைய பார்வையைக் கொண்டுள்ளன, அவை நமக்கு எத்தகைய வாக்குறுதிகளை வழங்கியுள்ளன என்பதை இங்கே நாங்கள் தொகுத்தளித்திருக்கிறோம்.


தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021-தேர்தல் அறிக்கைகளில் மாற்றுத்திறனாளிகள் நலன்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

graphic அ.இ.அ.தி.மு.க வின் சின்னமாகிய இரட்டை இலை படம்

     மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்வாதார உதவித் தொகை ரூ. 1000/- லிருந்து ரூ. 2500/- ஆக உயர்த்தப்படும்.

பாட்டாளி மக்கள் கட்சி

graphic பாட்டாளி மக்கள் கட்சியின் சின்னமாகிய மாம்பழம்

          கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டின் அளவு 5 விழுக்காடாக உயர்த்தப்படும்.

பாரதீய ஜனதா கட்சி

graphic பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையின் முகப்பு படம்.

          பிரெய்லி முறை மற்ற கல்வி முறைக்கு ஏற்றாற்போல் தரம் உயர்த்தப்பட்டு ஒலிப்பதிவுகள்,பிரெய்லி பதிவுகள் தங்குதடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்படும்.

திராவிட முன்னேற்றக் கழகம்

graphic திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சி கொடி மற்றும் கட்சி சின்னம் உதய சூரியன் படம்

1.       மாற்றுத் திறனாளிகள் சட்டம் ( 1995 ) ன் அடிப்படையில், மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான கொள்கைகளை உருவாக்கவும், அவற்றைச் செயல்படுத்துவதைக் கண்காணிக்கவும், மாநிலங்கள் தோறும் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட வேண்டும். ஆனால், சட்டப்படியான இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற கடந்த ஐந்து ஆண்டுகளாக அ.தி.மு.க ஆட்சியில் குழு அமைக்கப்படவில்லை. தி.மு.கழக ஆட்சி அமைந்தவுடன் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படுவதோடு, அரசு வழங்கும் சலுகைகளை அதிகமானவர்கள் பெற்றுப் பயனடையும் வகையில் மாற்றுத் திறனாளிகள் சலுகைக்கான குறைபாடுகளை 60 சதவிகிதத்திலிருந்து 40 சதவிகிதமாகக் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.          மாற்றுத் திறனாளிகளுக்கும், அவர்களுடன் செல்லும் ஓர் உதவியாளருக்கும் தமிழக அரசின் சாதாரண பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகை வழங்கப்படும்.

3.     மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு ( Smart Card ) அட்டை வழங்கப்படும்,

4.     மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு 3 சக்கர மோட்டார் வாகனம் வழங்கப்படும்.

5.     மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் உள்ள 4 சதவிகித இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.

6.     அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் போன்ற அனைத்துப் பொது இடங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்குப் பயன்படும் வகையில் சாய்தள ( RAMP ) வசதிகளும், கழிப்பறை வசதிகளும் செய்து தரப்படும்.

7.     மாற்றுத் திறனாளிகளுக்குச் சுய வேலைவாய்ப்பினை ஏற்படுத்தும் வகையில் அவர்களுக்கு அரசுத் தொழிற் பயிற்சி நிறுவனங்களில் ( ITI ) பயிற்சி வழங்கப்பட்டுத் தொழில் தொடங்கிட மானியத்துடன் கூடிய கடன் வசதி செய்து தரப்படும்.

8.     அரசு வீட்டு வசதி மற்றும் குடிசைமாற்று வாரிய வீடுகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

graphic ம.தி.மு.கவின் சின்னமாகிய பம்பரம் படம்

1.     மாநிலம் முழுதும் ஊராட்சி மற்றும் வார்டு வாரியாக முகாம்கள் நடத்தி, கணக்குப் பதிவு செய்து, மாற்றுத் திறனாளிகள் குறித்த தகவல் தளம் உருவாக்கவும், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை  உயர்த்தவும், அதைப் பெறுவதற்கான வழிமுறை எளிமை ஆக்கிடவும் வலியுறுத்துவோம். 

2.     அரசு மற்றும் ஊர் ஆட்சி மன்றப் பணிகளில் 3 விழுக்காடு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்.

3.     தற்போதுள்ள மாநில மாற்றுத் திறனாளிகள் ஆணையரகத்தை நீதிமன்ற அதிகாரம் நிறைந்த ஆணையமாக மாற்றி, பொருத்தமான மாற்றுத் திறனாளியை, அதன் தலைவராக நியமிக்க வலியுறுத்துவோம்.

4.     மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு, தங்கும் வசதியுடன் சிறப்புக் கல்விக்கான ஏற்பாடுகள் மாவட்டம் தோறும் உருவாக்கப்படும். கேட்கும் திறன், பேசும் திறன் அற்றோருக்காக மாவட்டம் தோறும் சைகை மொழி பெயர்ப்பாளர்களை நியமித்திடவும், சைகை மொழிக்கு ஏற்பு வழங்கவும் வலியுறுத்துவோம்.

5.     பார்வை அற்றோருக்கு, சமூக பாதுகாப்புத் திட்டம் உருவாக்க ஆவன செய்யப்படும்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

graphic விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடியின் படம்

1.   மாநிலம் முழுதும் ஊராட்சி, வார்டு வாரியாக முகாம்கள் நடத்தி, கணக்கெடுப்பு செய்து, மாற்றுத் திறனாளிகள் குறித்த தகவல் தளம் உருவாக்கப்படும்.

2.   மாற்றுத் திறனாளி உதவித் தொகை ரூ.3,000/- ஆக உயர்த்தப்படும். சட்டப்படி அரசுப் பணிகளில் 3 விழுக்காடு வேலை வாய்ப்பு உறுதிப்படுத்தப்படும்.

3.   பார்வையற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பராமரிப்புத்தொகை ரூ.1,000/ -லிருந்து ரூ.5,000/- ஆக உயர்த்தித் தரப்படும்.

4.   வீடு இல்லாத மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு அரசின் வீடு வழங்கும் திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்படும்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்

graphic அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடியின் படம்

1.     மாற்றுத் திறனாளிகளுக்காக ஏற்கனவே மத்திய மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும், அவர்களின் அடிப்படையான அவசியமான பல கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படாமலேயே உள்ளன. இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 15 வலியுறுத்தும் அனைத்து இந்தியர்களுக்கும் உரிமை என்ற அடிப்படையே இதன் மூலம் அர்த்தமற்றதாக ஆகிவிடுகிறது. எனவே மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளை மீட்டெடுக்கும் விதமாக அரசியல் சாசனப் பிரிவுகள் 15 மற்றும் 16 ல் உரிய சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

2.     மாற்றுத்திறனாளிகளின் நீண்டகால கோரிக்கையான உள்ளாட்சி அமைப்புகளில் குறைந்தபட்சம் மூன்று சதவிகித இட ஒதுக்கீடு என்ற விஷயத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கான எல்லா முயற்சிகளையும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அர்த்தமுள்ள வகையில் முன்னெடுத்துச் செல்லும்.

3.     பொதுக்கல்வி துறையின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புக்கல்வி  உள்ளிட்ட கல்வியை உரிய கட்டமைப்பு வசதிகளுடன் அளிக்க ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் குறைந்தபட்சம் நான்கு சிறப்பு பள்ளிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

4.     மாற்றுத்திறனாளிகள் இடம்பெற்றுள்ள குடும்பங்களை வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களாக அறிவித்து, அரசின் நலத்திட்டங்கள் வேறு நிபந்தனைகள் ஏதுமின்றி அவர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

5.     அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மாற்றுத்திறனாளிகள் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி இலவச சிகிச்சை செய்வது உறுதி செய்யப்படும்.

6.     மாற்றுத்திறனாளிகளுக்கென பிரத்யேக காப்பீட்டுத் திட்டம் ஒன்றை உருவாக்கி அதற்கான காப்பீட்டுத் தொகையை அரசே செலுத்தும் வகையில் கொள்கை முடிவு எடுக்கப்படும்.

7.     மத்திய, மாநில அரசுப் பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்படுவதை கண்காணிக்க மாற்றுத் திறனாளிகளையும் கொண்ட குழு ஒன்று உருவாக்கப்படும். அவர்களுக்கான வேலைவாய்ப்பை நிரப்பும் விஷயத்தில் ஆண்டுதோறும் வெள்ளை அறிக்கை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.

8.     தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பை உறுதிப்படுத்த அர்த்தமுள்ள வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

9.     மூத்த குடிமக்களுக்கு வங்கி வைப்புத் தொகைக்கான வட்டி அதிகமாக வழங்கப்படுவதைப் போல மாற்றுத் திறனாளிகளுக்கும் வழங்க வலியுறுத்தப்படும். மாற்றுத் திறனாளிகள் சுயதொழில் தொடங்க ஐந்து லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

10. மாற்றுத்திறனாளிகள் சொந்த பயன்பாட்டிற்காக வாங்கும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு வரிச்சலுகை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

11. மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூபாய் 1500 லிருந்து ரூபாய் 2000ஆக உயர்த்தப்படும்.

12. அதிக உதவிகள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் தங்களுடன் உதவியாளர் ஒருவரை வைத்துக்கொள்ள அளிக்கப்படும் தொகை ரூபாய் 1000 லிருந்து 1500ஆக உயர்த்தி வழங்கப்படும்.

 

      இவை தவிர இந்திய தேசிய காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் முதலிய அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் முழுமையாகப் படிக்கக் கிடைக்கவில்லை அல்லது அவை மாற்றுத்திறனாளிகள் நலன் குறித்து வெளியிட்டிருக்கும் பகுதிகள் செய்தித் தளங்களில் இடம்பெறவில்லை. மக்கள் நீதி மய்யம் முன்னதாக வழங்கிய உறுதிமொழி ஒன்றில், ஊராட்சி ஒன்றியங்கள் தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு அவர்களின் பங்களிப்பு மேம்படுத்தப்படும் என்று இருந்தது. இங்கே நாங்கள் குறிப்பிடப்பட்டிருக்கிற கட்சிகளாக இருந்தாலும், பிற கட்சிகளாக இருந்தாலும் அவை மாற்றுத்திறனாளிகள் குறித்துக் கூறியிருக்கும் கூடுதல் தகவல்களை வாசகர்கள் கருத்துப் (comment) பகுதியில் தரலாம்.

     மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இடம்பெற்ற தகவல்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அறிக்கை மட்டுமே அக்கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டது. மற்ற கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளின் பகுதிகளைச் செய்தி மற்றும் சமூக வலை தளங்கள் மூலமாகவே பெறமுடிந்தது.

 

தொகுப்பு: . தமிழ்மணி.

 

1 கருத்து:

  1. அரசியல் கட்சிகள் மாற்றுத்திறனாளிகள் குறித்து கொண்டிருக்கிற பார்வையை இந்த தொகுப்பின் மூலம் ஓரளவுக்கு யூகிக்க முடிந்தது. கட்டாயமாக மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் குறித்தும் அதில் குறிப்பிட்டு இருக்கக்கூடிய சரத்துகள் குறித்து இவைகளுக்கு புரிதல் இருக்கும் என்று தோன்றவில்லை. 3 அல்லது 4 சதவீத இட ஒதுக்கீடு இருக்கிறது என்பது மட்டும் எல்லோருக்கும் தெரிந்திருப்பது ஓரளவுக்கு நிம்மதி தருகிறது. நமது உரிமை சார்ந்த கோரிக்கைகளை எடுத்துச் செல்லும் நிலைக்கு அல்லது அது தொடர்பான உரையாடலில் ஈடுபடுகிற அளவிற்கு நம்மை தகுதிப்படுத்திக் கொள்வதே சிறந்த வழிமுறையாக இருக்க முடியும் தோழர்களே! தொகுத்து வழங்கியிருக்கிற தம்பிக்கு நன்றியும் பாராட்டுக்களும்!

    பதிலளிநீக்கு