களத்திலிருந்து: பிப்ரவரி 17, 2021 முதல் மார்ச் 1, 2021 வரை, வேட்புமனு தாக்கல் அல்ல பார்வையற்ற பட்டதாரிகளின் வேதனை நாட்கள்! - முனைவர் உ. மகேந்திரன்

graphic காத்திருப்பு போராட்டம்  மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் முன்பு அமர்ந்துள்ள படம்

மீண்டும் ஒரு துவக்கம்.

            ஏமாற்றத்தைத் தொடர்ச்சியாக ஒருவன் எதிர்கொண்டால் எத்தகைய முடிவெடுக்க நேரிடும்உரிமை சார்ந்து தனக்குக் கிடைக்க வேண்டிய எதுவுமே சில ஆண்டுகளாக மறுக்கப்பட்டால்  அவன் எதனைக் கைக்கொள்ள வேண்டும்? எல்லாவற்றையும் செய்துவிட்டதாகக் கணக்குக் காட்டுவதற்கு அரசாணைகளை வெளியிட்டுவிட்டுஅவை அனைத்தும் பயனற்று கிடப்பதையும், அவ்வாறு பயனற்று இருப்பதைச்  சுட்டிக்காட்டியே  அரசாங்கம் பொறுப்பற்று இருப்பதைக்  கண்டு கொதித்தெழ அவர்களின் கரங்களில் எஞ்சி இருப்பது எதுஆம் அது போராட்டம் மட்டுமே தோழர்களே!

graphic பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் சின்னம்

           அப்படித்தான் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர் பிப்ரவரி 14 ஞாயிற்றுக்கிழமை அன்று போராட்டத்தைக் காதலிக்கசங்கத்தின் வளாகத்தில் அதன் பொறுப்பு தலைவரின் தலைமையில் கூடினார்கள். அதற்குமுன் ஒரு அழுத்தமான போராட்டத்தை உடனடியாக அரங்கேற்ற வேண்டும் என்று பணியில் இல்லாத பட்டதாரிகள் தரப்பிடமிருந்து சங்கத்திற்குக் கோரிக்கைகள் வந்தவண்ணம் இருந்தன. அதனை உணர்ந்து சங்க பொறுப்பாளர்கள் பணியில் இல்லாதவர்கள் மற்றும் இதர உறுப்பினர்களை அழைத்துக் கருத்துக் கேட்பதற்காக ஞாயிறன்று கூடினார்கள்.

          தலைவர் திரு ராஜா அவர்கள் தெளிவாக வலியுறுத்திஇம்முறை எவ்வித பிசகும்  ஏற்படாவண்ணம் வேலைவாய்ப்புக்கு மட்டுமே முன்னுரிமை தந்து நமது போராட்டத்தை வீரியமாக நடத்த வேண்டும் என்கிற தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அங்குக் கூடிய பார்வையற்ற பட்டதாரிகள் ஒரு போராட்டம் தொடர்ச்சியாக நிகழ்த்தப்படவிருக்கிறது, அதன்வழியாக நமது நியாயமான உரிமை சார்ந்த கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரை உறுதியாக இறுதிவரை களத்தில் நிற்போம் என்று நம்பிக்கை அளித்தனர்.        எப்பொழுதும் போலப் பட்டதாரிகள் சங்கத்தின் அதிரவைக்கும் போராட்டம் மீண்டும் ஒருமுறை அன்று துவக்கம் காண விதை தூவப்பட்டது!

 

சட்டம் மற்றும் அரசாணைகளை அடியொற்றிய கோரிக்கைகள்.

          பிரதானமாக நான்கு கோரிக்கைகள் கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தால் இம்முறை முன்வைத்துப் போராடப் பட்டது. அவை எது  தொடர்பானவை என்று அறிந்து கொள்வதற்கு முன்தொடர்ச்சியாக அந்தக் கோரிக்கைகள் அரசாங்கத்தால் அலட்சியப் படுத்தப்பட்டு  வருவது குறித்துத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. 

          2015ம் ஆண்டில் அரசாணை எண் 107 மற்றும் 108 வெளியிடப்பட்டது, இதுவும் சங்கத்தின் போராட்டத்தால் மட்டுமே சாத்தியமானது. இவை  இரண்டுமே அரசு உதவி பெறும் கல்லூரிகளில் தகுதியுள்ள பார்வையற்றவர்களுக்குப் பணி ஒதுக்கீட்டினை உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அவ்வாறு ஒதுக்கீட்டினைக் கொடுக்காவிட்டால் அந்த உயர்கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அரசின் நிதியுதவி நிறுத்தப்பட வேண்டும் என்றும் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. அது எந்த அளவிற்குப் பின்பற்றப்படவில்லை என்பதை அறிந்துகொள்ளமாநில மற்றும் தேசிய தகுதித் தேர்வுகளை முடித்துவிட்டு உதவிப் பேராசிரியருக்காக காத்திருக்கும் பார்வையற்ற பட்டதாரிகளைக் கணக்கெடுத்துப் பார்த்தால் சட்டென்று விளங்கிவிடும்.

          இந்த வரிசையில், கிட்டத்தட்ட எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு உதவிபெறும் பள்ளிகள் மாநிலம் முழுவதும் இருக்கின்றனஅதில் ஒரு பார்வையற்றவர் கூட மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு சட்டம் 1995, மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016 ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள ஒதுக்கீட்டின் கீழ் நியமிக்கப்படவில்லை. இதில் குறிப்பிடப்பட வேண்டிய அம்சம் யாதெனில் ஆசிரியர் தகுதித் தேர்வினை முடித்துவிட்டுக் காத்திருக்கிற பார்வையற்ற பட்டதாரிகளைக் கூட இதுவரை அரசாங்கம் அத்தகைய உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியமர்த்த முன்வரவில்லை. அப்படி என்றால் இது வெளிப்படையான சட்ட மீறல் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

          மேலே குறிப்பிடப்பட்ட  இரு சட்டங்களின் அடிப்படையில் அரசு உதவிபெறும் கம்பெனிகள், நிறுவனங்கள், கழகங்கள் உள்ளிட்ட எவற்றிலும் ஒரு சதவிகித பார்வையற்றோருக்கான ஒதுக்கீடு தமிழ்நாட்டில் வழங்கப்படவில்லை என்பது விதிமீறளின் உச்சம். இதில் முத்தாய்ப்பாக தமிழகத்தில் இயங்கும் பல்கலைக்கழகங்கள், இனி இயங்கவிருக்கும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் கூட ஒரு சதவிகித பார்வையற்றோருக்கான ஒதுக்கீடு நிறைவேற்றப்படவில்லைஇனி நிறைவேற்றப்படுமா என்றும் தெரியவில்லை. இது ஒருபுறமிருக்ககல்வி நிறுவனங்களுக்கும் இதர அரசின் உதவி பெறும் நிறுவனங்களுக்கும்  நாங்கள் மட்டும் சளைத்தவர்களா  என்ன என்று போட்டியிடும் விதமாகமாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு மற்றும்  உரிமைச் சட்டம் இரண்டையும் அடியொற்றி ஒதுக்கீட்டினைக்  கணக்கெடுத்துத் தேர்வினை நடத்தியிருக்க வேண்டிய தமிழ்நாடு தேர்வாணையமும் அதே சட்டத்திலிருக்கும் சந்து   பொந்துகளைப்  பயன்படுத்தி ஒதுக்கீட்டினை முழுமையாக வழங்காமல் இழுத்தடித்து வருகிறது.

          இந்த வரிசையில் போராடிப் பெற்ற அரசாணை 260, உயர்நீதி மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் வழியாகப் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் முறையே ஐந்து மற்றும் பத்து போன்றவை அமல்படுத்தாமல் அல்லது முறையாக அமல்படுத்தாது காயடிப்பு செய்யப்பட்டதனால் பார்வையற்றோருக்கான ஒதுக்கீடு கபளீகரம் செய்யப்பட்டது வேறு கதை. இவற்றையெல்லாம் உணர்ந்ததன் விளைவாக கீழ்க்காணும் கோரிக்கைகள் பார்வையற்ற பட்டதாரிகள் சங்கத்தினரால் முன்வைக்கப்பட்டுப் போராடப்பட்டது.

1. கல்லூரிகளில் வருகை தரும் விரிவுரையாளராக பணியாற்றுகிற பார்வையற்றவர்களைப் பணி நியமனம் செய்ய வேண்டும்அத்தோடு தேசிய மற்றும் மாநில தகுதித் தேர்வினை முடித்து, முனைவர் பட்டமும் பெற்றுக் காத்திருக்கிற பார்வையற்ற பட்டதாரிகள் 100 பேருக்கு உதவி பேராசிரியராக உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும்.

2. ஆசிரியர் தகுதித் தேர்வினை முடித்துக் காத்திருக்கிற பார்வையற்ற பட்டதாரிகளுக்கு உடனடியாக பணி வாய்ப்பினை வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும்.

3. மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் உரிமைச் சட்டம் ஆகியவற்றின் படி வழங்க வேண்டிய ஒதுக்கீட்டினை முறையாகக் கணக்கிட்டுபார்வையற்றவர்களுக்குச் சிறப்புத் தேர்வு தமிழக அரசு பிறப்பித்த ஆணையின்படி நடத்தப்பட வேண்டும்.

4. தமிழக அரசின் உதவிபெறும் கம்பெனிகள், கழகங்கள், வாரியங்கள், நிறுவனங்கள் மற்றும் இதர துறைகளில் வழங்கப்படாத ஒதுக்கீட்டையும் கணக்கிட்டு உடனடியாக வழங்க ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும் ஆகிய உரிமைசார் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு போராட்டம் நடந்தேறியது.

சட்டத்தை மட்டுமல்ல மனிதாபிமானத்தையும் மறந்துபோன மாற்றுத்திறனாளிகள் துறை!

graphic மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் அலுவலகம்

           உள்ளே குளிர்சாதன காற்று வருடித் தரகட்டடத்தையும் அதனுள் நுழைபவர்களையும்  கடற்கரைக் காற்று சாமரம் வீசி குளிர்விக்ககாமராஜர் சாலையில் அமைந்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் துறைசகல வசதிகளையும் கொண்டிருந்தாலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மருந்துக்கும்  பயன்படாத இடமாக மாறிப்போய் கிடக்கிறது. அரசாங்கத்தின் இதர துறைகளை மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைச் சட்டம் எனும் சாட்டைகொண்டுஒதுக்கீட்டினை உறுதி செய்து, உரிமைகளைப்  பெற்றுத் தர வேண்டிய இடத்திலிருந்தும்அதிகாரிகள் தங்களின் பணி நாட்களில் ஓய்வெடுக்கும் ஒரு இடமாகதண்டிப்புக்கு உரிய அதிகாரிகள் பணி மாறுதல் பெறும் சபிக்கப்பட்ட துறையாகதங்க முலாம் பூசப்பட்ட தகர டப்பாவாகவே ஜொலிக்கிறது. ஒரு நீதிபதிக்கான அதிகாரம் பொருந்திய ஆணையர் என்கிற பதவியை நிரப்பாமல்மாற்றுத்திறனாளிகள் தொடர்புகொண்டாலே எரிச்சல் அடையும் மனநிலை கொண்ட ஒருவரைக் கொண்டு இயக்குநர் என்கிற பதவி நிரப்பப்பட்டு அந்தத் துறை இயங்கி வருகிறது.    அரசாங்கத்தின் எந்த ஒரு துறையிலும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் எவரும் பணியாற்றக் கூடாது என்கிற விதி இருந்தும், அதனைப் பின்பற்றாமல் 10 ஆண்டுகளுக்கு மேல் சில அதிகாரிகளை இதே அலுவலகத்தில் பணியாற்றச் செய்து, இந்தத் துறையின் குறிப்பாக இந்த அலுவலகத்தின் செயல்பாடு வீரியம் இழந்து இருப்பதைக் காண முடிகிறது. அவ்வாறு சில ஆண்டுகளாக மாறுதல் பெறாமல் இங்கே பணியாற்றுகிற  சில அதிகாரிகள் பெற்றிருக்கிற நிபுணத்துவம் நம்மை கிறங்கடிக்கிறது. அவர்கள் சட்டத்தின் சந்து பொந்துகளில் எல்லாம் நுழைந்து அதிக தேர்ச்சி பெற்றிருப்பதினால்புதிதாக மாறுதல் பெற்று வரும் ஆணையர் மட்டத்திலான அதிகாரிகளிடம் எப்படியெல்லாம் செயல்பட வேண்டாம்எவற்றையெல்லாம் செய்யாமலே செய்ததுபோல் அச்சில் ஏற்ற முடியும்எந்தெந்த சங்கங்கள் போராடினால் அவற்றையெல்லாம் எந்த அஸ்திரம் கொண்டு அடக்கலாம், மொத்தமாக எப்படிச் செயல்படாமல் செயல்படுவது என்கிற சூத்திரத்தைக் கற்பிக்கின்றனர். அரசையும் அரசாங்கத்தையும் திருப்திப் படுத்தியே  பழக்கப்பட்டு இருப்பதனால் இவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்குச் சட்டப்படி செய்து தரவேண்டியவற்றில் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி கோரிக்கைகளோடு வருபவர்களைத் திருப்பி அனுப்புவதில்தான் மும்முரமாக செயல்படுகிறார்கள் என்பது கண்டிப்புக்கு உரிய  செயல் அன்றி வேறு என்னஇதனை எல்லாம் நன்கு செய்து பழகியவர்கள் தங்களின் வேறு ஒரு கோரமுகத்தை இந்தப் போராட்ட நாட்களில் வெளிப்படுத்தத் தவறவில்லை

graphic காத்திருப்பு போராட்டத்தின் முதல் நாள் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் முன்பு அமர்ந்துள்ள படம்

           பிப்ரவரி 17ஆம் தேதியிலிருந்துபிப்ரவரி 21ஆம் தேதிவரை மாநில மாற்றுத்திறனாளிகள் ஆணையரகத்து  வாசலில் அமர்ந்தபடி பார்வையற்ற பட்டதாரிகள் பலதரப்பட்ட போராட்டத்தை முன்னெடுத்தும்,  அதற்கு உரிய தீர்வினைக் கொடுக்கும் பொருட்டு அவர்கள் அசைந்து கொடுக்காமல் மெத்தனமாக இருந்தது பேரதிர்ச்சியைக் கொடுத்தது. இதில் வியப்பு யாதெனில் அங்குக் காவலுக்கு இருந்த வாட்ச்மேன் அண்ணனிடம் இருந்த கரிசனையும் புரிதலும் கூட அங்கு பணியாற்றும் அதிகாரிகளிடம்  இல்லாதது கண்டு அதிர்ச்சி கொள்ள நேர்ந்தது. பிப்ரவரி 22 திங்கள் முதல் மார்ச் 1 வரை, அன்பு நண்பர்கள் ரவிச்சந்திரன் மற்றும் அரவிந்தன்பாசத்திற்குரிய இளவல் தம்பி ராம்குமார் ஆகியோர் தொடர் உண்ணாவிரதம் அந்த அலுவலகத்தின் வாசலிலேயே இருந்தும் அதனைக் கண்டும் காணாமல் அலுவலகத்தினுள் நுழைவதும் வெளியேறுவதும் என வழக்கம்போல் அந்த அலுவலக பணியாளர்கள் இயங்கியது நம்மை அவர்களை நோக்கி யாரப்பா நீங்கள் எல்லாம் என்று வியந்தோதத் தோன்றியது!

          இதில் அவர்கள் கொடுத்த இன்னொரு ஷாக் அடடா ரகம்! வழக்கத்துக்கு மாறாக மிகவும் பொறுமையாகவும் பொறுப்புடனும் உரையாடலிலிருந்த காவல்துறை அதிகாரிகளை அவ்வப்போது தொடர்புகொண்டு இங்கிருந்து பார்வையற்றவர்களை அப்புறப்படுத்தும்படி அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தனர். இதுபோன்ற அலட்சியங்களுக்கு  எல்லாம் மிக முக்கியமான காரணம் இந்த அலுவலகம் எந்த சட்டத்தின்படி  உருவாக்கப்பட்டது, அதனுடைய பணிகள் என்னஇந்த அலுவலகம் எப்படி அரசாங்கத்தின் இதர துறைகளோடு இணைந்து, செயல்பட்டு மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றுத் தந்து கொண்டே இருக்க வேண்டும் போன்றவற்றைக் குறித்து அறிந்திருக்காத அதிகாரிகளும் ஊழியர்களும் அங்கே பணி அமர்த்தப் படுவதே.

          இந்தப் போராட்டத்தின்போது மிக அப்பட்டமாகத் தெரிந்த ஒரு விடயம் யாதெனில் இந்தத் துறையிடம் மாற்றுத்திறனாளிகள் தமிழகம் முழுவதும் எத்தனை பேர் இருக்கிறார்கள்அதில் பட்டம் பெற்றவர்கள் எத்தனை பேர்பணி வாய்ப்பு பெற்றவர்கள் எத்தனை பேர்பணி நாடுநர்கள்  எவ்வளவு எண்ணிக்கையில் இருக்கிறார்கள்சுய தொழிலை எதிர்நோக்கிய தொகை மொத்தம் எத்தனைஇதர சலுகைகளை எதிர்பார்த்து தங்களின் வாழ்வாதாரத்தை நிவர்த்தி செய்து கொள்கிற இடத்தில் இருக்கிற மாற்றுத்திறனாளிகள் எத்தனை பேர் உள்ளிட்ட எந்தத் தரவும் இந்த அலுவலகத்திடம் இல்லை! கோரிக்கைகளை நிறைவேற்றும் இடத்திற்கு இந்தப் போராட்டத்தின் வாயிலாகப் பட்டதாரிகள் சங்கம் கொண்டு சென்றாலும், இதுபோன்ற தரவுகள் இல்லாததனால் ஏற்பட்ட  பின்னடைவு மிகவும் மோசமானதாக இருந்தது.

          இந்த அலுவலகத்தில் பணி அமர்த்த படுபவர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் மற்றும் அரசாணைகள் குறித்த பயிற்சி வழங்கப்பட வேண்டும்கட்டாயம் பார்வை மாற்றுத்திறனாளியோ, அல்லது இதர மாற்றுத்திறனாளிகளோ இந்த அலுவலகத்தில் உயர் பொறுப்புக்கு நியமிக்கப்பட வேண்டும் அப்பொழுதுதான் இதன் முக்கியத்துவம் வெளிப்பட்டு அது மாற்றுத்திறனாளிகளுக்கு உரியப் பலனைத் தரும். கோரிக்கைகளின் நிலை என்ன என்று ஒவ்வொரு நாளும் மாலையில் சென்று கேட்கிற பொழுதெல்லாம் அவர்கள் சொன்ன பதில் மேல் இடத்திற்கு அனுப்பிருக்கிறோம் தகவல் வந்ததும் தெரிவிக்கிறோம் என்பதே. இவ்வாறு சட்டம் மற்றும் மனிதாபிமானத்தைக் குறித்த புரிதலின்றி அவை கிலோ எவ்வளவு என்று  கேட்பவர்களைக்  கொண்டு அலுவலகத்தை இயக்கினால் உரிமைகள் கபளீகரம்  செய்யப்பட்டுக் கொண்டுதான் இருக்கும் என்பதை இந்தப் போராட்ட நாட்கள் உணர்த்தின!

 

போராட்ட காவல் காரர்கள்.

            இம்முறை கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் முன்னெடுத்த போராட்டத்தில் எழுந்த மிகப்பெரிய சவால் எப்படி மக்களை அணிதிரட்டுவது என்பதே. களத்தில் பெரும்  திரளாகக்  கலந்து கொள்ளக் கூடிய மாணவர்களுக்கு விடுதியும், கல்லூரியும் முழுமையாக திறக்கப்படவில்லை. பட்டங்கள் முடித்து மாநிலத்தில் பல்வேறு இடங்களில் இருக்கக்கூடிய சங்க உறுப்பினர்கள் போராட்டத் தீ மனதில்  கொழுந்துவிட்டு எரிந்தாலும்  வந்து கலந்துகொள்ள இயலாமல் போனது. ஒருபுறம் படித்து முடித்துவிட்டு ரயில் மற்றும் பேருந்துகளில் வியாபாரம் செய்து கொண்டிருந்த பட்டதாரிகள் பெரும்பாலும் வருமானம் இழந்து பெரும் துயரிலிருந்ததால் அவர்களை எப்படி போராட்டத்திற்கு அழைப்பது என்கிற சிக்கலும் இருக்கத்தான் செய்தது.           சராசரியாக 50க்கும் மேற்பட்டோர் தொடர்ச்சியாக வந்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடாமல் எடுத்துச் செல்ல இயலும் என்கிற எதார்த்த எண்ண ஓட்டத்தில் சங்கமும்  முன்கள  போராளிகளும் உடன்பட்டே  இருந்தனர். இப்படிப்பட்ட இடர்பாடுகளும் தடைகளும் இருப்பினும், போராட்டம்  மிகத்  தீவிரமாகப் பிப்ரவரி 17 முதல் மார்ச் 1. 2021, கிட்டத்தட்ட 13 நாட்கள் எடுத்துச் செல்லப்பட்டது. இதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர்களை  மூன்று விதமாகப் புரிந்து கொள்ளலாம்.    போராட்டத்தின் பிப்ரவரி 22 திங்கள் முதல் மார்ச் 1 2021  திங்கள் வரைமிகச் சரியாக எட்டு நாட்கள் தங்களை வருத்தி உண்ணா நிலைப் போரட்டத்தில் இருந்த 3 போராளிகள்அவர்களே   தொடர்ச்சியாக இந்தப் போராட்டம் நடைபெற  மிக முக்கியமான உந்து  சக்திகளாகத்  திகழ்ந்தனர். சங்க உறுப்பினர்களான திரு. ராம்குமார் M.Phil, P,hdநடப்பு செயற்குழுவில் பணியில் இல்லாதோருக்கான செயற்குழு உறுப்பினர்திரு P. அரவிந்த் M.Phil, B.Ed, மற்றும் திரு ரவிச்சந்திரன் M.Phil, B.Ed. இவர்களோடு 17 பிப்ரவரி முதல் 1 மார்ச் வரை இடைவிடாது மறியல்ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்நகல் எரித்தல் மற்றும் நீதி கேட்டல் உள்ளிட்ட அனைத்து வகையான போராட்டங்களிலும் கலந்துகொண்ட பார்வையற்ற பட்டதாரிகள் மிக முக்கியமானவர்கள். தாங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு என்று அன்றாடம் செய்து வந்த வியாபாரத்தை விட்டு விட்டுக் கூட பலர் தவிப்புடனும், துடிப்புடனும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டது கவனிக்கத்  தக்கதாக இருந்தது. சராசரியாக 80க்கும் மேற்பட்டோர் இடைவிடாமல் 13 நாட்கள் நடைபெற்ற கல போராட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க தங்களின் பங்களிப்பின்மூலம் உதவினர். ஆய்வேட்டினை சமர்ப்பித்துவிட்டு, வாய்மொழி  தேர்விற்காகக் காத்திருக்கிற முனைவர் பட்ட ஆய்வாளர்களும்ஆய்வேட்டினை எழுதுகிற தயாரிப்பில் இருக்கிற பட்டதாரிகளும்வருகைதரு  விரிவுரையாலர்களாக மாநிலம் முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் பணிபுரிந்து கொண்டிருக்கும் சங்க உறுப்பினர்களும் இதில் அடக்கம். இவ்வாறு திரண்டவர்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்ட போது காவல்துறையினரால் பல இன்னலுக்கு உள்ளாகினர். அவர்களின் மோசமான செயல்பாட்டினால் பெண்களும் சில ஆண்களும் காயம் படவும் நேர்ந்தது.  

graphic சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்ற பேரணி போராட்ட படம்

         இரவில் அந்தப் பகுதியையே தன்வசம் வைத்திருக்கும் சமுத்திர தேவனின் காற்று அங்குக் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட களப் போராளிகளைச் சோதித்துப் பார்த்தது. ஆனால் இது எதற்கும் அவர்கள் இறை ஆகவில்லை தங்களின் போர்க்குனத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டு ஓய்வு எடுத்துக்கொள்ள முற்படவில்லை. ஊரடங்கு நாட்களில் வேலை இல்லாததனால் எதிர் கொண்ட எண்ணற்ற சவால்களும்சட்டப்படி கிடைக்க வேண்டிய வேலை எதுவும் அரசாங்கம் கொடுக்கவில்லை என்பதனால் ஏற்பட்ட மன உளைச்சலும் இவர்களை இது போன்ற பலதரப்பட்ட  இன்னல்களைத்  துச்சமெனக்  கருதித்  தொடர்ந்து களத்தில் நின்று  ஆக்ரோஷமாகப் போராடத் தூண்டியது.             இந்தப் போராட்டத்தில் மூன்றாவது முக்கியமான பங்கினை  வகித்தவர்கள்  செயலர் தலைமையில் இயங்கிய போராட்டக்  குழுவிலிருந்த சங்கத்தின் உறுப்பினர்கள். அது பொறுப்பு தலைவர் திரு ராஜா அவர்களின் வழிகாட்டுதலில் மிகச்சிறப்பாக இம்முறை செயல்பட்டது. கல் மனதாக இருக்கிற  அரசாங்கத்தைக்  கரைய வைக்க வேண்டும்பாராமுகமாக இருக்கிற ஊடகத்தை நம் பக்கம் நோக்கி ஈர்த்து, நம்முடைய  கோரிக்கைகள்   தொடர்ச்சியாகச்  செய்தி ஆக்கப்பட திட்டமிட வேண்டும்உண்ணாவிரதம் இருக்கிற உறுப்பின தியாகிகளின் உணர்வினைப் பிரதிபலிக்கும் விதமாகத் தினசரி மறியல் உள்ளிட்ட பலதரப்பட்ட போராட்டத்திற்குத் திட்டமிட வேண்டும்அதுமட்டுமல்ல இம்முறை புதிதாகக் காத்திருப்பு போராட்டம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டதால் அங்கு இருந்த உறுப்பினர்கள் மற்றும் உண்ணாவிரத தியாகிகள் போன்றோருக்கு அடிப்படை வசதிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்து தர, குறை பார்வை உடைய உறுப்பினர்களைச் சுழற்சி முறையில் ஈடுபடுத்தத் திட்டமிட வேண்டும் உள்ளிட்ட ஏராளமான சவால்களைத் தலைவரின் வழிகாட்டுதலில் இயங்கிய இந்தக் குழு எதிர்கொண்டு மிகச்சிறப்பாக  அதனைக்  கையாண்டது. இதில் பணியிலிருந்தும் பலர் போராட்டத்திற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவினை நல்கி இருக்கிறார்கள். இந்தப் போராட்டக் குழுவில் பணியாற்றியவர்கள் மற்றும் சுழற்சி முறையில் இயங்கிய குறை பார்வை உடைய உறுப்பினர்கள் மற்றும் இதர போராளிகள் குறித்து விரிவாகப் பேச வேண்டுமென்றால் இந்தக் கட்டுரை போதாது என்பதனால், இதில் தீவிரமாகக் கலந்து ஒரு எழுச்சிக்கு, அதன் துவக்கத்திற்கு வித்திட்ட ஒவ்வொருவருக்கும் போராட்ட  வாழ்த்துக்களைத் தெரிவித்து அடுத்த பகுதியை நோக்கி நகர்வோம்!

 

மாறுதலுக்கு உள்ளான போராட்டச் சூழல்காவல்துறையின் அணுகுமுறைஊடகத்தின் பங்களிப்பு.

          சில போராட்டங்களைத் தொடர்ந்து வழிநடத்திப் பழுத்த அனுபவம் கொண்ட அண்ணன் டேவிட் அவர்கள்அண்ணன் சக்திவேல் அவர்கள்தம்பி அய்யனார், தம்பி சிங்காரவேலன் மற்றும் தம்பி பழனிச்சாமி ஆகியோர் போராட்ட நேரத்தில் ஒப்புக்கொண்ட ஒரு முக்கியமான விடயத்தை இங்கே பதிவு செய்ய வேண்டியதாக இருக்கிறது. முன்புபோல் களப் போராட்டங்கள் அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. இதற்கு காவல்துறையின் மூர்க்கத்தனமான அணுகுமுறையும் ஒரு முக்கியமான காரணம் என்றால் அது மிகையில்லை.  சாலைக்குச்  செல்லுகிற  தீர்மானத்தைப் பட்டதாரிகள் சங்கத்தினர் எடுப்பதற்குக் காரணம் அதன் வழியாக அரசாங்கத்தின் கதவுகளை ஓங்கி அறைய முடியும் என்பதால்தான். மறியல் செய்த பிறகு கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில், அல்லது சமூக நலக் கூடத்தில் அடைக்கப்பட்ட ஒட்டுமொத்த போராளிகளின் எண்ணிக்கை, காவல்துறை மற்றும் உளவுத்துறையின் வாயிலாக மேலிடத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுப் பேச்சுவார்த்தைக்கு உடனடியாக அழைக்கப்பட்டார்கள். இதுதான் கடந்த கால அனுபவம். அந்த நிலை இப்போது முற்றிலும் மாறிவிட்டது. இப்பொழுதெல்லாம் ஒரு இடத்தில் சென்று அடைத்து விட்டு அங்கே காவல்துறை தங்களின் ஈவிரக்கமற்ற  தாக்குதலைச்  சொல்லிலும் செயலிலும் காட்டி, மன உளைச்சலுக்குப் போராளிகளை உள்ளாக்கி அதன் மூலம் அழுத்தம் கொடுத்துப் போராட்டத்தை நிறுத்த  முற்படுகிராகளே  அன்றி, நமது கோரிக்கைகளைச் சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம், தங்களுக்கு மேல் இருக்கக் கூடிய உயர்  அதிகாரிகளைக் கொண்டு பேச வைத்து சமரசம் ஏற்படுத்தித் தொடர் போராட்டத்திற்கு நியாயமாக, அதேவேளையில் சட்டபூர்வமாக தீர்வு காணுகிற செயலைச் செய்வதே இல்லை. 2013ஆம் ஆண்டு காவல்துறை பார்வையற்ற உண்ணாவிரத தியாகிகளை உத்தண்டி சுடுகாட்டில் சென்று விட்டதன் விளைவாக, சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து  மாற்றுத்திறனாளிகளைப் போராட்ட வேளையில் எப்படிக் கையாள வேண்டும் என்கிற வழிமுறைகளை வெளியிட செய்தும் கூட அதை கிஞ்சித்தும் பின்பற்றாமல் காவல்துறை அதிகாரிகள் வன்மத்தோடு நடந்துகொள்வது போராட்டங்களின் குரல்வளையை நசிக்கிற முயற்சியே அன்றி வேறு ஒன்றும் இருக்க முடியாது! மறியல் செய்வதற்கென்று இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு அமரும் முன்னரே மூர்க்கத்தனமாக தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்கிற போக்கு வெகுவாக அதிகரித்திருக்கிறது. இங்கு எல்லா மட்டத்திலும் செயல்படுகிற அதிகாரிகள் தங்களுக்கு எவ்வித கெட்ட பெயரும் வந்து விடக்கூடாது என்பதில் மிகுந்த சிரத்தையோடு பணியாற்றுகிறார்கள் என்பதே கண்கூடு. எப்போதெல்லாம் காவல்துறை தங்களின்  அராஜகத்தைக்  கட்டவிழ்த்து விடுகிறதோ அப்போதெல்லாம் நம்மை மீட்டு கோரிக்கைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிற மகத்தான பணியை ஊடகத்தினர் தொய்வின்றி செய்தனர் அன்று. இப்பொழுதெல்லாம் ஊடகத்தின் நோக்கமும், அது ஒரு செய்தியை அணுகும் விதமும் தலைகீழ் மாற்றம் கண்டதன் விளைவாகஒவ்வொரு ஊடகமும் ஒரு அரசியல் சார்பு நிலைப்பாடு எடுத்து இயங்கி வருவதன் காரணமாகவும், இதுபோன்ற உரிமை சார்ந்த போராட்டங்களுக்கு அவர்கள் ஆதரவு தரத் தயங்குகின்றனர். அது இந்தப் போராட்ட காலத்தில்  பட்டவர்த்தனமாகப்  புலப்பட்டது.  

        அதிலும் இது சட்டமன்ற தேர்தல் காலகட்டம் என்பதனால் அது சார்ந்த செய்திகளை  பிரேக்கிங்  நியூஸாக கொடுப்பதில் ஊடகங்கள் வரிந்து கட்டிக் கொண்டு இயங்கியதால் நமது போராட்டம் பெரிய அளவில் பேசுபொருளாக மாற்றப்படாமல் போய்விட்டது. இதுவரை 30 நாட்களுக்கு மேல் ஒட்டுமொத்தமாக உண்ணாவிரதம் இருந்திருக்கிற நண்பர் அரவிந்தன் கம்பீரமாகப் போராடினாரே அன்றி கண்ணீர் சிந்திக் கதறியதில்லை. ஆனால் அப்படி இம்முறை அவர் குமுறியதன் விளைவாக சில வலைஒளி  ஊடகங்களும், இதர மைய நிரோட்ட ஊடகங்களும் நமது செய்தியை சில நாட்கள் வெளி உலகத்திற்கு எடுத்துச் சென்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பரபரப்பு என்பதனை எப்பொழுது இந்த ஊடகங்கள் பற்றிக்கொண்டனவோ  அப்போதே அவை தங்களின் அறத்தை இழந்து விட்டன என்பது மறுக்க இயலா உண்மை.       அதுபோல காவல்துறை அதிகாரிகளும், ஊடகத்தினரும், மாற்றுத்திறனாளிகள் துறையில் பணியாற்றுகிற அதிகாரிகளும், மாற்றுத் திறனாளிகளின் போராட்டத்தை அவர்தம் கோரிக்கைகளை ஒரு புள்ளியில் கொண்டு நிறுத்துவதை  வாடிக்கையாக  கொண்டிருக்கின்றனர்.  அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் அமைப்பு போராடினால்,  அது தொடர்பான செய்திகளை வெளியிடுகிற வேளையில், கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் கோரிக்கையை இணைத்து அத்தோடு செய்தியை வெளியிட்டுவிடுகிற செயல் மேலே சொன்ன மூன்று தரப்பினராலும் மேற்கொள்ளப்படுகிறது. இது அப்பட்டமான சட்ட மீறல் ஏனெனில் பார்வையற்றோர் உரிமைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 21 வகையான ஊனமுற்றோருக்கும் அவர்தம்  ஊணத்திற்கு ஏற்ற தேவையும் பணி வாய்ப்பும் இருக்கிறது. அவர்களின் உரிமைகளுக்காக செயல்படுகிற வெவ்வேறு அமைப்புகளையும் புரிதலின்றி ஒரே வகைக்குள் சுருக்குவது அவர்தம் உரிமைகளை எள்ளி நகையாடுகிற அணுகுமுறை. எத்தனையோ இடர்பாட்டுக்கு மத்தியில் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு சுழற்சி முறையில்  செயல்பட்டுக்  காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும், உண்ணாவிரத தியாகிகளையும் அரண் போல் காத்த அண்ணன் மணிமாறன் அவர்கள் சுட்டிக் காட்டியது போல இந்தப் போராட்டம் இதற்கு முன்னால் எழுச்சி பெற்று உரிமைகளை வென்றெடுத்த  போராட்டங்களிலிருந்து பலவிதங்களில் மாறுபட்டதாகவே தொடக்கம் முதல் இறுதி வரை இருந்தது!

கைவிடாத போராட்டமும் அது விட்டுச்சென்ற படிப்பினைகளும்!

       இந்தக் கட்டுரையில் இறுதியாக சில முக்கிய  அம்சங்களைப்  பார்த்துவிடுவோம். இம்முறை பார்வையற்ற பெண்கள் திரண்டு வந்து கொடுத்த ஆதரவு போற்றுதலுக்குரியது. முனைவர் பட்டம் அளவிற்குத் தகுதியை வைத்திருந்தும்,  வேலை கிடைக்காததால் மிகுந்த மன உளைச்சலில் இருக்கக்கூடிய பட்டதாரி பார்வையற்ற பெண்கள் அவர் தம் கணவர்களோடு வந்து தினசரி கலந்துகொண்டு தங்களின் குமுறலை  வெளிப்படுத்தத்  தவறவில்லை. வெளி மாவட்டங்களிலிருந்து கூட வருகைதரு விரிவுரையாளராகப் பணியாற்றும் முனைவர் ஜெபமணி அவர்கள் மற்றும் இதர பெண்கள் ஆர்வத்தோடு கலந்துகொண்டது அவர்களின் போராட்ட மன ஓட்டத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தது. அதிலும் ஏராளமான ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டிருக்கிற முனைவர் ஜெபமணி அவர்கள் காவல்துறையினரால் தாக்குதலுக்கு உள்ளானதை  அவ்வளவு எளிதில் இச்சங்கம் மற்றும் பார்வையற்ற சமூகம் மறந்துவிடப் போவதில்லை! இதில் சகோதரி வீரலட்சுமி அவர்கள் இரவு  நேரக்  காத்திருப்பு போராட்டத்திலும் தன் கணவரோடு தொய்வின்றி கலந்துகொண்டு போராட்டத்திற்கு வலுசேர்த்த படி இருந்தார். ஜூடோ உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளில் சர்வதேச பதக்கங்கள் பெற்றும், அரசிடமிருந்து எவ்வித அங்கீகாரம் கிடைக்காத விஜயசாந்தி உள்ளிட்ட தங்கைகளும் அரசை எதிர்த்து குரல் கொடுத்து கவனம் ஈர்க்க போராட்டத்தில் பங்கேற்றனர். இதில் முத்தாய்ப்பாக, அம்மு என்கிற போராளி தங்கை, இந்தப் போராட்டம் தொடங்கிய முதல் நாளிலிருந்து இறுதி நொடி வரை போர்க் குணத்தோடு பங்கேற்று எல்லா பெண்களுக்கும்  முன்மாதிரியாகத்  திகழ்ந்து, போராடுகிறவர்களுக்கும் ஒரு ஊக்கத்தைத்தந்தார் என்பது மனதார பாராட்டத்தக்கது! போராட்டத்திற்கு இடையே அவருக்கு உடல் நலம் குன்றினாலும் எங்கள் அண்ணன்களை, இந்தத் தகிக்கும் களத்தை விட்டு நான் போக மாட்டேன், வேலை கிடைக்கும் வரை போராடுவேன் என்று உறுதியாக நின்றது எல்லோரையும் தீவிரமாகப் போராடத் தூண்டியது! அதேவேளையில் ஆயிரக்கணக்கானோர் தகுதியுடன் காத்திருக்கையில் சிலர் மட்டுமே தொடர்ச்சியாகப் போராட்டத்திற்கு வருவதும், ஏனையோர் வரக்கூடிய சூழலிலிருந்தும் தவிர்ப்பதும் வருத்தம் கொள்ளச்  செய்வதாகப் போராட்டத்தில் பங்கேற்ற ஒவ்வொரு பார்வையற்ற பட்டதாரிகள் சங்க உறுப்பினர்களும் குறிப்பிடத் தவறவில்லை. இந்தப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில், அதாவது 24 பிப்ரவரி அன்று முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் அந்தப் பகுதியில் முன்னாள் முதல்வருக்கு மரியாதை செய்யும் பொருட்டு வந்திருந்தும், பார்வையற்ற பட்டதாரிகள் போராட்டம்  குறித்துக்  கண்டு கொள்ளாமல் சென்றது இவர்கள் மாற்றுத்திறனாளிகளை எப்படி அணுகுகிறார்கள் என்பதைக் குறித்து யோசிக்க வைத்தது. இந்தப் போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற பணியில் உள்ள பார்வையற்ற ஆசிரியர் மற்றும் இதர பணியாளர்கள் தாராளமாக நிதியை வாரி வழங்கி இருக்கிறார்கள், அவர்கள் ஒவ்வொருவரையும் இந்த நேரத்தில் நன்றியோடு நினைத்துப் பார்ப்பது உகந்தது. பணியில் இருக்கிற பலர் எங்களால் வர இயலாவிடினும் உங்களுக்குக் கைகொடுத்து ஊக்கப்படுத்த முடியும் என்று உற்சாகமாக நிதியை அள்ளிக்கொடுத்தது போராட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இறுதியாக யாரும் எதிர்பாரா வண்ணம் தேர்தல் தேதி வெள்ளி மாலை, அதாவது 26 பிப்ரவரி அன்று அறிவிக்கப்பட்டது பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. இதுவரை கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் எந்தப் போராட்டத்திற்கும் இப்படி ஒரு நெருக்கடி விளைந்தது கிடையாது. அதிகாரத்தோடு இருக்கும் அரசே அலட்சியப் படுத்துகிறது என்றால் காபந்து அரசு என்ன கண்டு கொள்ளுமா 

graphic திரு. தொல் திருமாவளவன் அவர்கள் பழச்சாறு கொடுத்து போராட்டத்தை முடித்து வைக்கும் படம்

         அப்படி இருந்தும் மூன்று நாட்கள் போராட்டம் வீரியமாக முன்னெடுக்கப்பட்டது. பிறகு நம்மோடு கைகோர்த்த மக்கள் உரிமை பாதுகாப்பு அமைப்பினைச் சார்ந்த தோழர்களின் உதவியோடு, சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் மரியாதைக்குரிய தொல் திருமாவளவன் அவர்களும் விழுப்புரம்  நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் திரு ரவிக் குமார் அவர்களும் இதர நிர்வாகிகளும் பங்கேற்று திரு. திருமாவளவன் அவர்களின் தலைமையில் இந்தப் போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்தி வைப்பது என முடிவு எட்டப்பட்டுஜூலை  மாதத்திற்குப் பிறகு இந்தப் போராட்டத்தினை வலுவாக  எடுத்துச்  செல்வது  எனத்  தீர்மானிக்கப்பட்டுத் தற்காலிகமாகப் போராட்டம் மார்ச் 1 மாலை விலக்கிக் கொள்ளப்பட்டது.  

        இந்தப் போராட்டத்தின் மிக முக்கியமான அம்சம் யாதெனில். அந்த மாற்றுத் திறனாளிகள் வளாகத்திற்குள் கோரிக்கைகள் எல்லாம் முடங்கி விடுமோ என்று அச்சப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தைச் சார்ந்த தோழர்கள் மார்ச் 11 வியாழன் அன்று மாண்புமிகு நீதியரசர் அரிபரந்தாமன் அவர்களின் தலைமையில், கருத்தரங்கினை ஏற்பாடு செய்து யூடியூப்  மற்றும்  பேஸ்புக் லைவ் ஆகியவற்றின் வாயிலாக ஆயிரக்கணக்கானோர் பார்வையற்றவர்களுக்கு இழைக்கப்படுகிற சட்ட உரிமை மீறல் குறித்து அறிந்து கொள்ளும்படி செய்தனர். இதில் பேராசிரியர் இளங்கோ அவர்கள்வழக்கறிஞர் பாலன் அவர்கள்கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் திரு ராஜா அவர்கள்அகில இந்தியப் பார்வையற்றோர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் திருமதி. முத்துச்செல்வி அவர்கள் மற்றும் ஏராளமான களப் போராளிகளும் வழக்கறிஞர்களும் பார்வையற்றோருக்கு சட்டப்படி வழங்கவேண்டிய ஒதுக்கீட்டு மறுப்பினைக்  குறித்துக்  கண்டன உரையாற்றினர். உணர்வு பூர்வமாகத் தோழர் ஸ்ரீஜா அவர்கள் இயற்றி பாடிய பாடல் பார்வையற்றவர்களின் நிலையைக்  கலைபடுத்தி யோசிக்க வைத்தது. இது நிகழ வழக்கறிஞர் அருண் அவர்கள் மற்றும் திரு. மில்டன் அவர்கள் மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிட தக்கது. இந்த நிகழ்ச்சி நடைப்பெற்ற பத்திரிகையாளர்களின் மன்றத்திற்குப் பார்வையற்றவர்கள் பெருந்திரளாக வந்தது பாராட்டிற்கு உரியது. இந்த கருத்தரங்கத்தின் தலைப்பாக எம்பில், பிஎச்டி பட்டம் முடித்தது கல்லூரியில் பாடம் நடத்த வா அல்லது இரயிலில் மிட்டாய் விற்கவா என்று வைக்கப்பட்டது, இழைக்கப்பட்ட  அநீதியைப்  பறைசாற்றும் விதத்தில் அமைந்திருந்தது. கட்டாயம் பல கைகளும், எண்ணற்ற தோழமைகளும்பொதுச்  சமூகத்தினரும், உறுப்பினர் சொந்தங்களும் இணைந்ததன் விளைவாக ஒரு சிறந்தப் போராட்டம் துவக்கம் கண்டு, தொடர்ச்சியை எதிர்காலத்தில் எய்தி, வரலாற்றின் ஏடுகளில்  இடம்பிடிக்கக்  காத்திருக்கிறது!

graphic பேரா. U. மகேந்திரன் அவர்களின் படம்
கட்டுரையாளர் முனைவர் உ. மகேந்திரன்

 

கட்டுரையாளர், சென்னை சர். தியாகராயர் கல்லூரியின் ஆங்கிலத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார்).  

தொடர்புக்கு: mahendranbefrank@gmail.com

2 கருத்துகள்:

  1. இந்த கட்டுரையின் இறுதியில் நான் செய்ய வேண்டிய நன்றி உரை தலை செய்யாமல் விட்டதற்காக மிகவும் வருந்துகிறேன். இதில் தேதிவாரியாக தகவல்களை சொல்லி வரிசைப்படி நான் எழுத பெரிதும் துணையாய் இருந்த அன்புத்தம்பி ராம்குமாருக்கு எனது நன்றியை காணிக்கையாக்குகிறேன். ஆசிரியர் குழுவினர் வாய்ப்பு இருந்தால் அதனை எனது கட்டுரையின் இறுதியில் இணைத்தால் நான் பெரிதும் நிம்மதி கொள்வேன். நன்றி தம்பி ராம்குமார்!

    பதிலளிநீக்கு
  2. கட்டுரை மிகவும் சிறப்பு. களத்தில் இருந்தே அனைத்தையும் பார்த்தது போன்ற ஒரு உணர்வை தந்தது. நமது உரிமைகள் நிராகரிக்கப்பட்டதையும், இந்த அரசாங்கமும் நமது மாற்றுத்திறனாளர் அலுவலகமும் நமக்கான வேலைவாய்ப்புகளை தர மறுப்பதை மட்டுமே, தனது வேலையாக கொண்டிருக்கின்றன என்பதையும் இக்கட்டுரை வெட்டவெளிச்சமாக்கி இருக்கின்றது. போராட்டத்தை மன உறுதியோடு கையிலெடுத்த நமது பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தையும், போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து போராளிகளையும், உண்ணாவிரதம் மேற்கொண்ட உண்ணாவிரத தியாகிகளையும் கௌரவப்படுத்தும் விதமாக இக்கட்டுரை அமைந்துள்ளது. இதனை மிக நேர்த்தியாக வழங்கிய டாக்டர் U. மகேந்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.

    பதிலளிநீக்கு