கருத்துக்களம்: ஆசைத்தம்பியும் அறிவுடை நம்பியும் - 7 - வினோத் சுப்பிரமணியன்

graphic இரண்டு நண்பர்கள் பேசிக்கொள்வது போல் அமைந்த கார்டூன் படம்

            அதே வழக்கமான பூங்காதான். ஆனால் சற்றே மாறுதல் அடைந்திருந்தது. காரணம் அன்று ஏற்பாடு செய்யப்பட்ட  நிகழ்ச்சிதான். வழக்கமாகப் பூங்காவுக்கு வருபவர்களைக் காட்டிலும் சற்று கூட்டம் அதிகமாக இருந்தது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரான ஆசைத் தம்பி அங்கும் இங்குமாக அலைந்து கொண்டு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துக்கொண்டிருந்தான். பதாகைகள் ஒட்டப்பட்டிருந்தன. நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. சுற்றிலும் பெண்களைப் பற்றிய வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

            இவையெல்லாம் பெண்கள் தினத்திற்கான ஏற்பாடு என்பதில் யாருக்கும் சந்தேகம் எழவில்லை. பெண்கள் படும் அவலங்களையும், அவர்களின் பெருமைகளையும் அந்தத் தினத்தில் ஆண்கள்  வாயிலாகப்  பேசவேண்டுமென்ற திட்டத்தின் அடிப்படையில் ஆண்கள் பங்கேற்பாளர்களாகவும் பெண்கள் பார்வையாளர்களாகவும் இடம்பெற்றிருந்தனர். அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆணுக்கும் தனது வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள ஐந்து நிமிடங்கள் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் சிலர் பாடினர். சிலர் பேசினர். சிலர் கவிதைகளை அரங்கேற்றினர். சிலர் பெண்கள் போல நடித்துக்காட்டினர். இறுதியில் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் பொறுப்பு பெண்களிடமே வழங்கப்பட்டிருந்தது.

           இப்போது நம்பியின் நேரம். அவனுக்கும் அதே ஐந்து நிமிடங்கள்தான். எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மேடை ஏறினான் நம்பி.

          சுற்றுமுற்றும் பார்த்தான். அங்கிருந்த அனைவரும் நம்பியைப் பார்த்தனர். திடீரென்று கூட்டத்தில் ஒரு குரல்.

ஹலோ சார். நீங்க உங்கள் ஃபிரண்ட் கிட்ட பேசுர மாதிரி மணிக் கணக்காவெல்லாம் பேசக்கூடாது சரியா! அஞ்சு நிமிஷமென்றால் அஞ்சு நிமிஷம்தான்.” என்றது அந்தக் குரல்.

          குரல் வந்த திசையைக் கூர்ந்து நோக்கினான் நம்பி. அவள்தான்! அதே பெண்தான்! போனமுறை பார்த்த அதே யுவதிதான் இவள்! பார்வையை ஒருநொடி விலக்கியவன்.

நிமிடங்கள் நிர்ணைக்கப்பட்டுவிட்டன. நான் அதை 300 நொடிகளாக நினைத்துக்கொள்கிறேன்.” என்று சொல்லிச் சிரித்தபடியே கூட்டத்திலிருந்த அந்தப் பெண்ணைப் பார்த்தான் நம்பி. அதில் ஒரு நொடி கழிந்தது.

          பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்று கருத்து பேசும் கலங்கரை விளக்கங்களே! கண்கள் இல்லாத பெண்கள் பற்றி கனவிலாவது சிந்தித்ததுண்டாஅவர்களின் கவலைகளைப் பற்றிக் கண்டு கொண்டதுண்டாபிறப்பு முதல் இறப்பு வரை அவர்கள் படும் இன்னல்கள் பற்றி அலசி ஆராய முற்பட்டால் அதில் கிடைத்த தகவல்களே பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதுதான் கசக்கும் உண்மை. எல்லோரும் எல்லாவற்றையும் வெளிப்படையாகச் சொல்லவில்லை. ஆனால் சொன்னவை மட்டும் சொல்லொணா துயரம் கொண்டவை. 

            பொதுவாகக் குழந்தைகள் பிறந்தால் சந்தோஷம் கொள்ளும் தாய்மார்கள் தங்களைப் பெற்றதற்காகவே தினமும் அழுகிறார்கள் என்கிறார் ஒரு பார்வையற்ற பெண். எங்களுக்கான கல்வியைக் கூட கண்ணீர் சிந்திதான் உறுதி செய்யமுடிகிறது என்றார் இன்னொருவர். பெரும்பாலானோர் அவர்களைப் பற்றிக் கூறிவிட்டு தங்களது பெயர்களை வெளியிட வேண்டாம் என்று கூறினார்கள்அவர்கள் சொல்லச் சொல்லியிருந்தாலும் நான் சொல்லுபவனல்ல. புத்தகச் சுதந்திரம் பெண்ணுக்கு இன்றியமையாதது. அது பார்வையற்ற பெண்களுக்கு  இன்னும் கிடைக்கவில்லை என்பது தெரியுமாசரி அதை விடுங்கள். நீங்கள் பூப்பெய்திய தினம் உங்களுக்கு நினைவிருக்கிறதா?”  என்று நம்பி கேட்டதுதான் தாமதம். கூட்டத்தில் சலசலப்பு.      

          என்ன இப்பிடியெல்லாம் கேக்குறான் இந்த ஆளு?” என்று சத்தமாக முனகினாள் ஒரு பெண். அதையெல்லாம் நம்பி கண்டுகொள்ளவில்லை.

          நீங்கள் பருவமடைந்தபோது உங்கள் குடும்பம் குதூகலித்ததை உணர்ந்திருக்கிறீர்களாநிச்சயம் உணர்ந்து இருப்பீர்கள். ஆனால் அந்த நிகழ்வு பார்வையற்ற பெண்ணுக்கு நிகழும்போது என்ன நடக்கும் தெரியுமா?” என்று நம்பி கேட்கக் கூட்டத்தில் மௌனம். ஓரிரு சிறு பிள்ளைகளின் சத்தத்தைத் தவிர மற்றவர்கள் மௌனமாகத்தான் இருந்தார்கள்.

          கேள்வி கேட்டு நிறுத்திய நம்பி நின்றபடி மீண்டும் தொடங்கினான்.

          பெற்றவளின் கண்ணீர். உற்றாரின் இழிவார்த்தைகள். மற்ற பெண்கள் என்றாள் விழா எடுத்துக் கொண்டாடுவார்கள் ஆனால் எங்களைப் பற்றி வெளியில் கூடச் சொல்லமாட்டார்கள் என்றார் ஒரு பார்வையற்ற பெண் என்னிடம்.” என்று நம்பி சொல்ல,

        இதையெல்லாமா ஒரு பொண்ணு இவன் கிட்ட சொல்லுவா?” என்று கூட்டத்தில் ஒரு நடுத்தர வயது பெண் சொல்லஅது நம்பியின் காதில் வந்து விழுந்தது.

     உங்கள மாதிரி ஆளுங்களாலதான் பார்வையில்லாத பெண்கள் தங்களுடைய கஷ்டங்களைக் கூட வெளியில் சொல்ல யோசிக்குறாங்க.” என்று சொல்லி தொடர்ந்தான் நம்பி.

      தன்னுடைய கல்லூரி காலங்களில் மற்ற பெண்கள் ஆண்களுடன் சகஜமாகப் பழகுவதைக் கூட பொறுத்துக்கொள்ளும் மக்கள் நான் சகஜமாகப் பழக நினைத்ததைக் கூட கேவலமாகப் பார்த்தனர் என்றார் ஒருவர் என்னிடம்.” என்று சொல்லிய நம்பி.

        பார்வையற்ற பெண்கள் தனியாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. அப்படியே சென்றாலும் ஆண்களின் சீண்டல்கள் துரத்துகின்றன. உரசுகிறேன் என்று சிலரும் உதவுகிறேன் என்று சிலரும் இவர்களுக்குக் கொடுக்கும் பாலியல் சீண்டல்கள் இவர்களைப் போலவே இருட்டில் இருப்பவையே அன்றி வெளிச்சத்திற்கு வராதவை. ஒரு பார்வை திறன் குறையுடைய பெண்ணைப் பேருந்தில் இரண்டுக்கு மூன்றுமுறை தீண்டிய ஒருவன் பார்வையில்லை என்று தெரிந்ததும் மண்ணிப்புக் கேட்டுச் சென்றுள்ளான் என்பதை என்ன சொல்லஅது ஒரு பக்கம் இருக்கட்டும். வீட்டு விஷேஷங்களில் பார்வையற்ற பெண்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. அனுமதி மறுக்க ஒரு தரப்பும் அனுமதி மறுக்கப்பட்டதால் வேலை செய்யாமல் அமைதியாக இருக்கும் பார்வையற்ற பெண்களைக் கேலி செய்ய இன்னொரு தரப்பும் பெரும்பாலான வீட்டு விஷேஷங்களிலும் இருக்கும்.

          அவ்வளவு ஏன் பெண்கள் செய்யும் சடங்குகளையும் கூடச் செய்வதற்கு இவர்களுக்கு அனுமதி கிடையாது.”

        யோவ்! சீக்கிரம் பேசிட்டு கிளம்பு யா! நாங்க எல்லாம் பேச வேண்டாமா? பொண்டாட்டிய கரக்ட் பண்ண கஷ்டப்பட்டு பிரிபேர் பண்ணிட்டு வந்தா நீ பாட்டுக்கு நீளமா பேசிட்டு போற?” என்றது ஒரு ஆணின் குரல்.“அடச்சை கம்முனு கட!” என்றது பக்கத்திலிருந்த பெண்ணின் குரல்.

          பார்வையற்ற ஆண்களைக் காட்டிலும் பார்வையற்ற பெண்களுக்குத்தான் திருமண வாய்ப்பு குறைவு என்று கேள்விப் பட்டபோது அதிர்ச்சியடைந்தேன். பொதுவாக ஆண்கள்தான் இப்படிச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். தங்களது பார்வைத்திறன் குறையுடைய பெண்கள் திருமணம் செய்துகொள்வதைக்கூட அவர்களது பெற்றோர்கள் உறுதி செய்வதில்லை. அதற்கான முயற்சியைக்கூட பெரும்பாலான பெற்றோர்கள் எடுப்பதில்லை. அப்படியே எடுத்தாலும் உறவினர்கள் ஒத்துழைப்பதில்லை. அப்படியே உதவினாலும் நிராகரிப்புகள்தான் அநேகம் நிகழுகின்றன. பார்வையற்ற ஆண்களில் கூட பலர் முழுதும் பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட பெண்ணை ஏற்றுக்கொள்வதில்லை.”

          இங்க இவ்வளவு பேசுராரே, நான் போயி பிரபோஸ்பண்ணா என்னைய கல்யாணம் பண்ணிப்பாரா இவர்?” என்றது கூட்டத்திலிருந் த ஒரு பார்வையற்ற பெண்ணின் குரல் யாருக்கும் கேட்காதவாறு.

         அப்படியும் சில திருமணங்கள் அரங்கேறினாலும் புகுந்த வீட்டில் ஒரு சில அசௌகரியங்கள் பார்வையற்ற பெண்களுக்கு நிகழ்கின்றன. உதாரணமாக ஆடைகளைத் தேர்ந்தெடுத்தல். அது அவர்களுக்கு மிகப்பெரிய சவால்தான். தனக்கு பொருத்தமான நிறங்களையும் ஆடை வடிவமைப்புகளையும் தன்னிச்சையாகக் கண்டுகொண்டு அணியவும் முடியாது. கேட்கவும் தயக்கமாக இருக்கும் அவர்களுக்கு. எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு பார்வையற்ற பெண் ஒரு பெண்ணாக தனக்குத் தேவையான பொருளைத் தயக்கமின்றி வெளியில் சென்று வாங்குவதும், பிறரிடத்தில் தயக்கமின்றி கேட்பதும் எவ்வளவு தர்ம சங்கடமான நிலை என்பது அவர்கள் சொல்லும்போது  எனக்குப்  புரிந்தது. உங்களுக்கும் புரியும் என்று  நினைக்கிறேன்.

            கடைசியாகப் பார்வையற்ற பெண் என்பதாலேயே தனது கர்ப்பப்பையை நீக்கிக்கொண்ட ஒரு பெண்ணின் அவலநிலையும் இந்தச் சமுகத்தில்தான் நிகழ்ந்திருக்கிறது என்பதை இந்த இடத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். இதற்கெல்லாம் என்ன தீர்வு என்று எனக்குத் தெரியாது. தேடிக்கொண்டிருக்கிறேன். வாய்ப்புக்கும் பொறுமைக்கும் நன்றி. விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.”என்று தனது பேச்சை முடித்துவிட்டு கீழே இறங்கினான் நம்பி. அதற்குப் பின் ஒரு சிலர் போட்டியில் பங்கேற்று முடிக்கவெற்றியாளரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு பெண்களுக்கு வழங்கப் பட்டது. அதன்படி வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

          அறிவுநம்பிக்கு ஆறுதல் பரிசு கூட வழங்கப்படவில்லை. வெறும் இரண்டு பேர் மட்டும்தான் நம்பியைத் தேர்ந்தெடுத்திருந்தனர். அதில் ஒரு பெண் பார்வையற்றவர். இன்னொருவர் யாரென்று இந்தக்  கருத்துக்களத்தைத் தொடர்ந்து வாசிப்பவர்களால் அனுமானிக்க முடியும்.  அங்கிருந்தவர்கள் எல்லாம் பொதுவான பெண்கள் என்பதாலும் அவர்களின் பொதுப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசியவர்களுக்கே முக்கியத்துவம் கொடுத்துத் தேர்ந்தெடுத்தனர். பார்வையற்ற பெண்களின் அவலங்களை எடுத்துரைத்த நம்பியின் பேச்சுக்கு அந்தக் கணத்தில் கைதட்டியதோடு சரி. மற்றபடி அதைப் பெரிதாக அவர்கள் உணரவில்லை.

graphic கட்டுரையாளர் வினோத் சுப்பிரமணியன் அவர்களின் படம்
கட்டுரையாளர் வினோத் சுப்பிரமணியன்

கட்டுரையாளர் வினோத் சுப்பிரமணியன்  (கட்டுரையாளர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றுகிறார். ).

slvinoth.blogspot.com   என்ற தளத்தில் தொடர்ந்து எழுதிவருகிறார்)

தொடர்புக்கு: slvinoth91@gmail.com     

2 கருத்துகள்:

  1. பார்வையற்ற பெண்களின் நிலை சற்றும் மிகைப்படுத்தாமல் பொட்டில் தெரித்தார் போல் போட்டு உடைக்கப்பட்டுள்ளது. இதை கண்டிப்பாக விரிவாக எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. தங்கைக்கு திருமணம் நடத்தி வைப்பதற்காக வேலையில் இருக்கும் பார்வையற்ற அக்காவின் உழைப்பை சுரண்டும் அம்மாக்களும் இருக்கத்தான் செய்கிரார்கள். உனக்குத்தான் பார்வை தெரியாது உனக்கு எதற்கு சொத்தும் நிலமும் இதர பங்குகளும் என கேட்கிற பார்வையுள்ள உடன்பிறப்புகளும் பார்வையற்ற பெண்ணுக்கு வாய்த்து இருக்கிறார்கள். . திருமணம் ஆகி சென்றுவிட்டால் தனக்கு பணம் வராது என்பதற்காக பார்வையற்ற தங்கையை தன்னுடனே வைத்துக் கொள்கிற பார்வை உள்ள அக்காக்களும் இருப்பதை பார்க்கிரோம். இன்னும் ஏராளமான பார்வையற்ற பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் வெளி உலகத்திற்கு வராமலேயே நசுக்கப்பட்டு கொண்டிருக்கின்றன இனி அப்படி நடக்காமல் எழுத்தாளர்கள் பார்த்துக்கொள்வது அவசியம். சிறந்த கட்டுரையை எழுதி இருக்கக்கூடிய வினோத் சுப்பிரமணியம் அவர்களுக்கு பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  2. சிறந்த உண்மையான கருத்துக்கள்.

    பதிலளிநீக்கு