தலையங்கம்: எல்லாம் வல்ல அறிவியல்

graphic உணர்ந்ததைச் சொல்கிறோம் உலகிற்கு என்ற வாசகம் அடங்கிய விரல்மொழியரின் சின்னம்
உலகமே தற்போது ஓர் அசாதாரண சூழ்நிலையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஊரடங்கு காரணமாக நாம் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடக்கப்பட்டிருக்கிறோம். அதே நேரத்தில், பார்வை மாற்றுத்திறனாளிகளாகிய நாம் இயல்பான தடையோடு, இந்த ஊரடங்குத் தடையையும் தாண்டி மற்றவர்களோடு தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்.
      சக பார்வை மாற்றுத்திறனாளிகளின் துயர் துடைக்க வாட்ஸப் குரல் பதிவுகள் வழியே பலரும் கரம் கோர்க்கிறார்கள்; இயன்றவர்கள் நேரில் சென்று உதவிவருகிறார்கள். மற்றவர்கள் இணைய வழி வங்கிச் (Net banking) சேவையின் மூலம் பயனாளிகளுக்குத்  தங்களால் முடிந்த பண உதவியை வழங்கி வருகிறார்கள். Zoom செயலியின் மூலம் கூட்டம் நடத்தி தங்களது நீண்டகால செயல்திட்டங்கள் குறித்துக் கலந்துரையாடுகிறார்கள்.
      பொது இடங்களுக்குச் சென்றாலே அருகில் இருப்பவர்களோடு கூட தொடர்பு ஏற்படுத்துவதில் தடைகளைக் கொண்ட பார்வை மாற்றுத் திறனாளிகளால் வீட்டிற்குள் இருந்துகொண்டே இத்தனையையும் சாதிக்கவைத்தது எது? விடை உங்களுக்கே தெரியும். ‘அறிவியல் தொழில்நுட்பம் .
      ஆம். அறிவியலால் எல்லாம் முடியும். உலகமே அஞ்சி நடுங்கும் இந்தச் சிற்றுயிரைக் கண்டறிந்ததும், அதன் செயல்பாடுகளைக் குறைந்த அளவேனும் மட்டுப்படுத்தியிருப்பதும்  அறிவியல்தான். நம் பிரச்சனைகளை அறிந்து, நம்மைப் பிறருடைய அன்பான கைகளைப் பற்றிக்கொள்ளத் துணை புரியும் அறிவியலால் இந்தக் கொரோனா சிக்கலிலிருந்தும் இவ்வுலகை மீட்கமுடியும் என்ற நம்பிக்கையோடு வாழ்வை எதிர்கொள்வோம்.
      சக பார்வை மாற்றுத்திறனாளிகளின் துயர் துடைக்க உழைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் விரல்மொழியரின் வாழ்த்துகளும், நன்றியும். உங்கள் ஒவ்வொருவரோடும் விரல் பிடித்து நடக்க விரும்புகிறது விரல்மொழியர்.

வாசகர்களே!
      இந்த இதழ் கொரோனா சிறப்பிதழாக மிளிர்ந்திருக்கிறது. கொரோனா காலம் பார்வை மாற்றுத்திறனாளிகளிடம் ஏற்படுத்திய தாக்கத்தைப் பல்வேறு கோணங்களில் அலசுகிறது இவ்விதழ். இச்சிறப்பிதழில் வழக்கமாக இடம்பெறும் ராகரதம், அரசியலில் நாம் ஆகிய தொடர்கள் இடம் போதாமை காரணமாக இடம்பெறவில்லை. அடுத்த இதழில் தொடர்கள் தொடர்ந்து வரும்.
இதழைப் படித்துப் பயன்பெறுவீர்.