கவிதை: உறங்கியது போதும் - லட்சுமனன் புரட்சி வித்தகன்

graphic என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற வாசகம் இடம் பெற்ற படம்

 

உரிமைகளை இங்கு விற்கிறோம்,

உணர்ச்சிகள் அற்று நிற்கிறோம்.

வாக்கு அரசியலை!

வாய்க்கரிசி போட்டுப் புதைக்கிறோம்,

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை 

அரங்கேறும் கூத்தில் நம்மை அடகுவைக்கிறோம்.

 

சத்தியத்தை விலை பேசும் வேஷதாரிகளிடம் 

பொன்னான வாக்குகளை

தாரை வார்த்துக் கொடுக்கின்றோம்,

கடைசி நேர நாடகத்தில் பொன் முட்டையிடும் வாக்குறுதிகளுக்கு மதிமயங்கும் புத்தி மழுங்கிய நிலையிலே இருக்கிறோம்.

 

தேர்தல் சந்தையில் குறைந்த பணத்திற்கு விலை போகிற அற்ப மானுட சமுதாயமே!

அது நம்முடைய வரிப்பணந்தான் என்றுகூட தெரியாமல்

ஏட்டுச் சுரைக்காயாக இருந்து கொண்டு வர்க்க சுரண்டலுக்கு வழிவகுக்கிறோம் .

 

வியாபார நோக்கத்தில் ஆங்கிலேயர்கள் வந்தார்கள் அன்று,

எப்படியாவது ஆட்சி கட்டிலில்  அமர்ந்து விடலாம் என்று பலே திட்டம் போடுகிறார்கள் கபடதாரிகள் இன்று.

எப்படிப் பார்த்தாலும் வணிக நோக்கம்தான்,

இப்படிப் பாழ்பட்டுக் கிடக்கும் இந்த தேசம் அடிமைத்தனத்திலிருந்து  விடுவித்துக் கொள்வது என்றுதான்அந்த நாள் என்றுதான்!

 

வாக்காளர்களே!

ஓட்டுக்குப் பணம் வாங்காமல்

தேர்தல் நீதிமன்றத்தில் தீர்ப்புகளை மாற்றி எழுதுங்கள்.

அது உங்களின் கரங்களில்தான் இருக்கிறது.

இதுநாள் வரையிலும் உறங்கியது போதும்.

இனியாவது விழித்துக் கொள் தமிழா..

கவிதை ஆசிரியர் லட்சுமனன் புரட்சி வித்தகன்

 

கவிதை ஆசிரியர்: புதுக்கோட்டை மாவட்டம், பொண்ணம் விடுதியில் வசித்து வரும் பட்டதாரி.

தொடர்புக்கு; latestlakshmanan@gmail.com