தலையங்கம்: ஒரு துளி விஷம்

graphic உணர்ந்ததைச் சொல்கிறோம் உலகிற்கு என்ற வாசகம் அடங்கிய விரல்மொழியரின் சின்னம்

விரல்மொழியர் நேசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!  

      சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வந்திருக்கிறது விரல்மொழியர். இதழ் பணி செய்வதும், எழுத்தாளர்கள் கிடைப்பதும் சிரமமாகவே உள்ளது. அதே நேரம், பேசப்படவேண்டிய செய்திகளும், பொருள்களும் மலை போலக் குவிந்துகிடக்கின்றன. எப்படியோ இழுத்துப் பிடித்து இவ்விதழை நாங்கள் நடத்திவருகிறோம் என்பதே மனம் திறந்து நாங்கள் கூறும் மறுக்கக்கூடாத உண்மை. இந்த இதழுக்கும் வழக்கம் போல உங்கள் ஆதரவை நல்கிடுவீர்கள் என்று நம்புகிறோம். வாசகர்களின் ஆதரவு என்பதைத் தாண்டி வேறென்ன மகிழ்ச்சி இருக்கிறது விரல்மொழியருக்கு!

 

            +2 முடித்த எல்லோரும் அறிந்த சொல்லாக மாறியிருக்கிறது போட்டித் தேர்வுகள். ஒன்றிய அரசும், மாநில அரசும், அரசுகளின் நிறுவனங்களும், தனியார் அமைப்புகளும் என உயர்கல்விக்கும் வேலை வாய்ப்பிற்கும் என விதவிதமான போட்டித்தேர்வுகள் அன்றாடம் நடைபெற்றவண்ணம் உள்ளன. இவற்றில் பல தடைகளைத் தகர்த்து எறிந்து, முட்டி மோதி நம்மவர்களும் கலந்துகொள்கின்றனர்; மிகுந்த சிரமங்களுக்கிடையே வெற்றியும் பெறுகின்றனர்.           

      படிப்பதற்கான பகுதிகள் நமக்கேற்ற வண்ணம் கிடைப்பது, கேள்விகளைப் புரிந்துகொள்வது, பதிலி எழுத்தர்கள் வருவார்களா வரமாட்டார்களா என்ற கடைசி நேரம் வரையிலான மன உளைச்சல், தேர்வு முடியும் வரை பதிலி எழுத்தரின் செயல்பாடு குறித்த சின்ன ஐயம், தேர்வுக்கென நெடுந்தூரப் பயணம், பொருளாதார வலுவற்ற நிலையில் இதற்கான செலவையும் ஏற்கவேண்டிய நிலைஇவற்றையெல்லாம் தாங்கிதான் பார்வைக் குறையுடையோர் தேர்வுகளை எதிர்கொள்கின்றனர்; வெற்றியும் பெறுகின்றனர். பல பார்வைக் குறையுடையோரின் வாழ்க்கையில் தேர்வுகளும், அதன் மூலம் கிடைத்த வேலையும் ஒளி ஏற்றிவைத்திருக்கின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை.

      இன்னொரு கோணத்தில் பார்த்தால், தேர்வுகள் பணம் கொழிக்கும் ஒரு வாய்ப்பு. சிறப்புப் பயிற்சி மையங்கள், வினாத்தாள் மோசடி, ஆள் மாறாட்டம், மதிப்பெண் வழங்கலில் மோசடி எனப் பல மோசடி வணிகங்கள் நிறைந்திருக்கும் செயல்பாடு இது. நாடு தழுவிய பல தேர்வுகளில் வெளிவரும் இத்தகைய மோசடிகளை நாம் அவ்வப்போது செய்திகள் வழியாகப் பார்த்துதான் வருகிறோம்.

      நிலைமை இப்படி இருக்க, இந்த மோசடிகளின் கரம் பார்வையற்றோரையும் தழுவத் தொடங்கியிருப்பதாகச் செய்திகள் கசிகின்றன.

      வட இந்தியாவில் ஒரு பெரிய தேர்வை வெற்றிகரமாக எழுதி, வேலை வாய்ப்பைப் பெற்றுத்தர பதிலி எழுத்தர் பக்கம் பெரும் வசூல் நடைபெறுவதாகவும், அந்த வசூல் 6 இலக்கங்களில் அமைகிறது என்றும் செய்திகள் வருகின்றன. அது தமிழகத்திலும் கொஞ்சம் எட்டிப்பார்ப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

      இதனால், அரும்பாடுபட்டு, பணத்திற்கு வழியின்றி தன் வாழ்வின் பொருளாதார மேம்பாட்டிற்காகத் தேர்வெழுதும் பலரது வாழ்க்கை கேள்விக்குறியாகிறது. இது நம்மவர்களுக்குத் தெரிந்து, நம்மவர்களைத் தெரிந்தவர்களுக்குத் தெரிந்து, பொதுச் சமூகத்திற்கும் மெல்ல மெல்ல சென்றுசேர்கிறது. எனவே, இத்தகைய அட்டூழியங்களை உடனடியாக நாம் தடுக்க முயலவேண்டும்.

மேலே கூறப்பட்டிருக்கும் மெளிதாகத் தலைதூக்கும் குற்றச்சாட்டைப் பொத்தாம்பொதுவாக்கி, அனைத்துத் தேர்வர்களையும், பதிலி எழுத்தர்களையும் குற்றவாளிக் கூண்டில் முன்நிறுத்த முயல வேண்டாம்.

      உயர்கல்வியும், வேலை வாய்ப்பும் வசதி படைத்தோர்க்கே சென்றுசேரும் என்ற நிலை ஏற்படாமல் தவிர்க்கவும், பார்வைக் குறையுடையோர் குறித்துப் பொதுப் புத்தியில் சில தவறான பிம்பங்கள் பதிவதைத் தடுக்கவுமே இந்த அறிவுறுத்தல்.

      இதற்கெல்லாம் தீர்வு, சுயமாக எழுதுதல்தான். நாம் அடையும் பல சிரமங்களைத் தவிர்க்கவும், நம்மைக் காக்கவும் நமக்கான அமைப்புகள் பேசவேண்டியது சுயமாகத் தேர்வு எழுதுவதைத்தான். அதற்கான அனைத்து வகையான சாத்தியங்களும் ஆராயப்படவேண்டும். அதோடு, அது குறித்த விழிப்புணர்வும், முறையான பயிற்சிகளும் பார்வைக் குறையுடையோருக்கு வழங்கப்படவேண்டும்.

      அநியாயங்களைக் கண்டு கடந்துசெல்ல வேண்டாமே!