விடை கொடுங்கள் நண்பர்களே! - ரா. பாலகணேசன்விரல்மொழியர் தனது  பயணத்தை முடித்துக்கொள்கிறது. ஐந்து ஆண்டுகள்; 35 மின்னிதழ்கள்; அரிதாக எப்போதேனும் யூடியூப்  நிகழ்ச்சிகள். இவற்றை விரல்மொழியர் முடித்துக்கொள்கிறது.

பல சோதனைகளைக் கடந்து, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இத்தனை காலமும் பயணித்திருக்கிறது விரல்மொழியர். இந்த இதழ் பார்வை மாற்றுத்திறனாளிகளை ஒருங்கிணைத்திருக்கிறது; பல திறமை வாய்ந்த படைப்பாளிகளை மெருகேற்றியிருக்கிறது; புதியவர்கள் பலரை படைப்பாளிகளாக அங்கீகரித்திருக்கிறது; பல சாதனையாளர்களை  அறிமுகப்படுத்தியிருக்கிறது; தொழில்நுட்பத்தின் உதவியோடு பல புதுமைகளை நிகழ்த்தியிருக்கிறது; தமிழ்ச் சூழலில் முதல்முறையாக ஒரு பிரம்மாண்டமான இணையவழி விழாவை நிகழ்த்தியது; எல்லாவற்றிற்கும் மேலாக, பார்வையுள்ளோரும் பார்வையற்றோர் குறித்து அறிந்துகொள்ள உதவும் ஒரு களமாக இயங்கியிருக்கிறது.

இதழின் இத்தகைய அரும்பெரும் முயற்சிகளுக்கெல்லாம் துணை நின்றவர்கள் எங்கள் படைப்பாளிகள், நலன் விரும்பி்கள், வாசகர்களாகிய நீங்கள். உங்கள் அனைவருடைய கரங்களையும் பற்றி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் நான்.

ஒரு செயல்பாட்டின் முடிவு என்பது எதிர்பார்க்கக்கூடியதுதான். ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் இறுதிக் காலம் என்ற ஒன்று நிச்சயம் உண்டு என்று நான் அறிவேன். ஆனாலும், அந்தச் செயல்பாட்டின் முடிவு, அதைவிடச் சிறந்த ஒன்றின் தொடக்கமாக இருக்கவேண்டும். ஆனால் இங்கு இது நிகழவில்லை என்கிற வருத்தம் எனக்குள் இருக்கத்தான் செய்கிறது. பார்வையற்றவர்களுக்கென தனியாக இன்னும் ஒரு மின்னிதழ் கூட வெளியாகவில்லை என்பது விரல்மொழியருக்கான வெற்றிடத்தை உணர்த்திக்கொண்டே இருக்கிறது.

இருந்தபோதிலும், கடலுக்குள் சென்று பயனளித்தால் தானே கப்பலுக்குப் பெருமை. அதனால்தான் மிகவும் வருத்தத்தோடு இந்த முடிவை அறிவிக்கிறேன்; குழுவாக அறிவிக்கிறோம். விரல்மொழியர் தனது பயணத்தை முடித்துக்கொள்கிறது. அது தன் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரையும் நன்றியோடு நினைவுகூர்கிறது.

இதுவரையிலான விரல்மொழியரின் இதழ்களை www.viralmozhiyar.com தளத்தில் வாசகர்கள் படித்துப் பயன் பெறலாம். எங்கள் வழக்கமான யூடியூப் தளத்திலும் இதுவரை பதிவிடப்பட்ட காணொளிகளைத் தொடர்ந்து பார்க்கலாம். விரல்மொழியர் மின்னிதழ் வாட்ஸப் குழுவும், கிலப் ஹவுஸ் அரங்கமும் தொடர்ந்து இயங்கும். மின்னிதழ் தனது பயணத்தை முடித்துக்கொள்கிறது.

இதழ் உயிர்த்தெழுவது அக்கறையுள்ள, நல்ல, அர்ப்பணிப்பு எண்ணம் கொண்ட பார்வை மாற்றுத்திறனாளி இளைஞர்களின் கைகளில் மட்டுமே உள்ளது. அப்படி ஒரு குழு தொட்டு்விடும் தூரத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி ஒரு குழு இதழைத் துயிலெழுப்பத் தயார் என்றால், அவர்களுக்கு முழு ஒத்துழைப்பையும் நாங்கள் நிச்சயம் வழங்குவோம்.

அக்கறையுள்ள அனைவரிடமும் நன்றி கூறி விடை பெறுகிறோம். விடை கொடுங்கள் நண்பர்களே உங்கள் விரல்மொழியருக்கு.