தலையங்கம்: ஏழாம் ஆண்டில் உங்கள் அன்பு விரல்மொழியர் - விரல்மொழியர் ஆசிரியர் குழு



ஜனவரி 27 2018-இல் தொடங்கப்பட்ட உங்கள் அன்பு விரல்மொழியர் தற்போது ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. எங்களுக்கு உதவிய படைப்பாளிகள், வாசகர்கள், நலன் விரும்பிகள் என அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

காத்திறமான சிற்றிதழ்களைப் போல, ஆழ்ந்த பொருண்மையுள்ள தலைப்புகளில் 35 இதழ்களை நாங்கள் வெளியிட்டிருக்கிறோம். இணைய வெளியில் பார்வையற்றவர்களால் தமிழ் இதழை நடத்தமுடியும் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறோம் என்று சொல்வதை விட, இப்படி ஒரு விதையை விதைத்திருக்கிறோம் என்று சொல்வதை நாங்கள் பெருமையாகக் கருதுகிறோம்.

‘விரல்மொழியர் தொடர்ந்து மின்னிதழை வெளியிடுவதில் தேக்கநிலை இருந்துகொண்டுதான் இருக்கிறது. அதிலிருந்து விடுபட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இல்லை என்றாலும், பார்வை மாற்றுத்திறனாளிகள் குறித்த பயனுள்ள களஞ்சியமாக எங்கள் தளம் இருக்கும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.

பார்வைக் குறையுடையோர் இயற்றிய நூல்களின் பட்டியல், பார்வைக் குறையுடையோரின் யூடியூப் சேனல்களின் பட்டியல் ஆகியவை எங்கள் தளத்தில் இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இதோடு, புத்தக விரும்பிகளுக்காக பார்வையற்றோர் படிக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்ட மின்நூல்களின் பட்டியல் ஒன்றையும் நமது தளத்தில் பதிவேற்றியிருக்கிறோம். புத்தக ஆர்வலர்கள் படித்துப் பயன் பெறுக.

விளையாட்டுத் துறையிலும், அறிவியல் உள்ளிட்ட இன்னும் சில துறைகளிலும் இதுவரையிலும் யாரும் மேற்கொள்ளாத, அதே நேரம் அவசியமான சில முயற்சிகளை மேற்கொள்வதென முடிவெடுத்திருக்கிறோம். மெல்ல மெல்ல நம் தளம் உங்களுக்குக் கூடுதலான பயன்களைத் தரவிருக்கிறது.

எங்களது’விரல்மொழியர் நூல் திரட்டு’ என்ற புத்தகம் படிக்கும் செயல்பாடு தற்போது ஆறாவது சுற்றில் இருக்கிறது. ஓராண்டில் 6 சுற்றுகளில் 260 புத்தகங்கள் மின்நூலாக்கப்பட்டிருக்கின்றன. இவை ஏறத்தாழ 205000 அச்சுப் பக்கங்களை உடையவை.ஆறு சுற்றுகளில் இதற்கென சேர்ந்திருக்கும் பார்வைக் குறையுடைய அறிவு தாகமுடைய குறுங்குழுக்களால் இதுவரை ரூ. 105000 வரை செலவிடப்பட்டிருக்கிறது. இப்படிப் புத்தகம் படிக்கும் ஆர்வம் இருந்தும் படிக்க இயலாமல் இருக்கும் பார்வைக் குறையுடையோரையும் அரவணைத்து நன்கொடை வழங்கியிருக்கின்றனர் சில நல்ல உள்ளங்கள். அறிவுசார் செயல்பாடுகள் மிகச் சிறிய அளவில் செயல்பட்டாலும், அ்தன் தாக்கம் ஆழமாக இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

இக்குறுங்குழுவின் செயல்பாடுதான் இந்திரன், பொதியவெப்பன், நீச்சல்காரன்  ஆகிய சிறந்த தமிழ் ஆளுமைகளின் பாராட்டைப் பெற்றுத்தந்திருக்கிறது.

இத்தருணத்தில் சென்னை புத்தகக் கண்காட்சியில் அரங்கமைத்து, விரல்மொழியரையும், எங்கள் இணையாசிரியர் பொன். சக்திவேல் உள்ளிட்ட பார்வைக் குறையுடைய படைப்பாளிகளையும் வெளி உலகிற்கு அறிமுகப்படுத்திய கர்ணவித்யா அமைப்பிற்கு நன்றிகள்.

தொடக்கத்திலிருந்தே எங்கள் விரல்மொழியர் வாட்ஸப் குழு உங்கள் பேராதரவுடன் கன்னியத்தோடும், தனக்குரிய சரியான நெறிமுறைகளோடும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. நாங்கள் வழக்கமான இடைவெளிகளில் (Regular interval) தொடர்ந்து செயல்படவில்லை என்றாலும், எங்கள் வாட்ஸப் குழு, சூம் அரங்கம், கிலப்ஹவுஸ் அரங்கம், யூடியூப் சேனல், முகநூல், X, வாட்ஸப் சேனல் ஆகியவற்றிற்கு நீங்கள் அளித்துவரும் ஆதரவு வியப்பிற்குரியது; எங்கள் மீதான நம்பிக்கையையும், பொறுப்புணர்வையும் அதிகப்படுத்தக்கூடியது.

நாங்கள் எங்கள் முந்தைய திட்டங்களைத் தொடரவும், புதுப்பிக்கவும், காலத்திற்கேற்றாற்போல் புதுப் பொலிவு பெறவும் உங்கள் பேராதரவு அவசியம். இதுவரை நீங்கள் எங்களுக்கு அளித்ததைப் போன்றே தொடர்ந்து ஆதரவளிப்பீர்கள் என்று நம்புகிறோம். மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் எங்கள் அன்பும், நன்றியும், வாழ்த்துகளும்.