பிப்ரவரி 8, 2019 வெள்ளிக்கிழமை அன்று
துணைமுதல்வர் மாண்புமிகு ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் தமிழக நிதிநிலை அறிக்கையை
சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். பொதுவாகவே பட்ஜெட் என்றால் ஏதேனும் புதிய
அறிவிப்புகள் இருக்குமா என அனைத்துத் தரப்பு மக்களும் எதிர்பார்ப்பது வாடிக்கை.
எனக்கு இந்த அரசின் பட்ஜெட் குறித்தெல்லாம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை. காரணம்
ஒன்றுதான்: பொதுவாகவே இவர்களுடைய நிதிநிலை அறிக்கையில் நிறைய கவர்ச்சிகரமான
அறிவிப்புகள் இருக்கும்; அறிவிப்புகளாகவே இருக்கும்!
2010-ஆம் ஆண்டு
சமூக நலத்துறையிடமிருந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பிரிக்கப்பட்டதில் விளைந்த
நன்மைகள் இரண்டு. ஒன்று, மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு தனி செயலர் கிடைத்தார்.
மற்றொன்று, மாநில நிதிநிலை அறிக்கை ஆவணத்தில் தனித் தலைப்பாக மாற்றுத்திறனாளிகள்
நலத்துறை இடம்பெற்றுவிடுகிறது. ஆனால், பலன் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.
இருந்தாலும், எங்கள் வெற்றித்தடாகம் செய்திகளுக்காக 2019-20 பட்ஜெட் மீது கவனம்
செலுத்தினேன்.
ஆயிரம்
கூடியது, பாயிரம் அதேதான்
வெறும் ஐந்து வரிகளை அடுக்கி, 75-ஆவது
பக்கத்தில் மாற்றுத்திறனாளிகள் நலன் என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த பக்கம்,
கடந்த ஆண்டு அறிக்கையின் நகல்தான். சென்ற 2018-19-ஆம் ஆண்டின் அறிக்கையில்
அங்கொன்றும் இங்கொன்றுமாக வார்த்தைகளைச் சேர்த்துப் பட்டி பார்த்துக்
கொடுத்திருக்கிறார்கள். பக்கம் எண்கூட மாறவில்லை என்றால் பார்த்துக்
கொள்ளுங்களேன்!
‘மாற்றுத்திறனாளிகள்
உரிமைகள் சட்டம் 2016’-ஐ நடைமுறைப்படுத்துகிற முன்னோடி மாநிலமாய் தமிழ்நாடு
திகழ்வதாகப் பெருமிதம் கொண்டார் துணைமுதல்வர். அந்தச் சட்டத்தின்படி, கடந்த
நிதிநிலை அறிக்கையில் சுமார் 10 கோடி ஒதுக்கீட்டில் மாற்றுத்திறனாளிகள் நிதியம்
ஒதுக்கியது, மாற்றுத்திறனாளிகளுக்கான சுயவேலைவாய்ப்பை ஊக்குவிக்க அவர்களுக்கான
விளிம்பு உதவித்தொகை ரூ. 10-ஆயிரத்திலிருந்து ரூ. 25-ஆயிரமாக கடந்த ஆண்டில்
உயர்த்தியது என முதல் இரண்டு வரிகள் அரசின் சாதனைபாட பயன்பட்டன.
செவித்திறன்
குறையுடையோருக்கான காதொலிக்கருவிகள், பார்வையற்றோர் பயன்படுத்த உயர்தொழில்நுட்ப
ஊன்றுகோல்களும் வழங்கப்படுவதான பொதுவான செய்திகள் நான்காம் வரியாக அமைந்தன.
இடையில் விட்டுப்போன மூன்றாம் வரியில்தான் ஒரு சிறிய மாற்றம்; இன்னும் சுருங்கச்
சொன்னால், அது ஒன்றுதான் புதியது எனக் கொள்ளவேண்டிய அரசின் அறிவிப்பு. அதாவது,
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் தலா 2000 சிறப்பு சர்க்கர நாற்காலிகள்
மற்றும் சிறப்பு பெட்ரோல் ஸ்கூட்டர்களை 3000-ஆக உயர்த்தி வழங்குவதே அந்த
அறிவிப்பு.
இறுதியாக,
2019-20-ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக ரூ. 572
கோடி ஒதுக்கப்படுவதாக துணைமுதல்வர் அறிவித்தார். அதாவது, கடந்த ஆண்டைவிட ரூ. 29
கோடி உயர்த்தி வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு பட்ஜெட்டை ஒப்பிட்டால், இது மிகவும்
ஏமாற்றம் அளிக்கக்கூடிய பட்ஜெட் என்றே மாற்றுத்திறனாளிகளுக்கான சங்கங்கள்
சொல்கின்றன.
“ஐயாயிரம்
ஸ்கூட்டர்களுக்குத் தேவையிருக்க, வெறும் ஆயிரமாக உயர்த்தி வழங்குவதெல்லாம்
அநியாயம்” எனக் கடிந்துகொள்ளும் ‘டிசம்பர் 3’ இயக்கத்தின் பொதுச்செயலாளர் தீபக்,
மாற்றுத்திறனாளிகளைக் கையேந்துபவர்களாக வைத்துக்கொள்ளவே இந்த அரசாங்கம்
விரும்புகிறது என்பதையே இந்த நிதிநிலை அறிக்கை உணர்த்துவதாக சீற்றத்துடன் அறிக்கை
வெளியிட்டார். மேலும், ஒதுக்கப்படுகிற நிதியில் பெரும்பான்மை தன்னார்வ தொண்டு
நிறுவனங்களுக்கே சென்று சேர்ந்துவிடுகின்றன என்கிற கவனிக்கத்தக்க
குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.
அவர்
கூறுவதுபோல, மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரப் பிரச்சனைகளான கல்வி, வேலைவாய்ப்பு,
சமூக அங்கீகாரம் போன்றவை கருத்தில் கொள்ளப்பட்டு தொலைநோக்குத் திட்டங்களை உருவாக்க
வேண்டிய இந்த அரசு, இன்னமும் ஊன்றுகோல் கொடுக்கிறோம், காதணிக்கருவி
மாட்டிவிடுகிறோம் என்று பாடிக்கொண்டிருப்பது மாற்றுத்திறனாளிகளின் சமூகம்சார்
வளர்ச்சிக்கு எந்த வகையிலும் உதவாது. மாற்றுத்திறனாளிகளைக் கருணைத்தளத்திலிருந்து
உரிமைத்தளத்திற்கு நகர்த்தாத வரை, ஐ.நா. தீர்மானத்தின் அடியொற்றி கொண்டுவரப்பட்ட
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016-ஐ நடைமுறைப்படுத்துவதில் தன்னை முன்னோடி
மாநிலமாகச் சொல்லிக்கொள்வதில் என்ன பெருமையிருக்கிறது?
ஒரு
பார்வை மாற்றுத்திறனாளியாக நான் அவதானித்த ஒன்று, இதுபோன்ற அரசின் நடவடிக்கைகளை
வெளிப்படையாக திறந்த மனதுடன் விமர்சிக்கவோ, கேள்வி கேட்கவோ பெரும்பாலான
பார்வையற்றோருக்கான சங்கங்களின் முன்னோடிகள் தயாராக இல்லை. ஒவ்வொருவரும் அவரவர்
தளத்தில் நின்றுகொண்டு தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால்,
அரசின் பொதுவான நடவடிக்கைகளைக் கேள்வி கேட்க நாம் கூட்டாக ஒருங்கிணைவது காலத்தின்
கட்டாயம்.
மேலும்,
இந்த ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கண்காணிக்க
வேண்டிய பொறுப்பும், கடமையும் மாற்றுத்திறனாளி சங்கங்களுக்கு உண்டு. இவற்றை நாம்
சிரத்தையுடன் செயல்படுத்தாத வரை, நிச்சயம் மாறப்போவதில்லை நம் குறித்தான அரசின்
பார்வையும், ஆண்டு நிதிநிலை அறிக்கையில் நமக்கான பக்கங்களும்!
***
தொடர்புக்கு: vaazhgavalluvam@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக