நூல் அறிமுகம்: ரத்தம் ஒரே நிறம் - பொன். குமரவேல்


  இந்த சரித்திர நாவலை முன்பே திரை வாசிப்பான் உதவி கொண்டு படித்து முடித்திருந்தாலும், அதைப் பற்றி சிலாகிக்க இப்போதுதான் போதிய நேரம் கிட்டியது. வாத்தியாரின் எழுத்துக்கள் என்றுமே சலிப்பூட்டுவது இல்லைதான்; அதே சலிப்பூட்டாத நடையில் ஒரு சரித்திர நாவல் படைக்க முடியும் என்றால், அது சுஜாதாவால் மட்டுமே சாத்தியம் என்று இப்போதைக்குச் சொல்லத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு மனுஷன் படு நேர்த்தியாக இந்த சரித்திர நாவலைப் படைத்திருக்கிறார்.

தமிழில் சரித்திர நாவல்களுக்கு உண்டான சம்பிரதாயங்களை வகுத்துவிட்டுப்  போனவர்கள் அமரர் கல்கியும், சாண்டில்யனும்தான். அந்த சரித்திர நாவல்கள்  பாணியை வாத்தியார் இப்படி விவரிப்பார், ‘சரித்திர நாவலில் சரித்திரம் மட்டும் இல்லாமல், சில தீப்பந்தங்களும் ஒற்றர்களும் கட்டாயம் வேண்டும். கரிய கண்களுடைய அழகான ராஜகுமாரிகளை நீண்ட வாக்கியங்களில் வர்ணிக்க வேண்டும். அடிக்குறிப்புகள் தாராளம் வேண்டும். சோழனாக இருந்தால் நல்லது. பாண்டியன் பரவாயில்லை. தமிழ்ச் சாதியின் மேம்பாடு, கடல் கடந்த நாகரிகம், இவற்றைச் சொல்வது உத்தமம்’. இது மாதிரியான எவ்வித இடையூறும் இன்றி இந்த நாவல் அசால்ட்டாக பயணிக்கிறது!
ரத்தம் ஒரே நிறம் நூலின் அட்டைப் படம்
சுஜாதாவின் ’ரத்தம் ஒரே நிறம்’ எனும் இந்த நாவல் அவருடைய கிளாஸிக் வகையைச் சேர்ந்தது என்பேன். 1857-இல் நடைபெற்ற நம் இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என்று அழைக்கப்படும் சிப்பாய்க் கலகத்தின் பின்னணியை தனக்குக் கிட்டிய ஆதாரங்களை வைத்துக் கொண்டு, ஓர் அருமையான வரலாற்றுப் புதினத்தை நமக்குக் கொடுத்திருக்கிறார்.

‘சிப்பாய்க் கலகம் பற்றி சிறுகுறிப்பு தருக?’ பள்ளிக் காலங்களில் இப்படியொரு கேள்விக்கு விடையளிக்காமல் நீங்களோ, நானோ சமூக அறிவியல் பாடத்தைக் கடந்து
   வந்திருக்க வாய்ப்பில்லை. பிரிட்டிஷ்காரர்கள் தங்களுடைய என்ஃபீல்டு ரக துப்பாக்கி தோட்டாக்களில் பன்றிக் கொழுப்பினை பயன்படுத்தினார்கள். மேலும், தங்களுடைய ராணுவத்திலிருந்த இந்தியச்  சிப்பாய்களையும் அந்த தோட்டாக்களை உபயோகிக்கும்படி வற்புறுத்தினார்கள். இதனால் கொதித்தெழுந்த இந்துக்களும் இஸ்லாமியர்களும் கூட்டாக ஒன்றிணைந்து, தங்கள் ரகசியத் திட்டம் மூலம் ஆங்கிலேயர்களை எதிர்த்தார்கள். இதுவே  இந்தியாவின் முதல் சிப்பாய்க் கலகம் அல்லது முதல் சுதந்திரப் போராட்டம் என்று அழைக்கப்படுகிறது.

மேற்கூறிய ஓர் 2 மதிப்பெண் கேள்விக்கான
பதிலைக் கொண்டு ஒரு நாவல் எழுத முடியுமா என்றால், அதையும் சாத்தியம் ஆக்கிக் காட்டியவர்தான் சுஜாதா; அதுதான் ‘ரத்தம் ஒரே நிறம்’. குமுதத்தில் முதலில் ’கருப்பு சிவப்பு வெளுப்பு’ எனும் பெயரில் வெளிவந்து, நாடார் சங்கங்களின் அதிபயங்கர மிரட்டல்களால் நிறுத்தப்பட்டு, 6 மாதங்களுக்குப் பின்னர் வேறு பெயரில் வெளிவந்த அதே தொடர்தான் இந்த, ‘ரத்தம் ஒரே நிறம்’.

சரித்திர நாவல் என்றாலே பற்பல கிளைக் கதைகள் ஆங்காங்கே விரவிக் கிடக்கும். அதே போன்றுதான் இந்நாவலிலும் சலிப்பூட்டாத அளவுக்குக் கிளைக் கதைகள் பரவிக் கிடக்கின்றன.

1857 ஜனவரியில் கதை தொடங்குகிறது. தன் தந்தையைக் கொன்ற முரட்டு ஆங்கிலேய அதிகாரி எட்வர்டைக் கொன்று பழி தீர்ப்பதற்காக ஆலப்பாக்கத்திலிருந்து சென்னை நோக்கிக் கிளம்புகிறான் முத்துக்குமரன். இடையில் பூஞ்சோலை, பைராகி இவ்விருவரது அறிமுகமும் முத்துவுக்குக் கிடைக்கிறது. பூஞ்சோலை முத்துவுக்கு அறிமுகமான சில நாட்களிலேயெ இருவரும் காதலிக்க தொடங்குகிறார்கள். இரண்டு முறை எட்வர்டைக் கொலைசெய்ய  முயன்றும், காயங்களுடன் தப்பி விடுகிறான் முத்துக்குமரன். முதல் முறை பூஞ்சோலையாலும், சிலமுறை ஆலியாலும் காப்பாற்றப்படும் முத்து, எட்வர்டைக் கொன்றானா என்பது ஒரு கிளைக் கதை. அதுவும் அந்த பூஞ்சோலை, குமரனை “யோவ்! ஆலப்பாக்கம், ஆலப்பாக்கம்” என கூவிக் கொண்டு பின்னால் அலையும் காட்சிகள் எல்லாமே கதையின் மாஸ்டர் பீஸ் காட்சிகள்!

சென்னையில் கர்னல் நீலின் தலைமையில் இருக்கும் ராணுவத்தில் எட்வர்ட் என்ற முரட்டு இளைஞனும், தன் பதவிக்குச் சற்றும் பொருந்தாத மென்மையான இளைஞனான - மனிதாபிமானம் கொண்டவர் என்று அவரைச் சொல்லலாமா? இல்லை, இல்லை! அப்படிக் கூறுவது எவ்வளவு பெரிய அபத்தம் தெரியுமா? பிறகு எப்படிச் சொல்லலாம்? என் வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், இந்தியர்கள் மீது அளவு கடந்த அன்பும், மதிப்பும், மரியாதையும் கொண்ட - ஆஷ்லியும்தான் பணிபுரிகிறார்கள். இருவருமே எமிலியைக் காதலிக்கிறார்கள்; இருந்தும், எட்வர்ட் தனது முரட்டுக் குணத்தாலும், தைரியத்தாலும் எமிலியை மணம் முடிக்கின்றான். மணமான பின்பும் ஆஷ்லி எமிலியை விரும்புகிறான். கடைசியில் எமிலி என்ன ஆனாள்? இது மற்றொரு கிளைக் கதை!

சிப்பாய்க் கலகம் வர வாய்ப்பிருப்பதாக ஜெனரல் வீலரிடம் இருந்து தகவல் வர, நீலின் தலைமையிலான சென்னை ராணுவப் படைகள் கடல் மற்றும் தரை மார்க்கமாகக் கல்கத்தா நோக்கிப் பயணிக்கின்றது. இக்குழுவில், எட்வர்ட் அவனது மனைவி எமிலியுடனும், ஆஷ்லியும் பயணிக்கின்றார்கள். அதே நேரம், பைராகியின் துணையோடு நம் கதாநாயகன் முத்துவும், முத்துவின் விருப்பம் இன்றி பூஞ்சோலையும் வடக்கு நோக்கி நகர்கிறார்கள். மேற்கூறிய இரு கிளைக் கதைகளையும் இணைக்கப்போகும் புள்ளிதான், கான்பூரில் நடைபெற இருக்கும் சிப்பாய்க் கலகம்.
 

வெகுநாட்களாகவே என்னுள் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சந்தேகம், ‘ஏன் ஒரு சாதாரண பன்றிக் கொழுப்பிற்காகப் புரட்சி செய்ய வேண்டும்?’ இந்த மாதிரி சந்தேகம் எல்லாம் நான் பள்ளிக் காலங்களில் ஆசிரியர்களிடம் கேட்கும் அளவுக்கு எனக்கு அப்போதைக்கு அறிவெல்லாம் இல்லீங்கோ! ஆனால் இப்போதைக்கு நினைத்துப் பார்த்தால், அந்தக் கலகம் பன்றிக் கொழுப்பிற்காக நடைபெற்ற போராட்டம் அல்ல என்றுதான் தோன்றுகிறது. அந்த பன்றிக் கொழுப்பைக் காரணியாகக் கொண்டு, ஆங்கிலேயக் கொழுப்பை அடக்க மேற்கொள்ளப்பட்ட புரட்சி என்பதை மிக அழகாகவும், நேர்த்தியாகவும் இந்நாவலில் விளக்கியிருக்கிறார் சுஜாதா.

ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளை மட்டுமல்லாது, நமது மூடநம்பிக்கைகளையும் மிக அழகாகப் பொட்டில் அறைந்தார் போல் போகிறப் போக்கில் சொல்லிவிட்டுப் போகிறார் சுஜாதா. எட்வர்டும், ஆஷ்லியும் கங்கையில் பயணிக்கும் போது உடன்கட்டை ஏறும் அவலத்தைக் காண நேரிடுகிறது. ஆஷ்லி அந்த உடன்கட்டை ஏறப்போகும் பெண்ணைப் பார்த்து, “போகாதே! போகாதே! வேண்டாம்” என்று கத்துவதும், ஆனால் அந்த பெண்ணோ மொழி புரியாமல் விழித்துக் கொண்டு நின்றுவிட்டு பின்பு உடன்கட்டை ஏறச் சென்றுவிடுவதும் இந்த புத்தகத்தில் என்னைக் கலங்கடித்த இடம். நல்ல வேளை இவ்வழக்கத்தை ஒழித்துவிட்டார்கள்; இராஜாராம் மோகன் ராய்க்கும், வில்லியம் பெண்டிங் பிரபுவுக்கும் பலகோடி நன்றிகள்!

வழக்கம் போலவே அவரின் எல்லா நாவல்களையும் போல மிக சுவாரஸ்யமாகக் கதை சொல்கிறார் சுஜாதா. நடுவே நாட்டுப்புறப் பாடல்கள், ஆங்கில கவிதைகள், இளசுகளை ஈர்க்கும் சில காட்சிகள் என தொய்வின்றி அழகாக நாவல் பயணிக்கிறது. 1850-60 காலகட்டத்து ஆட்சிமுறை, சட்டதிட்டம், பழக்கவழக்கங்கள் என பலவற்றை சில‌ புத்தகங்களின் துணைகொண்டு விவரித்து எழுதி இருக்கிறார்.

எனக்கு இந்த நாவலில் குறையாகப் படுவது, முத்துவும் பூஞ்சோலையும் வடக்கு நோக்கிய பயணத்தின்போது ஒரு வார்த்தை மட்டுமே பேசிக் கொள்கிறார்கள் என்பதுதான். அவர்கள் இன்னும் கொஞ்சம் பேசி இருக்கலாமே என்று என்னுள் நானே அவ்வப்போது கேட்டுக் கொள்கிறேன். இருந்துவிட்டுப் போகட்டும்; பேசிக் காதலிப்பதை விட, பேசாமல் காதலிப்பது ஒரு சுகம்தானே!

இன்னொன்று, சரித்திர நாவல்களுக்கு மெருகூட்ட வேண்டுமென்றால் நிச்சயம் ஒரு சாமியார் இருக்க வேண்டும் என்பது கல்கி காலத்திலிருந்தே நிலவி வரும் சம்பிரதாயம் போலும். அதற்கு தானும் சளைத்தவன் இல்லை என சுஜாதாவும் தன் பங்குக்கு ஒரு பைராகியை பைண்ட் செய்து கதையில் சேர்ப்பித்திருக்கிறார். நல்ல வேளை, அவர் கல்கி நாவல்களில் வரும் சாமியார்களைப் போன்று மதப் பிரசங்கம் செய்பவராக இல்லாமல் போனதே மகிழ்ச்சியாகப் பட்டது எனக்கு. அதற்காகவே ஒரு சல்யூட், வாத்தியாருக்கு!

இந்தியச் சுதந்திரப் போராட்டத்தை அறிந்த ஒவ்வொரு தமிழரும் படிக்க வேண்டிய நூல் இது. முத்துக்குமரனையும் பூஞ்சோலையையும் தெரிந்து கொள்வதற்காக அல்ல; எட்வர்டையும், ஆஷ்லியையும் தெரிந்து கொள்வதற்காக! கண்டிப்பாகப் படியுங்கள்!
***

தொடர்புக்கு: kumaravel.p95@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக