தலையங்கம்: உலக பிரெயில் நாள்



உணர்ந்ததைச் சொல்கிறோம் உலகிற்கு என்ற வாசகத்தை உள்ளடக்கிய விரல்மொழியரின் சின்னம்  ஐக்கிய நாடுகள் பொது அவை - 2019 ஜனவரி 04 லூயி பிறந்த தினம் உலக பிரெயில் நாளாகக் கடைபிடிக்கப்படும்என கடந்த டிசம்பர் 17, 2018 அன்று நடந்த கூட்டத்தில் அறிவித்தது. இதை வரவேற்றுள்ள உலகப் பார்வையற்றோர் ஒன்றியம் (World Blind Union) இதன்மூலம் தங்களது நீண்டநாள் கோரிக்கை ஐக்கிய நாடுகள் அவையால் ஏற்கப்பட்டுள்ளது தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும், இந்த அறிவிப்பால் பிரெயில் முறையை வளர்த்தெடுப்பதில் உலகநாடுகளிடையே விழிப்புணர்வு ஏற்படும் என தெரிவித்துள்ளது.

கனடாவைச் சேர்ந்த அமைப்பான உலகப் பார்வையற்றோர் ஒன்றியம் கடந்த 15 ஆண்டுகளாகவே ஜனவரி 4 லூயி பிரெயில் பிறந்த தினத்தை பிரெயில் நாளாக அனுசரித்து வருவதாகக் கூறுகிறது. இந்தியாவிலோ, புதிதாக இயற்றப்பட்டிருக்கிற கல்வி உரிமைச் சட்டங்களும், இந்திய அரசின் அனைவருக்கும் கல்வித் திட்டம் என்கிற முறையும் பிரெயிலுக்கான முக்கியத்துவம் குறித்து உணர்ந்ததாகத் தெரியவில்லை.

இன்றைய துரித உலகில், ஒலிப்புத்தகங்கள் (Audio-books) கணினித் திரைவாசிப்பான்கள் (Computer Screen-readers) போன்றவை பார்வையற்றோராகிய நாம் அறிவுத்தேடலில் பயன்படுத்தும் முக்கிய சாதனங்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அவை உருவாக்கத்திலும், பயன்பாட்டிலும் எளிமையானவை, வசதியானவை. ஆனால், அவை ஒருபோதும் பிரெயிலுக்கு மாற்றாகாது.

பார்வையற்றோராகிய நாம் உலகியலை அறிந்துகொள்ள நமக்குச் சொற்களே அதிகம் பயன்படுகின்றன. எல்லாச் சொற்களுக்கும் வடிவம் இருக்கிறது. பிரெயில் முறையை நாம் கைக்கொள்ளாதவரை, இந்த உலகின் எல்லாமும் நமக்குச் செவிவழிச் செய்திகளாகவே தங்கிவிடும். நாமும் அனைத்தும் அறிந்த, ஆனால் எழுதப்படிக்கத் தெரியாத ஒருவராகவே (Illiterate Person) தேங்கிவிடுவோம்.

பிரெயில் முறையை இன்றைய கால மாற்றத்திற்கு உட்படுத்துதல் அவசியமான ஒன்று. அந்த வகையில், பிரெயில் மீ (Braille Me) போன்ற கண்டுபிடிப்புகள் இன்னும் புதிய மாற்றங்களுடன் பார்வையற்றோரிடையே பயன்பாட்டிற்கு வரும்போது பிரெயில்தான் பார்வையற்றோராகிய நமது முதல் தெரிவாக இருக்கும் என்பதை அதன் முக்கியத்துவத்தை உணர்ந்த எவரும்மறுக்க மாட்டோம். அத்தகைய நவீன முயற்சிகளுக்கும் முன்னெடுப்புகளுக்கும் நம்மாலான உதவிகளையும் ஒத்துழைப்பையும் எந்த வகையிலேனும் நல்குவதுதான் பிரெயில் தினத்தின் மிகச் சிறந்த கொண்டாட்டமாய் அமையும். அனைவருக்கும் உலக பிரெயில் நாள் வாழ்த்துகள்.

'உணர்ந்ததைச் சொல்கிறோம் உலகிற்கு'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக