பெருமிதம்: மனக் குரல் - விரல்மொழியர் ஆசிரியர் குழு

 விரல்மொழியர் மின்னிதழ் இரண்டாம் ஆண்டில் வெற்றிகரமாக காலடி எடுத்துவைக்கிறது. ஜனவரி 27 2018 புதுக்கோட்டை பார்வையற்றவர்களுக்கான அரசு நடுநிலைப் பள்ளியில், இவ்விதழ் தொடங்கப்பட்டது.

graphic விரல்மொழியர் தொடக்க விழாஒலி இதழ், வாசகர்களுடன் உரையாட வாட்ஸ்அப் குழுமம், கலைஞர் சிறப்பிதழை அச்சில் வெளியிட்டது, வெகுஜன ஊடகங்களின் கவனத்தை இவ்விதழ் திருப்பியது. அதனால் அவை இவ்விதழ் பற்றிய செய்திகளை வெளியிட்டது என பல முக்கிய முன்னகர்வுகளை இந்த ஓராண்டில் விரல்மொழியர் சாதித்தது. அதன் உள்ளடக்கத்தால் பல வாசக உள்ளங்களையும் சம்பாதித்தது.

விரல்மொழியரின் பிறந்தநாள் அன்று, இவ்விதழ் உங்கள் மனக் கோட்டையில் எத்தகைய அதிர்வுகளை ஏற்படுத்தியது என்பதை அறிந்து கொள்ள வாசகர்களின் கருத்தை கேட்டோம். பலரும் சிறந்த முயற்சி என பாராட்டி இருந்தீர்கள் உங்களின் அன்பிற்கு மிக்க நன்றிகள். பலர் இதழ் குறித்து தங்கள் எண்ணங்களை பகிர்ந்துகொண்டனர்.
அவற்றைத் தொகுத்து இங்கே வழங்குகிறோம்.

திருச்சியிலிருந்து R. பிரகாஷ்

  ஒவ்வொரு படைப்பாளர்களை பற்றியும் விரிவாக எடுத்துரைத்ததோடு, whatsapp குழுமத்தில் இணைந்த பிறகே விரல்மொழியர் மின்னிதழைப் படிக்கத் தொடங்கியதாக கூறினார். ஒலியிதழ் என்னைப்போன்ற தொடக்கநிலை கைப்பேசி பாவனையாளர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது என்றார்.

டெல்லி பேராசிரியர் வரதராஜன்
  தொடக்கத்தில் பிறர் நமக்காகப் பேசினர். பின் அவர்கள் சொல்லிக் கொடுத்து நாம் பேசினோம். இன்று நமக்காக நாம் பேசும் நிலைக்கு உயர்ந்திருக்கிறோம். அதன் அடையாளம்தான் விரல்மொழியர் மின்னிதழ் என தன் கருத்தைக் கூறினார்.

அரசுப்பள்ளியில் வரலாற்று ஆசிரியராக பணியாற்றி வரும் ஷாஜகான்

  சர்வதேச அளவில் பார்வையற்றவர்களின் நிலை எவ்வாறு இருக்கிறது, அரசியல் சமூக முன்னேற்றங்களில் பார்வையற்றோரின் பங்களிப்பு எத்தகைய நிலையில் உள்ளது, என்பனவற்றையெல்லாம் இம்மின்னிதழ் ஆவணப்படுத்த வேண்டும் எனக் கூறினார்.

வங்கியில் பணியாற்றி வரும் சுனில்குமார் கருணாநிதி
  மின்னிதழை அனைத்து தரப்பு மக்களிடமும் நாம் எடுத்துச் செல்ல வேண்டும். இப்பணியைச் செய்வதற்கு விரல்மொழியர் குழுவோடு நாமும் கைகோர்க்க வேண்டும் என்றார்.

புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு நல்லி பட்டியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்

  விரல்மொழியர் மின்னிதழின் கட்டுரைகள் பல பார்வையற்றோர் தொடர்பான விடயங்களைப் பேசுகிறது அது மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால், பொது சமூகத்தில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்தும் கட்டுரைகள் இடம்பெற வேண்டும். அதனோடு பார்வை உள்ளவர்களையும் பார்வையற்றோர் தொடர்பாக எழுத வைக்க வேண்டும்  மேலும், கட்டுரையின் அளவு சற்று சிறியதாக இருந்தால் இன்னும் அதிக வாசகர்களைச் சென்று சேரும் என தனது கருத்துக்களை முன்வைத்தார்.

இறுதியாக விரல்மொழியர் ஆசிரியர்களுள் ஒருவரான யோகேஷ்
  வாசகர்களாக இருப்பவர்கள் படைப்புகளையும் தர வேண்டும், அப்பொழுதுதான் நம் இதழ் இன்னும் செறிவானதாக வெளிவரும். ஊர் கூடி வடம் இழுத்தால் தான் தேர் நகரும். வாருங்கள் நண்பர்களே வடம் பிடிப்போம் என தன் அழைப்பை வைத்தார்.
***

தொடர்புக்கு: viralmozhiyar@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக