கவிதை: ஆறு புள்ளியில் அதிசயம் - அ. கௌரி

graphic பிரெயில் வாசிக்கும் சிறுமி
ஆறு புள்ளியில் அதிசயம்-அதை,
அந்தகர் அறிவது  அவசியம்,
வேறு வழிகள் இருந்தாலும்,-எந்த
வெற்றிக்கும் அடித்தளம் பிரெயிலாகும்.

கணினி உலகில் சிறந்தாலும்,-அறும்
கலைகள் பலவும் பயின்றாலும்,
புதுமை உன்னைக் கவர்ந்தாலும்,-நாம்
பிரெயிலைப் பழகுதல் நன்றாகும்.

புத்தகம் சுயமாய்ப் படித்திடலாம்-பிற
உதவிகள் பெறுவதைக் குறைத்திடலாம்,
கற்பனை எழுந்தால் வடித்த்திடலாம்,-எதும்
கதைகளும் உதித்தால் எழுதிடலாம்.

குறிப்புகள் உடனே எடுத்திடலாம்-புவி
வரை படம் உணர்ந்தே இன்புறலாம்,
கணக்குகள் எளிதாய்ச் செய்திடலாம்-நமைக்
காண்பவர் வியப்பில் ஆழ்ந்திடலாம்.

ஆறென புள்ளிகள் தனைக் குறைத்தே,-அதை
அறுபத்து மூன்றென வடிவமைத்தே,
பாரினில் தனக்கும் ஓரி இடம் பிடித்தே,-அதில்
பார்வையில் குறை எனும் நிலை மறுத்தே,

எழுத்தறி வித்தவன் நல் இறைவனென்றால்,-பிரெயில்
எழுத்துரு தந்தவன் நம் இறைவனன்றோ?
கருத்தினைப் பிழை யின்றி கற்பதற்கே-தந்த
கடவுளாம் லூயியை வணங்கிடுவோம்.
***

(கவிஞர் திருச்சிராப்பள்ளி மாவட்டக் கருவூலத்தில் கணக்கராகப் பணியாற்றி வருகிறார்).
தொடர்புக்கு: gowri.sgg@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக