தலையங்கம்: - தேவை கவனமும் அக்கறையும்:


graphic உணர்ந்ததைச் சொல்கிறோம் உலகிற்கு என்ற வாசகம் பொறிக்கப்பட்ட விரல்மொழியரின் சின்னம்
ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி செல்லாத மாற்றுத்திறனாளி குழந்தைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டும் அந்தக் கணக்கெடுப்பு துவங்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பணியில் உள்ளடங்கிய கல்வித் திட்டத்தில் சிறப்பாசிரியர்களாகப் பணிபுரிவோர் ஈடுபட்டு வருகிறார்கள்.

பொதுவாகவே கணக்கெடுப்புப் பணி என்பது மிகச்சவாலான ஒன்று. அதிலும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் பற்றிய தகவல்களைத் திரட்டுவது என்பது கூடுதல் சவால்கொண்ட பணியாகும். பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு குறைபாடு இருக்கிறது என்பதையே ஒப்புக்கொள்ள முன்வராததே இந்தப் பணியில் சிறப்பாசிரியர்கள் சந்திக்கும் முதல்ச்சவால்.

அத்தோடு எல்லாப் பணிகளில் இருப்பதைப் போன்றே இந்தப் பணியிலும் ஒரு குறிப்பிட்ட இலக்கு (target) நிர்ணயிக்கப்படுவதால், மாற்றுத்திறனாளி அல்லாத குழந்தைகளும் அவ்வப்போது கணக்கேட்டில் பதியப்படுவதும் நடக்கிறது. பார்வை மாற்றுத்திறனாளி குழந்தைகள் கணக்கெடுப்பைப் பொருத்தவரை, முழுப்பார்வையற்றவர்களைவிட (totally blind) குறைப்பார்வையுடைய குழந்தைகளே (low vision) அதிகம் இருப்பதாக சமீபத்திய கணக்கெடுப்புகள் சொல்கின்றன.

குறைப்பார்வையுடைய குழந்தைகளை அடையாளம் காண்பது, அவர்களுக்கு அவர்களின் பார்வையிழப்பிற்கேற்ப அடையாள அட்டை பெற்றுத்தருவது, அந்தக் குழந்தை எழுதப் படிக்க உதவும் உபகரணங்களான கண்ணாடிகள், லென்ஸ் போன்றவை வழங்குவதோடு அனைவருக்கும் கல்வித்திட்டம் தன் கடமையை முடித்துக்கொள்ளக்கூடாது. ஒவ்வொரு குறைப்பார்வையுடைய குழந்தையையும் தொடர் கண்காணிப்பில் வைத்து, அவர்களின் கற்றல் நடவடிக்கைகளைத் தீவிரமாக ஆராய வேண்டும்.

குழந்தைகள் சாதாரண முறையில் பயில்வதில் இடர்பட நேர்ந்தால், உடனடியாக அவர்களுக்கு பிரெயில் கல்வியைப் பரிந்துரைப்பதுடன், அருகாமையிலுள்ள சிறப்புப் பள்ளிகளில் அந்தக் குழந்தையைச் சேர்க்குமாறு தொடர்புடைய பெற்றோருக்கு ஆலோசனை வழங்க வேண்டும். இத்தகைய நடைமுறையைப் பின்பற்றிடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குநரால் அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும்.

கல்வி ஒன்றுதான், பார்வை மாற்றுத்திறனாளிகளைச் சூழ்ந்திருக்கும்  பிறவி இருள் அகற்றி, பேரொளி சமைக்கிற பெருஞ்சாதனம். ஆகவே, பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி வடிவமைப்பிலும் அமல்ப்படுத்தலிலும் அரசுக்கு அதிக கவனமும் அக்கறையும் தேவை.



உணர்ந்ததைச் சொல்கிறோம் உலகிற்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக