களத்திலிருந்து: ஒளியற்ற கண்கள்; ஒளிபடைத்த நெஞ்சம்:

சேதுபாண்டி

graphic கலைச்செல்வி கருணாலயா இல்லத்தினருடன் சக்திவேல் குமாரி தம்பதியினர்
இது, குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லத்திற்கு நூலகம் அமைத்துக் கொடுத்த பார்வையற்ற தம்பதி குறித்த பதிவு.
சென்னையில் தங்கி தங்கள் மேற்படிப்பை மேற்கொண்டிருந்த கோவையைச் சார்ந்த திரு. சக்திவேல் கடலூரைச் சார்ந்த செல்வி. குமாரி இருவரும் தங்கள் அன்பை பகிர்ந்து மனமொத்து பெற்றோர் உள்ளிட்ட பெரியோர் முன்நிலையில் திருமனம்  செய்துகொண்டனர். இவர்களது அன்பின் அடையாளமாக அவதரித்த செல்வத்தின் பெயர் தமிழ்நிலவன்.  அவர்களது செல்லத் தமிழின் பிறந்தநாளில் ஏதேனும் சிறப்பாக செய்ய வேண்டும் என்று சிந்தித்துக்கொண்டிருந்த திரு. சக்திவேல் குமாரி தங்கள் நண்பர்களிடம் கலந்துகொண்டனர். அந்த நேரத்தில் டில்லியில் உள்ள மத்திய மூளை  ஆராய்ச்சி மையத்தில் தனது முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சிப் படிப்பை  மேற்கொண்டு வரும் கார்த்திக் அவர்கள், இப்பொழுதெல்லாம் எல்லோரும் சாப்பாடு போடுகின்றனர், துணி எடுத்துக் கொடுக்கின்றனர்; தாங்கள் ஒரு ஏழைக் குழந்தைகள் தங்கி படிக்கும் விடுதியில் நூலகம் ஏற்படுத்திக் கொடுத்தால் பல தலைமுறைக் குழந்தைகள் பயன் பெற இயலும் என்று  குறிப்பிட்டுள்ளார். அந்த ஆலோசனையால் மிகவும் ஈர்க்கப்பட்ட சக்திவேல் அவர்கள், அவரோடு இணைந்து சென்னை வெஸ்ட்  முகப்பேரில் அமைந்திருக்கும் கலைச்செல்வி கருணாலயா குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லத்திற்கு சிறு நூலகத்தை ஏற்படுத்தி, குழந்தைகள் மற்றும் முதியோருக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர். தன் வறுமையிலும் மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் கொண்ட திரு. சக்திவேல் குமாரி குறித்து சில வரிகள்.
graphic சக்திவேல் குமாரி தம்பதியினருடன் அவர்கள் குழந்தை தமிழ்நிலவன்
கோவை மாவட்டத்தில் பிறந்த சக்திவேல் அவர்கள் பிறவியிலேயே தனது ஒரு கண் பார்வையை இழந்தவர். நாளடைவில் மற்றொரு கண்ணிலும் பார்வை குறைந்து வர ஏழாம் வகுப்பு படிக்கும் பொழுது தன் முழு பார்வயையும் இழந்துள்ளார். பார்வையற்ற தங்கள் குழந்தையின் எதிர்காலம் என்னவாகும் என்று பதரிய பெற்றோர் செய்வதறியாது நான்கு ஆண்டுகள் வீட்டிலேயே வளர்த்துள்ளனர். பின்பு சிலரின் வழிகாட்டுதலில் சென்னை பூவிருந்தவல்லி அரசு பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மாநிலக்கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி எனத் தன் மேல்படிப்பை கோடம்பாக்கம் அரசு விடுதியில் தங்கி பயின்று வந்துள்ளார். பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவால் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெற்று, தற்பொழுது பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவால் வழங்கப்படும் நிதி உதவியுடன், சென்னை மாநிலக்கல்லூரியில் தன் முனைவர் பட்டத்தை மேற்கொண்டு வருகிறார்.

அடிப்படையில் பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தில் இருந்து வளர்ந்து வந்த இவருக்கு சமூகப் பணியில் மிகுந்த ஆர்வம் இருந்திருக்கிறது. பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட உரிமை சார்ந்த பல வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டங்களில் தொடர் உண்ணாவிரதத்தில் உறுதியோடு பங்கெடுத்துள்ளார். தமிழின் மீதுள்ள அதீத பற்றால் அந்தகக்கவிப் பேரவையின் நிறுவன உறுப்பினராக செயலாற்றி வருகிறார். பெரியாரின் சிந்தனையால் ஈர்க்கப்பட்ட இவர் தன் திருமணத்தை புரோகிதர் இன்றி யாகமின்றி, பெற்றோர் உள்ளிட்ட பெரியோர் முன்நிலையில் நடத்தியுள்ளார்.

இவரது துணைவியார் குமாரி அவர்கள் பிறவியிலேயே பார்வையற்றவர். இவர் பள்ளிப் படிப்பை தன் சொந்த மாவட்டமான கடலூரிலும், பட்ட மேற்படிப்பை சென்னையிலும் பயின்றுள்ளார். இவர்கள் தற்பொழுது பூவிருந்தவல்லியில் மகிழ்ச்சியாக வசித்துவருகின்றனர்.
graphic திரு. சக்திவேல் ரிப்பன் வெட்டி நூலகத்தைத் திறந்து வைக்கிறார்
தன் குழந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு, ஆதரவற்ற குழந்தைகளுக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்றெண்ணி, 31/05/2019 அன்று கருணாலயாவிற்கு நூலகம் அமைத்தளித்திருப்பது கூடுதல் சிறப்பு. நூலக தொடக்க விழா மிக எளிமையாக ஆடம்பரம் இன்றி நடைபெற்றது. அனைவரின் ஆசைக்கிணங்க திரு. சக்திவேல் ரிப்பன் வெட்டி நூலகத்தைத் திறந்து வைத்தார். விழாவில் மத்திய மூளை ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வரும்  கார்த்திக் அவர்கள் குழந்தைகளுக்கு நீதிக்கதை சொல்லி இனிப்பு வழங்கி மகிழ்வித்தார். விழாவில் அமைப்பின் பணியாளர்கள், தன்னார்வலர்கள், நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்த சிறு நூலகத்தில் குழந்தைகளுக்கு தேவையான நீதிக் கதைகள், பொதுவான தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள், சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள் என பல புத்தகங்கள் உள்ளன. இவர்கள் வித்திட்ட இந்த நூலகத்திற்கு நிறுவனத்தின் அருகாமையில் உள்ளவர்களும், தன்னார்வலர்களும் தங்களால் இயன்ற புத்தகங்களை வழங்கி வருகின்றனர். பெற்றோரால் கைவிடப்பட்ட  கைக்குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரையும் பேணி காத்து வரும் கருணாலயா குறித்து சில வரிகள்.

கலைச்செல்வி கருணாலயா என்ற அமைப்பு வருமையின் விலும்பில் இருக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி வழங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், திருமிகு. புருசோத்தமன் என்பவரால் 1983ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. ஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம் வழங்கி கல்வி பெறச்செய்தல், ஆதரவற்ற நிலையில் வறுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள், வயது முதிர்வு மற்றும் நோய்வாய்ப்பட்டு கைவிடப்பட்ட முதியோர்போதை பொருட்களுக்கு அடிமையானவர்கள் போன்றோருக்கு மறுவாழ்வு வழங்கி மிகப்பெரிய சேவை வழங்கும் நிறுவனமாக உயர்ந்திருக்கிறது. 1997 – 98ஆம் ஆண்டின் பெண்கள் சேவைக்கான விருதும், 2004ஆம் ஆண்டிற்கான குழந்தைகள் சேவைக்கான தேசிய விருதும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னை வெஸ்ட் முகப்பேரில் உள்ள இவ்வமைப்பு குறித்து மேலும் அறிந்துகொள்ள விரும்புவோர் http://www.kkssindia.org/என்ற வலைத்தளத்தைப் பார்க்கலாம்.
திரு. சக்திவேல் அவர்களைத் தொடர்புகொள்ள, 8939187838
கட்டுரையாளரை தொடர்புகொள்ள, pandiyaraj18@gmail.com
தொடர்புடையவை
அமைப்புகள் அறிவோம்: கலையாலயம் உருவாக்கிய அறிவாலயம் - சேதுபாண்டி

1 கருத்து: