தலையங்கம்: ‘சிறப்புப் பள்ளிகளை விடுவித்துவிடுங்கள்’

graphic உணர்ந்ததைச் சொல்கிறோம் உலகிற்கு என்ற வாசகம் பொறிக்கப்பட்ட விரல்மொழியரின் சின்னம்

ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும், பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் ஆயிரக்கணக்கான பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்குப் பணியிடமாறுதல் கலந்தாய்வு, பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு, பணிநிரவல் போன்ற நடவடிக்கைகள் இயல்பாக செயல்படுத்தப்படுகின்றன. ஆனால், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் நிர்வகிக்கப்படும் இருபத்திரண்டே சிறப்புப் பள்ளிகளில் மேற்கண்ட நடவடிக்கைகள் எதுவும் கடந்த மூன்று ஆண்டுகளாக மேற்கொள்ளப்படவில்லை.

சுமார் 90 விழுக்காடு சிறப்புப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்ப் பணியிடங்கள் பல ஆண்டுகளாகவே காலியாக வைக்கப்பட்டுள்ளன. மேலும், பார்வைத்திறன் மற்றும்செவித்திறன் குறையுடையோருக்கான மேல்நிலைப்பள்ளிகளில், பெரும்பாலான முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்ப் பணியிடங்கள் பல ஆண்டுகளாகப் பதவி உயர்வின் காரணமாக நிரப்பப்படாததால், பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

சிறப்புப் பள்ளிகளைப் பொருத்தவரை, ஒரு ஆசிரியருக்கு எட்டு முதல் பத்து மாணவர்கள் என்ற விகிதாச்சாரம் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் அதிக எண்ணிக்கையிலும், மாணவர்கள் அதிகம் பயிலும் பள்ளிகளில் இரண்டு அல்லது மூன்றே ஆசிரியர்கள் பணிபுரிவதுமான சிக்கல் பல ஆண்டுகளாகவே நீடித்துவருகிறது.

சிறப்புப் பள்ளிகளைக் கண்காணித்து நிர்வகிக்கும் நோக்கத்தோடு ஏற்படுத்தப்பட்ட சிறப்புப் பள்ளிகளுக்கான உதவி இயக்குநர் பணியிடம், கடந்த 19 ஆண்டுகளாக நிரப்பப்படாமல், பொறுப்பு என்கிற பெயரில் சிறப்புக்கல்விக்கு முற்றிலும் தொடர்பில்லாதவர்கள் பணியமர்த்தப்படுவது தொடர்கதையாகிவிட்டது.

மாற்றுத்திறனாளிகளை சமூகத்தோடு ஒருங்கிணைக்கவும், தான் வாழும் சமூகத்திற்குப் பயனுள்ளவர்களாக அவர்களை மாற்றுவதும் அவர்களுக்கு வழங்கப்படும் தரமான கல்விதான். அத்தகைய கல்வி செயல்பாட்டில் இத்தனை அலட்சியப் போக்கோடு நடந்துகொள்ளும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின்கீழ் இயங்கும் சிறப்புப் பள்ளிகளை அத்துறையின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து, பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதே சரியான நிரந்தரத் தீர்வாக அமையும்.

உணர்ந்ததைச் சொல்கிறோம் உலகிற்கு

2 கருத்துகள்:

  1. பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளீர்கள் ஆனால் பார்வையற்ற பள்ளிகள் நூறு சதவிகித தேர்ச்சி பெற்று தான் வருகிறது. மற்ற சிறப்பு பள்ளிகளும் 99% தேர்ச்சி விழுக்காடு பெற்று கொண்டு தான் வருகிறது இந்த நிலையில் மாணவர்கள் பாதிப்பு அடைவதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செவித்திறன் குறையுடைய பள்ளிகளுக்கும், பார்வைத்திறன் குறையுடைய பள்ளிகளுக்கும் தேர்ச்சி விகிதத்தில் எவ்வளவு மாறுபாடு இருக்கிறது என்பதும், அதன் காரணமும் தாங்கள் அறிந்ததே. ஆகையால், சில விடயங்கள் உள்ளார்ந்த பரீசிலனைக்கு உரியவை.

      நீக்கு