இலக்கியம்: ஜெயகாந்தனின் சிறுகதை ‘நான் இருக்கிறேன்’ - ஒரு மறுவாசிப்பு


முனைவர் S. வரதராஜ்
graphic ஜெயகாந்தன்
 தமிழ் இலக்கிய உலகில் ஜெயகாந்தனுக்கென்று ஒரு தனி இடம் உண்டு. இவருடைய புதினங்கள் மற்றும் சிறுகதைகள் பலதரப்பட்ட சமூகச் சிக்கல்களை வெவ்வேறு கோணங்களிலிருந்து ஆராய முற்படுகின்றன. உதாரணத்திற்கு இவர் எழுதிய ரிஷிமூலம் என்ற புதினம் ஒரு குடும்பத்தில் தாய்க்கும் மகனுக்கும் இடையேயான புதுவிதமான அசாதாரணமான உறவைக் குறித்து விளக்குகிறது. ஃப்ராய்டு தத்துவத்தின்படி எதிர் பாலினங்கள் ஒன்றையொன்று ஈர்க்கும் என்பதை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற ஒரு தமிழ்க்கலாச்சாரசூழ்நிலைகளுக்குப் பொருந்தாத ஒரு மேற்கத்திய மனோதத்துவசிந்தனையில்விளைந்த இந்த ‘ரிஷிமூலம்’ என்ற புதினம் ஜெயகாந்தனின் ஒரு புரட்சிகர படைப்பு என்பதில் ஐயமில்லை. அந்த வரிசையில் அனைத்து தரப்பு வாசகர்களின்மனவெளியிலும் தடையின்றி பயணிக்கத்தவறிய ஒரு சிறுகதைதான் ‘நான் இருக்கிறேன்’. இதன் சாரம் பின்வருமாறு:

ஒரு விதமான கொடூரமான வியாதியால் பாதிக்கப்பட்டு உடலைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வரும் வியாதிக்காரன் ஒருவன் யாருமற்ற அனாதையாகப்ப் பிச்சையெடுத்து வாழ்ந்து வருகிறான். அவன் அன்றாடம் பல வீடுகளுக்குச் சென்று தனக்குத் தேவையான உணவை யாசகமாகப் பெற்று வாழ்க்கையை நடத்தி வருகிறான். இந்த வியாதிக்காரன் கதையின் தொடக்கத்தில் நம்பிக்கை நட்சத்திரமாகவும்;;;, கதாநாயகனாகவும் தோற்றமளிக்கிறான். அதாவது வாழ்வின் சுகங்கள் எதனையும் அனுபவிக்கும் வாய்ப்புகளை இழந்தவனாகக் காட்சியளித்தபோதிலும் தனக்கு வாய்த்த இந்த யாசித்து வாழும் வாழ்வினை ரசிப்பவனாகவே அவன் இருக்கிறான். கால்விரல்கள் இல்லாத கால்களில் ஒரு கேன்வாஷ் மூடுகாலணியினைஅணிந்தவாறு கைத்தடி ஏந்தியவனாய் தனது வாழ்க்கைப் பயணத்தை மெல்ல மெல்ல நகர்த்துகிறான். இவன் அன்றாடம் தங்கும் ஒரு பாழடைந்த சத்திரத்தின்  திண்ணைக்கு அருகில் இருக்கும் பரந்த நீர்ப்பரப்பு உடைய ஏரியும் அதையொட்டி நீண்டும் வளைந்தும் செல்லும் ஒரு இரயில்வே இருப்புப்பாதையும் இவனுடைய நிரந்தர சகாக்கள்ஆவர். அவ்வப்போது வந்து போகும் இரயில்களில் சிக்கி உயிரை மாய்த்துக் கொள்ள அல்லது தற்கொலைக்குமுயலும் அபலைகளைச் சாவின் விளிம்பிலிருந்து காப்பாற்றும் ஒரு உன்னதமான பணியினை எவ்விதமான தற்பெருமையுமின்றி செய்து வந்தான் அந்த வியாதிக்காரன்.

சமீபத்தில் ஒரு பெண்மணி மணலில் அமர்ந்து கட்டுச் சோற்றைப் பிரித்து உண்டுகொண்டிருந்த சமயத்தில் அவளுடைய குழந்தை அவளுடைய பார்வையிலிருந்து தவறி இரயில்வே இருப்புப்பாதை நோக்கிச் சென்று விட்டது. அது இரயில் வரும் நேரம். ஆதலால் அங்கேயே நோட்டம் விட்டுக் கொண்டிருந்த வியாதிக்காரன் ஒரு குழந்தை இருப்புப்பாதை அருகில் இருப்பதைப் பார்த்துப் பதறிப் போய், அந்தக் குழந்தையை சிறிது தயக்கத்துடன் தூக்கி, வரப்போகும் ஆபத்திலிருந்து காப்பாற்றினான். திடீரென குழந்தை இருந்த இடத்தில் இல்லாததை உணர்ந்த அந்த பெண்மணி தன் குழந்தை இருப்புப்பாதை அருகில் இருப்பதைப் பார்த்து பதைபதைத்து ஓடி வந்தாள். தனது குழந்தையை வியாதிக்காரன் தொட்டுத்தூக்கியதை அறிந்துகொண்ட அந்த பெண்மணி தன் குழந்தைக்கு வர இருந்த ஆபத்தைவிட வியாதிக்காரன் தொட்டதினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவனைத் தகாத வார்த்தைகளால் திட்டத் தொடங்கினாள். வியாதிக்காரன் அந்த குழந்தையைத் தூக்கிய சூழ்நிலையை எடுத்துரைத்தபோதிலும் அவள் சமாதானம் அடையாமல் நீ எங்களை அழைத்திருக்கலாம்என்பதையே அடிக்கடி கூறினாள். வலி, வேதனை, அவமானம் ஆகியவற்றைப்பொறுத்துக்கொண்டுவாழ்வதிலும் ஏதோ ஒரு அர்த்தம் இருப்பதாக உணர்ந்தான்.

இந்நிலையில் வழக்கம்போல் தனக்குக் கிடைத்த உணவினை ஓர் இரவின் நிலா வெளிச்சத்தில் அமர்ந்து கொண்டு உண்டபடியேவாழ்வின் அந்த நொடிப்பொழுதின் சுகத்தை அனுபவித்துக்கொண்டிருந்தான் அந்த வியாதிக்காரன். உணவு உண்ட பின் குவளையைக்கழுவுவதற்கு ஏரிக்கரைக்குச்ச் சென்று கேன்வாஷை கழட்டி விட்டு குவளையைச்ச் சுத்தம் செய்த பின் தன் சட்டையில் வைத்திருந்த ஒரு துண்டு பீடியைப் பற்ற வைத்து புகையை உள்ளே இழுத்தபடி அதன் சுகத்தில் லயித்துக் கொண்டே இருப்புப்பாதையோரம் நடந்து சென்று கொண்டிருந்தான். இருப்புப்பாதையின் சற்று தூரத்தில் ஏதோ ஒரு நிழல் தவழ்ந்து வருவதைஉணர்ந்த அந்த வியாதிக்காரன் கால்நடைகள் ஏதாவது தவறுதலாக இருப்புப் பாதைக்கு வந்திருக்குமோ என்ற ஐயத்துடன் நிழல் வந்த திசையை நோக்கி நடக்கத் தொடங்கினான். இதற்கிடையில் இரயில் வரும் ஓசையும் பலமாக கேட்கத் தொடங்கியது. தனது வேகத்தை அதிகப்படுத்தி, அந்த நிழலின் அருகில் சென்று தனது கைத்தடியினால் இருப்புப்பாதையில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கிடக்கும் அந்த உருவத்தைப் புரட்டி அப்புறப்படுத்தினான். இதற்கிடையில் தொடர்வண்டி மிகுந்த சப்தத்துடன் இவர்கள் இருவரையும் கடந்து சென்றது. அப்போதுதான் தான் காப்பாற்றியது ஒரு மனிதன் என்பதை உணர்ந்தான் அந்த வியாதிக்காரன்.

கீழே விழுந்து கிடந்த அந்த மனிதனை நோக்கி தற்கொலைக்கான அவசியத்தையும் காரணத்தையும் கேட்டான். அந்த மனிதனிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை. உடனே தான் வழக்கமாக அமரும் சத்திரத் திண்ணையில் வந்து அமருமாறு அவனைக் கேட்டுக் கொண்டான். இப்படிக் கூறிவிட்டு அந்த மனிதன் தன்னை பின்தொடர்வான் என்று நினைத்து தன் கைத்தடியுடன் நடக்கத் தொடங்கினான். சற்று தூரம் சென்ற பின் திரும்பிப் பார்த்து அந்த மனிதன் அசையாமல் அங்கேயே இருப்பதை உணர்ந்த அவன் அடுத்த தொடர்வண்டி மறுநாள் காலை 6 மணிக்குத்தான் வரும் என்றும், தற்கொலை முயற்சி செய்ய இன்னும் நிறைய நேரம் இருக்கிறது என்றும் கூறி தன்னுடன் வருமாறு மீண்டும் கேட்டுக் கொண்டான். தான் எழுந்து நடப்பதற்கு கை கொடுக்குமாறு கீழே கிடந்த மனிதன் கேட்ட பிறகுதான் அவனுக்குக் காலில் ஊனம் இருப்பதை அந்த வியாதிக்காரன் அறிந்தான். எங்கே தன் உடலைத் தொட்டு விட்டால் தன் நோய் அவனுக்குப் பரவி விடுமோ என்ற பயத்தில் தன் கைத்தடியை உதவிக்கு எடுத்துக்கொள்ளுமாறு அந்த வியாதிக்காரன் நீட்ட, அதற்கு அந்த கால் ஊனமுற்றவன் வேண்டாம் நான் உங்கள் தோள் பட்டையைப் பிடித்துக்கொள்கிறேன் என்று கூறினான்.  இருவரும் நடந்து வந்து திண்ணையை அடைந்தனர். திண்ணையில் அமர்ந்த பிறகு அந்த வியாதிக்காரன் முன்பு கேட்ட கேள்வியையே அவனிடம் மீண்டும் எழுப்பினான். சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு நான் இந்த உலகில் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லைன்றும், ன்னுடைய கால் ஊனத்தைச்ச் சரிசெய்ய மருந்துகள் இல்லை. அதனால், நான் இறப்பதே சிறந்தது என்றும் தெரிவித்தான். இதற்குப் பின் தன்னை தற்கொலைச்சிந்தனைக்கு இட்டுச் சென்ற ஒரு சம்பவத்தையும் அவன் சொல்லத் தொடங்கினான்.

என்னுடைய தாயாருக்கும் என் தம்பிக்கும் என்னுடைய கால் மருத்துவ விசயத்தில் எப்போதும் முரண்பாடுகள் இருக்கும். ஒருபுறம் என்னை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்ற சிந்தனையோடு என்னுடைய தாய் முயன்று கொண்டிருக்க, திருமணமாகி தனக்கென்று ஒரு குடும்பத்தை ஏற்படுத்தி வாழ்ந்துகொண்டிருக்கும் என் தம்பி இவையெல்லாம் வீண் செலவு என்று என் தாயுடன் அன்றாடம் சண்டையிடுவது மறுபுறம். இதற்கிடையில் நாங்கள் வசிக்கும் ஊரிலிருந்து நான்கு மைல் தூரத்தில் ஒரு புது நாட்டு வைத்தியர் வந்திருப்பதைக் கேள்விப்பட்ட என்னுடைய தாய் என்னை உடனே அவரிடம் அழைத்துச் செல்ல என் தம்பியிடம் சண்டையிட்டு பணம் பெற்றாள். வழக்கம் போல் நான் என் தாயின் தோளைப்பற்றியபடி மருத்துவமனை சென்றடைந்த பொழுது என் கால்களைக்குணப்படுத்த முடியாது என்று மருத்துவர் கூறி விட்டார். இந்த மருத்துவர் சரியில்லை என்று தன்னை ஆறுதல் படுத்திக்கொண்டு என்னை அழைத்துக்கொண்டு பேருந்து நிறுத்தம் வந்தாள் என் தாயார். நாங்கள் இருவரும் பேருந்தில் ஏறி இருக்கையில் அமர்ந்து கொண்டோம். அடுத்த நிறுத்தத்தில் ஒரு இளம்பெண் அந்த பேருந்தில் ஏறி என்னுடைய இருக்கைக்கு அருகில் வந்து இது பெண்கள் இருக்கை என மேலே குறிப்பிட்ட குறிப்பைக் காட்டி என்னை எழுந்திருக்கச் சொன்னாள். நானும் என்னுடைய ஆண்மையின் உணர்ச்சிப் பெருக்கில்இருக்கையிலிருந்து எழுந்து அந்த இளம் பெண்ணிற்கு வழி விட்டு நின்று கொண்டேன். இதை அறிந்த என்னுடைய தாய் பதறிப் போய் எனக்கு அவளுடைய இருக்கையை அளிக்க எழுந்தாள். இதனை அறிந்த அந்த பெண்மணியும் தான் செய்த தவறை உணர்ந்து அந்த இருக்கையை எனக்கே விட்டுக் கொடுத்தாள். யாரிடமும் இந்த பரிதாபத்தை எதிர்பார்க்காத நான் என் தாயிடமிருந்தே அது வெளிப்பட்டுவிட்டதை அறிந்து சொல்ல முடியாத அளவிற்குத் துயரமும் வேதனையும் அடைந்தேன். இந்த விஷயம் தன் மனதை மிகவும் காயப்படுத்திவிட்டதாகவும் அதனால்தான் இனியும் இந்த உலகில் வாழ்வதற்கு விரும்பாமல் தன்னுடைய சாவைத் தேடி இந்த இருப்புப்பாதைக்குவந்ததாகக்கூறித் தன்னுடைய கதையை முடித்தான்.

இவை எல்லாவற்றையும் பொருமையாகக் கேட்டுக் கொண்டிருந்த அந்த வியாதிக்காரன் தான் வாழ்வில் சந்தித்த அவலநிகழ்வுகளைக் கூறி அத்துடன் தனது சூம்பிப்போன கை கால்களையும் அவனுக்கு; காட்டி நானே இவ்வுலகில் வாழும் போது நீ ஏன் வாழக்கூடாது. அதிலும் என்னைப் போல் அல்லாமல் உனக்கு ஆதரவு காட்ட, உன் வளர்ச்சியில் அக்கறையுள்ள ஒருசிலர் உன்னுடன் இருக்கும் பொழுது நீ இது போன்ற முயற்சியில் ஈடுபடக் கூடாது என்று கூறினான்;. “அவர்கள் முன் நீ வாழ்ந்து சாதித்துக் காட்ட வேண்டும் என்று அந்த கால் ஊனமுற்றவனைத் தேற்றினான். இவற்றையெல்லாம் கேட்ட அந்த நொண்டி தான் வாழ வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தவனாய் அந்தத் திண்ணையிலேயே படுத்து ஆழ்ந்து உறங்கிப் போனான்.

மறுநாள் காலை அவன் கண் விழித்துப் பார்த்த பொழுது இரயில் பாதையின் அருகில் ஒரு பெரும் கூட்டம் கூடியிருப்பதைக் கண்டான். இரயில் பெட்டிகளுக்கிடையிலிருந்து ஒரு இறந்தவனின் உடலை எடுப்பதைப் பார்த்த அந்த நொண்டி பதறிப் போனான். ஏன் பதறிப் போனான் என்றால் அது அந்த வியாதிக்காரனின் உடல். தான் தற்கொலை முயற்சி செய்யாமல் இருந்திருந்தால் அந்த வியாதிக்காரன் உயிரோடுஇருந்திருப்பான் என்று வருந்திக் கொண்டிருந்த வேளையில் எங்கிருந்தோ தன் தாயின் பதறிய அழுகுரல் அவனுக்குக் கேட்டது. இதைக் கேட்டு அவன், அம்மா! நான் இருக்கிறேன் என்று கூறியபடி தவழ்ந்து சென்று தன் தாயை அடைந்தான். இந்நிலையில் இந்த கதை முடிவடைகிறது.

முன்னுக்கு முரண்:
               கதாசிரியரான ஜெயகாந்தன் வித்தியாசமான பாணியில் இந்தக் கதையைப் படைத்துள்ளார். இக்கதையில் வரும் எந்தக் கதாபாத்திரத்திற்கும் பெயர் வைக்கப்படவே இல்லை. இந்தக் கதைக்கும் கருவிற்கும் இடையேயான முரண்பாடு இங்கு தான் அமைந்துள்ளது. அதாவது வியாதிக்காரனை ‘வியாதிக்காரன்’ என்று தொடர்ந்து குறிப்பிடுவதன்மூலமும் கால் ஊனமுற்றவனை ‘நொண்டி’ என்று தொடர்ந்து குறிப்பிடுவதன்மூலமும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அடிப்படை சமூக கௌரவத்தை அவர் வழங்கவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. அதேபோல் கால் ஊனமுற்ற ஒருவனுக்கு ஊக்கத்தைக் கொடுத்து அவனைத் தற்கொலையிலிருந்து மீட்ட வியாதிக்காரன் கதையின் முடிவில் எதிர்பாரா விதமாகத் தற்கொலை செய்து கொள்வது முன்னுக்கு முரணாகவும், பெரும் ஏமாற்றத்தைத் தருவதாகவும் அமைகிறது.

பிறர் வாழ ஊக்கம் தரும் ஒருவர் தன்னுடைய நிலையைத்தாங்கிக் கொள்ள இயலாமல் தற்கொலை செய்து கொள்ளும் பொழுது மற்றவர் காட்டும் அனுதாபத்தினாலேயே அந்த நொண்டியின் வாழ்க்கை தொடருவது ஒரு புரியாத புதிராகவே உள்ளது. அதாவது அந்த கால் ஊனமுற்றவனுக்குஅவனைச்சுற்றியுள்ள அனுதாபம் காட்டும் உலகம் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றாகவும், வியாதிக்காரன் மீது காட்டப்படும் அருவறுப்பு ஏற்றுக்கொள்ளமுடியாததாகவும் இருப்பது எழுத்தாளரின் ஊனமுற்றோர் குறித்த அறியாமையை வெளிப்படுத்துகிறது. மற்றவர்களின் அனுதாபத்தைக் கொஞ்சமும் எதிர்பாராத அல்லது ஏற்றுக்கொள்ளாத உடல் ஊனமுற்றோர் தங்களைச்ச் சமமாக நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளுடன் இருக்கிறார்கள் என்பதைக் கொஞ்சமும் உணராத எழுத்தாளர் இக்கதையைப் படைத்திருப்பதுஇச்சமூகத்தின் மனச்சூழலை  அவர் கொஞ்சமும் உள்வாங்கவில்லை என்பதைத் தெளிவாக விளக்குகிறது. 

இந்தக் கதையின் தலைப்பு ‘நான் இருக்கிறேன்’ என்று இருப்பதால், இங்கு யாருக்கு யார் இருக்கிறார்கள் என்ற கருத்து தெளிவற்று இருக்கிறது. மனிதநேயத்தைமையமாகக் கொண்டு எழுதும் எழுத்தாளர்கள் வரிசையில் வரும் இவர் ஒரு சக மனிதனின் உள் உணர்வுகளை உள்ளபடி பிரதிபலிக்காமல் கற்பனையின் உச்சத்திற்குச்ச் சென்று இக்கதையின் கதாபாத்திரங்களைக் கொடூரமாகச் சித்தரித்திருப்பதின் மூலம் இந்த எழுத்தாளர் தான் ஒரு பரிதாபப்படக்கூடிய உயர்ந்த நிலையில் இருப்பதாகவும், இக்கதையின் கதாபாத்திரங்கள் அதை ஏற்கக்கூடிய நிலையில் மட்டும் இருப்பதாகவும் எழுதி இருப்பது ஏற்புடையதல்ல. எனவே ‘நான் இருக்கிறேன்’ என்ற தலைப்பு எழுத்தாளரின் மமதை பொருந்திய பெருந்தன்மையை வெளிப்படுத்துவதாகவே உள்ளது.

உடல் ஊனத்தை ஒரு மருத்துவம் சார்ந்த நோயாகப் பார்ப்பதிலிருந்து மாற்றம் பெற்று அதை ஒரு சமூக நோயாகப்புரிந்துகொள்ளக்கூடிய ஒரு மனமாற்றம் தற்போது வளர்ந்துவருகிறது. இந்த சிந்தனை மாற்றம் மானுடவியல் தத்துவத்தில் ஒரு வியத்தகுசாதனையாகவே கருதப்படுகிறது. இச்சிந்தனைமாற்றத்தின் மூலம் சமுதாயத்தில்ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை சிக்கல்களும், அவர்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் சமூக ஏற்றத்தாழ்வுகளும் அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட ஊனமாகவே கருதப்படுகிறது. இந்நிலையில் கதையில் வரும் வியாதிக்காரனை பாதித்து வந்த உடல் சார்ந்த நோயும் அதே கதையில்நொண்டியைப் பாதித்து வந்த உடல் ஊனமும் ஒரே மாதிரியான நோயாகவே பார்க்கப்படுகிறது. இதை அறியாத இந்த கதையின் முடிவு சிரியரின் சமூகவியல் சிந்தனைத் தெளிவின்மையைத் தெளிவாக விளக்குகிறது. எழுத்தாளர் ஜெயகாந்தனும் இத்தகைய படைப்பினைத் தந்திருக்கிறார் என்பது கவலையளிப்பதாகவே உள்ளது.

இக்கதையில் வரும் உடல் ஊனமுற்றவன் வாழ்வதற்கான பல வழிகளை அந்த வியாதிக்காரன் காட்டியபோதிலும் பொதுமக்கள் அவன் மீது காட்டும் அனுதாபம் அல்லது பரிதாபம் என்ற சமூக நோய்க்கு மருந்து அல்லது தீர்வு குறித்து எழுத்தாளர் எள்ளளவும் கவனம் செலுத்தவில்லை. “பிறிதின் நோய் தன்நோய் போல் போற்றா கடை” என்ற வள்ளுவனின்வாக்கிக்கிணங்க மற்றவர்களின் பிரச்சினைகளை அவர்களுடைய இடத்திலிருந்து புரிந்து கொள்ளும் மனோ பக்குவத்தை கதாசிரியர் பெற்றிருக்கவில்லை என்பதை இந்த கதை உறுதிப்படுத்துகிறது.

ஒரு படைப்பாளி என்பவன் தான் வாழும் சமூகத்தைத் தீராமல் விசாரணை செய்து கொண்டே இருக்கின்றான்.  சகமனிதன் மீது அவன் கவனம் அதிகமாக குவிகிறது.  என்ற கூற்று உண்மையானால்,  ஊனமுற்றோர் குறித்து ஆசிரியர் செய்த விசாரணை இதுதானா?  திரைப்படங்களைப் போலவே புத்தகங்களும் புதிய சமூகம் குறித்த  புதிய பரிணாமங்களைஉதிர்த்துக் கொண்டு தான் இருக்கின்றன.   அப்படிப்பட்ட சிந்தனைகள்சகமனிதர்களின்  அடிப்படை வாழ்வியல் குறித்த புதிர்களை அவிழ்த்தும் உருவாக்கியும் வருகின்றன. 

எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் அக்கினிப்பிரவேசம் என்ற சிறுகதையின்மூலமாகவும் சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற புதினத்தின் வாயிலாகவும் ஆணாதிக்கச் சிந்தனையின் அந்தப்புரக் கழிவுகளை வெளிக்கொண்டு வர முயற்சி செய்தார் என்பது நாம் அறிந்ததே.  இவ்விரு படைப்புகள் மூலமாக விளிம்புநிலை சமுதாயம் குறித்த தனது அக்கறையை எழுத்தாளர் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார்  என்ற ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது.  விளிம்புநிலை என்று நான் இங்கு கூறியது  விளிம்பு நிலைப்படுத்தப்பட்ட பெண்களை குறித்து தான்.  சமுதாயத்தில் பெண்களின் நிலைக்கு இணையாகவும் அதைவிட அதிகமாகவும்ஒதுக்கப்பட்டு விளிம்பு நிலைப்படுத்தப்பட்ட ஊனமுற்றோருக்கான குரலாக எழுத்தாளரின் குரல் ஏன் ஒலிக்கவில்லை என்பது புரியாத புதிராக உள்ளது

இந்தக் கதையைப் படித்துவிட்டு இதிலே பார்வையற்றோருக்கான பங்கு எங்கிருக்கிறதுஎன்று சிலர் கேட்கலாம்.  ஊனத்தின் தன்மை எதுவாயினும் எழுத்தாளரின் ஊனத்தின் மீதான பார்வை மாறுபடுவதற்கு வாய்ப்பு அதிகம் இல்லை.   எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைந்தபொழுது, “அவர் தமிழ் மண்ணின் அடையாளம்; தமிழனின் கவுரவம்; தமிழ்ச்சமூகத்தின் கம்பீரம் என்றெல்லாம் கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டினார்.  அப்படிப்பட்ட புகழ்ச்சிக்கு எல்லாம் சொந்தக்காரரானஜெயகாந்தன் அவர்கள்,  அவர் வாழ்ந்த சமுதாயத்திலேயே வாழ்ந்த  மற்றொரு ஊனமுற்றசகோதரனின் சுய கவுரவம் மிக்க உள்ளுணர்வுகளை புரிந்து வைத்திருந்தாரா என்றால் இல்லை என்றே சொல்லவேண்டியிருக்கிறது.

இந்த இடத்தில் சகோதரன் என்ற வார்த்தை பிரயோகத்திற்கு அவசியம் என்ன இருக்கிறது என்று வாசகர்கள் கேட்கலாம்.  தண்டபாணி என்னும் ராணுவ அதிகாரியின் மகனாகப் பிறந்து ராணுவக் கட்டுக்கோப்பு மிக்க வாழ்க்கையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட தண்டபாணி முருகேசன்என்னும் ஜெயகாந்தனை உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும் என்று எனக்கு தெரியவில்லை.  தனது 12-ஆவது அகவையிலேயே கம்யூனிஸ சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு, ஜீவானந்தம் எனும் மிகப்பெரிய கம்யூனிச ஆளுமையால் வளர்த்தெடுக்கப்பட்டவர் ஜெயகாந்தன்.  தன்னுடைய படைப்புகளுக்கான பெரும்பாலான கருத்துகளை சென்னை பிராட்வேயில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி  அலுவலகத்தைச் சுற்றி  வாழ்ந்துவந்த சாதாரண அடித்தட்டு மக்களிடத்திலிருந்தே வளர்த்தெடுத்தார் என்றால் அது மிகையாகாது.

எனக்குத் தெரிந்தவரை கம்யூனிச சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் ஒரு நெருங்கிய உறவு இருந்து வந்துள்ளது.  இன்றளவும் கூட  நம் சகோதரர்களான பார்வையற்ற பேராசிரியர்கள் பலரும் கம்யூனிச சிந்தனையின் அடிப்படையில் செயல்படுகின்ற அமைப்புகளில் இணைந்து நலிவடைந்துள்ள சமுதாயத்தைச் சீரமைக்கவும், அவர்களுக்காக குரல் கொடுக்கவும் உதவி வருகிறார்கள்.  கிட்டத்தட்ட இதே பின்னணியில் தன்னை வளர்த்துக் கொண்ட ஜெயகாந்தன் அவர்களுக்கு ஊனமுற்றோர் குறித்த ஒரு தெளிவான பார்வை ஏன் கிடைக்கப்பெறவில்லை என்ற கேள்வி இன்றளவும் நம்முள் எழுகிறது.

புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர்களால் ஈர்க்கப்பட்ட இவர்,  குரலின் என்ற எழுத்தாளர் குறித்து ஏன் அறிந்திருக்கவில்லை?  நமக்கெல்லாம் பரிட்சயமான, நாமெல்லாம் மீண்டும் மீண்டும் படித்து  ரசித்து பிறரோடு பகிர்ந்து கொண்ட குரல்என்கோ என்ற ரஷ்ய எழுத்தாளர் 1773ம் ஆண்டு எழுதிய கண் தெரியாத இசைஞன் என்ற புதினத்தை எழுத்தாளர்  ஜெயகாந்தன் கேள்விப்பட்டிருக்கக்கூட வாய்ப்பில்லையா? 

எழுத்து அல்லது எழுத்தாளனின்வெற்றியானது தன் வாசகர்களை தன்னோடு எளிமையாக பயணிக்கச் செய்வதில் இருக்கிறது.  நான் இருக்கிறேன் என்ற  சிறுகதையை படிக்கும் வாசகர்கள் எழுத்தாளரின் மன வெளியில் அவரோடு இணைந்து பயணிக்க இயலாது என்று கூறுவதற்கு மேற்குறிப்பிட்ட காரணங்களே போதுமானவை என்று நினைக்கிறேன்.  ஒவ்வொரு புத்தகமும் என்றென்றும், எப்போதும் முடிவில்லாமல் எழுதப்பட்டுகொண்டே இருக்கிறது என்கிற ரோலன் பார்த்த சீன் கூற்றுப்படி ஜெயகாந்தனின் நான் இருக்கிறேன் என்ற சிறுகதை,  மீள் வாசிப்பு மற்றும் மறுவாசிப்பு என்ற  பெயர்களில் தொடர்ந்து வாசிக்கப்பட்டு ஊனமுற்றோர் குறித்த புதுக் கருத்துகளையும் சிந்தனைகளையும் எதிர்வினைகளையும் உருவாக்கிக் கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை!

பின்குறிப்பு:
இந்தக் கட்டுரையில் கதைச்சுருக்கத்திற்காக மட்டுமே மூன்று பக்கங்கள்செலவிடப்பட்டிருப்பது குறித்து விமர்சனங்கள் எழுமாயின்,  அந்த விமர்சனத்திற்கு நான் கூறும் ஒரே பதில், உப்புச்சப்பில்லாத இந்த கதையில் விமர்சனம் செய்வதற்கு என்று எதுவுமில்லை என்பதுதான்.  எல்லாவற்றுக்கும் மேலாக,  எழுத்தாளரின் கதை நடையும், கதைப் போக்கும், கதை மாந்தர்களை அவர் பிரதிபலித்த விதமும் கடுமையான விமர்சனத்திற்கு இட்டுச்செள்ளுகின்றது என்பதை வாசகர்கள் தாங்களாகவே உணரவேண்டும் என்பதற்காகவே இங்கே கதை விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
***
(கட்டுரையாளர் டெல்லி பல்கலைக் கழகம் பகத்சிங் கல்லூரியில் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர்).
தொடர்புக்கு: varadhu.gift@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக