அலசல்: வேண்டும் புதிய சிறப்பு தேசியக் கல்விக்கொள்கை:

ப. சரவணமணிகண்டன்
graphic நடுவண் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சின்னம்
 இந்தியாவில் 2 கோடிக்கும் மேலான எண்ணிக்கையில் மாற்றுத்திறனாளிகள் இருப்பதாக அரசே சொல்கிறபோதும், அவர்களுக்கான கல்விகுறித்து வெறும் இரண்டே பக்கங்களில் பேசியிருக்கிறது புதிய தேசிய கல்விக்கொள்கையின் வரைவு. வரைவின் ஆறாவது இயலில் எட்டாவது பிரிவாக சிறப்புத் தேவை குழந்தைகள் (children with special needs) என்ற தலைப்பில், ஏற்கனவே நடைமுறையில் இருக்கிற உள்ளடங்கிய கல்வியின் சில அம்சங்களைப் பட்டியலிட்டதோடு தனது கடமையை முடித்துக்கொண்டிருக்கிறது வரைவுக்குழு.

வட்டார வளமையங்கள் ஏற்படுத்தப்படும், சிறப்புத் தேவை குழந்தைகள் கல்வி கற்க வந்து செல்வதற்கான பயணப்படி வழங்கப்படும், அவர்களுக்கு உகந்தமுறையில் பள்ளி வளாகம் ஒருங்கிணைந்த வளாகமாக மாற்றப்படும் என்றெல்லாம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கிற விஷயங்களைப் புதிய திட்டங்களாக முன்வைத்திருப்பது வேதனையளிப்பதாக உள்ளது. அதிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வியில் உள்ளடங்கிய கல்விமுறையை இரண்டு பக்கங்களிலாவது பெசிய வரைவுக்குழு, அவர்களுக்கான சிறப்புக்கல்வி குறித்தோ, சிறப்புப் பள்ளிகள் குறித்தோ எதுவும் பேசவில்லை. சிறப்புக்கல்வி (special education) என்ற வார்த்தையே வரைவில் இடம்பெறவில்லை.

மாற்றுத்திறனாளி குழந்தைகளை சமூகத்திடமிருந்து தனிமைப்படுத்தக்கூடாது என்ற ஒரு தட்டையான வாதத்தை முன்வைத்தபடி, உள்ளடங்கிய கல்விமுறை கொண்டுவரப்பட்டது. ஆனால், கடந்த 15 ஆண்டுகளில் அதன் அமலாக்கத்தில் பெரும் பின்னடைவே ஏற்பட்டிருக்கிறது. போதிய சிறப்பாசிரியர்கள் இல்லாமை, மாற்றுத்திறனாளிகளின் வகைமைக்கேற்ப சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படாமை, வகுப்பாசிரியர்களுக்கு மாற்றுத்திறனாளி குழந்தைகளைக் கையாள்வதில் போதிய பயிற்சியின்மை போன்ற பல்வேறு காரணங்களால் மாற்றுத்திறனாளிகளின் அதிலும் குறிப்பாக பார்வை மாற்றுத்திறனாளிகளின் தொடக்கக்கல்வி தொலைதூரக்கல்வியாக மாற்றப்பட்டிருக்கிறது.

மாற்றுத்திறனாளிகளைப் பொதுச்சமூகத்தோடு ஒருங்கிணைப்பதே அரசின் நோக்கமென்றால், அதற்கு சிறப்புக்கல்வி மற்றும் ஒருங்கிணைந்த கல்வித்திட்டம் போன்றவையே அதிக பயன்தரும் முறைகளாக அமையும். அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளே சென்றுசேராத கிராமப்புறங்களை அதிகம் கொண்ட இந்தியாவில், மாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளடங்கிய கல்விமுறை என்பது எந்தவித பயனையும் ஏற்படுத்தாது.

இந்த உண்மையைக் கணக்கில் கொள்ளாத அரசும், வரைவுக்குழுவும், உள்ளடங்கிய கல்விமுறையை தொடர்ந்து வலியுறுத்துவதும், சிறப்புக்கல்வி மற்றும் சிறப்புப் பள்ளிகள் குறித்துப் பேசாததும், மாற்றுத்திறனாளிகளின் கல்வியில் அதிக எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், அரசுக்கும் வரைவுக்குழுவுக்கும் மாற்றுத்திறனாளிகள் சார்பாக சில பரிந்துரைகள் முன்வைக்கப்படுகின்றன. அவை;

1.       மாற்றுத்திறனாளிகளுக்கான கல்விமுறை குறித்துப் பேசும் அரசு, அவர்களை அவர்களின் உடல்ச்சவாலின்படி வகைப்படுத்தாமல், பொதுமைப்படுத்தி அவர்களுக்கு ஒரேவிதமான கல்வியைத் திட்டமிடுவது ஏற்புடையது அன்று. எனவே, மாற்றுத்திறனாளிகளின் வகைமைக்கேற்ப அவர்களுக்கான கல்விமுறை திட்டமிடப்பட வேண்டும்.
2.        பார்வைச்சவால் மற்றும் செவிச்சவால் உடைய மாற்றுத்திறன் குழந்தைகளின் ஆரம்பக் கல்வி பிரெயில், சைகைமொழி போன்ற சில பிரத்யேக முறைகளையும் பயிற்சிகளையும் உள்ளடக்கியது. இவை எவற்றையுமே அவர்களுக்கு வழங்காமல், உள்ளடங்கிய கல்வி வகுப்பறையின் 60  குழந்தைகளோடு இவர்களையும் சேர்த்துவிடுவது தொலைநோக்கில் அவர்களின் ஒருங்கிணைந்த ஆளுமை வளர்ச்சியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, பார்வைச்சவால் மற்றும் செவிச்சவால் கொண்ட குழந்தைகளின் நடுநிலைக்கல்விவரை சிறப்புப் பள்ளிகளில்தான் வழங்கப்பட வேண்டும்.
3.        உள்ளடங்கிய கல்விமுறை போன்றே சிறப்புக்கல்வியும், சிறப்புப் பள்ளிகளும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஏற்படுத்தப்படுவதோடு, அவை தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட வேண்டும்.
4.        மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக்கல்வி குறித்த ஆய்வுகள், திட்டங்கள், அமலாக்கங்களை முன்னெடுத்தல், அவற்றை ஒருங்கிணைக்கும் பொருட்டு, தேசிய அளவில் சிறப்புக்கல்விக்கான ஆராய்ச்சி மையம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
5.        மாற்றுத்திறனாளிகளின் உயர் மற்றும் மேல்நிலைக்கல்வி உள்ளடங்கிய கல்விமுறையாக அல்லாமல், ஒருங்கிணைந்த கல்வியாக அமைதல் வேண்டும். அதாவது, ஒன்றியத்திற்கு ஒரு மேல்நிலைப்பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கு ஆதார அறை (resource room) ஏற்படுத்தப்பட்டு, மாற்றுத்திறனாளிகளின் வகைமைக்கேற்ப, அவர்களுக்கான சிறப்புப் பயிற்சி பெற்ற ஆதார ஆசிரியர்கள் (resource teachers) நிரந்தரமாகவே பணியமர்த்தப்பட வேண்டும். அந்தக் குறிப்பிட்ட ஒன்றியத்தின் பல்வேறு கிராமங்களிலிருந்து மாற்றுத்திறனாளி மாணவர்கள் வந்துசெல்லும் வகையில் வாகனவசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.
6.        புதிய தேசியக்கல்விக்கொள்கை போலவே, மாற்றுத்திறனாளிகளின் கல்வியை வளப்படுத்தும் வகையில், சிறப்பு தேசியக்கல்விக்கொள்கை வெளியிடப்பட வேண்டும். அதற்கான வரைவுக்குழுவில் மாற்றுத்திறனாளி கல்வியாளர்கள் இடம்பெறுதல் வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளைக் கருணைத்தளத்திலிருந்து சிந்திக்கும் அரசின் பார்வை மாறுவதோடு, அவர்களை உரிமைத்தளத்திற்கு நகர்த்திச் செல்வதே, அனைவரையும் உள்ளடக்கிய சக்திவாய்ந்த இந்தியச் சமூகத்தைக் கட்டமைப்பதன் முதற்படி என்பதை அரசு உணரவேண்டும்.
தொடர்புக்கு vaazhgavalluvam@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக